Tuesday, June 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 1

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

[6 - 2 - 83 இதழ் முதல் வாரந்தோறும் 'செங்கோல்' என்னும் தமது பத்திரிகையில் திரு. ம.பொ.சி. என்று புகழ்பெற்ற தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பநாடர் சைவரா? வைணவரா?" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஸுதர்சனம் ஆசிரியர் (ஸுதர்சனர்) (ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், வழக்கறிஞர், 3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17) எழுதிய மறுப்புரை]

I. சங்ககாலத்தில் சமயநிலை

1. சில வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் தொல்காப்பியர் அரங்கில் நமது "சங்ககாலத் தமிழர் சமயம்" என்னும் நூலை அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இலவசமாக வழங்கினோம். அந்நூலைப் பெற்றுக் கொண்டவர்களில் திரு. ம. பொ. சியும் ஒருவர். அதைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அறிஞர்கள் "எவராலும் மறுக்கவொண்ணாதபடி 'சங்ககாலத்தில் வைணவமதம் ஒன்றே வேதமதமாகக் கொள்ளப்பட்டுவந்தது' என்னும் உண்மையை நிலைநாட்டுவது இந்நூல்" என்று பாராட்டிவருகின்றனர். மாற்றுக்கருத்துடையவர் எவரும் இன்றுவரை அந்நூலை மறுக்கத் துணியவில்லை.

2. திரு. ம.பொ.சி. அவர்கள் தாம் அந்நூலைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அந்நூலில் நாம் நிலைநாட்டியிருக்கும் முக்கியமான உண்மைக்கு முரணாக இக்கட்டுரைத் தொடரின் 1, 6, 9 - வது பகுதிகளில் பின்வருமாறு எழுதுகிறார்:-

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். 'மாயோன் மேய காடுறை உலகம்' என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் 'காடும் காடு சேர்ந்த நிலமும்' என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் 'ஆய்ச்சியர் குரவையிலே' காட்சிபடுத்துகின்றார். (ம. பொ. சி. கட்டுரை முதல் பகுதி)

இத்துடனின்றி, முல்லை நிலத்திலிருந்து வேறுபட்ட மலையும் மலை சேர்ந்த நிலமும் எனப்படும் குறிஞ்சி நிலத்திலே வாழும் மக்களும் திருமாலை வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆம்; தமிழகத்தின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலையிலே திருமால் கோயில் கொண்டிருப்பதை வைணவப் பெரியவனான மாங்காட்டு மறையவனையே கொண்டு நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இளங்கோவடிகள். 'கடலும் கடல் சேர்ந்த நிலமும்' எனப்படும் நெய்தல் பிரதேசத்திலும் திருமால் கோயில் கொண்டிருப்பதை வஞ்சிக் காண்டத்திலே இளங்கோ கூறுகின்றார். "வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக்கிடந்த நெறியாகில்லை" என்று வயல் வளம் படைத்த நன்செய் மண்டலமான சோழமண்டலத்தை இளங்கோ வருணிக்கிறார். 'வயலும் வயல் சார்ந்த நிலமும்' எனப்படும் சோழ மண்டலத்திலுள்ள திருவரங்கத்திலேயும் திருமால் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார் என்று வைணவ அந்தணரான மாங்காட்டு மறையவனைக் கொண்டு இளங்கோவடிகள் நமக்கு அறிவிக்கின்றார். இதனால் சங்க காலத்திலே காடும் காடு சேர்ந்த இடமுமான நெய்தல் (முல்லை) நிலத்திலே வாழும் மக்களுக்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் மக்களால் வழிபடும் பொதுத்தெய்வம் ஆகியிருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றி, திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்பிருந்த நிலை இது. (ம.பொ.சி. கட்டுரை முதல் பகுதி)

சமஸ்கிருத மொழிப் புலவர்கள் வேத காலம் என்கிறார்களே, அதை சங்ககாலம் என்கிறார்கள், தமிழ்ப் புலவர்கள். கிருத்துவுக்கு முற்பட்ட காலம் அது. அந்தக் காலத்திலே, சிவனை வழிபட்டு வந்தனர் தமிழர். ஆனால் 'சிவமதம்' என்னும் பொருளிலே "சைவம்" என்பதாக ஒரு மதம் நடைமுறையில் இருக்கவில்லை. அதுபோல விஷ்ணு என்று வடமொழிப் புலவர்கள் சொல்லும் தெய்வத்தையும் "திருமால்" "மாயோன்" என்னும் பெயர்களிலே சங்ககாலத் தமிழர் வழிபட்டு வந்தனர். இந்த இருவேறு தெய்வங்களையும் மன வேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. சங்க நூல்களான தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திலேயும், "பத்துப்பாட்டு" "எட்டுத்தொகை" எனப்படும் இலக்கியங்களிலேயும் திருமாலின் அவதாரங்கள் சொல்லப்படுகின்றன. ஆம்; அங்கு மிங்கும் குறிப்புகளாக. திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ் நூல் எதுவும் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. (ம.பொ.சி. கட்டுரை 6-வது பகுதி)

பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்துமே பக்திப் பாடல்களே என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். (ம.பொ.சி. கட்டுரை 9-வது பகுதி)

இனி, இவற்றுக்கு பதிலுரைப்போம்.

Saturday, June 26, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் இரண்டாம்பாக முன்னுரை

நமது கம்பனின் சமயம் முதல்பாகத்தைப் பல பிரதிகள் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் கழகப்புலவர்கள் அனைவருக்கும் வழங்கினர். எவரும் அதை மறுக்க முயலவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு பிள்ளை அவர்கள் சிவகதி அடைந்துவிட்டார்.

சென்ற வருடம் திரு. ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பர் சைவரே" என்று நிலைநிறுத்துவதற்காகத் தமது 'செங்கோல்' பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுதினார். கட்டுரைத் தொடர் முடிந்ததும் அதை நூல் வடிவிலும் வெளியிட்டார். அந்நூலை மறுக்கும் நமது "சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்" என்னும் நூல் நமது ஸுதர்சனத்தில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு நமது மணிவிழாவின் போது கம்பனின் சமயம் இரண்டாம் பாகமாக வெளியிடப் பெறுகிறது. இதை அவ்வப்போது பெற்றுவந்த திரு. ம.பொ.சி. தமது செங்கோலில் "ஆடத்தெரியாத நாட்டியக்காரி வீதி கோணல் என்றாளாம்" என்கிறகணக்கிலே, நமது நூலுக்கு மறுப்பெழுத முற்பட்டால் தாம் வைதிகச் சைவராக மாறவேண்டியிருக்குமாகையால் தாம் மறுப்பெழுதப் போவதில்லை என்று எழுதி முடித்துவிட்டார். இந்நூலுக்கு ஆணித்தரமான அணிந்துரை அளிந்த வி.பூதூர் வித்வான் கி. வேங்கடசாமி ரெட்டியார் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. இனியாவது மனச்சாட்சியுள்ள தமிழறிஞர் எவரும் கம்பன் பரம வைணவனே என்னும் பேருண்மையை மறுக்கத் துணியமாட்டார்கள் என நம்புகிறேன்.

உண்மையை உயிரினும் ஓம்பும்,
ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
18 - 11 - 84.

