Tuesday, March 30, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 10 சமரசம்

ஆழ்வார் எங்குமுள்ள இறையை உணர்ந்து, அதனை வழிபட்டவர். அதனால் அவர் சமரசத்தை அறிவுறுத்தலானார். அவருக்கு எல்லாம் இறையாக - அன்பாக - சகோதரமாகத் தோன்றின. சமரச ஞானத்துக்கு இறையின் சர்வ வியாபக உணர்வு இன்றியமையாதது. இஃது ஆழ்வார் திருவாக்குகளால் நன்கு விளங்குகிறது. இறையின் சர்வ வியாபக உணர்வை அடிப்படையாக் கொண்ட சமரசமே உண்மையானது.

இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப்புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும்.

சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும்.

இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன.

குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப்பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந்திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப்போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்திக்கலாகாது. 'நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன' என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனைகட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும்.

ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம். அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழிகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம்.

குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்திவிட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்கவொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்து மூடப்பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக.

ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு:

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்...

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்...

இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள. அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குருமாரையும் போற்றுவதாகும். அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்பதாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனை கூடாது.

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது.

நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ்நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோப மதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின.

சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினுமாக, வைணவராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைணவருட் சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, 'எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார்' - 'எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார்' என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக்கிறார். சமரசப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவதில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன்
அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

ஒளிமணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ ...

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே...

யானும் தானாயொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை...

முனியே நான்முகனே முக்கண்ணப்பா...

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி...

இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ்வேலையிலாவது, இத்திருவாக்குகளின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து,

இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றுநுந்
தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசுந்
திருக்குருகூரதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய்யில்லை போற்றுமின்னே

என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், 'எல்லா சமயக் கடவுள்' என்று வலியுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார். இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? 'ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது' என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது.

நம்மாழ்வார் சமரச ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ்நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை. இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவனருளால் மதச் சண்டை ஒழிக.

சமரச நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ்வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம். சாதிபேதம் என்னும் பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப்பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப்பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம்மடிகள் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே.

இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க.

சமரச ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்தியமுள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்க்டியமானது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது?

பகைமை இல்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதியாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங்களெல்லாம் செறிய,

உன்னைச் சிந்தை செய்து செய்து உன்
நெடுமாமொழி இசைபாடி யாடிஎன்
முன்னைத் தீவினைகள் முழுவேர்
அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்வார்வங் கீண்ட என்
முன்னைக் கோளரியே
முடியாத தென்னெனக்கே

என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. 'உன்னைச் சிந்தை செய்து' என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொருளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். 'உன்னைச் சிந்தனையினால் இகழ்ந்த இரணியன்' என்னுங்குறிப்பால், ஆண்டவனை இகழலாகாதென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் 'என் முன்னைக் கோளரியே' என்று விளித்து, 'முடியாததென்னெனக்கே' என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம்மிடுக்கும், இவ்வீறும், இவ்வஞ்சாமையும் தமிழ்நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது.