Thursday, May 28, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 3

ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.

மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ச்ரிகீதை பதினாறாம் அத்யாயத்தில் 'இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்' என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய 'துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:' என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.

'ஆருயிர் தொகுத்து' என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் - 'ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:' என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் 'அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா' (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது 'ஞானி பரதெய்வத்தை அடைந்து' என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க.

இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக்கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். 'ஞானீ த்வாத்மைவ மேமதம்' (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ச்ரி கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்மசன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. 'தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்' என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. 'பிதா மாதாச ஸர்வஸ்ய' என்பது மஹாபாரதம். சுத்தஸத்வநிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.

Monday, May 25, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 2

2. பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.

ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க. பூத்தமரம் என்பது பூத்தற்குக் காரணமான மரம் என்றவாறு; 'தாழ்ந்த இயல்பின்மை' (திருக்குறள் - 903) 'நிற்புகழ்ந்த யாக்கை' (பதிற்றுப்பத்து, 44, 8) என்புழிப்போல. பிண்டம் - சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார் பரதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக உருவகப்படுத்துகின்றாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்த என்று ஏகதேசரூபகமுகத்தாற் பிராணி ஸமுதாயத்தை மலர்களாக்கினார். ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார். இதனாற் பூத்தது பிரபஞ்சரூபமென்று துணியலாகும். பெருமை - பரமாணுவை அண்டபிண்ட ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற் றன்மை. இதனாற் பரதெய்வத்தின் ஸங்கல்ப விசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல் காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும்; 'எழிலளந்தங் கெண்ணற் கரியானை' (மூன்றாம்திரு. 3) என்று பணிப்பர். ('பூ நலம்' (பரிபாடல் - 16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப் பொருள் கூறலானுமுணர்க). இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை - அவ்வண்ட பிண்ட ரூபமான பிரபஞ்சத்தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இங்ஙனம் திரிவித காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமையால் விசேடித்தார். பூத்த மரம் என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு, இலை, பூ, காய், கனி முதலிய எவையும் மரத்தின் வேறாகாத் தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடர்
'அம்போ ருகனா ரரனா ரறியார்
எம்போ லியரெண் ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமொன் றெனும்வா சகமே'
என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கும் இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந்தும். 'சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானை' எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்றருளிய செய்தியை வெளியிடுதலான் இஃது உணரலாம். ச்ரி பாகவதம் 'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான், மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க. இந்தப் பாகவதத்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுளம் பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனாலும், அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம். இவ்வொருமை ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூப ஐக்யமாகாமை உய்த்துணர்ந்துகொள்க. 'பாரிடமாவானுந் தான்' (௪௨) என்னும் பெரியதிருவந்தாதித் தொடர்க்கு பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் 'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று' என்றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிறைவேற்றவே எங்குங்கலந்துறைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.

Friday, May 22, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 1

1. அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.

ஆகல் - வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை 'ஆகலூழ்' (திருக்குறள் - 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு - அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதை ச்ரிபாகவதம் ௩-ஆம் ஸ்கந்தம் (௧௧ - ௧) 'பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது' என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி ௩-ஆம் ஸ்கந்தம் ௧௧-ஆம் அத்தியாய முடிவில் 'ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்' என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். 'ஆகி' என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை 'காமத்துக் காழில்கனி' (திருக்குறள் - 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்

அண்டகோள மெய்ப்பொருள்

தற்சிறப்புப்பாயிரம்

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.

---------*---------

ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்

----------*------------

அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
10 யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.


இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.

இதன் பொருள்.

(அடுத்த இடுகையிலிருந்து பொருளுரை தொடங்கும்).

Thursday, May 21, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - முகவுரை

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

முகவுரை

'அண்ட கோளத்தாரணு' என்ற பாசுரம், 'ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்' என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.

அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், 'அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்' (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.

இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.

இங்ஙனம்,
ரா. இராகவையங்கார்.

அண்டகோள மெய்ப்பொருள் - முதல் பக்கம்

அண்டகோள மெய்ப்பொருள்

ஸேது ஸம்ஸ்தான மஹாவித்வானும்
பாஷா கவிசேகரரும்
அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய
ரா. இராகவையங்கார்
எழுதியது


சென்னைத் திருவல்லிக்கேணி
ஸ்ரீ வேதவேதாந்தவர்த்தனீ மகாசபையாரால்
வெளியிடப்பெற்றது
1934.
விலை அணா 4

அண்டகோள மெய்ப்பொருள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் வரிசையில் இருக்கும் இன்னொரு பொத்தகத்தை ஒருங்குறியில் தட்டி இங்கே இடப்போகிறேன். அந்த நூல் நம்மாழ்வார் இயற்றிய 'அண்டகோள மெய்ப்பொருள்' என்ற பாசுரத்திற்கு திரு.இரா. இராகவையங்கார் அவர்கள் எழுதிய பொருளுரை. இந்நூலை தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தந்தவரும் மின்னூல் ஆக்கியவரும் ஆன முனைவர். திரு. நா. கணேசன் ஐயா அவர்களுக்கு நன்றி.

Tuesday, May 19, 2009

எம்பெருமானார் சரிதம் - இறுதிப்பகுதி

எம்பெருமானாருடைய ஜீவதசையில் நேர்ந்த முக்கிய சம்பவங்களின் காலக்குறிப்பு

1. ஜனனம்: கி.பி. 1017
2. யாதவப்பிரகாசரிடம் படித்தது: கி.பி. 1033
3. ஸ்ரீரங்கம் முதல் தடவை (ஆளவந்தாரைச் சேவிக்கச்) சென்றது: கி.பி. 1042
4. ஸந்யஸித்தது: கி.பி. 1049
5. சோழனுடைய இம்சைக்கு அஞ்சி மைசூர் பிராந்தியம் சென்றது: கி.பி. 1096
6. விட்டலதேவனென்னுமரசனை தம் சித்தாந்தத்தில் சேர்த்துக் கொண்டு விஷ்ணுவர்த்தனனென்று நாமமிட்டது: கி.பி. 1098
7. மேல்கோட்டையில் ஸ்ரீநாராயணப்பெருமாளை எழுந்தருளப் பண்ணியது: கி.பி. 1100
8. மேல்நாட்டிலிருந்தது (வரை): கி.பி. 1116
9. ஸ்ரீரங்கம் திரும்பியது: கி.பி. 1118
10. திருநாட்டை அலங்கரித்தது: கி.பி. 1137

மொத்த ஆயுள்கால வருடங்கள்: 120

**
எம்பெருமானாருடைய திருநாமங்களின் குறிப்பு

திருநாமங்களும் சாற்றினவர்களும்:

1. இராமாநுஜர் - திருமலைநம்பி
2. இளையாழ்வார் - திருமலைநம்பி
3. எதிராசர் - பகவான் வரதன் (பேரருளாளன்)
4. உடையவர் - அழகிய மணவாளன் (ஸ்ரீ ரங்கநாதன்)
5. எம்பெருமானார் - திருக்கோட்டியூர் நம்பி
6. ஸ்ரீபாஷ்யகாரர் - ஸரஸ்வதிதேவி
7. அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான் - திருவேங்கட சம்பவம்
8. நங்கோயிலண்ணர் - கோதையார் (ச்ரி ஆண்டாள்)

**
மஹான்களுடைய பெருமையைச் சொல்லியிருக்கும் பாசுரங்களின் குறிப்பு

1. 'பரமனை, பயிலும் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர், பயிலும் பிறப்பிடை தோறு எம்மையாளும் பரமரே'

2. 'பரமனை, பணியுமர் கண்டீர், நாளும் பிறப்பிடைதோறு எம்மையாளுடை நாதரே'

3. 'எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஓதும் பிறப்பிடைதோறு எம்மையாளுடையவர்களே'

4 'அவனடியாரடியே கூடுமிதுவல்லால் விடுமாறென்பதென்? அந்தோ! வியன்மூவுலகு பெறிலுமே'

5. 'அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே'

6. 'பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு'

7. 'உன் தொண்டர்கட்கே, அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே'

8. வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே'

9. 'தென்குருகூர் நம்பியென்றக்கால், அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே'

(நிறைவுபெற்றது)

எம்பெருமானார் சரிதம் - சில முக்கிய சம்பவக் குறிப்புகள்

இச்சிறுநூல் விரியுமென்று விடப்பட்ட சில முக்கிய சம்பவக் குறிப்புகள்

இவைகளால் இராமாநுசர் சமரச அன்பு உடையாரென்றறியலாகும்

1. அர்ச்சாசமாதியையும் கடந்து பகவான் வரதன் திருக்கச்சிநம்பியிடம் வார்த்தையாடுபவராகையால், இராமானுசர்க்கு ஏற்பட்ட ஆறு சந்தேகங்களுக்கு பதில் வரதனிடம் கேட்கும்படி இராமாநுசர் நம்பியைப் பிரார்த்தித்தார். அவ்வாறே கேட்க பகவானுடைய மறுமாற்றங்களை நம்பிகள் தெரிவிக்க, இராமாநுசர் நம்பிக்குத் தெண்டன் சமர்ப்பித்தார்.