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் முதல்பாக முகவுரை

தமிழ்ப்புலவர்களில் சிலர் பல வருடங்களாகக் கம்பனின் சமயம் வைணவமே என்னும் பேருண்மையை மறைக்க முயன்று வருகின்றனர். வெள்ளிடை மலைபோல் விளங்கும் இவ்வுண்மையை நிலை நாட்டும் நூல் ஒன்று எழுதவேண்டும் என்னும் அவா நீண்டகாலமாக எந்தையார்க்கும் அடியேனுக்கும் உண்டு. அதற்குச் சந்தர்ப்பம் ஒன்று சில வருடங்களுக்கு முன் வாய்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டுவரும் கம்பராமாயணப்பதிப்பினுடைய பதிப்பாசிரியர் குழுவின் தலைவராய் விளங்கும் திரு. G. சுப்பிரமணியப் பிள்ளை, M.A.B.L, அவர்கள் கழகப்பதிப்பின் திருவவதாரப்படலத்தில் பல திருத்தங்களைச் செய்து, 7 - 7 - 61 வானொலி இதழில் "கம்பராமாயணத்தில் பாடபேதங்கள்" என்னும் கட்டுரையிலும், தருமை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்டுவரும் "ஞானசம்பந்தம்" என்னும் பத்திரிகையின் பிலவ ஆவணி (10 - 9 - 61) இதழில் வெளிவந்த கட்டுரையிலும் கம்பனின் உண்மைச் சமயத்தைத் திரித்துக் கூறியிருந்தார்.

பிள்ளையவர்களின் கட்டுரைகளிலுள்ள கருத்துக்கள் தவறு என்று நிரூபித்து, கம்பனின் உண்மைச் சமயத்தைக் காட்டித்தரும் "கம்பனின் சமயம்" என்னும் நூல் பிலவ பங்குனி உத்தரத்தன்று (21 - 3 - 62) நம்மால் தொடங்கப்பெற்றது. நம்முடைய பத்திரிகையான "ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்" மாத இதழில் மாதந்தோறும் சிறிதுசிறிதாக வெளியிடப்பட்டுவந்தது. தொடங்கிச் சில மாதங்கள் வரை வெளிவந்தபகுதி பிள்ளையவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களிடமிருந்து யாதொரு பதிலுமில்லை. கழகப்பதிப்பின் ஆரணிய காண்டம் முற்பகுதி வரையிலுமே இப்போது தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறபடியால் அது வரையிலுள்ள பகுதியின் ஆராய்ச்சி இன்று (குரோதி பங்குனி உத்தரத்தன்று) முதல் பாகமாக வெளியிடப்படுகிறது. கழகப்பதிப்பின் எஞ்சிய பகுதிகள் முழுவதும் வெளிவந்த பின் இந்நூலின் பிற்பகுதிகள் வெளியிடப்படும்.

மற்ற துறைகளிற்போலே, இலக்கியத் துறையிலும், மதத்துறையிலும் இப்போது நேர்மை மிகவும் குறைந்துவிட்டது. தங்கள் கருத்தைப் பழங்காவியங்களின் மீது தமிழ்ப்புலவர்கள் ஏறிடுகிறார்கள். இதை எடுத்துக்காட்டினாலும் தவறை ஒப்புக்கொள்ள மனமிருப்பதில்லை. பத்திரிகைகளும் உண்மையை வெளிப்படுத்தும் இத்தகைய நூல்களுக்கு மதிப்புரையெழுதத் தயங்குகின்றன. இது நாட்டுக்கு நல்லதல்ல. பிள்ளையவர்கள் நம் கருத்துக்கு மாறுபடுவாரானால், தம் கருத்தை நிலைநாட்டி எழுதவேண்டும். இல்லாவிடில் முன்னம் தாம் எழுதியது தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவே நேர்மையும் பெருந்தன்மையுமாகும். மௌனமாயிருப்பது புலவர்களுக்கு அழகல்ல. பத்திரிகைகளும், மற்ற தமிழ்ப்புலவர்களும் இத்தகைய நூல்களை நடுநிலைநின்று ஆராய்ந்து மதிப்புரைகளை எழுதவேண்டும். இதனால் நாடு நலம் பெறும். தங்களுக்குக் கசப்பாயிருக்கின்ற காரணத்தால் உண்மைகளை மறைக்கப்புகுவது நாட்டுக்குத் தீங்கையே விளைக்கும். தமிழ் நாட்டில் தீங்குகள் ஒடுங்கி நலங்கள் ஓங்க ஆதி பரம்பொருள் அருளுவானாக.

ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
குரோதி பங்குனி உத்தரம்.

Friday, June 18, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 4

'செங்கோல்' தொடர் 15

"அரி என்னும் திருமாலே காப்பிய நாயகனாக அவருக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அது போல சிவனுக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை; ஆராய்ந்து தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது" என்கிறது செங்கோல். ஆராய்ந்துதானே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது செங்கோல்; இன்னம் எதற்கு ஆராயவேண்டும்?

'செங்கோல்' தொடர் 16

"வைணவ ஆசாரியர்கள்கூட தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்துவிட்டனர். இந்த வைணவர்களிடமிருந்து கம்பர் பெரிதும் வேறுபடுகிறார் என்பதோடு தமிழைப் பொறுத்தவரையில் சைவநாயன்மார்களான நால்வரைப் பின்பற்றித் தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் எனலாம்" என்கிறது செங்கோல். ஆசாரியர்கள்தானே மணிப்பிரவாளநடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்தவர்கள்! செங்கோலின் கருத்துப்படி ஆழ்வார்கள் யாரும் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்திலரே! அப்படியிருக்க ஆழ்வார்களை விடுத்து நால்வரைப் பின்பற்றி தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் என்பது செங்கோலின் மனக்கோட்டை தானே!

இதே தொடரில் 'திருவேங்கட மலையைப் பெற்றதின் காரணமாகத் தொண்டைமண்டலத்திற்கு ஏற்பட்ட சிறப்பை 13 செய்யுள்களால் வருணிக்கிறார். வேங்கடமலையையும் அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனையும் 5 செய்யுள்களால் புகழ்ந்தேத்துகிறார்' என்கிறது நம் செங்கோல். இப்படிச் சொன்ன செங்கோலே தொடர் 10ல் 'நாடவிட்ட படலத்திலே கம்பநாடர் வேங்கடமலையை நான்கு செய்யுள்களால் வருணிக்கப் புகுந்தவர், அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக்காட்டத் தவறிவிட்டார்' என்கிறது. 'அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனைப் புகழ்ந்தேத்துகின்றார்' என்று இத்தொடரில் காட்டுகிறது. இதில் எது உண்மை என்பதை வாசகர்களே முடிவு செய்வார்களாக.

'செங்கோல்' தொடர் 17

தலைப்பு:- கம்பர் சைவரே.

"ஒளவைப் பிராட்டியும் ... ...சைவர் என்று தெரிகின்றது. ஆனால் அவரே 'அரனை மறவேல்' 'திருமாலுக்கடிமை செய்' என்றும் பாடித் திருமாலையும் சிவனையும் சமநிலையிற் காட்டுகிறார்" என்று தொடர்கின்றது செங்கோல். 'அரனை மறவேல்' என்பது ஆத்திசூடியில் உள்ளதா? 'அறனை மறவேல்' என அண்மையில் தவறாகச் சொல்லினர்; மேலும் கொன்றைவேந்தனில் திருநெல்வேலிப் பிரதிகளில் 'சினத்தைப் பேணில் தனத்திற்கழிவு' என்றுள்ளதை 'சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு' என்று மாற்றிவிட்டனர். இவ்விவரஙக்ளை எனது 'வில்லிபாரதத்தில் வினோதத்திருத்தங்கள்' என்ற கட்டுரையில் காணலாம்.

