Wednesday, April 21, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 2

'செங்கோல்' தொடர் 3

"பிணக்கு இல்லாத சங்ககால நிலையை ஒட்டி இறைவனைப் பெயர் குறிப்பிடாது 'உலகம் யாவையும்' என்ற பாட்டில் கம்பர் 'தலைவர்' என்ற சொல்லால் கூறினார்" என்கிறார். சிவபெருமான் ஐந்தொழில் செய்பவன் என்பது சைவர் கொள்கை; அதற்கு மாறாக 'முத்தொழில் செய்யும் அலகிலாவிளையாட்டுடையான் திருமால்' என்பது வைணவர் கொள்கை. இத்திருமாலைத் 'தலைவர்' என்பது பொருத்தம் தானே. முதற்பாட்டில் 'தலைவர்' என்றும், அடுத்தபாட்டில் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' எனச் சத்துவகுணமாகிய முற்குணத்தையுடைய திருமாலே முதல் என்றும், அதற்கும் அடுத்தபாட்டில் அத்திருமாலாகிய அரியையே 'ஆதியந்தம் அரி எனயாவையும் - ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன' என்று வேதத்தின் முதலிலும் முடிவிலும் 'அரி ஓம்' என ஓதினர் என்றும், அடுத்துவரும் அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்தில் வெளிப்படையாக அந்த முதலே இராமன் என்பதனை,

"வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே"


என்றும் காட்டுகின்றார். இந்தமுறை - திருவாய்மொழியில் முதற்பத்து முதல் திருவாய்மொழியில் திருமால் பெயரைக் குறிப்பிடாது, 2ம் திருவாய்மொழி 10ம் பாசுரத்தில் 'வண்புகழ் நாரணன்' என்று காட்டுவதை அடியொற்றியுள்ளது.

'செங்கோல்' தொடர் 4

'அவர் சமய வைதிகர் அல்லர் என்பது தேற்றம்' என்கிறது. ஆனால் சைவர் என்றுமட்டும் சொல்வது பொருந்துமா?

'செங்கோல்' தொடர் 5

'கம்பரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதனை வலியுறுத்துமிடங்களிலே தூய வைணவராகவே மாறிவிடுகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை' என்கிறது. (சிறிது பெருமூச்சுவிடலாம்). ஆனால் மற்ற இடங்களிலே இயல்பான சைவராகவே இருக்கிறார்போலும்!

'செங்கோல்' தொடர் 6

'இந்த இரு வேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது' என்கிறார். 'ஆயின், தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்றால் கம்பரைத் தமிழர் என்று சொல்லாது சைவர் என்பது பொருந்தாதல்லவா?' அங்கும் இங்கும் குறிப்புகளாகத் திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ்நூல் எதுவும் சங்க காலத்தில் இல்லை' என்கிறார். சிவபெருமான் வரலாறுகளை முழுதும் கூறும் தமிழ்நூல்களேனும் சங்ககாலத்தில் உளதோ? என்பதனை ஐயா அவர்களே சொல்லுதல் வேண்டும்.

'தமிழர் எல்லோருமே வழிபட்டுவந்த சிவன், திருமால், கொற்றவை, முருகன் ஆகிய தெய்வங்களோடு பல்லவர் காலத்திலே ஆறாவது தெய்வமாகிய கணபதியும் தமிழகத்துக்கு வந்தார்' என்பதில் ஐந்தாவது தெய்வம் யாதோ? அறியோம். 'இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர் என்றும் உறுதியாகிவிட்ட ஷண்மதம் தோன்றுகிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த சூழ்நிலை இது' என்கிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதம் இதுதானா? என்பதனை ஐயாவே தான் விளக்கவேண்டும்.