2. நித்தியவிபூதியும் லீலாவிபூதியும் இராமாநுசருக்கு பகவானால் கொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக இராமாநுசர் தும்பியூர் கொண்டியென்னும் இடைப்பெண்ணுக்குக் கொடுத்த சீட்டை ஸ்ரீனிவாஸன் அங்கீகரித்து அவளுக்கு மோக்ஷமளித்தான்.

3. பகவான் திருக்குறுங்குடிநம்பி வேண்ட, இராமானுசர் பகவானை சிஷ்யனாக்கிக் கொண்டு திருமந்திர உபதேசம் செய்தார்.

4. இராமானுசர் நீராடி வரும்போது காயசுத்திக்காக பிள்ளையுறங்காவில்லிதாசர் கைவாகு கொடுத்துவந்தார்.

5. கோயிலில் ரங்கநாதனுடைய உடைகளை வெகுநன்றாக வெளுத்துவந்த வண்ணானை இராமானுசர் கைப்பிடித்து அழைத்துச்சென்று ஸ்ரீரங்கநாதனுடைய அருளுக்கு இலக்காக்கினார்.

6. பஞ்சம வர்ணத்தரான மாறனேர்நம்பிக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பெரிய நம்பிகள் செய்தபோது இராமானுசர் தம்மை இக்காரியத்தில் நியமிக்கலாகாதா என்றார்.

7. மேல்கோட்டையில் பஞ்சமர்கள் செய்த உபகாரத்திற்காக, அவர்களை சந்நிதிக்குள் பிரவேசிக்க (வருடத்தில் மூன்று நாட்கள்) ஏற்பாடு செய்தார். பஞ்சமர்கள் என்னும் பெயரை மாற்றி திருக்குலத்தடியார் என்று அழைக்கச் செய்தார்.

8. நாராயணா என்பதும் ராமானுசா என்பதும் நான்கு எழுத்துக்கள் கொண்ட நாமமேயானாலும், பகவானாகிய நாராயணன் நம்மை இரட்சிக்கவும் செய்வான் நிக்ரஹிக்கவும் செய்வான். ஆனால், லோகோபகாரியாகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பாரென்று அடிக்கடி கூரத்தாழ்வான் சொல்லுவார்.

9. மாறனேர்நம்பிக்குப் பெரியநம்பி நீராட்டி அமுது செய்விக்க, பின்னிருந்து நோக்கி அரங்கரிடம் பிரபத்தி பண்ணி மாறனேர்நம்பி நோயை நீக்கினார்.

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் – 5

கூரத்தாழ்வான் குமாரராகிய பட்டர் உடையவரிடத்திலும் மற்ற ஆசாரியர்களிடத்திலும் பேரன்பு கொண்டிருந்தார். பட்டருக்கும் மற்றுமுள்ள முதலிகளுக்கும் உடையவர் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதித்துக்கொண்டு வந்தார். அக்காலத்தில் சோழ தேசத்தரசன் சிவனுக்குப் பரத்வம் ஸ்தாபிக்கவேண்டுமென்று நினைந்து அதற்கு இராமானுசர் கையொப்பம் இட்டால் போதுமென்று தீர்மானித்தான். உடனே தன் சிப்பந்திகளை அனுப்பி இராமானுசரை வரவழைக்க ஏற்பாடு செய்தான். சேவகர்கள் வந்த விஷயத்தை அறிந்த கூரத்தாழ்வான் உடையவருக்குக் கெடுதி விளையும் என்று நினைத்து உடையவரைக் காப்பாற்ற விரும்பி அவருடைய காஷாயத்தைத் தாம் உடுத்திக் கொண்டு உடையவருக்குச் சொல்லாமல் சேவகருடன் சென்றார். உடையவருக்கு இது பின்பு தெரிந்தது. உடையவரும் வெள்ளை சாத்திக் கொண்டு சில முதலிகளுடன் (1096 கி.பி.யில்) மைசூர் பிராந்தியம் சென்றார்.

பின்னர், தொண்டனூருக்குச் சென்று அத்தேசத்தரசன் பெண்ணுக்குப் பிடித்திருந்த பிசாசத்தை நிவர்த்தி செய்தார். அவ்வரசனும் (1098 கி.பி.யில்) இவருக்குச் சிஷ்யனானான். சமணர்களை வாதத்தில் ஜெயித்து அவர்களுள் அநேகரைச் சிஷ்யர்களாக்கி அவர்களுக்கும் காலக்ஷேபம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவ்வாறிருக்க, திருநாராயணப்பெருமாள் யதுகிரியில் உடையவர் வரவை எதிர்பார்ப்பதாக விஷ்ணுவர்த்தனன் ஒரு கனவினைக் கண்டான். கண்ட அரசன் காட்டினை வெட்டுவித்துத் திருத்துழாய்ச் செடியின் கீழ் புற்றிலிருந்த திருநாராயணப் பெருமாளை, யதுகிரியில் கோயில் கட்டுவித்து அங்கு எழுந்தருளப்பண்ணி ஸம்ப்ரோக்ஷணம் முதலானவைகளை (1100 கி.பி.) உடையவரைக் கொண்டு செய்வித்தான். அங்கிருந்த உத்ஸவர் டில்லி ராஜன் மகள் படுக்கையறையில் இருப்பதாக ஒரு நாள் உடையவர் கனாக் கண்டார். கண்டவர் உடனே டில்லி சென்று அரசனைக் கண்டு நடந்தவற்றைக் கூறிக் கேட்க, அவன் 'உங்கள் பெருமாளாயிருந்தால் கூப்பிடுங்கள், வந்தால் கொண்டு செல்லுங்கள்' என்றான். அதைக் கேட்ட உடையவர் அவ்வாறே அழைக்க உத்ஸவரும் கிண்கிணி சதங்கை ஒலிக்க யாவரும் காண நடந்துவந்து உடையவர் மடியிலேற, உடையவரும் ஆனந்தத்துடன் 'எனது செல்லப் பிள்ளையே' என்று அணைத்துக் கொண்டார். அன்று முதலாக அப்பெருமாளுக்கு எதிராஜஸம்பத்குமாரன் என்றே திருநாமம் வழங்குவதாயிற்று.

திருநாராயணபுரத்திலிருந்த போது முற்கூறிய சோழ அரசனிடம் சென்ற கூரத்தாழ்வான் சிவபரத்வத்திற்கு ஒப்புக்கொள்ளாமையால் அவருடைய இரு கண்களையும் பிடுங்கும்படி அரசன் ஆக்ஞாபித்தான். பாபிகள் நெருங்கி வந்து தோண்டுவதற்கு முன்னர் தாமே தம் திருக்கை நகங்களால் பிடுங்கியெறிந்தார்.

பிறகு, பல வருஷங்கள் கழிந்தபின் அந்தச் சோழனும் இறந்தான். இவற்றையெல்லாம் கேள்விப்பட்டுத் திருவரங்கம் எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.

திருநாராயணபுரத்தில் ஒரு மடம் கட்டுவித்தார். அத்தேசத்தாருடைய பிரார்த்தனையின் பேரில் தம்மைப் போல் ஓர் அர்ச்சா விக்ரஹத்தை எழுந்தருளப் பண்ணி வைத்தார். தேவரீர் எங்களை விட்டுப் பிரிந்து போவதால் இவ்வர்ச்சாவிக்ரஹத்தில் தேவரீரிருப்பதாக நாங்கள் எப்படி தேறியிருப்போமென்று கூறி வருந்தினார்கள். அதனைக் கண்ட உடையவர் நீங்கள் என் பெயரினைச் சொல்லி அழையுங்கள் என்றார். அவ்வாறு அழைக்க, விக்ரஹம் 'நான் இங்கே எப்போதும் இருக்கிறேன்' என்று வாக்களிக்க, மனம் தேறுதலடைந்தார்கள்.

பின்னர், கோயிலுக்கு (1118 கி.பி.) எழுந்தருளிக் காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருந்தார். குருபரம்பரை இடையறாமல் தரிசனம் வளர்ந்தேறும் பொருட்டு எழுபத்துநான்கு ஆசாரியர்களை பகவத் பாகவத கைங்கரியங்களுக்கு நியமித்தார். அக்காலத்தில் ஸ்வாமியால் எழுநூறு யதிகளும் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களும் உஜ்ஜீவிக்கப்பெற்றார்கள்.

ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம், நித்யம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். நாச்சியார் சொல்லியிருந்தபடி திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறுதடாவில் அக்காரவடிசில் அமுது செய்வித்தார். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி கோதையாரால் 'நங்கோயிலண்ணர்' என்று திருநாமம் பெற்றுக் கோயிலுக்கு எழுந்தருளி பட்டருடைய உபந்யாஸ வைபவத்தைக் கேட்டருளி பட்டருக்கு வேதாந்தாசாரியர் என்ற திருநாமம் சாத்தினார்.