'சங்ககாலக் கவிஞர்களில் ஒருவரான கடுவன் இளவெயினனார் திருமாலையும் முருகனையும் தனித்தனிப் பாடல்களால் வழிபட்டதனைப் பார்க்கிறோம்' என்கிறது செங்கோல். திருமாலுக்குரிய மேன்மையும் முருகனுக்குரிய தன்மையும் விளங்குமாறு அவரவர்கட்குரிய தனித்தன்மையை விளக்குவதை அப்பாடல்களில் காணலாம்.

"இடைக்கால உரையாசிரியர்களிலேயும் பலர் தாங்கள் சிவபக்தராயிருந்தும் சமணபௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதினர்" என்கிறது செங்கோல். பரிமேலழகரும் சிவபக்தர்தானா? என்பதைச் செங்கோலே சொல்லட்டும். மேலும் "அவர் வேத மதத்தவராதலால் அவரை வைணவராகக் கொள்ளவும் வாய்ப்புண்டு; ஆனால் அவரது நெற்றியில் நாமந்தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்க சந்தர்ப்பமே இல்லை" என்கிறது செங்கோல்.

இங்கு இதை மறுப்பதற்கு முன் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாமம், திருமண் என்பன ஒரு பொருட்சொற்கள், ஆழ்வார்கள் பாடல்களுள் நாமம்பற்றி இல்லை. ஆதலின் நாமம் பிற்காலத்தில் தோன்றியதுதான் என்ற கருத்தினராகி நாமம் பற்றிக் கம்பர் சொன்ன பாடல்களை இடைச்செருகல் என்று கொண்டனர் சிலர்.

பெரியாழ்வார் திருமொழி 3 - 4 - 8.

1) "சிந்துரப்பொடிக்கொண்டு சென்னியப்பித்
திருநாமம் இட்டங்கொ ரிலையம்தன்னால்
அந்தர மின்றித்தன் நெறிபங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல்வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்றங் கினவளைஇழவே லென்னச்
சந்தியில் நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே".


'திருநாமம் இட்டங்கோ ரிலையம்தன்னால்" - நேரியதாய் நீண்டு ஒட்டின இடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையாலே திருநெற்றியிலே திருநாமமாக இட்டு ஊர்த்வபுண்ட்ராகாரமாக அழுத்திவைக்குமாய்த்து - மாமுனிகள்.

'சாதிலிங்கப் பொடியைக்கொண்டு திருக்குழலிலே அலங்காரமாகச் சாத்தி (நாமமிடவேண்டிய) அந்த நெற்றியிலே (ஒட்டினாற் பிடித்துக் கொள்வதான) ஒரு தளிரான இலையால் ஊர்த்வபுண்ட்ரம் சாத்தி' வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர்.

2) திருவிருத்தம் 49ல் 'மண்நேரன்ன ஒண்ணுதலே' என்பதற்கு 'திருமண்காப்பைத் தகுதியாகத் தரித்த திருநெற்றியை உடையவள்' என்பர் வை.மு. சடகோப ராமாநுஜாசார்யர்.

இதனை அடியொற்றிக் கம்பநாடர் பால-கடிமணப்படலத்தில் (49) 'என்றும் நான்முகன்முதல் யாரும் யாவையும் - நின்ற பேரிருளினை நீக்கி நீள்நெறி சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடும். தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' எனக் கூறியுள்ளதை மிகைப்பாடல் ஆக்கிவிட்டனர்.

கம்பரை அடியொற்றி திரு-அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகத்திலே இவ்விடத்து,

பல்லவி

ராமசாமி கொண்டகோலம் என்னாலே சொல்லப்போமோ

அநுபல்லவி

மோமிதிலை ராசன்முன் அனேக-கோடி மன்மதனே நிகராக

சரணம்

பாதகடகம்சேர்த்தி மருங்கினிற் பசும்பொன் ஆடைபோர்த்தி மார்பின்
மீதுபொன்னூல் ஏற்றித் தன்நாமமும் விளங்கவே சாத்தி

என்று கூறுவதால் கவிராயர் 'என்றும் நான்முகன்முதல்' என்ற பாடலைக் கம்பருடைய பாடல்தான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். கவிராயரும் சைவர்தான். அவர் உடன்பட்ட பாடலை இந்த சைவ ஞானிகள் உடன்பட மறுப்பது வியப்புக்குரியதே.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா மலராக வெளியிட்ட கம்பராமாயணம் சுந்தரகாண்டம் சம்புமாலி வதைப்படலம் (832)

"ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய்சுடர் விளக்கிற் றோன்றும் நெற்றியே நெற்றியாக"
என்றுளது.

பழைய பாடமும் இதுவே. மேற்படி பதிப்பில் இதற்கு விளக்கமாக, "திருமாலின் துவாதச நாமங்களைக் கூறியபடியே பன்னிரண்டு உறுப்புக்களில் இட்டுக்கொள்வது மரபாதலின், திருமண்காப்புக்கு நாமம் என்பது பெயராயிற்று. 'தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' என்பர் முன்னும் (கடிமணப் 49). 'ஈராறு நாமம் உரைசெய்து மண்கொடிடுவார்கள் காணும் இமையோர்' என்றார் வில்லிபுத்தூரரும். நெய்யிட்டுப் பிரகாசிக்கும் தீபம்போன்றிருந்தது அனுமனது நெற்றி நாமம் என்றும் அது நெற்றிப்படையாகத் தோன்றும்படி என்றும் கூறியபடி. நெற்றி-முன்னணிப்படை" என்றுள்ளது காண்க. இதுகாறும் கூறியவாற்றால் நாமம் என்பது முன்னமேயுள்ளதுதான்; புதிதல்ல என்று உணர்க.

இதை மறுத்துச் செங்கோல் 'அவரது (கம்பரது) நெற்றியில் நாமம் தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்கச் சந்தர்ப்பமே இல்லை' என்கிறது.

ஆயின் ரசிகமணி T.K.C. அவர்களைப்போலவும் செங்கோல் அரசரைப்போலவும் கம்பநாடரை மீசையுள ஆண்பிள்ளைச் சிங்கமாக ஆக்கி வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கு மட்டும் சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது போலும்! இவர்கள் தாடியும் உடையவர்களாயிருந்தால் திருவள்ளுவரைக் காட்டியிருப்பது போன்று கம்பரையும் தாடியும் மீசையும் உடையவர்களாகக் காட்டியிருக்கக்கூடும். 'கம்பராமனைக் கடவுளாகத்தான் ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லவில்லை' என்கிறது செங்கோல். ஆயின், கம்பர் தம் ராமனை எப்படிக் காட்டியுள்ளார்? தெய்வமாகவும் தெய்வத்துக்கு மேலாகவும் தானே காட்டியுள்ளார்! இஃது எல்லோரும் அறிந்ததுதானே! மேலும் 'கம்பராமனை மானிட சமுதாயத்தின் வழிகாட்டியாக ஏற்றால்போதும்' என்கிறது செங்கோல். இஃது செங்கோலின் இராமபக்தி போலும்! மேலும் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என்று முடிக்கிறது செங்கோல். செங்கோல் மற்றொரு புலவரை(க் கம்பர்போன்று) நமக்கு நினைவூட்டினால் நாம் செங்கோலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்படுவோம்.