'செங்கோல்' தொடர் 7

'சடகோபரந்தாதி படைக்குமளவுக்கு அந்த ஆசார்யரிடம் பக்தி இருந்திருக்குமானால் தமது காப்பியத்திலே அவரைப் புகுத்தியிருக்கக் கம்பரால் முடிந்திருக்கும்; தமக்கு உணவளித்துக் காத்த சடையப்ப வள்ளலைப் புகுத்தவில்லையா?' என்கிறது செங்கோல். சேக்கிழார் - தமது தொண்டர்புராணத்திலே மணிவாசகரைக் குறிப்பிடாமையால், மணிவாசகர்க்கு முன்பு சேக்கிழார் இருந்தாரா? மணிவாசகரிடத்தில் சேக்கிழார்க்குப் பத்திமை இல்லையா? என்பதற்குச் சமாதானம் கண்டால் இதற்கும் சமாதானம் காணலாம். 'திருத்தொண்டத் தொகையிற்கூறிய அடியார்களை மட்டும் பெரியபுராணத்திலே சேக்கிழார் கூறினார்; அதனால் அதில் இல்லாத மணிவாசகப் பெருமானை அவர் கூறவில்லை' என்னலாம். ஆயின் கீழேயுள்ளதனை நோக்கத்தகும்:- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலராக வெளிவந்த கம்பராமாயணம் சுந்தரகாண்டத்து முன்னுரையில் 'பழம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிற்காணப்படும் பதிகம் (நுவல்பொருட்சுருக்கம்) இராமாவதார நூலிற்காணப்படவில்லை; எனினும் இராமாவதார நூலாசிரியராகிய கம்பர், ஆழ்வார்களுள் இராமபிரான்பால் பெரிதும் ஈடுபாடுடையவரான குலசேகரர் அருளிய பெருமாள்திருமொழியுள் 'அங்கண் நெடு மதிள்புடைசூழ்' என்று தொடங்கும் பத்தாந்திருமொழியைக் கொண்டு அதன் விரியாகத் தம் இராமாவதார நூலை இயற்றியருளினார் என்று கருதலாகும். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரியாய் இயற்றியருளியதும் இங்கு நோக்கத்தகும். இம்முறையில் இராமபக்தராகவே மாறிய கம்பர் எந்த ஆழ்வாரையும் சொல்வதற்கில்லை; இராமவதாரம் அரங்கேற்றும்போதுதான் 'நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள் - விஞ்சிய ஆதரத்தாற்கேட்பக் கம்பன் விரித்துரைத்த - செஞ்சொல் அந்தாதி' என்றதனால் இராமாவதார நூலிற்சொல்லாத குறைதீரச் சடகோபரை நூறுபாடல்களால் போற்றியுள்ளார் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இராமாவதாரத்தில் சடகோபரைப் பற்றியோ பிற ஆழ்வார்களைப் பற்றியோ சொல்லாமை குறையாகாது. பாயிரத்துள் 'தருகை நீண்ட தயரதன்' என்று தொடங்கும் பாடலைச் சேர்த்துள்ளமை உணர்க. இஃது இடைச்செருகல் எனின் சிவனைப்பற்றிக் கூறுபவையும் இடைச்செருகலாக இருக்கலாமே!

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் மேற்படி சுந்தரகாண்ட முன்னுரையில், இவர் இயற்றிய பிறநூல்களுள் சடகோபரந்தாதியும் ஏரெழுபதும் சிறப்புடையவை என்பதும் காண்க.

'செங்கோல்' தொடர் 8

செங்கோலார் "இரணியன் நாத்திகன்; இராவணன் சிவபக்தன்; மைந்தனுடைய வெட்டுண்ட கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக்கொண்டு பிள்ளைப்பருவத்தில் அவன் தன்னைத் தழுவியதை நினைத்து, ஆற்றாமை கொள்கிறான்; அப்படிப்பட்டவனையா தன் பிள்ளையையே கொலைபுரிய முயன்ற இரணியனோடு ஒப்பிடுவது" என்கிறார்.

இரணியன் நாத்திகன் என்பது எப்படிப் பொருந்தும்? தவம் செய்து இறைவனிடத்தில் வரம்பெற்றவனை நாத்திகன் என்னலாமா? வரம்பெற்றபின் இறைவனைக் காட்டிலும் யானே பெரியவன் என்று ஆணவம் கொள்கிறான்; அக்கருத்துக்கு மாறுபட்டவன் பிள்ளையாயினும் விரோதிதானே? சீதையை விட்டுவிடு என்ற இந்திரசித்தை இராவணன் வெறுக்கவில்லையா? பக்தியில் மிக்கவர்களாயிருந்தும் ஆணவத்தில் இரணியனும் இராவணனும் ஒரு தன்மையரே. தாயுமானாரும், ஆணவத்தினுமிக்க ஆங்காரத்தை வருணிக்கும்போது, 'ஆங்காரமான குலவேட' என்ற பாட்டில் 'ஈங்கார் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்திராவணாகாரமாகி' என்று குறித்தல் நோக்கத்தகும். முருகன் அவதாரத்தை வான்மீகி குறிப்பிட்டிருக்கவும் கம்பர் அதை நீக்கியது சரசத்துக்குப் போலும்!

