இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ்நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது.
பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.
பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.
இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.
இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!
இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.
ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,
மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...
தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...
செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...
சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே
விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.
செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...
நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...
கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...
என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.
ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,
மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...
என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.
நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.
பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.
கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!
வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.
மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.
உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.
ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.
1 comment:
//தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை//
:)
எனக்கு மாறனின் இந்த வாய்மொழிகள் ரொம்ப பிடிக்கும்!
தான், தன்னைப் பாடுவியாது = தன்னைத் தானே பாடிக்கிட்டா, அது சுயபுராணம் ஆயிரும்! :)
என்னால் தன்னை வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே = இப்போ அடியவர் துதி ஆயிரிச்சி!
//முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ//
அட, உங்களுக்குப் பிடிச்ச பாசுரமும் இருக்கே!
//ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக//
அப்படிப் போடு!
திரு.வி.க கிட்ட இருக்கும் ஒரே சக்தி வாய்ந்த ஆயுதம் இதான்! போகிற போக்கில் பொளேர்-ன்னு போட்டுட்டுப் போயிடுவாரு! ஆனால் வாழ்வில் ரொம்ப மென்மையானவரு! என்னையப் போலவே! :))
- அட இதை என் தமிழாசிரியர் டேணியல் ஐயா சொல்லி இருக்காரு பள்ளியில்! அவர் வகுப்பில் கேள்வியால் துளைத்தாலும், இயல்பிலே திரு.வி.க போல் மெல்லிய மாணவன் நான் தான் என்பது அவர் அடிக்கடிச் சொல்வது! டேய் எப்படிறா இதெல்லாம்-ன்னு நண்பர்கள் என்னை வம்புக்கு இழுப்பாங்க! :)
Post a Comment