"சங்ககாலத்தில் மதப்பூசல் இல்லை; வேறுபாடின்றித் திருமால், சிவன், முருகன், கொற்றவை ஆகிய எல்லாத் தெய்வங்களையும் மக்கள் வணங்கிவந்தனர்; அதேபோல சைவராகிய கம்பரும் பொதுவாகத் தெய்வங்களைப் போற்றினார்; எடுத்துக்கொண்ட காப்பியத் தன்மைக்கேற்ப இராமபிரானை அதிகமாகப் பேசியிருக்கின்றார்; ஆகவே கம்பர் சமரசஞானி" என்று கற்பனை பண்ணிக்கொண்டது செங்கோல். இதனை நன்கு ஆராய்ந்து 'சங்ககாலச் சமயம் யாது' என்பதனைச் சங்கநூல்களாலே விளக்கி 'திருமாலே முத்திதரும் முதற்கடவுள்' என்பதைக்காட்டி, இச்சங்ககாலச் சமயமே தான் கம்பரின் சமயம் என்று உறுதிசெய்து, 'சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்' என்ற தலைப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலாசிரியர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அட்வகேட் அவர்களைத் தமிழுலகு நன்கறியும். 'ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்' மாத இதழ்வாயிலாக, வடமொழி தமிழ்மொழி இரண்டிலுமுள்ள பிரமாண நூல்களை உரையுடன் வெளியிட்டு வருகின்றார். வியாக்கியானங்களையும் விளக்கங்களுடன் வெளியிடுகின்றார். அன்பர்களின் உண்மையான ஐயங்களை 'கேள்விபதில்' என்ற தலைப்பில் தீர்த்துவைக்கின்றார்.

முன்னோர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை உடனே கண்டிக்கவும் உண்மைகலை விளக்கவும் தகுந்த வன்மையாளர். அறிஞர்கட்கும் பக்தர்கட்கும் அடங்கியிருப்பவர். சுயநலமின்றிச் சமயத்துக்குத் தொண்டாற்றும் தூய வேதியர். 'வித்யா விசாரத' 'திவ்யார்த்த ரத்னநிதி' என்று சிறப்புப் பெயர்களும் உடையவர். இப்பெரியாரை எவ்வளவு பாராட்டினும் தகும். இந்நூலைப் படிக்கும்போது இவரது பரந்த அறிவும் சிறந்த தொண்டும் நம்மால் அறியமுடிகிறது. இப்பெரியார் இதுபோன்று பல நூல்கள் எழுதிச் சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற நம்பெருமாள் திருவருள் பாலிப்பாராக.

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வாழ்க!
வைணவக் கம்பன் வாழ்க!


இங்ஙன்,
அன்புள்ள,
கி. வேங்கடசாமி.

வி.பூதூர், S.A. Dt.
1 - 7 - 1984

Saturday, May 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 3

'செங்கோல்' தொடர் 10

"நாடவிட்ட படலத்தில் திருவேங்கடத்தைப் பற்றியுள்ள 4 செய்யுள்களில் ஒன்றில் கூடத் திருமாலின் வடிவத்தைக் காட்டவில்லை; "... ... வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும் நான்மறைகளுக்கு அது உறைவிடம் ஆகலாம் தானே! வேங்கடத்தை அடைவோர் முத்திபெறுவதற்கு வைணவத்தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே! வேங்கடமலையை 4 செய்யுள்களால வருணிக்கப் புகுந்தவர் அந்த மலையில் நின்ற வண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்; இதெல்லாம் எதைக் காட்டுகின்றன? கம்பநாட்டார் மறந்தும் புறந்தொழாக் கொள்கையை வலியுறுத்தும் வைதிக வைணவர் அல்லர் என்பதைத் தானே!" இது செங்கோல்.

'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' என்ற வரியால் வேலவன் குன்றம் எனச் சுட்டிப் பின் 'அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்' என்பதனால் அது திருமால் திருமலைதான் என்பதைக் குறிப்பது காண்க.

'முத்தி பெறுவதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே' என்கிறது செங்கோல். பரிபாடலில் 'நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை - ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்' என்று முத்தியளித்தற்குப் பிறதெய்வங்கட்கு உரிமையில்லை என்பதால் முத்தி பெறுதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டும் என்பதை உணர்க. "பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்' என்று கம்பனும் திருவவதாரப்படலத்தில் இதை ஏற்றுக்கொண்டிருப்பது காண்க.

"நாடவிட்ட படலத்திலே வேங்கடமலையை வருணிக்குமிடத்திலே அந்த மாமலையில் நின்றவண்ணம் காட்சி அளிக்கும் நெடுமாலின் உருவம் காட்டப்படாததற்கு வைதிகப் புலவர்கள் என்ன சமாதானம் சொல்லமுடியும்?" இது செங்கோல். ஆறு செல்படலத்தில் (36) 'வலங்கொள்நேமி மழைநிற வானவன் - அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை - விலங்கும் வீடுறுகின்றன மெய்ந்நெறி புலங்கொள்வார்கட்கனையது பொய்க்குமோ?" என்று திருமாலையும் அங்குள்ள விலங்கும் வீடுறுதலையும் பாடிய கம்பநாடர் திருவுள்ளம் நன்கு விளங்குகின்றதே! இதற்குச் செங்கோல் என்ன செப்பும்?

"'கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரேல் உம் நெடிய கொடுமைநீங்கி வீடுறுதிர் ஆதலினால் விலங்குறுதிர்' என்னும் வரிகளிலே வேங்கட மலையை நெருங்காதீர் என்று கதையின் தேவைக்காகக் கூட பரமவைணவர் ஒருவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா?" என்கிறது செங்கோல். 'இராமகாதைக்கு இது பொருந்துமென்றாலும்' என்பதன் கருத்துயாதோ? 'விலங்கும் வீடுறுகின்றன' என்று ஆறு செல்படலத்துள் கூறுவதை நோக்க, விலங்குகளாகிய நீங்கள் சென்றால் எடுத்த காரியத்துக்கு இடையூறாகும் என்று உண்மையாகவே நம்பித்தான் சொல்கின்றனர். திருவிருத்தத்தில் (6) 'உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே' எனவும் திருவாய்மொழி 10 - 7 - 1 'செஞ்சொற்கவிகாள்! உயிர்காத் தாட்செய்ம்மின்' எனவும் வருவனவற்றை நோக்குக.

தொடர் 10ல் 'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' எனக் காட்டிய செங்கோல் 'இனி, வேங்கடமலையில் ஆறுமுகன் கோயில் கொண்டிருந்தார் எனச் சைவப் புலவர்களிலே சிலர் கூறுகின்றார்களே! அதையும் பார்ப்போம்' என்கிறது. இக்கருத்து இதற்கு உடன்பாடில்லை போலும், ஆயின் அதனை ஏன் இங்குக் கூறுதல் வேண்டும்? நாமும் அதைப் பார்ப்போம்.

"தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் அவர்; அவர்களிலே எவரும் வடவேங்கடத்திற் கோயில்கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை; ஆனால் பிற்காலத்தில் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை எழுதிய திரு. மாதவச்சிவஞானயோகிகள், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்னும் சொல்லுக்குக் கீழ்வருமாறு விருத்தியுரை கூறுகிறார் - 'தமிழ்நாட்டிற்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபு பற்றி' என்பது" எனக் காட்டுகிறது செங்கோல்.

'தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் ஆவர். அவர்களிலே எவரும் வடவேங்கடத்திலே கோயில் கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை' என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கொப்பாகும். என்னை? எனின்: 'தூயஞானம் நிறைந்த சிவச்சுடர் தானேயாகிய தன்மையாளன்' என்று பாராட்டப்பெற்ற பேராசிரியர் நச்சினார்க்கினியர் - திரு. மாதவச்சிவஞானயோகிகட்கு முந்தியவர் என்பதில் யார்க்கும் ஐயம் இல்லை. அப்பெரியவர், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்ற சொற்கு 'நிலங்கடந்த நெடுமுடியண்ணலை உலகம் தவம்செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரினும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்' என்று உரையிட்டுள்ளதை இல்லை என்று செங்கோல் செப்புமா?

'சமன்கொள் வீடுதரும் தடம்குன்றம்' என்று (திருவாய்மொழி 3 - 3 - 7) நம்மாழ்வார் அருள்வர். வேங்கடத்தை வீடுதரும் மலை என்று நம்மாழ்வாரும் கம்பரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் வற்புறுத்தலைக் காணும்போது பண்டைநாளிலிருந்தே இக்கருத்து பரவி வருகின்றதை உணரலாம். இங்கு ஹரிசமயதிவாகரம் தொகுதி 3 பகுதி 3ல் ஆராய்ச்சிவல்லுநர் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் கூறுவது நோக்கத்தகும்: -

'அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் 'ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: - யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா' என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே 'இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் - குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்' 'குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் - அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - சென்று சேர் திருவேங்கடமாமலை' என்றருளிச்செய்தார். 'வேதவெற்பு' என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டு போலும் என்க.

"ஒருகால் மேற்படி பண்டிதர் 'சென்னை ராஜதானிக் கலாசாலைப் புரொபஸராய் இருந்த சேஷகிரி சாஸ்திரியார் எழுதியவாறு இராமாநுஜர்க்கும் பின்பிருந்தவர்களே ஆழ்வார்கள் என்று கருதியிருத்தலும் கூடும். அவ்வாறாயின் பொதுநோக்கினரும் சங்கத்துச் சான்றோரும் ஆகிய ஐயனாரிதனார்:-

'வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
கிருளீயும் ஞாலத் திடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்'


எனல் காண்க. இதுவும் இடைச்செருகல் ஆயின் சிலப்பதிகாரத்துள் வரும் 'பகையணங்காழியும்' என்பதும் இடைச்செருகலாயிருக்கலாம்". இவை நினைவிற்கொள்ளத்தகும்.

மேலும், திரு. மாதவச்சிவஞான யோகிகள் கூற்றை மறுத்துப் பேராசான் அரசஞ்சண்முகனார் தம் சண்முகவிருத்தியில் கூறுவதும் இங்கு நோக்கத்தகும்:-

"இனி, அவர் 'தமிழ்நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபுபற்றி' என்றார். அது கருத்தாயின் அவர்தாமே 'இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்' எனக் காஞ்சிப் புராணத்துட் கூறலான், அறுமுகக் கடவுளுக்குத் தந்தையாகலானும் அகத்தியனார்க்குக் குரவனாகலானும் அக்கண்ணுதல் வரைப்பினுள் ஒன்றைக்கூறல் வேண்டும்; அற்றன்று; இருவரும் அபேதமாதல் கருதி அங்ஙனம் கூறினார் எனின்: தெற்கின் கண்ணும் அறுமுகக் கடவுள் வரைப்பினுள் ஒன்றே கூறல்வேண்டும் அங்ஙனமின்மையானும், எல்லை கூறுதல் யாவர்க்கும் ஒப்பமுடிந்ததாதல் வேண்டுமாகலின், 'வீங்கு நீரருவி ... ... நின்றவண்ணமும்' (சிலப் - காடுகாண் 41 - 57) என இளங்கோ அடிகள் கூறினமையும், திருமுருகாற்றுப்படையுள் முருகோன்மலை எனப் பரங்குன்ற முதலாய பிறகூறலன்றி வேங்கடத்தை அவன்மலை என நக்கீரனார் கூறாமையும் புராணங்களுட்பல நெடியோன் குன்றம் எனவே கூறலுமாராயின் வேங்கடம் அறுமுகக் கடவுள்மலையும் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடியாமையாலும், முருகன் குறிஞ்சிநிலத் தெய்வமாகலின் அமையுமெனின், கயிலாயத்தையும் மேருவையும் கண்ணுதல் மலையெனவும், பொதியினை அகத்தியன்மலை எனவும் கூறலன்றி அவன்மலை எனக் கூறலினையான் அவ்வாறே வேங்கடமும் நெடியோன்மலையாகலன்றி அறுமுகக்கடவுள் வரைப்பெனல் கூடாமையானும் அது பொருந்தாது என்பது". இந்த எடுத்துக்காட்டு செங்கோலுக்குப் போதுமென நினைக்கிறேன்.

Wednesday, April 21, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 2

'செங்கோல்' தொடர் 3

"பிணக்கு இல்லாத சங்ககால நிலையை ஒட்டி இறைவனைப் பெயர் குறிப்பிடாது 'உலகம் யாவையும்' என்ற பாட்டில் கம்பர் 'தலைவர்' என்ற சொல்லால் கூறினார்" என்கிறார். சிவபெருமான் ஐந்தொழில் செய்பவன் என்பது சைவர் கொள்கை; அதற்கு மாறாக 'முத்தொழில் செய்யும் அலகிலாவிளையாட்டுடையான் திருமால்' என்பது வைணவர் கொள்கை. இத்திருமாலைத் 'தலைவர்' என்பது பொருத்தம் தானே. முதற்பாட்டில் 'தலைவர்' என்றும், அடுத்தபாட்டில் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' எனச் சத்துவகுணமாகிய முற்குணத்தையுடைய திருமாலே முதல் என்றும், அதற்கும் அடுத்தபாட்டில் அத்திருமாலாகிய அரியையே 'ஆதியந்தம் அரி எனயாவையும் - ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன' என்று வேதத்தின் முதலிலும் முடிவிலும் 'அரி ஓம்' என ஓதினர் என்றும், அடுத்துவரும் அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்தில் வெளிப்படையாக அந்த முதலே இராமன் என்பதனை,

"வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே"


என்றும் காட்டுகின்றார். இந்தமுறை - திருவாய்மொழியில் முதற்பத்து முதல் திருவாய்மொழியில் திருமால் பெயரைக் குறிப்பிடாது, 2ம் திருவாய்மொழி 10ம் பாசுரத்தில் 'வண்புகழ் நாரணன்' என்று காட்டுவதை அடியொற்றியுள்ளது.

'செங்கோல்' தொடர் 4

'அவர் சமய வைதிகர் அல்லர் என்பது தேற்றம்' என்கிறது. ஆனால் சைவர் என்றுமட்டும் சொல்வது பொருந்துமா?

'செங்கோல்' தொடர் 5

'கம்பரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதனை வலியுறுத்துமிடங்களிலே தூய வைணவராகவே மாறிவிடுகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை' என்கிறது. (சிறிது பெருமூச்சுவிடலாம்). ஆனால் மற்ற இடங்களிலே இயல்பான சைவராகவே இருக்கிறார்போலும்!

'செங்கோல்' தொடர் 6

'இந்த இரு வேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது' என்கிறார். 'ஆயின், தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்றால் கம்பரைத் தமிழர் என்று சொல்லாது சைவர் என்பது பொருந்தாதல்லவா?' அங்கும் இங்கும் குறிப்புகளாகத் திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ்நூல் எதுவும் சங்க காலத்தில் இல்லை' என்கிறார். சிவபெருமான் வரலாறுகளை முழுதும் கூறும் தமிழ்நூல்களேனும் சங்ககாலத்தில் உளதோ? என்பதனை ஐயா அவர்களே சொல்லுதல் வேண்டும்.

'தமிழர் எல்லோருமே வழிபட்டுவந்த சிவன், திருமால், கொற்றவை, முருகன் ஆகிய தெய்வங்களோடு பல்லவர் காலத்திலே ஆறாவது தெய்வமாகிய கணபதியும் தமிழகத்துக்கு வந்தார்' என்பதில் ஐந்தாவது தெய்வம் யாதோ? அறியோம். 'இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர் என்றும் உறுதியாகிவிட்ட ஷண்மதம் தோன்றுகிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த சூழ்நிலை இது' என்கிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதம் இதுதானா? என்பதனை ஐயாவே தான் விளக்கவேண்டும்.

'செங்கோல்' தொடர் 7

'சடகோபரந்தாதி படைக்குமளவுக்கு அந்த ஆசார்யரிடம் பக்தி இருந்திருக்குமானால் தமது காப்பியத்திலே அவரைப் புகுத்தியிருக்கக் கம்பரால் முடிந்திருக்கும்; தமக்கு உணவளித்துக் காத்த சடையப்ப வள்ளலைப் புகுத்தவில்லையா?' என்கிறது செங்கோல். சேக்கிழார் - தமது தொண்டர்புராணத்திலே மணிவாசகரைக் குறிப்பிடாமையால், மணிவாசகர்க்கு முன்பு சேக்கிழார் இருந்தாரா? மணிவாசகரிடத்தில் சேக்கிழார்க்குப் பத்திமை இல்லையா? என்பதற்குச் சமாதானம் கண்டால் இதற்கும் சமாதானம் காணலாம். 'திருத்தொண்டத் தொகையிற்கூறிய அடியார்களை மட்டும் பெரியபுராணத்திலே சேக்கிழார் கூறினார்; அதனால் அதில் இல்லாத மணிவாசகப் பெருமானை அவர் கூறவில்லை' என்னலாம். ஆயின் கீழேயுள்ளதனை நோக்கத்தகும்:- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலராக வெளிவந்த கம்பராமாயணம் சுந்தரகாண்டத்து முன்னுரையில் 'பழம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிற்காணப்படும் பதிகம் (நுவல்பொருட்சுருக்கம்) இராமாவதார நூலிற்காணப்படவில்லை; எனினும் இராமாவதார நூலாசிரியராகிய கம்பர், ஆழ்வார்களுள் இராமபிரான்பால் பெரிதும் ஈடுபாடுடையவரான குலசேகரர் அருளிய பெருமாள்திருமொழியுள் 'அங்கண் நெடு மதிள்புடைசூழ்' என்று தொடங்கும் பத்தாந்திருமொழியைக் கொண்டு அதன் விரியாகத் தம் இராமாவதார நூலை இயற்றியருளினார் என்று கருதலாகும். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரியாய் இயற்றியருளியதும் இங்கு நோக்கத்தகும். இம்முறையில் இராமபக்தராகவே மாறிய கம்பர் எந்த ஆழ்வாரையும் சொல்வதற்கில்லை; இராமவதாரம் அரங்கேற்றும்போதுதான் 'நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள் - விஞ்சிய ஆதரத்தாற்கேட்பக் கம்பன் விரித்துரைத்த - செஞ்சொல் அந்தாதி' என்றதனால் இராமாவதார நூலிற்சொல்லாத குறைதீரச் சடகோபரை நூறுபாடல்களால் போற்றியுள்ளார் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இராமாவதாரத்தில் சடகோபரைப் பற்றியோ பிற ஆழ்வார்களைப் பற்றியோ சொல்லாமை குறையாகாது. பாயிரத்துள் 'தருகை நீண்ட தயரதன்' என்று தொடங்கும் பாடலைச் சேர்த்துள்ளமை உணர்க. இஃது இடைச்செருகல் எனின் சிவனைப்பற்றிக் கூறுபவையும் இடைச்செருகலாக இருக்கலாமே!

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் மேற்படி சுந்தரகாண்ட முன்னுரையில், இவர் இயற்றிய பிறநூல்களுள் சடகோபரந்தாதியும் ஏரெழுபதும் சிறப்புடையவை என்பதும் காண்க.

'செங்கோல்' தொடர் 8

செங்கோலார் "இரணியன் நாத்திகன்; இராவணன் சிவபக்தன்; மைந்தனுடைய வெட்டுண்ட கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக்கொண்டு பிள்ளைப்பருவத்தில் அவன் தன்னைத் தழுவியதை நினைத்து, ஆற்றாமை கொள்கிறான்; அப்படிப்பட்டவனையா தன் பிள்ளையையே கொலைபுரிய முயன்ற இரணியனோடு ஒப்பிடுவது" என்கிறார்.

இரணியன் நாத்திகன் என்பது எப்படிப் பொருந்தும்? தவம் செய்து இறைவனிடத்தில் வரம்பெற்றவனை நாத்திகன் என்னலாமா? வரம்பெற்றபின் இறைவனைக் காட்டிலும் யானே பெரியவன் என்று ஆணவம் கொள்கிறான்; அக்கருத்துக்கு மாறுபட்டவன் பிள்ளையாயினும் விரோதிதானே? சீதையை விட்டுவிடு என்ற இந்திரசித்தை இராவணன் வெறுக்கவில்லையா? பக்தியில் மிக்கவர்களாயிருந்தும் ஆணவத்தில் இரணியனும் இராவணனும் ஒரு தன்மையரே. தாயுமானாரும், ஆணவத்தினுமிக்க ஆங்காரத்தை வருணிக்கும்போது, 'ஆங்காரமான குலவேட' என்ற பாட்டில் 'ஈங்கார் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்திராவணாகாரமாகி' என்று குறித்தல் நோக்கத்தகும். முருகன் அவதாரத்தை வான்மீகி குறிப்பிட்டிருக்கவும் கம்பர் அதை நீக்கியது சரசத்துக்குப் போலும்!

