Sunday, March 20, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் கட்டுரை

நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்


"ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை" (பால-திருவ 2 - 10 - 3)

என்று கூறுவன். பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 - 10 - 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 - 2 - 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள். இதனையே பிறிதோரிடத்தில்,

"எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்" [பால - குலமுறை 20]

என்று மேலும் வற்புறுத்துவன். இக்குழந்தைக்கு 'இராமன்' எனப் பெயரிடப் பெற்றது என்பதைக் கூறும் கவிஞன் இதனை வலியுறுத்துகிறான்.

"கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
'இராமன்' எனப்பெயர் ஈந்தனன் அன்றே" [பால - திருவ 119]

[கராம் - முதலை; கைக்கரி - யானை; அராவணை - பாம்புப் படுக்கை]

முதலை வாயில் அகப்பட்ட களிறு 'ஆதிமூலமே' எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,

"கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்" [ஆரணி, விராதன் வதை 49]

[கராம் - முதலை]

என்று வந்துள்ளது. சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

"கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்" [பால - மிதிலை 154]
[ஆழி - சக்கரப்படை]

என்று கூறுவன். 'பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப்படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக்கையில் கொண்ட முகில்வண்ணன்' என்று கூறுவதனால் இக்கருத்து மேலும் அரண் செய்யப்பெறுவதைக் காண்க. இன்னும்,

"பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
அஞ்சன வண்ணனே இராமன்" [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க. திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,

"சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே" [கிட்கிந் - நட்புகொள் 79]

என்று அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

இறைவன் பிறப்பில்லாதவன்; ஆனால் பல பிறப்புகளையுடையவன்.

"பிறப்பில் பல்பிறவிப் பெருமான்" [திருவாய் 2 - 9 - 5]

என்பது ஆழ்வார் வாக்கு. பிறப்பில்லாதவன் என்றது ஏனையோரைப் போல் வினை காரணமாகப் பிறக்கும் தன்மையில்லாதவன் என்றவாறு. பல பிறவிகளையுடையவன் என்றது அடியார்கள் பொருட்டாகப் பல பிறப்புகளை (அவதாரங்களை0 மேற்கொள்பவன் என்றபடி. இதுவே அவதார் இரகசியம். கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.

"தோற்றம் என்பதொன்று உனக்கில்லை" [யுத்த - மீட்சி 107]

என்று கூறுவன். இராமனது பிறப்பினைக் கூறும் பகுதியில் இதனை விளக்கமாகக் காணலாம். பிறிதோர் இடத்தில் இராமனைக் குறிப்பிடுமிடத்து.

"மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்" [யுத்த - நாகபாசப் 222]

என்று இக்கருத்தினை மேலும் வற்புறுத்துவன்.

நாராயணனே முதற்கடவுள்: நாராயணனே உலகின் முதற்கடவுள் என்பதைக் கம்ப நாடன் தன் காவியத்தில் பல இடங்களில் வற்புறுத்துகின்றான். சீதை தூயவள் என்று அங்கியங் கடவுள் மெய்ப்பித்த பிறகு தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

"மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா" [யுத்தமீட்சி 101]

[மறைகளின் தலைகள் - உபநிடதங்கள்]

என்ற பாசுரப் பகுதியில் உபநிடதங்கள் குறிப்பிடும் 'பரம்பொருள்' திருமாலைக் குறிக்குமேயன்றித் தன்னையோ, சிவனையோ அல்லது இந்திரனையோ குறிக்கவில்லை என்று உணர்த்துவதை அறிக. அடுத்து, சிவபெருமான்,

'முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:" [யுத்தமீட்சி 113]

என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன். இப்பகுதியில் வரும் பாசுரங்கள் யாவும் இக்கருத்தையே பலபடியாக வற்புறுத்துகின்றன. நிகும்பலையைக் குலைத்தபின் இலக்குவனுக்கும் இந்திரசித்துக்கும் நடந்த போரில் பின்னவன் விட்ட நான்முகன் படையை அப்படையாலேயே அழித்து அதன் வேகத்தைத் தணித்தனன். அப்போது அதனைக் கண்டு வியந்த தேவர்களிடன் சிவபெருமான் கூறிய,

"நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்" [யுத்த - நிகும்பலை 141]

என்ற வாக்கிலும் இதனைக் காணலாம். சேதுவை அமைக்க வருணனை வழி வேண்டியபோது, வருணன் வரத் தாமதித்ததனால், இராமன் சினங்கொள்கின்றான். இதனைக் கவிஞன்,

"உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்" [யுத்த வருணனை வழி 63]

என்று குறிப்பிடும் இடத்தில் 'இராமனே பரம்பொருள்' என்று தற்கூற்றாகக் கூறுவதைக் காண்க. அடுத்து வருணன் வாயில் வைத்து, "நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே" [யுத்த வருணனை வழி 67]

என்றும்,

"எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும்
முதலாய் உள்ள வள்ளலே" [யுத்த வருணனை வழி 71]

என்றும் பின்னும் வற்புறுத்துவன். அங்கதனுக்கு அறவுரை கூறும் வாலியின் கூற்றாக வந்துள்ள,

"மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா" [கிட்கிந் - வாலிவதை 148]

என்ற பாடற் பகுதியும்,

"மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு" [சுந்தர - உருக்காட்டு 71]

என்று சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதியும் திருமாலே முழு முதற்கடவுள் என்பதனைப் பின்னும் அரண் செய்கின்றன. இதனையே,

"மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்" [சுந்தர - பிணிவீட்டு 80]

என்று அநுமன் வாய்மொழியாகவும்,

"மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி" [யுத்த - கும்பகருணன் வதை 150]

என்று கும்பகருணன் வாய்மொழியாகவும் கவிஞன் பேசுவன். ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,

"மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே" [ஆரணி - கவந்த 44]

என்று இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க. மேலும், விராதன் வாய்மொழியாக,

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா" [ஆரணி - விராதன் வதை 59]

[மெய் - நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி - பரமசிவன்; ஐயம் - பிச்சை, சந்தேகம்.]

என்று பின்னும் கூறுவன். இக்கருத்து நம்மாழ்வாரின்

"பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்" [திருவாய் 4 - 10 - 4]

என்ற பாசுரப் பகுதியின் கருத்துடன் இயைந்திருத்தல் கண்டு மகிழத்தக்கது. மேலும், கம்பநாடன் திருமால் அன்னமாய் இருந்து அருமறைகள் உரைத்ததைக் குறிப்பிடும் ஆழ்வார்களின் பாசுரங்களை [பெரியதிரு 11 - 4 - 8] நினைந்து,

"அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?" [ஆரணி-விராதன் வதை 60]

என்று விராதன் வாய்மொழியாகப் பேசுவன். இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், "முன்பு பின்பு நடு இல்லாய்!" [யுத்த - பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,

"மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்" [யுத்த நிகும்பலை யாகப் 175]

என்று குறிப்பிடும் பகுதியிலும் இக்கருத்து மிளிர்வதைக் காணலாம். கவிஞனே பிறிதோர் இடத்தில்,

"மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்" [அயோத். கைகேசி சூழ்வினை 62]

[தேவ தேவர் - சிவன்; சேவகர் - இராமன்]

என்று இக்கருத்தை மேலும் வற்புறுத்துவன். இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,

"முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை" [பால. கடிமணப் 69]

என்று குறிப்பிடுவன். முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழியாக,

"காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்" [அயோத். கைகேயி சூழ்வினை 91]

என்றும் அவனது 'ஆதி அம் சோதி உருவைச்' சுட்டிக் காட்டுவன்.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மார்கழி அன்னிக்கித் தான் இதுக்கு மீண்டும் ஒரு விடிவு வந்திருக்கு போல:))

இனிய மார்கழி வாழ்த்துக்கள், குமரன்:)

குமரன் (Kumaran) said...

மார்கழி மாசப்பிறப்புக்கு பதிக்கப்பட்டாலும் இந்த இடுகை எழுதத் தொடங்கினது எப்பன்னு பாருங்க. மார்ச்சுல. :-)