பின்பு எம்பெருமானார், நம்பெருமாள் சந்நிதிக்குப் பட்டரை உடன்கொண்டு சென்று பெருமாளைச் சேவித்து 'முன்னுக்கு தர்சனப்ரவர்த்தகராவர் இவர்' என்று பட்டரைக் காட்டியருளினார். இப்பிரார்த்தனையை நம்பெருமாள் அங்கீகரித்தார். பிறகு கந்தாடையாண்டான் உடையவரை அடைந்து வந்தனை வழிபாடுகள் செய்து தேவரீருடைய விக்ரஹத்தைப் பூதபுரியில் அதாவது ஸ்ரீபெரும்பூதூரில் எழுந்தருளப்பண்ணவேண்டும்; அதற்குத் தேவரீர் திருவுள்ளம் பற்றவேண்டுமென்று பிரார்த்தித்தார். பின்னர், உடையவருடைய அனுமதியைப் பெற்று விக்ரஹம் செய்வித்து அதனைக் கடாக்ஷிக்கும்படி பிரார்த்தித்தார்கள். உடையவரும் தம்முடைய திருமேனிக்கு அது பொருத்தமாக இருப்பதைக் கண்டு பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும்படி தம்முடைய சக்தியையும் கடாக்ஷத்தையும் அவ்விக்ரஹத்தில் பிரகாசிக்கும்படி விக்ரஹத்தைத் தழுவி, அதனைப் புஷ்யமாதத்தில் குருபுஷ்யத்தில் பூதபுரியில் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்டார். அவ்வாறே புஷ்ய மாதத்தில் குருபுஷ்யத்தில் பிரதிஷ்டை செய்விக்கிற அந்நாளில் உடையவர் திருமேனியில் பலஹானி உண்டாயிற்று. அதனைக்கண்ட உடையவர் முதலிகளில் ஒரு சிலரை உடன் வைத்துக் கொண்டு நம்பெருமாள் திருமலரடிக்கீழ் நிரதிசய சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்று பேரவாக் கொண்டவராய் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு சரணாகதி கத்யத்தையும் ஸ்ரீரங்ககத்யத்தையும், ஸ்ரீவைகுண்ட கத்யத்தையும் விண்ணப்பம் செய்தார். பெருமாளும் 'உமக்கு செய்யவேண்டுவது என்' என்ன, 'தேவரீர் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்று பிரார்த்திக்க, 'அப்படியே செய்யக்கடவோம்' என்றார். பின்னர், முதலிகளுக்கு இதனை இனி ஒளிக்க ஒண்ணாதென்று திருவுள்ளம்பற்றி முதலிகளைப் பார்த்து 'நாம் இன்றைக்கு நாலாம் நாள் பெரிய பெருமாள் திருவடிகளை அடையப் போகிறோம்' என்று தெரிவித்தார். உடையவர் தாம் குறிப்பிட்ட அக்காலத்திலேயே எம்பார் திருமடியிலே திருமுடியும் வடுகநம்பி திருமடியிலே திருவடிகளையும் வைத்துக் கொண்டு தம் ஆசாரியரை நினைந்த நினைவோடு (1137 கி.பி.) கண்வளர்ந்து திருநாட்டை அலங்கரித்தார்.

Monday, May 18, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் – 4

அதன் பிறகு இராமானுசர் தம் ஆசிரமத்தை விமரிசையாய் நடத்திவரும்போது தம் சிறிய திருத்தாயார் குமாரரான கோவிந்தபட்டரைத் தமக்கு சஹாயத்திற்காக வரவழைத்துக் கொண்டார். கந்தாடை முதலியாண்டானும், கூரத்துக்கதிபதியான கூரத்தாழ்வானும் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தார்கள்.

யாதவப்பிரகாசர் தம்முடைய தாயாருடைய வார்த்தைக்கிணங்கி, தாம் செய்த அபராதத்திற்கெல்லாம் ப்ராயச்சித்தமாக இராமானுசரையே ப்ரதக்ஷிணம் செய்து திரிதண்ட சந்நியாசியானார். இவருக்கு கோவிந்த ஜீயர் என்ற பெயர் வைக்கப்பட்டது. இவர் எழுதிய 'எதிதர்மம்' என்னும் கிரந்தத்தை இராமானுசர் அங்கீகரித்தார்.

பின்பு ஸ்ரீரங்கநாதருடைய அனுமதியின் பேரில் திருவரங்கப்பெருமாளரையர் கச்சி சென்று இராமானுசரைத் தந்தருள வேண்டுமென்று பேரருளாளனுக்கு விண்ணப்பித்தார். அப்படியே தந்தருள, இராமானுசர் கோயிலுக்குச் சென்று அழகியமணவாளனைச் சேவித்து நிற்க, அழகியமணவாளன் உவந்து 'உடையவர்' என்ற திருநாமம் சாத்தினார். அன்று தொட்டு எம்பெருமான் திருவுள்ளப்படி கோயில் காரியங்களைச் சிறப்பாக நடத்திவந்தார்.

கோயில் காரியங்களில் தலைமை வகித்துவந்த திருவரங்கத்தமுதனாரைத் திருத்தி, ஆழ்வான் திருவடிகளிலே சேர்ப்பித்தார். அமுதனாருடைய ஆதீனத்திலிருந்த ஸன்னிதி திறவுகோலையும் ஆழ்வானிடம் ஸமர்ப்பிக்கும்படி செய்வித்தார்.

அக்காலத்தில் கோவிந்தபட்டர், பெரியதிருமலை நம்பியினால் திருத்தப்பட்டவராய் விசிஷ்டாத்வைதமே மேலான மார்க்கமென்று சிந்தை தெளிந்து உடையவரை உள்ளன்புடன் ஆச்ரயித்தார்.

பெரியநம்பிகளின் திருவுள்ளப்படி மற்ற ரஹஸ்யங்களைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெறுவதற்குத் திருக்கோட்டியூர் சென்றார். திருக்கோட்டியூர் நம்பி இவருக்கு முகம் கொடாமையால் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார். பின்பு திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீரங்கம் உத்ஸவ ஸேவார்த்தமாக வந்தபோது நம்பெருமாள் திருக்கோட்டியூர் நம்பிக்கு நியமித்தும், உடையவர் மறுபடியும் திருக்கோட்டியூர் சென்றபோது இது தருணமல்லவென்று அனுப்பிவிட்டார். இவ்விதம் பதினேழுமுறை சென்ற பின்பு சரமசுலோகார்த்தம் உபதேசிப்பதாகச் சொல்லினார்.

உடையவரை பதினெட்டாவது முறை உபதேசத்திற்கு வரும்படி நியமித்தபோது தண்டும் பவித்ரமுமாக வர நியமித்திருந்தார். அதனையே வியாஜமாகக் கொண்டு கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் தம்முடன் அழைத்துச்சென்றார். இவர்களைக் கண்ட நம்பிகள் ஏன் அழைத்து வந்தீரென்ன, தண்டும் பவித்ரமுமான இவர்களை அழைத்துவந்ததாகச் சமாதானம் கூறினார். திருக்கோட்டியூர் நம்பி, இவர்களைத்தவிர மற்றெவருக்கும் சொல்லவேண்டாமென்று திட்டம்செய்து சரமசுலோகத்தை உபதேசித்தருளினார். உடையவர் ஆசாரியன் வார்த்தையை உல்லங்கனம் செய்தாவது பிறர் படும் அனர்த்தத்தைத் தவிர்க்க வேண்டுமென்று நினைந்து திருக்கோட்டியூரில் திருவோலகத்திலிருக்கும் எல்லா வைஷ்ணவர்களுக்கும் இந்த ரஹஸ்யத்தைச் சாதித்தருளினார். இதைக் கேள்விப்பட்ட ஆசாரியன் வினவ 'அடியேன் தங்களிடம் அபசாரப்பட்டதற்குக் கிடைப்பது நரகமேயாயினும் தேவரீர் திருவடி சம்பந்தத்தால் இத்தனை பேரும் உஜ்ஜீவிப்பார்களே!' என்று சமாதானம் சொன்னார். இவருடைய விசாலமான நோக்கத்தைப் பாராட்டி இவருக்கு 'எம்பெருமானார்' என்று திருநாமம் சாத்தி இவரை அணைத்துக் கொண்டார்.

பின்பு திருக்கோட்டியூர் நம்பியின் அனுமதிப்படி உடையவர் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேட்டுவர, உடையவர் இடையிடையே சில பாசுரங்களுக்கு நுட்பமாகிய அர்த்தங்களைச் சொல்லிவந்ததால் அவர் வேறாக நினைத்துத் திருவாய்மொழிப் பொருள் சொல்லுவது தவிர்ந்தார். பிறகு திருக்கோட்டியூர் நம்பி, ஆண்டானைச் சமாதானப்படுத்தி, உடையவர் கூறிய அர்த்தத்தைத் தாம் ஆளவந்தாரிடம் கேட்டிருந்ததாகத் திருமாலையாண்டானுக்குத் தெரிவித்தார். மறுபடியும் திருவாய்மொழி காலக்ஷேபம் நடக்கும் போது, உடையவர், ஆளவந்தார் இப்படி அர்த்தம் சொல்லியிருக்கமாட்டார் என்று விண்ணப்பிக்க, நீர் ஆளவந்தாரைக் காணாதிருக்க இவ்வாறு சொல்லுவதற்குக் காரணமென்னவென்று கேட்க, 'எப்படி துரோணாசாரியருக்கு ஏகலவ்யனோ அவ்வாறே அடியேனும் ஆளவந்தார் அநுக்கிரகத்தால் அவருக்கு ஏகலவ்யன்' என்று சொல்ல, இவர் சாமான்ய சிஷ்யரல்லரென்று அதிசயித்தார்.

திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின்னர் பெரியநம்பியின் நியமனப்படி திருவரங்கப்பெருமாளரையரிடம் சரமார்த்தங்களைக் கேட்டார்.

மாதுகரம் பண்ணுகிறபோது கைங்கரியபரர்களில் ஒருவன், எம்பெருமானாருடைய கோயில் நிர்வாஹத்தைச் சகியாது மாதுகரத்திலே விஷம் கலந்து கொடுத்தான். அவ்வுண்மையறிந்து உபவாஸமிருந்தார். திருக்கோட்டியூர் நம்பி, உடையவர் திருமேனியில் பரிவுள்ளவரான கிடாம்பியாச்சானைத் தளிகை பண்ணி ஏக மாதுகரமாகப் பிரசாதிக்கும்படி நியமித்தார்.

பின்பு யக்ஞமூர்த்தியென்கிற மஹாவித்வான் ஒருவர் மாயாவாதி சந்நியாஸியாய் உடையவருடைய வைபவத்தைக் கேட்டுக் கோயிலுக்கு வந்து உடையவருடன் தர்க்கிக்க வேண்டுமென்றார். யக்ஞமூர்த்தி தோற்றால் வைஷ்ணவ சித்தாந்தத்தில் புகுவதாயும் உடையவர் தோற்றால் கிரந்த ஸந்யாஸம் செய்வதாகவும் ஒரு நியமம் ஏற்படுத்திக்கொண்டனர். பதினேழு நாள்வரை மூர்த்தியின் வாதம் பிரபலமாயிருக்க, உடையவர் அன்றிரவு அமுது செய்யாது வெறுப்புடனே கண்வளர்ந்தருளினார். பேரருளாளன் அவர் கனவில் தோன்றி ஆளவந்தார் செய்தருளிய மாயாவாத கண்டனத்தைக் கொண்டு ஜெயமடையும்படி ஆக்ஞாபித்தார். அதனைத் தன் ஞானத்தால் அறிந்த யக்ஞமூர்த்தி தமது தோல்விக்கு இசைந்தார். பின் உடையவர் அவர்க்குத் திரிதண்டத்தையும் பூணூலையும் தரிப்பித்துப் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்தருளி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற பெயரையும் வைத்தனர்.

அக்காலத்தில் திருமலைக்குச் சென்று கைங்கரியம் செய்வார் யாருமில்லாமையால் சிஷ்யகோடியிலுள்ளாரைக் கேட்க, யாரும் சம்மதித்திலர். அனந்தாழ்வான் மட்டும் தாம் போவதாக ஒப்புக்கொண்டார். அவரைப் பார்த்து 'நீர் தாம் ஆண்பிள்ளைகாணும்' என்றார்.

திருமலைத்தாழ்வரையில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் பதின்மரையும் ஜீர்ணோத்தாரணம் செய்து திருப்பதி எழுந்தருளி, விட்டலதேவனை சிஷ்யனாக்கிக் கொண்டார்.

பெரியதிருமலைநம்பி சந்நிதியில் ஒரு வருடகாலம் ஸ்ரீமத்ராமாயண காலக்ஷேபம் கேட்டார். கோவிந்த பட்டருடைய விரக்தியைக் கண்டு அவரைத் தாம் தனமாகப் பெற்று அவருக்கு சந்நியாஸ ஸ்வீகாரம் செய்வித்து எம்பாரென்று திருநாமத்தையும் சாத்தினார்.

பின்பு உடையவர் திக்விஜயம் செய்யத் திருவுள்ளம் பற்றிக் கூரத்தாழ்வானையும் அருளாளப்பெருமாள் எம்பெருமானாரையும் உடனழைத்துக் கொண்டு சென்று ஆங்காங்குள்ள பாஹ்ய மதங்களை ஜெயித்து வருகிற காலத்தில் காஷ்மீர் தேசத்திலுள்ள ஒரு தலைநகரில் 'போதாயன விருத்தி' என்னும் கிரந்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டு ஆங்கு சென்று அரசனைக்கண்டு அவனிடம் அனுமதி பெற்று, உடையவரும் கூரத்தாழ்வானும் அப்போதாயன விருத்தியினை ஒருமுறை பார்த்து வந்தார்கள். அவ்வாறு பார்த்துவரும் காலத்து அச்சமஸ்தான வித்வான்கள் பொறாமையினால் அதைத் திருப்பி வாங்கிக்கொண்டனர். உடையவர் நன்றாகப் பார்க்க முடியவில்லை என்று வியாகுலப்பட்டார். அப்போது ஏகசந்தைக்கிராகியாகிய நம் ஆழ்வான், 'தேவரீர் கிலேசப்படவேண்டாம்; நியமித்தால் அப்புத்தகத்தில் உள்ள யாவற்றையும் அடியேன் இப்போதே ஒப்பிக்கிறேன் அல்லது இரண்டாற்றங்கரை நடுவே சொல்லச் சொன்னாலும் சொல்லுகிறேன்' என்றார்.

காஷ்மீரத்தில் ஸரஸ்வதிதேவியாரின் பீடமிருப்பதால் உடையவர் அவ்விடம் எழுந்தருளியபோது அப்பீடத்து வீற்றிருக்கும் ஸரஸ்வதி தேவி, உடையவரை வரவேற்று ஒரு சுருதிக்குப் பொருள் கேட்க, கேட்ட சுருதிக்குச் சொல்லிய பொருளைக் கேட்ட சரஸ்வதி சந்தோஷப்பட்டு இவர் செய்த ஸ்ரீபாஷ்யத்தைத் தன் திருமுடியில் வைத்துக் கொண்டாள். ஸரஸ்வதிதேவி இவருக்கு 'ஸ்ரீபாஷ்யகாரர்' என்ற ஒரு திருநாமத்தையும் சாத்தி ஆராதனம் செய்துகொண்டுவரும்படி ஸ்ரீஹயக்கிரீவரையும் கொடுத்தாள். பின்னர், அத்தேசத்தரசன் உடையவருக்குச் சிஷ்யனானான்.

அந்த அரசன் ஸ்ரீபாஷ்யத்தைப் பார்த்து வியந்து எந்த ஆதாரத்தைக் கொண்டு செய்தீரென்று கேட்க 'பழமையான போதாயன விருத்தியையும் அதற்கு டங்கர், குஹதேவர், கபர்தி, பாருசி முதலியோர் செய்த வியாக்கியானங்களையும் ஆதாரமாகக் கொண்டு இதனை எழுதி முடித்தேன்' என்று தெரிவிக்க, கேட்ட அரசன் சமஸ்தான புத்தகசாலையில் உள்ள அவற்றோடு ஒத்திட்டுப் பார்த்து ஸ்ரீபாஷ்யத்தில் சொல்லப்பட்டவைகள் சரியென்று தேறினான்.

திருவனந்தபுரத்திலும் ஜகந்நாதத்திலும் மடங்களை ஸ்தாபித்தார். மீண்டும் திருமலைக்குச் சென்றபோது சைவர்கள் திருவேங்கடமுடையானுக்குச் சங்கு சக்கரங்களாகிய அசாதாரணமான ஆயுதங்களில்லாமையால் அவ்வுருவத்தைச் சிவனுடைய உருவமாக உரிமை பாராட்டினர். இராமானுசர் திருமால் திருவுருவம் என்று தர்க்கித்தார். இரு கக்ஷியாரும் பேசிப் பேசி முடித்து ஒருவித முடிவுடன் இரு தெய்வங்கட்குரிய சின்னங்கள் கீழே வைக்கப்பட்டுக் கதவுகள் மிக பந்தோபஸ்துடன் மூடப்பட்டன. மறுநாள் காலையில் இரு கக்ஷியார் முன்பும் கதவு திறக்கப்பட்டபோது, பகவான் திருக்கைகளில் சங்கும் சக்கரமும் பிரகாசித்தன. சிவசின்னங்களான திரிசூலமும், டமருகமும் கீழே தள்ளப்பட்டு இருக்கக் கண்டார்கள். இக்காரணம் பற்றி எம்பெருமானாருக்கு 'அப்பனுக்குச் சங்காழியளித்த பெருமான்' என்னும் திருநாமம் உண்டாயிற்று.

Sunday, May 17, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் - 3

இராமானுசர் திருக்கச்சிநம்பியை ஆசாரியராய் வகிக்க வேண்டுமென்ற உள்ளத்தராய்ப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்துவந்தார். திருக்கச்சிநம்பி தாம் வைசியராகையால் இவர் சிஷ்யராவதற்கு அவர் உடன்படவில்லை. பின் அவர் போனகம் செய்த சேடத்தையாயினும் பெற்றுத் தாம் புனிதத்தையடைய வேண்டுமென்று நினைந்து, அதற்காக அவருக்கு ஒரு விருந்து செய்ய ஏற்பாடு செய்து அவரை பிரார்த்தித்தார். அவரும் அதற்கு உடன்பட்டார். பின்னர் விருந்திற்குத் திருக்கச்சி நம்பியை அழைத்துக்கொண்டு வருவதற்குத் தாம் புறப்பட்டுச் சென்றார். அதே சமயத்தில் நம்பியும் வேறொரு வழியாக இராமானுசருடைய திருமாளிகையினையடைந்து இராமானுசருடைய தேவியாரைச் சீக்கிரம் பரிமாறும்படி பிரார்த்தித்தார். சென்ற இராமானுசர் திரும்பி வருவதற்குள் நம்பி அமுது செய்து சென்றுவிட, அவர் தேவியாரும் அமுது செய்த இலையையும் அப்புறப்படுத்தியமையால் தாம் நினைந்த சேஷமும் பெற்றிலர்.

ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிறகு கோயிலில் தரிசனம் நிர்வகிக்க வல்லாரிலரேயென்று, பெரிய நம்பிகள் இவரை அழைத்துவர, ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டார். இராமானுசரும் பெரிய நம்பியை சேவிக்கவேண்டுமென்று திருக்கச்சியிலிருந்து புறப்பட்டார். இருவரும் மதுராந்தக ஏரிக்கரையில் சந்தித்தார்கள். அவ்விடத்திலேயே பெரியநம்பிகளும் இராமானுசருக்குப் பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளினார்.

பிறகு இராமானுசர் பெரியநம்பிகளைக் கச்சிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று ஆறுமாத காலம் அவரிடம் காலக்ஷேபம் கேட்டுவந்தார். பின்பு பெரியநம்பிகள் கோவிலுக்குச் செல்லவேண்டியதாயிற்று.

உடையவர் தம்முடைய தேவிகள் இல்லற வாழ்க்கைக்கு அனுகூலமாயில்லாமையால் பேரருளாளன் அங்கீகரிக்க, தாம் சந்நியாஸ ஆசிரமத்தை 1049 கி.பி.யில் ஏற்றுக்கொண்டார். அப்போது இவருக்கு பகவான் வரதராசன் 'எதிராசர்' என்ற பெயரினை இட்டார்.

Saturday, May 16, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் - 2

அக்காலத்தில் வீரராஜேந்திரன் என்பானுடைய மகளைப் பிடித்திருந்த பிரஹ்மரக்ஷஸ்ஸை யாதவப்பிரகாசரால் ஓட்டமுடியாமலிருந்ததையும், அவருடைய சிஷ்யரான இராமானுஜருடைய திருவடி ஸ்பரிசத்தால் பிரஹ்மரக்ஷஸ் விலகிவிட்டதையுங் கண்டு எல்லாரும் ஆச்சரியமுற்றனர்.

ஸ்ரீரங்கத்திலிருந்த ஸ்ரீ ஆளவந்தார் நம் இராமானுஜரின் வித்வத் திறமையைக் கேள்விப்பட்டு காஞ்சீபுரம் அருளாளனைச் சேவிக்க வந்த போது, யாதவப்பிரகாசர் சிஷ்யகோஷ்டியில் தேஜஸ்ஸோடு விளங்கும் இராமானுசரைத் தூரத்திலிருந்து பார்த்து மகிழ்வெய்தி, 'இவர் நம் தர்சநத்திற்கு 'ஆமுதல்வர்' ஆகக்கடவர்' என்று கடாக்ஷித்தார். அப்பொழுது அவரோடு நேர்கொண்டு சம்பாஷிக்க நேராமையால் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென்றார். ஆளவந்தார் ஸ்ரீரங்கம் சென்றபிறகும் இராமானுசருடைய ரூபமும் குணங்களும் அவர் மனத்தைவிட்டு அகலவில்லை. இத்தகைய தன்மைவாய்ந்த அவர்தாம் இத்தரிசனத்தை வளரச்செய்வதற்குத் தகுதிவாய்ந்தவராவரென்று சிந்தை கொண்டவராய்த் தம் எண்ணத்தைத் தலைக்கட்டி வைக்கவேண்டுமென்று அருளாளனைப் பிரார்த்தித்து வந்தார். பின், இராமானுசர் யாதவப்பிரகாசரை விட்டு நீங்கித் திருக்கச்சி நம்பியினிடம் சேர்ந்த தன்மையினை ஆளவந்தார் கேள்விப்பட்டு மிக்க சந்தோஷமடைந்து பெரிய நம்பியைக் கொண்டு இராமானுசரை வரவழைக்கலானார். இவர்கள் இருவரும் திருக்கச்சியில் உள்ளபோதே ஆளவந்தார் நோய் கொண்டிருந்தமையால் இவர்கள் ஸ்ரீரங்கம் சேர்வதற்கு சற்றுமுன்னதாக திருநாட்டிற்கு எழுந்தருளினதால், அவர் சரமதேஹத்தையாவது ஸேவிக்கலாமென்று ஸம்ஸ்காரம் செய்வதற்குமுன் அவர் தேகத்தை பாதாதிகேசம் கவனித்து வருங்கால், அவர் வலது கையில் மூன்று விரல்கள் மடங்கியிருக்கக்கண்டு அங்குள்ளவர்களை, 'இவர் விரல்கள் இப்படித்தானிருந்தனவா' என்று வினவ, அவர்கள் அப்போது தான் அப்படி இருப்பதாகத் தெரிவித்தார்கள். இவர் ஜீவியகாலத்தில் ஏதாவது குறைப்பட்டிருந்தாரா என்று கேட்க, அவர்கள் வ்யாஸ, பராசரர்களுடைய கிரந்தங்களுக்கு வியாக்யானமில்லாததும், நாலாயிரதிவ்யப் பிரபந்தத்திற்கு வியாக்யானமில்லாததும், பிரஹமசூத்திரத்திற்கு பாஷ்யம் செய்ய ஏற்ற துணையில்லையே என்றும் சொல்லிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்கள். ஆளவந்தார் மனோரதத்தைத் தாம் பூர்த்தி செய்வதாக வாக்களித்ததின் மேல் விரல்கள் நிமிர்ந்தன. இவ்வற்புதத்தைப் பார்த்து யாவரும் வியந்தனர். இச்சம்பவம் 1042 கி.பி.யில் நடந்தது.

ஆளவந்தாருடன் தாம் மனோரதித்தபடியே அர்த்த விசேடங்களையெல்லாம் கேட்பதற்கு அழகியமணவாளன் திருவுள்ளம் கொள்ளவில்லையே யென்ற கிலேசத்தினால் மணவாளனையும் சேவிக்காமல் பெருமாள்கோவிலுக்குத் திரும்பிச்சென்றார்.

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் - 1

ஸ்ரீ பெரும்பூதூரில் ஆசூரி கேசவ சோமாஜியார் என்பவர் தமக்குப் புத்திரப்பேறு இல்லாமையால் வருந்தி அக்குறையினைத் தீர்த்துக் கொள்ளும்பொருட்டுத் தம் நண்பரான திருக்கச்சி நம்பியிடம் தெரிவித்தார். பேரருளாளன் தன் அர்ச்சாசமாதியையும் கடந்து நம்பியுடன் வார்த்தையாடுபவராகையால் தம் இஷ்டம் பூர்த்தியாகுமென்று உறுதிகொண்டார். சோமாஜியாரின் இஷ்டத்தைத் தலைக்கட்டி வைக்கவேண்டுமென்று திருக்கச்சி நம்பி அருளாளனைப் பிரார்த்திக்க, பேரருளாளன் போர உகந்து, சோமாஜியார் புத்திரப் பேற்றினிமித்தம் திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டியாகம் செய்யவேண்டும் என்று நம்பிக்குத் தெரிவித்தான். அவ்வண்ணமே யாகம் பூர்த்தியானவுடன் சோமாஜியாரின் ஸ்வப்பனத்தில் அருளாளன் தன்னுடைய திருவனந்தாழ்வானைப் புத்திரனாக அவதரிக்கும்படி செய்வதாகத் தெரிவித்தான். ஸ்வப்பனம் பலிதமாய் அவ்வண்ணமே பதினோராவது நூற்றாண்டில் (1017 கி.பி.) சோமாஜியாருக்கும் காந்திமதியாருக்கும் புத்திரராகச் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் நம் இராமானுஜர் அவதரித்தார்.

இந்த நற்செய்தியைக் கேட்ட தாய்மாமனாகிய பெரிய திருமலை நம்பி, ஸ்ரீ பெரும்பூதூருக்கு எழுந்தருளிக் குழந்தையைக் கடாக்ஷித்து, குழந்தையின் முகவொளியைக் கண்டு, ஸ்ரீ ராம அநுஜராகிய இளையபெருமாளுடைய ஸர்வலக்ஷணங்களும் இத்திவ்வியக் குழந்தையினிடத்தில் பொருந்தியிருந்ததால், திருமலை நம்பி தாமே நாமகரணம் செய்து 'இளையாழ்வார்' என்று திருநாமம் சாத்தினார்.