'செங்கோல்' தொடர் 9

"இரணியன் வதைப்படலத்திலே பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன; சொல்லுக்குச் சொல் சுவையூட்டுவனவாக இருக்கின்றன; தூணைப் பிளந்துகொண்டு திருமால் நரசிம்மாவதாரம் எடுக்கும் இடத்திலே அண்டமே கிடுகிடுப்பது போன்ற ஒரு அச்சம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது" என்கிறார் செங்கோலார். பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன என்றால் சில செய்யுள்கள் தானே இடைச்செருகல் என்று தோன்றுகிறது? எனவே ஐயா அவர்கள் கருத்துப்படி 'இரணியன் வதைப்படலம்' கம்பர் செய்ததுதான் எனத் தோன்றுகிறது. அங்ஙனம் இருக்க 'இரணியன் வதைப்படலம் முழுவதும் கம்பர் இயற்றியது தான் என்று ஏற்றுக்கொள்வோமானால் 'உலகமகாகவிஞர்கள் மண்டலத்திலிருந்து கம்பரைக் கொஞ்சம் தாழ்த்திவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று கூறுவது பொருந்துமா? ஆய்ந்து பார்க்க.

Friday, April 16, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 1

[வித்வான் திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.பூதூர், S.A.Dt]

மதிப்பிற்குரிய உயர்திரு (சைவத்திரு) ம.பொ.சி. அவர்கள் தமது 'செங்கோல்' இதழில் (மலர்.33 இதழ் - 10 முதல்) 17 தொடரில் 'கம்பநாடர் சைவரா, வைணவரா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். (பிறகு 'கம்பரின் சமயக்கொள்கை' எனும் நூலாகவும் இதனை வெளியிட்டுள்ளார்.) அதனுள், முதல் தொடரில் 'ஆகவே கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும், வைணவர்களின் தனித்தெய்வமாகக் கருதப்படும் திருமாலின் அவதாரமான இராமனை நாயகனாகக் கொண்ட காப்பியத்தைப் படைப்பதற்கு அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை' என்று சொல்லி, 17-வது தொடர் முடிவில் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என முடிக்கின்றார். இதனால் ஐயா அவர்கள், முன்னமேயே கம்பர் சைவர் தான் என்று உறுதிகொண்டுவிட்டார் என விளங்குகிறது. இதன் காரணம் யாதோ உரைத்திலர். சைவர்கள் சமரசவாதிகள் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதைப்பற்றி விளக்குவதற்குமுன் இன்றியமையாத இரு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறித்தல் தகும்.

(1) திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். 'நம்மாழ்வாரும் தமிழ்நாடும்' என்ற ஒரு சிறு நூலும், 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற ஒரு பெருநூலும், வேறு பல நூல்களும் வெளியிட்டவர். அந்நூல்கள் என்னைக் கவர்ந்தன. சுமார் 50யாண்டுகட்குமுன் யான் எழுதிய /'காந்தியடிகள் நெஞ்சு விடு தூது' என்னும் நூற்கு அணிந்துரைபெற அவரை அண்டினேன். அவ்வமயம் உடன் இருந்தவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் இருந்த திரு. S. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், சைவசமாஜச் செயலாளர் திரு. ம. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஆவர். /'காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது' என்றதுமே, திரு.வி.க. அவர்கள் சினந்துரையாடினர். "அவர் மகாத்மா அல்லர்; தெரியாமையால் அவரைப் பற்றி நூல் ஒன்று எழுதிவிட்டேன்; அதற்கு இப்போது வருந்துகிறேன். தாழ்த்தப்பட்ட மக்கட்கு 'ஹரிஜன்' என்ற பெயரைப் புதிதாகச் சூட்டினாரே! அதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தானே பொருள். திருடர்கள் என்றும் பொருள்படுமே!" என மேலும் ஒருமை வசனத்தில் பேசினர். பின்னர், பத்திமைவடிவாய நண்பர் ஆரியூர் வ. பதுமநாபபிள்ளையவர்கள்பால் அணிந்துரைபெற்று அப்போது அந்நூலை வெளியிட்டேன். அண்மையில் அருங்கலைக்கோன் திரு ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். 'ஹரிஜன்' என்ற சொல் வைணவமக்களையே குறிக்குமெனக் கருதித் திரு.வி.க. அவர்கள் அடிகளாரை வெறுத்தார் எனத் தெரிகிறது. இது சமரச உணர்வு போலும்!

(2) சிவம் பெருக்கும் சீலர், சிவக்கவிமணி, தமிழ்க்கடல் இராய. சொ. அவர்களையும் தமிழுலகம் நன்கறியும். நல்ல பேச்சாளர். கவிஞர். காந்தியத்தில் திளைத்தவர். கம்பரிடத்து மிக்க ஈடுபாடு உடையவர். இவர்பால் எனக்கு மதிப்புண்டு. அவர்க்கும் என்பால் அன்புண்டு. இரு சமயநூல்களிலும் பயிற்சி உள்ளவர்; எனினும் கம்பர் சைவரே என்றே கருத்துடையவர். இதனால் - 'கம்பனும் சிவனும்' என்ற தலைப்பில் சிவனைப் பற்றிக் கம்பர் காட்டிய பாடல்களைத் தொகுத்துப் பொழிப்புரையும் எழுதியுள்ளார். 395 இடங்களில் சிவனைப் பற்றி உள்ளது. கவிமொழியாக உள்ளன 168 இடங்கள் என்று காட்டியுள்ளார். அதனுள் 'மழுவாளி' என்ற சொல் இரண்டிடத்துள்ளது என்றெழுதியுள்ளார். அந்நூலை ஊன்றிப் படித்தேன். 'மழுவாளி' என்ற சொல் உள்ள ஒருபாடல் விடுபட்டிருந்தது. அப்பாடல் ஆரணியகாண்டம் - விராதன் வதைப் படலத்துள்ளதாகும்.

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கென்ன குறைவுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த
ஐயத்தாற் சிறிதையம் தவிர்ந்தாரும் உளர் ஐயா!" என்பதாகும்.

தமிழ்க்கடல் ஐயா அவர்களை நேரில் சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'எப்படியோ விடுபட்டது' என்றார். இப்பாடல் சிவனுக்கு ஏற்றம் தரவில்லையாதலால் விடுத்தனரோ அல்லது உண்மையிலேயே விடுபட்டதோ அவனே அறிவான். இவ்விரு நிகழ்ச்சிகளும் சமரசத்தின் தன்மையை ஓரளவு காட்டுவன அல்லவா?

நம் செங்கோல் 'பிற்காலத்து சமய ஸ்தாபனங்கள் வரையறுத்த நியதிப்படி திருமாலானவர் வைணவ சமயத்தவரின் தெய்வமாகிறார். அதனால் இராமகாதை வைணவர்களின் சொத்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்குத் தமிழ்நாடுமட்டும் விலக்கு என்று சொல்லலாம்' என்கிறது.

இவர் கருத்துப்படி திருமாலானவர் சைவர்கட்கும் சொத்தாகப் பாவிக்கப்பட்டுவந்தார் போலும்! "நெய்தல் நிலத்தில் வாழும் மக்கட்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் பொதுமக்களால் வழிபடும் பொதுத் தெய்வமாக இருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதற்கு முன்பிருந்த நிலையிது' என்கிறது செங்கோல். 'முல்லை' என்பது 'நெய்தல்' என்றிருப்பது அச்சுப்பிழை போலும். நால்வகை நிலத்து வாழும் மக்கள் திருமாலை ஒரு சமயத்தவர்க்கே விட்டுக்கொடுத்தனர் போலும்!

