உலகிலுள்ள சமயங்கள் பல. அவ்வச் சமயத்தார் இறைவனை உணர்தற்குத் தத்தம் வழக்க வொழுக்கங்கட்கேற்ப இறைக்கோலம் பேர் உரு முதலியன வழங்குகின்றனர். அக் கோலம் முதலியன இறையை உணர்த்தும் அறிகுறிகளேயன்றி, அவைகளே இறை அல்ல. இறைக்கெனக் கோலம் முதலியன இல்லை. இறை ஞான மயமாயிருப்பது. அது பலவாறு மக்களால் கொள்ளப்படுகிறது. அக் கொள்கைகளின் தத்துவங்களைக் காண முயல்வது அறிவுக்கழகு.
தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம்.
உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயி
ராயின காவிகளே.
இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) 'உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளி வான், மண்ணாகிய எம்பெருமான்... யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பினவாம் - இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை, (3) 'எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்... ...' - இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும்.
இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப்போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தையும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங் கூறுதல் என்னால் இயலாததொன்று ஓரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் பரந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...
இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது. அஃது இயற்கையை உடலாக்கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன; பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன.
நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரண வெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும்.
சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள்.
திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளி மயமாய்த் திகழ்வன. (சித்) ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடியின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன.
திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங்கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி, திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும். பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி.
ஒளி - விந்து; ஒலி - நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந்நுட்பம் விளங்கும். அது வருமாறு:
கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.
- திருவாசிரியம் - 1
இதன்கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது. பாற்கடல் - விந்து; பாம்பணை - நாதம்; உந்தி - படைப்பு.
உலகம் உருக்கொள்ளூதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்தலால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது.
திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.
ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது.
இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு. ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலிதல் காண்க.
தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளினின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்குக் கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும்.
புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார்.
வினையேன்... ... ...
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா...
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை...
வேவாரா... ... ...
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவா...
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர்
மடமகள் என்றிவர்...
மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று மாயப்போர் பண்ணி
நீறுசெய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவரமங்கலநகர்
ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே.
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து
போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்
றுருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான்சுடனேரை உன
என்றுகொல் சேர்வதுவே.
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி
னைகளை யேயலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம்
என்னகு றைவெனக்கே
கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை
மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல
மாயக் கோலப் பிரான்றன் செய்வகை
நினைந்துமனம் குழைந்து
நேயத் தோடுக ழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே.
ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றினம் பிள்ளையொன்றாய்ப் புக்கு
மாயங்களே யியற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்
கொடுஞ் சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதிபுக்கவரியே.
இத் திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதையுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம்.
குருக்ஷேத்திரப் போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அப் போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச்சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை?
குருக்ஷேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் - தீய எண்ணங்கள்; ஐவர் - நல்ல எண்ணங்கள்; மனச்சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம்.
மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சிலவாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப்பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல்கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க.
அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது, கண்ணபிரான் குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம்.
பச்சை மரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை; குழலோசை - இசையொலி; பசுக்கள் - சாந்தம்; பெண் மக்கள் - அமைதி நிலை.
இயற்கை உடல். இறை உயிர். பச்சை மரமும் - அதனடியில் கண்ணன் நிற்பதும் - இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசுநிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ('நவசக்தி' சிலம் - 12, பரல் - 28 பார்க்க)
இப்பலப்பட்ட திருக்கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ்வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது.
இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல்
இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே.
திருமா லுருஇவர்க்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும்
திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும்தீவினையே.
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே.
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.
கருமா ணிக்க மலைமேல்
மணித்தடந் தாமரைக் காடுகள்போல்
திருமார்வு வாய்கண் கையுந்தி
காலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்
வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ.
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலிமானென்றங்
கவர்படக் கனன்றுமுன் நின்ற
காய்சின வேந்தே கதிர்முடி யானே
கலிவயல் திருப்புளிங் குடியாய்
காய்சின வாழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் மிடர்கடி வானே.
அழகிய திருக்கோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் - நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று.
என்றும்,
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
என்றும்,
எங்ஙனேயோ வன்னைமீர்கா
ளென்னை முனிவதுநீர்
நங்கள்கோலத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவா யொன்றினோடும்
செல்கின்ற தென் நெஞ்சமே.
என்றும்,
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி என்றும்
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்
திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தை யுளானே.
என்றும், உலகுக்கு உணர்த்தியிருத்தல் காண்க.
திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார்.
கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்விடங்களில் பெரிதும் 'மாயம்' என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக.
குரவை ஆய்ச்சியர்... ...
அரவில் பள்ளிப் பிரான் தன் மாயவினைகளை...
கேயத் ... ...
மாயக் கோலப் பிரான் ....
இகல்கொள்...
அகல்கொள் வைய மளந்த மாயன் என்
அப்பன்றன் மாயங்களே ...
மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து...
இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல. அக்கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, 'இயற்கை திருக்கோலக் காட்சி' என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க.
No comments:
Post a Comment