இளையாழ்வாராகிய நம் இராமானுஜர்க்கு எட்டாவது வயதில் உபநயனம் செய்வித்தார்கள். பின்னர் நான்கு வேதங்களையும் பிரஹ்மசரியத்திலேயே அதிகரித்தார். இவர் பதினாறாவது வயதில் இல்லற தர்மத்தை ஏற்றுக் கொண்டு ஐந்து வேள்விகளையும் செவ்வனே செய்து வந்தார். பின்னர் இவர் வேதாந்தத்தை வாசிக்க விரும்பித் திருப்புட்குழி யென்னுமூருக்குச் சென்று, அங்குள்ள யாதவப்பிரகாசரென்னும் ஏகதண்டி சந்நியாஸியிடம் (கி.பி. 1033) வாசித்துவந்தார். இவருடைய சிறிய தாயார் திருக்குமாரராகிய எம்பார் என்கிற கோவிந்த பட்டரும் இவரோடு சேர்ந்து வாசித்து வந்தார். இவர் யாதப்பிரகாசரிடம் வாசித்துவரும்போது அவர் சுருதி வாக்கியங்களுக்குப் பொருத்தமற்ற பொருள் சொல்லும்போது அதனை மறுத்து உண்மையான பொருள் இதுவேயென்று இராமானுஜர் பலதடவைகளிலும் சொல்லிவந்தார். அதனால் யாதவப்பிரகாசர் இவர் பால் பொறாமை கொண்டார். ஆசாரியனுக்கு மிஞ்சியிருக்கிறாரென்ற பொறாமை நாளுக்கு நாள் அதிகரித்தது. தீர்த்த யாத்திரை என்னும் வியாஜத்தைக் கொண்டு இவரைக் கங்கையில் தள்ளி மாய்க்கச் சிஷ்யர்களோடு சதியாலோசனை செய்து இராமானுஜருடன் துவேஷமில்லாத்து போல் நடித்து, அவரையும் தீர்த்தயாத்திரைக்கு அழைத்துப்போக விரும்பி, அதனை இவரிடம் தெரிவித்தார். இவரும் ஆசாரியன் விரும்பியவாறு, யாத்திரைக்குப் புறப்படும்போது தம் சிறிய தாயாரின் குமாரராகிய கோவிந்தபட்டரையும் உடன்கொண்டு புறப்பட்டார். யாத்திரை செய்யும்போது யாதவருடைய சதியாலோசனையைக் கோவிந்தபட்டர் ஒருவாறு அறிந்துகொண்டு விந்திய பர்வதத்தைத் தாண்டும்போது, ஆசாரியர் செய்திருக்கும் சூழ்ச்சியை இராமானுஜர்க்கு கோவிந்தபட்டர் தெரிவித்து, எவ்வாறாயினும் இவர்களைவிட்டு நீங்கி மறைந்து போகுமாறு உபாயத்தையும் கூறிவிட்டுத் தாம் அவர்களோடு சேர்ந்துகொண்டு வழி நடந்தார். இராமானுசர் சிறிதுசிறிதாக அவர்களைவிட்டு நீங்கிப் பின்னர் மறைந்தனர். பின்னர், யாதவப் பிரகாசரும் சீடர்களூம் இராமானுசரைக் காணாமையால் வழிதப்பிக் காட்டில் மடிந்திருப்பர் என்று நினைத்தார்கள்.

மறைந்த இராமானுசர் கானகத்தில் வழிதெரியாது திகைக்குங்கால் பேரருளாளனும் பெருந்தேவித்தாயாரும் வில்லி, வில்லிச்சி, உருக்கொண்டு இராமானுசருக்கு வழிகாட்டப் பிரஸன்னமானார்கள். நெடுந்தூரம் மூவரும் நடந்து, அன்று இரவு ஒரு மரத்தடியில் தங்கினார்கள். இராமானுசர் நடந்த சிரமத்தால் அயர்ந்து நித்திரை செய்தார். சூரிய உதயமானவுடன் சற்று நேரத்திற்கெல்லாம் மூவரும் ஒரு கிணற்றினருகில் சேர்ந்தவுடன், தம்பதிகளுடைய விடாய்தீர கிணற்றிலிறங்கி இராமானுசர் தம் திருக்கரங்களால் மூன்று தடவை தீர்த்தம் கொடுக்க, விடாய் தீர்ந்து இருவரும் மறைந்தார்கள். இவ்வாறு மறைந்தவர்களைத் தேடியும் எங்கும் காணாமையால் வாய்விட்டு அலறினார். அங்கு வந்தவர்களை இது எவ்விடமென்று கேட்க, அவர்கள் இது சாலைக்கிணறென்று தெரிவிக்க, தாம் காஞ்சீபுரத்தின் எல்லையில் இருப்பதறிந்து பலநூறு யோஜனைகளுக்கப்பால் இருந்த தம்மை இங்குச் சேர்ப்பித்தது வில்லி ரூபமாக வந்த பேரருளாளனும் பெருந்தேவித்தாயாருமேயாம் என்று துணிந்து அவர்களுடைய திருவருளை நினைந்து நினைந்து நைந்து உள்கரைந்தனர்.

இப்படி, பகவானுடைய விடாயைத் தீர்த்தமையால், இக்கிணற்றின் தீர்த்தத்தைத் திருவாராதனத்திற்குத் தினந்தோறும் கொணர்ந்துகொடுக்கும் கைங்கரியத்தில் இராமானுசர் ஈடுபட்டார். இவர் இங்ஙனமிருக்க யாத்திரையிலிருந்து திரும்பிக் காஞ்சீபுரம் வந்து சேர்ந்த யாதவப்பிரகாசர் இராமானுசரை அங்கு கண்டு ஆச்சரியமடைந்தார். முன்போலவே இளையாழ்வார் யாதவப்பிரகாசரிடம் கிரந்த காலக்ஷேபம் கேட்டுவந்தார்.

எம்பெருமானாருடைய அவதார காரணம்

இத்தகைய பரமகாருணிகரான எம்பெருமானார் அவதார காரணத்தைச் சிறிது தெரிந்து கொள்வோமாக.

பகவான், சேதனர்கள் தன்னை அறிந்து அடைவதற்காக, சிருஷ்டி காலத்திலேயே வேதத்தை வெளியிட்டான். வேதம் கர்ம காண்டமென்றும், பிரஹ்மகாண்டம் என்றும் இரண்டாக உளது. கர்மகாண்டத்தில் சொல்லியிருக்கிறவாறு ஒருவன் அதில் சொல்லப்பட்ட உத்தம் கைங்கர்யங்களையும் யக்ஞயாகாதிகளையும் செய்து அதனால் பகவத் ஞானம் பெற்றவனாய் முக்திக்குப் பாத்திரமாவான். இந்திரியங்களை அடக்கி பகவத் பிரயோஜனத்தைத் தவிர, வேறு விஷயங்களில் பற்றில்லாதவனாய் பகவத்பக்தியில் ஈடுபடுகிறவன் வேதத்தில் பிரஹ்மகாண்டத்தில் சொல்லியவாறு செய்தவனாய் அதனால் ஞானம் பெற்று முக்திக்குப் பாத்திரமாவான்.

இப்படி பகவானால் இவ்விரண்டு மார்க்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவும், பொதுவாக ஜனங்களுக்குக் கர்மம் செய்வதே இயற்கையாதலாலும், ஞான மார்க்கத்தில் கண்டபடி அனுஷ்டானங்களைப் பற்றற்றுச் செய்வது அரிதாதலாலும், கர்ம மார்க்கமே எளிதாதலாலும், பலர் கர்மம் செய்வதில் ருசி உள்ளவர்களாய் யாகயக்ஞாதிகளைச் செய்துவந்தார்கள். மேலும், கர்மகாண்டத்தில் பலவகையான கர்மங்கள் அவரவர் சக்திக்குத் தக்கவாறு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அக்கர்மத்தில் ஊற்றமுடையவர்கள் பற்பலர் ஆனார்கள். ஆனால், ஞானமார்க்கத்தில் வேற்றுமையில்லை. நூற்றெட்டு உபநிஷத்துக்களில் சொல்லியிருப்பவை அன்றுதொட்டு இன்றுகாறும் ஒருவிதவேற்றுமையுமின்றி விளங்குகின்றன. மேலும் தியாகமே, ஞானமார்க்கத்திற்கு முக்கியமாதலால் அதில் பற்றுடையவர்கள் சிலரேயானார்கள்.

மேற்கூறிய கர்மகாண்டத்தில் சொல்லியவாறு தொடங்கி, நாட்கள் செல்லச்செல்ல, யக்ஞயாகாதிகளைச் செய்யும் ரித்விக்குகளும், பிரயோஜனார்த்தமாகச் செய்விக்கும் யஜமானர்களும் ஜீவஹிம்சையைச் செய்து, தங்கள் நாவுக்கு ருசி தேடுபவர்களானார்கள். ஆதலால் ஞானத்தை உண்டாக்கக்கூடிய கர்மத்தைச் செய்யாமல், தங்கள் இந்திரியங்களுக்கு அடிமைப்பட்டவர்களானார்கள்.

இப்படி, சுருதி பிரமாணங்களுக்குத் தப்பான அர்த்தங்கள் செய்து, விபரீதமாகக் கொண்ட ஜீவஹிம்சையை நீக்க வேண்டி, பகவான் புத்தராக அவதரித்தார். வேதத்திற்கும் கடவுளுக்கும் ஏற்பட்ட பிராதான்யத்தை அழித்து, அக்காலத்திற்கேற்ப ஜீவஹிம்சை கூடாதென்றும், நல்லொழுக்கத்தால்தான் ஒருவன் நலம் பெறுவான் என்றும், தீமை செய்தால் தீமை விளையும் என்றும், நல்லது செய்தால் நன்மை விளையும் என்றும் உபதேசம் செய்துவந்தார் புத்தர். ஆனால், பிற்காலத்தில் அவருடைய சிஷ்யகோடிகளோ அவர் எந்த நோக்கத்தோடு பகவானைப் பற்றியோ, வேதத்தைப் பற்றியோ பேசவில்லை என்பதை அறியாதவர்களாய் உலகம் நிரீச்வரம் என்று கொண்டு, அடாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டார்கள். இது காரணமாக உலகத்தில் நல்லவாழ்வும் சமாதானமும் இல்லாதொழிந்தமையால், அவர்கள் பௌத்தப் பேய்களாய்த் துக்கத்தையே அனுபவித்து வந்தார்கள்.