'செங்கோல்' தொடர் 9

"இரணியன் வதைப்படலத்திலே பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன; சொல்லுக்குச் சொல் சுவையூட்டுவனவாக இருக்கின்றன; தூணைப் பிளந்துகொண்டு திருமால் நரசிம்மாவதாரம் எடுக்கும் இடத்திலே அண்டமே கிடுகிடுப்பது போன்ற ஒரு அச்சம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது" என்கிறார் செங்கோலார். பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன என்றால் சில செய்யுள்கள் தானே இடைச்செருகல் என்று தோன்றுகிறது? எனவே ஐயா அவர்கள் கருத்துப்படி 'இரணியன் வதைப்படலம்' கம்பர் செய்ததுதான் எனத் தோன்றுகிறது. அங்ஙனம் இருக்க 'இரணியன் வதைப்படலம் முழுவதும் கம்பர் இயற்றியது தான் என்று ஏற்றுக்கொள்வோமானால் 'உலகமகாகவிஞர்கள் மண்டலத்திலிருந்து கம்பரைக் கொஞ்சம் தாழ்த்திவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று கூறுவது பொருந்துமா? ஆய்ந்து பார்க்க.

Friday, April 16, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 1

[வித்வான் திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.பூதூர், S.A.Dt]

மதிப்பிற்குரிய உயர்திரு (சைவத்திரு) ம.பொ.சி. அவர்கள் தமது 'செங்கோல்' இதழில் (மலர்.33 இதழ் - 10 முதல்) 17 தொடரில் 'கம்பநாடர் சைவரா, வைணவரா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். (பிறகு 'கம்பரின் சமயக்கொள்கை' எனும் நூலாகவும் இதனை வெளியிட்டுள்ளார்.) அதனுள், முதல் தொடரில் 'ஆகவே கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும், வைணவர்களின் தனித்தெய்வமாகக் கருதப்படும் திருமாலின் அவதாரமான இராமனை நாயகனாகக் கொண்ட காப்பியத்தைப் படைப்பதற்கு அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை' என்று சொல்லி, 17-வது தொடர் முடிவில் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என முடிக்கின்றார். இதனால் ஐயா அவர்கள், முன்னமேயே கம்பர் சைவர் தான் என்று உறுதிகொண்டுவிட்டார் என விளங்குகிறது. இதன் காரணம் யாதோ உரைத்திலர். சைவர்கள் சமரசவாதிகள் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதைப்பற்றி விளக்குவதற்குமுன் இன்றியமையாத இரு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறித்தல் தகும்.

(1) திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். 'நம்மாழ்வாரும் தமிழ்நாடும்' என்ற ஒரு சிறு நூலும், 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற ஒரு பெருநூலும், வேறு பல நூல்களும் வெளியிட்டவர். அந்நூல்கள் என்னைக் கவர்ந்தன. சுமார் 50யாண்டுகட்குமுன் யான் எழுதிய /'காந்தியடிகள் நெஞ்சு விடு தூது' என்னும் நூற்கு அணிந்துரைபெற அவரை அண்டினேன். அவ்வமயம் உடன் இருந்தவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் இருந்த திரு. S. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், சைவசமாஜச் செயலாளர் திரு. ம. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஆவர். /'காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது' என்றதுமே, திரு.வி.க. அவர்கள் சினந்துரையாடினர். "அவர் மகாத்மா அல்லர்; தெரியாமையால் அவரைப் பற்றி நூல் ஒன்று எழுதிவிட்டேன்; அதற்கு இப்போது வருந்துகிறேன். தாழ்த்தப்பட்ட மக்கட்கு 'ஹரிஜன்' என்ற பெயரைப் புதிதாகச் சூட்டினாரே! அதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தானே பொருள். திருடர்கள் என்றும் பொருள்படுமே!" என மேலும் ஒருமை வசனத்தில் பேசினர். பின்னர், பத்திமைவடிவாய நண்பர் ஆரியூர் வ. பதுமநாபபிள்ளையவர்கள்பால் அணிந்துரைபெற்று அப்போது அந்நூலை வெளியிட்டேன். அண்மையில் அருங்கலைக்கோன் திரு ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். 'ஹரிஜன்' என்ற சொல் வைணவமக்களையே குறிக்குமெனக் கருதித் திரு.வி.க. அவர்கள் அடிகளாரை வெறுத்தார் எனத் தெரிகிறது. இது சமரச உணர்வு போலும்!

