Saturday, October 3, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 4. அட்டமூர்த்தம்

4. அட்டமூர்த்தம்

'எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேர்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை?

வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும். 'எங்கும் கடவுள்' என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது.

எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணையுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு 'எங்கும் கடவுள்' என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழிபாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும்.

எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவதில்லை. 'எங்கும் கடவுள்' என்பதற்குப் பதிலாகக் 'கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது' என்னில், இது நெஞ்சில் படியுந்தகையதாகிறது. இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பின்னையது உள்ளத்திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது.

இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை 'அட்ட மூர்த்தி' என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு:

நாழாலமர் ... ...
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே... ...
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி...
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை...

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்...
என்றுகொல் சேர்வது... ...
... ... நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ...

பிறந்த மாயா ... ...
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே...

ஏகமூர்த்தி இருமூர்த்தி ... ...
... ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்...

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ
பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ
தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ
நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ
கண்ணனைக் கூவு மாறே.

'மண், புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள்' என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாக கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார்.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்...

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலியவற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மையும் ஈண்டு உன்னற்பாலது.

இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல்லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவைகளைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும்.

பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக் கலந்து நிற்றலை உணர்த்துவது. பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலியவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம்பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க.

நிழல்வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய்
அவையல் லனுமாய்...

விண்மீ திருப்பாய் மலைமேல்
நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்துறைவாய்...

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்...

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக.

பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்குவரை, ஐயம் திரிபு மயக்கம் மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு.

நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவியனுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப்பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு ம்றையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு.

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.


***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது//

ஹா ஹா ஹா
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் குமரன்! சான்ஸே இல்லை திரு.வி.க! யாரேனும் கோச்சிப்பாங்களோ-ன்னு எல்லாம் இல்லாம, சமய விளக்கமாய் இல்லாது, தன் பார்வையை மிக அழகாக மாறுபட்ட பார்வையில் பதிக்கிறார்!

திரு.வி.க எனக்கு ரொம்ப கம்பெனி கொடுப்பாரு போல இருக்கே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு மறையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு//

அப்படியே இடைக்காட்டுச் சித்தர் ஆழ்வாரைச் சொல்லுறாப் போலவே இருக்கு!
திருவாய்மொழியிலும் முதல் பத்தில், உளன், அவன், இவன்-ன்னு பொதுவாகத் தான் வரும்! நாரணா-ன்னு வராது! Dash-ன்னு தான் வரும்! :)

திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு மறையே!
மாறன் சமரச ஞானியே!

திருவாய்மொழிக்கு உருகாதார்
ஒருவாய்மொழிக்கும் உருகார்!

குமரன் (Kumaran) said...

உங்களுக்கு அந்த வரிகள் பிடிக்கும் என்று நினைத்தேன் இரவி. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை//

இரும்பை உண்ட நீரா? புரியலை! கொஞ்சம் விளக்குங்களேன்! வெறுமனே ஒருங்குறியாக்க முயற்சியாக மட்டுமில்லாது, அறி பொருளாகவும் அமையட்டுமே குமரன்!

குமரன் (Kumaran) said...

கொல்லன் பட்டறையில் ஊசி விற்கச் சொல்கிறீரா இரவி? :-)

பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை உண்ணுமாம் - கொல்லன் பட்டறையில் சிறு வயதில் பார்த்த நினைவு. அதனைத் தான் ஆழ்வார் இங்கே சொல்கிறார் என்று நினைக்கிறேன். இரும்பு இங்கே இறையாகவும் முழுக்க உண்ணப்பட்ட நீராக (தீர உண்ட நீர்) தனது ஆருயிரும் இருப்பதாக ஆழ்வார் சொன்னார் போலும்.

R.DEVARAJAN said...

பூமிராபோநலோ வாயு:கம் மநோ புத்திரேவ ச |
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா ||

என்பதில் எண்பெரும் தத்துவங்கள் கூறப்படுகின்றன.
ஆயினும் ஆழ்வார் பாசுரம் சைவக் கருத்தான ‘அட்ட மூர்த்தம்’ என்பதோடு வெகுவாகப் பொருந்துகிறது.

தேவ்

குமரன் (Kumaran) said...

திரு.வி.க. அவர்கள் சைவ சித்தாந்த வழி நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பார்ப்பது இந்த நூல் முழுவதும் நன்றாகத் தெரிகிறது தேவ் ஐயா.