இந்த துக்கநிலையை மாற்றுவான் பொருட்டு பகவான் ஸ்ரீ சங்கராசாரியரை அவதரிப்பித்தார். சூரியன் உதயமானால் இருள் இருந்தவிடம் தெரியாது மறைவது போன்று இந்த ஞானசூரியன் அவதரிக்கவே அதனைக்கண்டு புத்தப் பேய்கள் மறைந்தன. சங்கர பகவான் மறைவுபட்டிருந்த வேதத்தை விளக்கிக் காட்டி, சநாதந தர்மத்தை நிலைநாட்டினார். நான்கு வேதத்திலும் ஸாரமாயுள்ள நான்கு மஹாவாக்கியங்களை உபதேசித்து, அவ்வாக்கியங்களின் பொருளைக் கொண்டு மக்கள் பிரம்மத்தை அடையும் விதத்தையும் தெளிவுபட விளக்கிப் போந்தார். ஆனால், துர்மானிகளான பின்புள்ளவர்கள், அவ்வாக்கியங்களின் உண்மைப்பொருளையறியாதவராய் மயங்கலானார்கள். அதனால் தன் முழத்தால் மூன்றரை உயரமுள்ள ஆபாஸ தேகத்தை உடைய ஒவ்வொருவரும் 'நான் பிரஹ்மம்' என்கிற மஹாவாக்கியத்தின் பொருளை அறியாதவராய் அஹங்கரிக்கக் காரணமாயிற்று. தண்ணீரானது தாமரையிலிருந்தும் அதில் ஒட்டாததைப் போன்று இந்த ஆபாஸ மானிட ப்ரஹ்மா நன்மை செய்யினும் தீமை செய்யினும் தம்மை ஒன்றும் தீண்டாது என்ற கொள்கையுடையவரானார்கள். ஆகவே, உத்தம மார்க்கத்தையடைய உபதேசிக்கப்பட்ட சங்கர பகவானின் கொள்கையானது மாறுதலையடைய, உலகத்தில் சத்தியம் தலைமடிந்து அதர்மமானது தலையெடுக்க ஏதுவாயிற்று. இத்தகைய சீர் கேட்டைத் திருத்துவதற்காக எம்பெருமான் தனது சேஷாம்சமாகிய ஸ்ரீராமானுஜரை அவதரிக்கச் செய்தார். அன்னாருடைய சரிதத்தைச் சுருக்கமாய்த் தெரிந்துகொள்வோம்.

Thursday, May 14, 2009

எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்

1. எம்பெருமான் படி:

'அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன், அன்று ஆரணச்சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப, பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட...'

எம்பெருமான், கிருஷ்ணாவதாரத்தில் உபநிஷத் ஸாரமாகிய பகவத் கீதையைத் தானே உபதேசித்தான். அவ்வுபதேசன் அர்ச்சுனனைத் தவிர மற்ற யாருக்கும் பயன்படவில்லையே என்று வருத்தப்பட நேர்ந்தது. அர்ஜுனனுக்கும் பூர்த்தியாகப் பயன்பட்டிருக்குமோவென்று சந்தேகிக்கவும் இடமுளது.

1. எம்பெருமானார் படி:

'... தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன், எம் இராமானுசன் தன் படியிதுவே'.

ஆனால், எம்பெருமானாரோ எம்பெருமான் உபதேசித்தும் பயனளிக்காத அந்தக் கீதையைக் கொண்டே உலகோர்களெல்லாரையும் திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆளாக்கினார்.

2. எம்பெருமான் படி:

'மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே, கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்...'


இந்நிலவுலகில் அநேக அவதாரங்களை எம்பெருமான் எடுத்தும் அவன் திவ்விய சொரூபத்தை அறிந்து ஜனங்கள் திருந்தவில்லை. ('அவஜானந்தி மாம் மூடா:') என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்று வருந்தும்படி நேர்ந்தது.

2. எம்பெருமானார் படி:

(அந்த உலகோர்களெல்லாம்) 'அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே, நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே'.

ஆனால், எம்பெருமானாருடைய அவதாரம் எம்பெருமானுடைய அவதாரத்தைக் காட்டிலும் சிறந்தது. ஏனெனில் எம்பெருமானார் அவதரித்த பின்னர் ஸம்ஸாரிகள் அறிவுக்குத் தக்கபடி ஞானத்தைப் புகட்டி எல்லாரையும் ஞானவான்களாக்கிப் பகவானுக்கு அடிமைகளாக்கினார்.

3. எம்பெருமான் படி:

'ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொறும் நைபவர்க்கு, வானம் கொடுப்பது மாதவன்...'

எம்பெருமான் யாவரொருவர் ஞானத்தினால் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்னும் நிலைகளையடைந்து ஸம்ஸாரத்தில் இருப்புக்கொள்ளாமல் துடிதுடிக்கிறார்களோ அவர்களைச் சிரமப்படுத்தியே அவர்களுக்கு மோக்ஷமளிக்கிறான்.

3. எம்பெருமானார் படி:

'வல்வினையேன் மனத்தில், ஈனங்கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்தானம் கொடுப்பது தன், தகவென்னும் சரண் கொடுத்தே'.

ஆனால், எம்பெருமானாரோ கிருபாமாத்திரப் பிரஸந்நாசாரியராகையால் ஒரு அதிகாரமும் பெறமுடியாத அடியார்களையும், அவர்களுடைய பாபங்களைப் போக்கி அவர்களைத் தம் திருவருளால் திருத்தி அவர்களும் மோக்ஷம் அடையும் படிச் செய்வார்.

4. எம்பெருமான் படி:

'சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள், அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென்றனக்கன்றருளால், தந்தவரங்கனும் தன் சரண் தந்திலன்...'

பிரளய காலத்தில் கரணங்களே பரங்களின்றி இருந்த சேதனர்களுக்குச் சிருஷ்டி காலத்தில் அவைகளைக் கொடுத்துச் சேதனர்களை ஸம்ஸாரத்தில் தள்ளி தன் சுயநலத்தைக் கருதித் தன் லீலாரஸத்திற்குச் சேதனரை எம்பெருமான் ஆளாக்குகிறான்.

4. எம்பெருமானார் படி:

'தானது தந்து, எந்தை இராமானுசன் வந்தெடுத்தனன் இன்று என்னையே'.

ஆனால், எம்பெருமானாரோ தாய் போல் பிரியபரராய், தந்தைபோல் ஹிதபரராய் பகவானுடைய திருவடிகளைக் காட்டிக் கொடுத்து நம்மை ஸம்ஸாரத்திலிருந்து உத்தரிப்பித்தார். ஆகவே, எம்பெருமானாருடைய பரமகிருபை ஏற்றத்தையுடையதாகும்.

5. எம்பெருமான் படி:

'தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக், கூராழி கொண்டு குறைப்பது...'

எம்பெருமான் தன் ஆஞ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாதவர்களைத் தம் சக்கராயுதத்தைக் கொண்டு நிரஸிப்பான்.

5. எம்பெருமானார் படி:

'கொண்டலனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே'.

ஆனால், எம்பெருமானாரோ பாஹ்யர்களையும் குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல யுக்திகளைக் கொண்டு கண்டித்துவிடுவர்.

Wednesday, May 13, 2009

Foreword by Sriman K. Venkataswamy Naidugaru

Foreword
by
Sriman K. Venkataswamy Naidugaru, B.A., B.L., M.L.C,
Dy. President Legislative Council & President
Tirumalai Tirupathi Devasthanam Committee.

Thousand years ago came a superman who even today is adored and revered as no other human being has ever been worshipped. We call him Bhagawan Ramanuja. Various religionists have paid tributes to the founder of their respective religions but the tribute paid to Sri Ramanuja is something Unique and Unparalleled. The temples and festivals for Ramanuja, the Peetas established by him and the tribute paid to him are a class by themselves. The best and latest thoughts on religion and philosophy are based on his great directive. What influence and power he had during his time can only be realised by recalling to our memory the power and influence Mahathma Gandhi had during his life time. Swami Vivekananda, Sri Rabindranath Tagore, Sri Arvind Ghose have all paid great tribute to the life and teachings of Sri Ramanuja. Such great personality comes once in a thousand years and they live for ever.

Every Sri Vaishnava must read the life of Sri Ramanuja and follow his teachings. We do not have a popular book on Bhagawan's life. Sr M. Devarajulu Naidu has done a great service in writing a concise and illuminating book on the subject. He has brought out many leading incidents in his life and in a simple way has told about his teachings.

He is a great devotee and at the feet of great masters he read the sacred books. It was his great desire that what he has treasured from such studies should be shared by co-religionists and devotees. We are ordained to propogate the religion of Sri Ramanuja. This is one of the best ways of doing this. We are thankful to the author for doing this work and we are sure that many devotees will read this book and be profited thereby.

