Friday, September 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 3. எங்கும்

3. எங்கும்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணை நின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது. எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ?

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க.

நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார்; அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார்.

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி...

அமைவுடை அறநெறி ... ... ... ...
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.

என்னுள் கலந்தவன் ... ... ... ...
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே.

எப்பொருளுந் தானாய்...
வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

பூவைகள் போல்.................
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் ..........

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப்
பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை
நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும்
நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருளுநின் தாள்களை எனக்கே

என வரூஉம் ஆழ்வார் மொழிகளை உற்று நோக்குக.

சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார், இவ்வாறு இறையின் சர்வ வியாபகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம்.

'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும்.

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

'பரம்பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும்' என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம்.

வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும் அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியேயாகும்.

அமைதி வாழ்வுக்கு சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே.

தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.

அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலைபெறுத்தவல்லது.

சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை - நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலாம் விளையினும் விளையும்.

பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக் கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.

பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஓருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக்கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.

'சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும்' என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.

ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர்.

யானே என்னை ... ... ...
யானே நீஎன் னுடைமையும் நீயே...

என்னை முற்றும் உயிருண்டு என்மாய
ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் ... ...

இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னைஎன் னுள்வைத்தான்... ...

மாயம் செய்யேல் ... ...
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர்வே றின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் ... ...

ஊனில் வாழ் உயிரே... ...
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்... ...

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்... ... ...
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்...

உணர்வி லும்பர் ... ... ... யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே...
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு...
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை...

தாள்களை எனக்கே...
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ... ...

ஆறெனக்கு... ... ... எனதாவியும் உனதே...
ஏகமூர்த்தி... ... ... உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்... ... ...
காயமும் சீவனுந் தானே...

'எல்லாங் கடவுள்' என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார்.

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்
றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே
கண்கள்நீர் மல்கி

என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிர்க்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். 'உண்ணும்' 'பருகும்' என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள்.

எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங்கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருகு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் 'அகமே புறம்' என்னும் உண்மை விளங்கும்.

புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமிலை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை. அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார்.

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்
யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை
நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய்
நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
... ... ...

இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக.

அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? 'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

2 comments:

passerby said...

In your blog description, you say you are rehashing from the writings of others. OK.

Then, you may add a PS to your blog posts about where you have taken it from.

நம்மாழ்வாரைப்பற்றி இப்படி எழுதியது யார் எனத் தெரியலாமா?

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள் திரு. கள்ளபிரான். தங்கள் கருத்தின் படியே எந்த நூலில் இருந்து இந்தக் கட்டுரைகள் எடுத்து எழுதுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இந்நூல்கள் மின்னூல் வடிவில் 'தமிழ் மரபு அறக்கட்டளையின்' மின்னூல் வரிசையில் இருக்கின்றன. அந்தப் பக்கத்தின் தொடுப்பையும் வலப்பக்கப் பட்டையில் கொடுத்தேன். சில நாட்களாக எண்ணி வந்ததை செயல்படுத்தும் படி தூண்டியதற்கு நன்றி.