(2) சிவம் பெருக்கும் சீலர், சிவக்கவிமணி, தமிழ்க்கடல் இராய. சொ. அவர்களையும் தமிழுலகம் நன்கறியும். நல்ல பேச்சாளர். கவிஞர். காந்தியத்தில் திளைத்தவர். கம்பரிடத்து மிக்க ஈடுபாடு உடையவர். இவர்பால் எனக்கு மதிப்புண்டு. அவர்க்கும் என்பால் அன்புண்டு. இரு சமயநூல்களிலும் பயிற்சி உள்ளவர்; எனினும் கம்பர் சைவரே என்றே கருத்துடையவர். இதனால் - 'கம்பனும் சிவனும்' என்ற தலைப்பில் சிவனைப் பற்றிக் கம்பர் காட்டிய பாடல்களைத் தொகுத்துப் பொழிப்புரையும் எழுதியுள்ளார். 395 இடங்களில் சிவனைப் பற்றி உள்ளது. கவிமொழியாக உள்ளன 168 இடங்கள் என்று காட்டியுள்ளார். அதனுள் 'மழுவாளி' என்ற சொல் இரண்டிடத்துள்ளது என்றெழுதியுள்ளார். அந்நூலை ஊன்றிப் படித்தேன். 'மழுவாளி' என்ற சொல் உள்ள ஒருபாடல் விடுபட்டிருந்தது. அப்பாடல் ஆரணியகாண்டம் - விராதன் வதைப் படலத்துள்ளதாகும்.

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கென்ன குறைவுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த
ஐயத்தாற் சிறிதையம் தவிர்ந்தாரும் உளர் ஐயா!" என்பதாகும்.

தமிழ்க்கடல் ஐயா அவர்களை நேரில் சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'எப்படியோ விடுபட்டது' என்றார். இப்பாடல் சிவனுக்கு ஏற்றம் தரவில்லையாதலால் விடுத்தனரோ அல்லது உண்மையிலேயே விடுபட்டதோ அவனே அறிவான். இவ்விரு நிகழ்ச்சிகளும் சமரசத்தின் தன்மையை ஓரளவு காட்டுவன அல்லவா?

நம் செங்கோல் 'பிற்காலத்து சமய ஸ்தாபனங்கள் வரையறுத்த நியதிப்படி திருமாலானவர் வைணவ சமயத்தவரின் தெய்வமாகிறார். அதனால் இராமகாதை வைணவர்களின் சொத்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்குத் தமிழ்நாடுமட்டும் விலக்கு என்று சொல்லலாம்' என்கிறது.

இவர் கருத்துப்படி திருமாலானவர் சைவர்கட்கும் சொத்தாகப் பாவிக்கப்பட்டுவந்தார் போலும்! "நெய்தல் நிலத்தில் வாழும் மக்கட்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் பொதுமக்களால் வழிபடும் பொதுத் தெய்வமாக இருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதற்கு முன்பிருந்த நிலையிது' என்கிறது செங்கோல். 'முல்லை' என்பது 'நெய்தல்' என்றிருப்பது அச்சுப்பிழை போலும். நால்வகை நிலத்து வாழும் மக்கள் திருமாலை ஒரு சமயத்தவர்க்கே விட்டுக்கொடுத்தனர் போலும்!

'இதிலிருந்து கம்பர் காலத்திற்கு முன்பு தமிழினத்தவரிடையே சைவ-வைணவ சமயங்களைப் பொறுத்தவரையில் சமரச உணர்வு கடைப்பிடிக்கப்பட்டதென்ற உண்மையை அறியமுடிகிறது. ஆகவே, கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும்...' எனத் தொடர்கின்றது.

