Friday, April 16, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 12. இறுவாய்

நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார்; அவர், எல்லாவற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார்; எங்குமுள்ள அவ்விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப்படமாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதையும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்ற பேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணை செய்கிறது. இப்பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந்நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது?

தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத்துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளையெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.

தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வாரும், அவர் போன்ற மற்றப் பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்வி பெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்; அத்திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.

***

இத்துடன் இந்நூல் நிறைவு பெற்றது!

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

this book by thiru.vi.ka was so good! very crisp & direct references!

vijayan said...

சடகோபன் தண் தமிழ்நூல் வாழ்க

குமரன் (Kumaran) said...

தொடர்ந்து படித்ததற்கு நன்றி இரவிசங்கர்.

நன்றி விஜயன்.