Saturday, October 10, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 1

5. இயற்கை

மண் புனல் முதலியனன் இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம்.

இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.

உடல் புலனாவது, உயிர் புலனாகாதது. புலனாகாதா உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக்கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர்கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார்,

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க.

இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது.

இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற்கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குகிறது.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனெனவறி வரியஎம்பெருமான்...

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது...

என்றார் ஆழ்வாரும்.

மனவுணர்வுடையோர், இயற்கையக் கடந்துள்ள இறைநிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர்.

இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப்போற்றுதலும் இப்போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர். இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும், சிறப்பாகச் 'சன்மார்க்கப் போதமும் திறவும்' என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.

எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் - எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் - 'இறை வடிவம் இயற்கை' என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப்பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை.

ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம்; அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங் கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன; மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகிறார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!

சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம்

நம்மாழ்வார் - பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங் கண்டு, அவைகளைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரிய வருகிறது. அக்காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் எனலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக் கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு:

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று
நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. இவை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்டவனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றிய பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படுகிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. 'கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே' என்றும், 'உரைப்பெல்லாம் - நின்னன்றி மற்றிலேன் கண்டாய்' என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படுகிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரியவில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர் எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி 'சீதரன்' என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி 'மணிவண்ணா' என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் 'கோபாலா' என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் 'கோவிந்தா' என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்!

நம்மாழ்வார் - பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

என்றும்,

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன்
றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோநும் வியலிடத்தே.

என்றும்,

அஞ்சிறைய மடநாராய் ... ... ... ...

என்றும்,

விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள் ... ... ...

என்றும்,

பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும்...

என்றும்,

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கெத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் ... ...

என்றும், ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க.

Saturday, October 3, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 4. அட்டமூர்த்தம்

4. அட்டமூர்த்தம்

'எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேர்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை?

வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும். 'எங்கும் கடவுள்' என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது.

எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணையுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு 'எங்கும் கடவுள்' என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழிபாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும்.

எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவதில்லை. 'எங்கும் கடவுள்' என்பதற்குப் பதிலாகக் 'கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது' என்னில், இது நெஞ்சில் படியுந்தகையதாகிறது. இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பின்னையது உள்ளத்திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது.

இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை 'அட்ட மூர்த்தி' என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு:

நாழாலமர் ... ...
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே... ...
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி...
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை...

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்...
என்றுகொல் சேர்வது... ...
... ... நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ...

பிறந்த மாயா ... ...
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே...

ஏகமூர்த்தி இருமூர்த்தி ... ...
... ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்...

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ
பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ
தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ
நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ
கண்ணனைக் கூவு மாறே.

'மண், புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள்' என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாக கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார்.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்...

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலியவற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மையும் ஈண்டு உன்னற்பாலது.

இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல்லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவைகளைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும்.

பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக் கலந்து நிற்றலை உணர்த்துவது. பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலியவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம்பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க.

நிழல்வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய்
அவையல் லனுமாய்...

விண்மீ திருப்பாய் மலைமேல்
நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்துறைவாய்...

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்...

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக.

பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்குவரை, ஐயம் திரிபு மயக்கம் மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு.

நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவியனுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப்பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு ம்றையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு.

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.


***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...