"தமிழினத்தவரிடையே ... ... கடைப்பிடிக்கப்பட்டது" என்பதில் சைவத்தையோ வைணவத்தையோ சாராது தமிழினத்தவர்கள், தமிழினத்தவர்களாக இருந்தார்கள் என்று கொள்ளாது, 'ஆகவே கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவராகவே இருப்பினும்' என்று கொண்டது எதுபற்றியோ? தமிழினத்தவர் சமரச உணர்வோடு இருந்திருக்கலாம்; ஆயின் சைவராகத்தான் இருந்தனர் என்பதற்கு மூலம் யாதோ? அறியோம்.

'செங்கோல்' தொடர் 2

'செங்கோல்' தன் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் தொடர் 2ல் ஆதிசங்கரர், இராமலிங்கர், தியாகையர் இவர்களைக் காட்டுகின்றது. இவற்றைப் பார்ப்போம் :-

(1) ஆதிசங்கரர் - 'சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு அரும் பாடுபட்ட ஆதிசங்கரர் சைவர் என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும்' என்கிறது.

ஆதிசங்கரர் சைவப்பெருமக்களால் கொலைநூல் என்று ஒதுக்கப்பட்ட ஸ்ரீபகவத்கீதைக்கு முதல்முதல் உரை எழுதியுள்ளார்; அவ்வுரையில் 'வாசுதேவனே உயர்ந்த தெய்வம்' என்று பலவிடங்களில் உறுதிப்படுத்துகின்றார்; மேலும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமத்திற்கும் உரை எழுதியுள்ளார்; சிவ சகஸ்ரநாமத்திற்கு உரை எழுதவில்லை; சங்கர நாராயண ஸ்ம்ருதி என்று சேர்த்துக் கையெழுத்திடாமல் தனியாக நாராயண ஸ்ம்ருதி என்றே கையெழுத்திடுகின்றார். ஆதலால் ஆதிசங்கரர் வைணவர் என்னலாமே தவிர சைவர் என்பது பொருந்தாது. பின்னால் வந்த சிலர் பலவகை நூல்களை எழுதி சங்கரர் பெயரால் பரப்பிவிட்டனர் என்பது உலகறிந்த செய்தி. இவற்றைக் கொண்டு ஆதிசங்கரர் சைவர் என்பது அடாது.

(2) இராமலிங்க சுவாமிகள்:-

'19ம் நூற்றாண்டில் தோன்றி 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டுக் குரலை எழுப்பி இந்து சமயத்தில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் காணமுயன்ற இராமலிங்க சுவாமிகளும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான்மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்கிறது செங்கோல். எம்மதமும் சம்மதம் என்னும் ஒருமைப்பாட்டுக்குரலை இராமலிங்க சுவாமிகள் எப்பொழுது எழுப்பினார் என்று குறிப்பிடவில்லை.

திருவருட்பா அண்மைப்பதிப்பு. 907 '... ... வைண(வ)நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்கு நடுங்குவ மனமே' என்று வைண(வ)ரைக் கண்டால் மனம் நடுங்குகிறது என்பதனாலும், 1960 திருவடிப்புகழ்ச்சியில்:-

'மால்விடை இவர்ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு மால்விழி இலங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந்தம்கோடி மால்தலை யலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மாலுளப்பதம் அந்த மாலும் அறிவரிதாம்பதம்
மால்கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்பதம்' என

எத்தனை மாலை அடுக்கலாமோ அத்தனையும் அடுக்கிய அருமைப்பாட்டாலும், 824ல் திருமாலைக் 'கடல்தூங்கும் ஒரு மாடு' என வழங்கலானும் அடிக்கடி ஆங்காங்கே திருமாலைத் தாழ்த்திப் பேசுவதாலும் சுவாமிகளின் 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்! 'மேலும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான் மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்பதும் அப்படித்தான். சுவாமிகள் பாடிய பல்லாயிரம் செய்யுள்களில் இராமபிரான்மீது பத்து செய்யுள்கள் (1939 - 1948) பாடியுள்ளார். அதுவும் அண்மைப்பதிப்பில் 'இது கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது' என்றுள்ளதால் - இச்செய்யுள்களும் பத்தியினால் பாடப்பட்டதல்ல என்று தெரிகிறது. இவற்றுக்குச் சமாதானம் உளதேல் பிறவற்றுக்கும் சமாதானம் உண்டு எனக்கொள்க.

