Wednesday, November 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 1

'எங்கும் இறை' என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளியுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை இறை துணை செய்யாமற் போகாது.

இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறைய உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங்களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே 'படம்' என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களினின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ்வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி 'முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.

தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினைவூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப்படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற்பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொருளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.

காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப்பாடல் வாயிலாக நோக்குவோம்.

தாம்பாலாப்... ...
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய் (அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல்லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் 'காண்டற்கரியன்' என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழிபாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.

கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.

இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். 'கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால்வரை...'- இஃதோர் இயற்கைப்படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக் கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகியதன்றோ?

வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்குவோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது. படம் பாவலர்க்குப் பாட்டாகிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையினிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண்டடியில் திகழ்கிறது.

'விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்,
எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே'

என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.

இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.

என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.

2 comments:

R.DEVARAJAN said...

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.

பரத்துவ நிலையை இதைக்காட்டிலும் தெளிவாக விண்டுரைக்க வல்லார் யார் ?

’அறு சமயம் அறிவரிய தானத்தமர்ந்தன’ என்று பெருமானின் கழலிணைகளை தேசிகன் போற்றுவார்.

தேவ்

R.DEVARAJAN said...

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.

பரத்துவ நிலையை இதைக்காட்டிலும் தெளிவாக விண்டுரைக்க வல்லார் யார் ?

’அறு சமயம் அறிவரிய தானத்தமர்ந்தன’ என்று பெருமானின் கழலிணைகளை தேசிகன் போற்றுவார்.

தேவ்