K. Venkataswamy Naidu.
Appah Gardens,
Kilpauk, Madras.
29th Septr. 1950.

ஸ்ரீ காஞ்சீபுரம் மஹாவித்வான் உபந்யாஸ கேஸரி P.B. அண்ணங்கராசாரியரின் புனைந்துரை

ஸ்ரீ காஞ்சீபுரம் மஹாவித்வான் உபந்யாஸ கேஸரி P.B. அண்ணங்கராசாரியரின் புனைந்துரை

பரம பாகவத மணியும் ஸ்ரீ வைஷ்ணவ ரத்னமுமான நம் தேவராஜுலு நாயுடு காருவை நான் 25 ஆண்டுகளாக அறிவேன். இவர் அரசாஙக வூழியத்திலிருக்கும் போதே அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு. அப்போதே இவருடைய பகவத்பாகவத பக்திச் சிறப்பையும் சம்பிரதாயப் பொருள்களில் ஊற்றத்தையுங்கண்டு விலக்ஷண வ்யக்தியென்று வியந்தேன். இவர் தமது உத்யோகத்திலிருந்து விச்ராந்தியடைந்து, இரவும் பகலும் ஸம்பிரதாய நூலாராய்ச்சிகளிலும் பகவத்கதா ச்ரவணங்களிலும் மிகமிக ஈடுபட்டதனால் அடிக்கடி இவருடைய பழக்கம் நமக்கு வாய்த்தது.

பிள்ளைலோகாசாரியர் முமுக்ஷுப்படியில் 'இப்படியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்ற மறிந்து உகந்திருக்கை' என்று சாதித்தருளியபடி இவர்பால் நமக்கு உண்டான உகப்பு நமது நெஞ்சும் எம்பெருமானது திருவுள்ளமுமே அறிந்ததாகும். 'இந்தளத்திலே தாமரை பூத்தாற்போலே' என்று ஆசாரியர்கள் அருமருந்தாகச் சாதிக்கும் திருமொழியை இவரைக் காணும்போதெல்லாம் நாம் நினைப்பதுண்டு.

இப்படி நம்முடைய பேருவகைக்கு இலக்கானவிவர் சமீப காலத்தில் எம்பெருமானார் திவ்விய சரித்திரமொன்று எழுதி நமது பார்வைக்கு அனுப்பினார். அப்போது நம் தேவப்பெருமாளுடைய வைகாசித் திருவிழா நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் மஹா விவேகிகளான நமது பல நண்பர்களும் வந்து கூடியிருக்கையில் அப்புத்தகம் கிடைக்கவே பலரும் அதனைப் படிக்க நேர்ந்தது. உண்மையில் அவர்களனைவரும் உள்ளம் பூரித்தனர். இக்காலத்து மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவகையில் இஃது எழுதப்பட்டுள்ளதென்று மனமாரப் புகழ்ந்து கூறினார்கள். நமக்கும் அதுவே கருத்தாயிற்று. இதனை அச்சிட்டு வெளியிடுதல் நலமென்று நாமே உகந்து உணர்த்தினோம். இதனால் ஆஸ்திக பக்தர்கள் மிக்க பயன்பெறுவார்கள் என்று திண்ணமாக எண்ணுகின்றோம்.

பண்டைச் சரித்திரங்களில் கேள்வியறிவுகள் பலர்க்குப் பலவாறாக இருக்குமாதலால் இவர் கேட்டறிந்தவாறாகச் சில வரலாறுகள் இதில் அருமையாக அமைந்துள்ளன. ஸ்வாமி இராமானுஜருடைய அவதாரத்திற்கு முன் திருக்கச்சிநம்பிகள் அவரது திருத்தந்தையார்க்கு உபாயானுஷ்டான முறை தெரிவித்தருளினதாக எழுதப்பட்டுள்ள கதை போல்வன அவ்வகுப்பிற் சேர்ந்தனவென்க.

எழுத்து மூலமாக உலகுக்கு உதவி புரியவெழுந்த இப்பரமபாகவதர் இங்ஙனமே மேன்மேலும் உதவி புரிய வேணுமென்பதும் நமது ஆவல்.

இங்ஙனம்,
ஸ்ரீ காஞ்சீ - பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியார்.

காஞ்சீபுரம்,
1 - 7 - 1950.

முன்னுரை

கண்ணுக்குப் புலப்படாத பரம்பொருளைத் தெரிந்து பக்தி புரியவும் அதனால் எம்பெருமானுடைய கிருபைக்குப் பாத்திரர்களாகவும் வேண்டிய நமக்கு, பகவத் சரித்திரங்களைக் காட்டிலும் அவனுடைய உண்மையடியார்களுடைய திவ்விய சரிதங்களே ஏற்றவைகளாம்.

பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற ஒவ்வொருவரிடத்தும் அவரவர் ஏற்றத்திற்குத் தக்கவாறு தெய்வத்தன்மையும் அவரவர் தாழ்விற்குத் தக்கவாறு மிருகத் தன்மையும் இருக்கக் காண்கிறோம். நம்மிடத்திலுள்ள தெய்வத்தன்மை வளர்ச்சி பெறவும் மிருகத்தன்மை குறைந்து மடியவும் நம்மைப்போல் மனிதராய் நம் கண் முகப்பே மஹான்களாய் விளங்கப்பெற்றவர்களுடைய சரிதங்களே (நம்மைத் திருத்துவதற்கு) ஏற்ற கருவிகளாகும். இத்தகைய மஹான்கள் எக்குலத்தவராயினும், எம்மதத்தவராயினும், எத்தேசத்தவராயினும், இந்நிலத்தேவர்களுடைய சரிதங்களே நம்முடைய உஜ்ஜீவனத்திற்கு உற்ற துணையாகும்.

உலகம் நிறைந்த புகழுடைய மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகளும் மற்றைப் பெரியோர்களும் நமக்கு மஹான்களின் சரிதங்களை அரிய பெரிய நூல்களாக உதவி புரிந்திருக்க அடியேன் இச்சிறு நூலை வெளியிடுவது அவசியமற்றதாகும். ஆனால் அடியேன் சொந்த குணானுபவத்திற்காக எழுதிய இதனை ஸ்வாமிகள் கடாக்ஷிப்பதற்காகக் கூசிய நெஞ்சினனாய் அனுப்பினேன். ஸ்வாமிகள் கிருபை கூர்ந்து ஆக்ஞாபித்ததைச் சிரமேற்கொண்டு இதைப் பதிப்பிக்கலானேன்.

இது சிறுவர்களும் சிறுமிகளும் சுலபமாய் மனதில் வாங்கிக் கொள்ளப் பயன்படுமென்றும், பின்னர் பெரிய நூல்களை வாசிக்க ஒரு தூண்டுகோலாயிருக்குமென்றும் நம்புகிறேன்.

ஆசாரியர்களில் தலைசிறந்தவரான எம்பெருமானாருடைய சரிதத்தை அடியேன் பக்திவசனாய் எழுதினேன். இதனைக் கண்ணுறும் பெரியோர்கள் இதில் மலிந்து கிடக்கும் பிழைகளைப் பொறுத்து அடியேனைக் கடாக்ஷிக்கப் பிரார்த்திக்கிறேன்.

அடியார்க்கடியன்,
M. தேவராஜராமானுஜதாஸன்.

23, ஜெனரல் முத்தியா முதலி தெருவு ஜி.டி.,
சென்னை.
14 - 9 - 50

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ ராமானுஜர்

போற்றரும் சீலத்து இராமாநுசா!* நின்புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அதுதாழ்வு அதுதீரில் * உன்சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண்டிருக்கிலும் என்மனம் ஏத்தியன்றி
ஆற்றகில்லாது இதற்கென்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே

சமர்ப்பணம்

அடியேனுடைய அருமைத்தாய் தந்தையரின் ஞாபகார்த்தமாக இக்கிரந்தமானது பதிப்பிக்கப்பட்டு, எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளில் சமர்ப்பிக்கப்பட்டது.

M. தேவராஜராமானுஜதாஸன்.

Dedicated:

Lovingly and respectfully
to
the memory of my parents.

M. Devaraja Ramanuja Dasan.

The Model Press, G.T. Madras

தலைப்புப் பக்கம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

எம்பெருமானாருடைய (ஸ்ரீராமானுஜர்) திவ்விய சரிதம்

ஸ்ரீமான் M. தேவராஜுலு நாயுடு
ஹெட் போஸ்ட் மாஸ்டர் (ரிடயர்ட்)
அவர்களால் இயற்றப்பட்டது.

LIFE OF EMBERUMANAR
(SRI RAMANUJA)
Written by
M. DEVARAJULU NAIDU
Head Post Master (Retired)
1950

முதல் வணக்கம்

'எம்பெருமானாருடைய திவ்விய சரிதம்' என்னும் இந்நூல் 1950ல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலைத் திரு. மோகனரங்கன் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தர மருத்துவர். திரு. தி. வாசுதேவன் அவர்கள் மின்னாக்கம் செய்து தந்திருக்கிறார். இம்மின்னூல் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் பட்டியலில் இருக்கிறது.

இன்னூல் ஒருங்குறியில் இருந்தால் இணையத்தேடுதல்களின் போது கிடைக்கும் என்பதால் இன்னூலை ஒருங்குறியில் பகுதி பகுதியாக எழுதி இந்த வலைப்பதிவில் இடுவதாக எண்ணம்.

எம்பெருமானார் திருவடிகளே அடைக்கலம்.