(3) தியாகையர்:-

'தூய சைவரான அவர் கம்பநாடரையே பின்பற்றி ராமபக்தராக வாழமுடிந்திருக்கிறது' எனச் செங்கோல் செப்புகின்றது. இதையும் பார்ப்போம் :- ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனலு. (தெலுங்குப்பதிப்பு) இது வித்வான் கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரால் பரிசோதிக்கப்பட்டு எம். ஆதி அண்ட் கம்பெனியரால் சந்த்ரா முத்ராக்ஷர சாலையில் 1930ல் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாளரின் முன்னுரை (மொழிப்பெயர்ப்பு) '...... ஐயர் அவர்களின் முத்திரையோடு இப்போது வெளியிடப்பட்டுள்ள சுமார் 700 கீர்த்தனங்களுள் ஒரு நூறு கீர்த்தனைகள் அய்யர் அவர்கள் எழுதியதல்ல என்று தெரிகிறது. ' தாரகமந்த்ரோபதேசம் பெற்று 96 கோடி ராமநாம ஜபித்து ச்ரிராமனுடைய கருணைக்கிலக்காகியிருந்து அனேக கீர்த்தனங்கள் பாடி இராமனுக்கு அர்ப்பணம்செய்த ஐயரவர்கள் சிவபக்தரா? அல்லது விஷ்ணு பக்தரா? 'ஏல நீ தயராது' எனும் கீர்த்தனையிலும் மேலும் அனேக கீர்த்தனங்களிலும் 'ராஜதரநுத' 'சசிகளாதரநுத' என்று பலமுறை சொல்லியிருப்பதனால் இவர் விசிஷ்டாத்வைத மதப்ரகாரமே சிவனைப் பரமபாகவத கோஷ்டியில் சேர்த்திருக்கிறார் அன்றிச் சிவனுக்குப் பரத்வம் சொன்னாரில்லை. இப்படி அனேக காரணங்களாலே இப்போது பழக்கத்தில் இருக்கின்ற சிவகீர்த்தனங்கள் ஐயர் அவர்கள் எழுதியதல்ல; சிலர் சில கீர்த்தனங்களை ஐயர் அவர்கள் பேரால் பெய்து பாடிப் பிழைக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இதனால் தியாகையர் பற்றியும் ஓரளவேனும் புரிகிறதல்லவா?

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - முதல் பக்கம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

('கம்பனின் சமயம்' இரண்டாம் பாகம்)
["கம்பரின் சமயக்கொள்கை" என்னும் தலைப்பில் திரு. ம.பொ.சி. அவர்கள் எழுதிய நூலுக்கு ஸுதர்சனரின் மறுப்புரை]


ஆசிரியர்:-

ஸ்ரீ S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
(ஸுதர்சனர்)

'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 620 017.

------------------------
ஸுதர்சனர் மணிவிழா வெளியீடாக
பாரதீய பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ சபையின்
11-வது மகாநாட்டில் வெளியிடப் பெற்றது.
18 - 11 - 1984
-----------------------

ஸ்ரீ. ரா. ஸ்ரீ. கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் குடும்ப
தர்ம சொத்துக்களின் ஆதரவில் வெளியிடப்படுகிறது.
டிரஸ்டிகள்:-
S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,M.A.B.L., அட்வகேட்.
S. ராம அய்யங்கார், B.Sc.B.L., அட்வகேட்.
---------------------------------
விலை ரூ. 8-00 தபால் 1-00
ஸ்ரீநிவாஸம் பிரஸ், 8, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 12. இறுவாய்

நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார்; அவர், எல்லாவற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார்; எங்குமுள்ள அவ்விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப்படமாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதையும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்ற பேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணை செய்கிறது. இப்பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந்நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது?

தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத்துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளையெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.

தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வாரும், அவர் போன்ற மற்றப் பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்வி பெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்; அத்திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.

***

இத்துடன் இந்நூல் நிறைவு பெற்றது!

Friday, April 9, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 11. பாட்டு

இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ்நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது.

பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.

பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.

இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.

இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!

இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.

ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,

மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...

தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...

செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...

சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே

விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...

இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...

நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...

கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...

என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.

ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,

மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...

என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.

நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.

பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!

வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.

மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.

உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.

ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.