'இதிலிருந்து கம்பர் காலத்திற்கு முன்பு தமிழினத்தவரிடையே சைவ-வைணவ சமயங்களைப் பொறுத்தவரையில் சமரச உணர்வு கடைப்பிடிக்கப்பட்டதென்ற உண்மையை அறியமுடிகிறது. ஆகவே, கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும்...' எனத் தொடர்கின்றது.

"தமிழினத்தவரிடையே ... ... கடைப்பிடிக்கப்பட்டது" என்பதில் சைவத்தையோ வைணவத்தையோ சாராது தமிழினத்தவர்கள், தமிழினத்தவர்களாக இருந்தார்கள் என்று கொள்ளாது, 'ஆகவே கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவராகவே இருப்பினும்' என்று கொண்டது எதுபற்றியோ? தமிழினத்தவர் சமரச உணர்வோடு இருந்திருக்கலாம்; ஆயின் சைவராகத்தான் இருந்தனர் என்பதற்கு மூலம் யாதோ? அறியோம்.

'செங்கோல்' தொடர் 2

'செங்கோல்' தன் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் தொடர் 2ல் ஆதிசங்கரர், இராமலிங்கர், தியாகையர் இவர்களைக் காட்டுகின்றது. இவற்றைப் பார்ப்போம் :-

(1) ஆதிசங்கரர் - 'சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு அரும் பாடுபட்ட ஆதிசங்கரர் சைவர் என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும்' என்கிறது.

ஆதிசங்கரர் சைவப்பெருமக்களால் கொலைநூல் என்று ஒதுக்கப்பட்ட ஸ்ரீபகவத்கீதைக்கு முதல்முதல் உரை எழுதியுள்ளார்; அவ்வுரையில் 'வாசுதேவனே உயர்ந்த தெய்வம்' என்று பலவிடங்களில் உறுதிப்படுத்துகின்றார்; மேலும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமத்திற்கும் உரை எழுதியுள்ளார்; சிவ சகஸ்ரநாமத்திற்கு உரை எழுதவில்லை; சங்கர நாராயண ஸ்ம்ருதி என்று சேர்த்துக் கையெழுத்திடாமல் தனியாக நாராயண ஸ்ம்ருதி என்றே கையெழுத்திடுகின்றார். ஆதலால் ஆதிசங்கரர் வைணவர் என்னலாமே தவிர சைவர் என்பது பொருந்தாது. பின்னால் வந்த சிலர் பலவகை நூல்களை எழுதி சங்கரர் பெயரால் பரப்பிவிட்டனர் என்பது உலகறிந்த செய்தி. இவற்றைக் கொண்டு ஆதிசங்கரர் சைவர் என்பது அடாது.

(2) இராமலிங்க சுவாமிகள்:-

'19ம் நூற்றாண்டில் தோன்றி 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டுக் குரலை எழுப்பி இந்து சமயத்தில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் காணமுயன்ற இராமலிங்க சுவாமிகளும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான்மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்கிறது செங்கோல். எம்மதமும் சம்மதம் என்னும் ஒருமைப்பாட்டுக்குரலை இராமலிங்க சுவாமிகள் எப்பொழுது எழுப்பினார் என்று குறிப்பிடவில்லை.

திருவருட்பா அண்மைப்பதிப்பு. 907 '... ... வைண(வ)நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்கு நடுங்குவ மனமே' என்று வைண(வ)ரைக் கண்டால் மனம் நடுங்குகிறது என்பதனாலும், 1960 திருவடிப்புகழ்ச்சியில்:-

'மால்விடை இவர்ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு மால்விழி இலங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந்தம்கோடி மால்தலை யலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மாலுளப்பதம் அந்த மாலும் அறிவரிதாம்பதம்
மால்கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்பதம்' என

எத்தனை மாலை அடுக்கலாமோ அத்தனையும் அடுக்கிய அருமைப்பாட்டாலும், 824ல் திருமாலைக் 'கடல்தூங்கும் ஒரு மாடு' என வழங்கலானும் அடிக்கடி ஆங்காங்கே திருமாலைத் தாழ்த்திப் பேசுவதாலும் சுவாமிகளின் 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்! 'மேலும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான் மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்பதும் அப்படித்தான். சுவாமிகள் பாடிய பல்லாயிரம் செய்யுள்களில் இராமபிரான்மீது பத்து செய்யுள்கள் (1939 - 1948) பாடியுள்ளார். அதுவும் அண்மைப்பதிப்பில் 'இது கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது' என்றுள்ளதால் - இச்செய்யுள்களும் பத்தியினால் பாடப்பட்டதல்ல என்று தெரிகிறது. இவற்றுக்குச் சமாதானம் உளதேல் பிறவற்றுக்கும் சமாதானம் உண்டு எனக்கொள்க.

(3) தியாகையர்:-

'தூய சைவரான அவர் கம்பநாடரையே பின்பற்றி ராமபக்தராக வாழமுடிந்திருக்கிறது' எனச் செங்கோல் செப்புகின்றது. இதையும் பார்ப்போம் :- ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனலு. (தெலுங்குப்பதிப்பு) இது வித்வான் கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரால் பரிசோதிக்கப்பட்டு எம். ஆதி அண்ட் கம்பெனியரால் சந்த்ரா முத்ராக்ஷர சாலையில் 1930ல் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாளரின் முன்னுரை (மொழிப்பெயர்ப்பு) '...... ஐயர் அவர்களின் முத்திரையோடு இப்போது வெளியிடப்பட்டுள்ள சுமார் 700 கீர்த்தனங்களுள் ஒரு நூறு கீர்த்தனைகள் அய்யர் அவர்கள் எழுதியதல்ல என்று தெரிகிறது. ' தாரகமந்த்ரோபதேசம் பெற்று 96 கோடி ராமநாம ஜபித்து ச்ரிராமனுடைய கருணைக்கிலக்காகியிருந்து அனேக கீர்த்தனங்கள் பாடி இராமனுக்கு அர்ப்பணம்செய்த ஐயரவர்கள் சிவபக்தரா? அல்லது விஷ்ணு பக்தரா? 'ஏல நீ தயராது' எனும் கீர்த்தனையிலும் மேலும் அனேக கீர்த்தனங்களிலும் 'ராஜதரநுத' 'சசிகளாதரநுத' என்று பலமுறை சொல்லியிருப்பதனால் இவர் விசிஷ்டாத்வைத மதப்ரகாரமே சிவனைப் பரமபாகவத கோஷ்டியில் சேர்த்திருக்கிறார் அன்றிச் சிவனுக்குப் பரத்வம் சொன்னாரில்லை. இப்படி அனேக காரணங்களாலே இப்போது பழக்கத்தில் இருக்கின்ற சிவகீர்த்தனங்கள் ஐயர் அவர்கள் எழுதியதல்ல; சிலர் சில கீர்த்தனங்களை ஐயர் அவர்கள் பேரால் பெய்து பாடிப் பிழைக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இதனால் தியாகையர் பற்றியும் ஓரளவேனும் புரிகிறதல்லவா?