Tuesday, March 30, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 10 சமரசம்

ஆழ்வார் எங்குமுள்ள இறையை உணர்ந்து, அதனை வழிபட்டவர். அதனால் அவர் சமரசத்தை அறிவுறுத்தலானார். அவருக்கு எல்லாம் இறையாக - அன்பாக - சகோதரமாகத் தோன்றின. சமரச ஞானத்துக்கு இறையின் சர்வ வியாபக உணர்வு இன்றியமையாதது. இஃது ஆழ்வார் திருவாக்குகளால் நன்கு விளங்குகிறது. இறையின் சர்வ வியாபக உணர்வை அடிப்படையாக் கொண்ட சமரசமே உண்மையானது.

இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப்புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும்.

சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும்.

இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன.

குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப்பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந்திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப்போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்திக்கலாகாது. 'நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன' என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனைகட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும்.

ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம். அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழிகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம்.

குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்திவிட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்கவொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்து மூடப்பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக.

ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு:

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்...

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்...

இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள. அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குருமாரையும் போற்றுவதாகும். அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்பதாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனை கூடாது.

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது.

நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ்நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோப மதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின.

சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினுமாக, வைணவராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைணவருட் சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, 'எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார்' - 'எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார்' என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக்கிறார். சமரசப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவதில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன்
அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

ஒளிமணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ ...

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே...

யானும் தானாயொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை...

முனியே நான்முகனே முக்கண்ணப்பா...

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி...

இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ்வேலையிலாவது, இத்திருவாக்குகளின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து,

இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றுநுந்
தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசுந்
திருக்குருகூரதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய்யில்லை போற்றுமின்னே

என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், 'எல்லா சமயக் கடவுள்' என்று வலியுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார். இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? 'ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது' என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது.

நம்மாழ்வார் சமரச ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ்நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை. இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவனருளால் மதச் சண்டை ஒழிக.

சமரச நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ்வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம். சாதிபேதம் என்னும் பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப்பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப்பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம்மடிகள் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே.

இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க.

சமரச ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்தியமுள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்க்டியமானது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது?

பகைமை இல்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதியாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங்களெல்லாம் செறிய,

உன்னைச் சிந்தை செய்து செய்து உன்
நெடுமாமொழி இசைபாடி யாடிஎன்
முன்னைத் தீவினைகள் முழுவேர்
அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்வார்வங் கீண்ட என்
முன்னைக் கோளரியே
முடியாத தென்னெனக்கே

என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. 'உன்னைச் சிந்தை செய்து' என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொருளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். 'உன்னைச் சிந்தனையினால் இகழ்ந்த இரணியன்' என்னுங்குறிப்பால், ஆண்டவனை இகழலாகாதென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் 'என் முன்னைக் கோளரியே' என்று விளித்து, 'முடியாததென்னெனக்கே' என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம்மிடுக்கும், இவ்வீறும், இவ்வஞ்சாமையும் தமிழ்நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது.

Saturday, February 27, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 9 வழிபாடு

வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர்களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்.

வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறுவித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும்பாமலிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு இல்லையென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.

வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிராயிப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக்குரியது.

ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.

புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு, கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ்விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.

வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்களைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவதில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.

ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம். இவ்வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழுகொம்பாகக் கொண்டார். அத்திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ்வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடுகிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும் கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தாகின்றன; அவ்வுருவில் அவர் திளைக்கிறார்; புலன்கள் ஒன்றுகின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத்தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.

புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்...

திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணி போல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப்பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம். இந்நிலை பெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.

அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன்
அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே.

உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே.

உணர்வி லும்பர்...
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனதின்னருளே...

பிரான்பெரு... ...
... ... என்னுள்
இரான் எனில் பின்னையானொட்டு வேனோ.

சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை...

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழுலகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.

புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்குமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய்யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற்பாலது அன்பு மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.

அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதன்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ளவற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவான். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.

எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர்பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையுங் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.

ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதனன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.

ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே...

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா
நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.

எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.

அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது. ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப் போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ்வழி நிற்போமாக.