Friday, December 4, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 2

உலகிலுள்ள சமயங்கள் பல. அவ்வச் சமயத்தார் இறைவனை உணர்தற்குத் தத்தம் வழக்க வொழுக்கங்கட்கேற்ப இறைக்கோலம் பேர் உரு முதலியன வழங்குகின்றனர். அக் கோலம் முதலியன இறையை உணர்த்தும் அறிகுறிகளேயன்றி, அவைகளே இறை அல்ல. இறைக்கெனக் கோலம் முதலியன இல்லை. இறை ஞான மயமாயிருப்பது. அது பலவாறு மக்களால் கொள்ளப்படுகிறது. அக் கொள்கைகளின் தத்துவங்களைக் காண முயல்வது அறிவுக்கழகு.

தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம்.

உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயி
ராயின காவிகளே.

இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) 'உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளி வான், மண்ணாகிய எம்பெருமான்... யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பினவாம் - இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை, (3) 'எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்... ...' - இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும்.

இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப்போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தையும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங் கூறுதல் என்னால் இயலாததொன்று ஓரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் பரந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...

இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது. அஃது இயற்கையை உடலாக்கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன; பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன.

நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரண வெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும்.

சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள்.
திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளி மயமாய்த் திகழ்வன. (சித்) ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடியின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன.

திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங்கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி, திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும். பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி.

ஒளி - விந்து; ஒலி - நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந்நுட்பம் விளங்கும். அது வருமாறு:

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.

- திருவாசிரியம் - 1

இதன்கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது. பாற்கடல் - விந்து; பாம்பணை - நாதம்; உந்தி - படைப்பு.

உலகம் உருக்கொள்ளூதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்தலால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது.

திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க.

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை
அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.

ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது.

இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு. ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலிதல் காண்க.

தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளினின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்குக் கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும்.

புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார்.

வினையேன்... ... ...
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா...

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை...

வேவாரா... ... ...
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த
மூவா...

உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர்
மடமகள் என்றிவர்...

மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று மாயப்போர் பண்ணி
நீறுசெய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவரமங்கலநகர்
ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே.

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய
பாரதம் கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து
போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்
றுருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான்சுடனேரை உன
என்றுகொல் சேர்வதுவே.

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி
னைகளை யேயலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம்
என்னகு றைவெனக்கே

கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை
மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல
மாயக் கோலப் பிரான்றன் செய்வகை
நினைந்துமனம் குழைந்து
நேயத் தோடுக ழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே.

ஏற்றரும் வைகுந்தத்தை யருளும்
நமக்கு ஆயர்குலத்து
ஈற்றினம் பிள்ளையொன்றாய்ப் புக்கு
மாயங்களே யியற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்
கொடுஞ் சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதிபுக்கவரியே.

இத் திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக்கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதையுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம்.

குருக்ஷேத்திரப் போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அப் போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச்சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை?

குருக்ஷேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் - தீய எண்ணங்கள்; ஐவர் - நல்ல எண்ணங்கள்; மனச்சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம்.

மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சிலவாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப்பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல்கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க.

அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது, கண்ணபிரான் குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம்.

பச்சை மரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை; குழலோசை - இசையொலி; பசுக்கள் - சாந்தம்; பெண் மக்கள் - அமைதி நிலை.

இயற்கை உடல். இறை உயிர். பச்சை மரமும் - அதனடியில் கண்ணன் நிற்பதும் - இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசுநிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ('நவசக்தி' சிலம் - 12, பரல் - 28 பார்க்க)

இப்பலப்பட்ட திருக்கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ்வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது.

இருள்விரிந் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல்
இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே.

திருமா லுருஇவர்க்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும்
திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும்தீவினையே.

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி
விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே.

தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்
தேநீர் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போலத்
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.

கருமா ணிக்க மலைமேல்
மணித்தடந் தாமரைக் காடுகள்போல்
திருமார்வு வாய்கண் கையுந்தி
காலுடை யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்
வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ.

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார் முகில் போல்
மாசின மாலி மாலிமானென்றங்
கவர்படக் கனன்றுமுன் நின்ற
காய்சின வேந்தே கதிர்முடி யானே
கலிவயல் திருப்புளிங் குடியாய்
காய்சின வாழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் மிடர்கடி வானே.

அழகிய திருக்கோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை,

பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் - நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று.

என்றும்,

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.

என்றும்,

எங்ஙனேயோ வன்னைமீர்கா
ளென்னை முனிவதுநீர்
நங்கள்கோலத் திருக்குறுங்குடி
நம்பியைநான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவா யொன்றினோடும்
செல்கின்ற தென் நெஞ்சமே.

என்றும்,

திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி என்றும்
திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்
திருச்செய்யமுடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தை யுளானே.

என்றும், உலகுக்கு உணர்த்தியிருத்தல் காண்க.

திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார்.

கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ்விடங்களில் பெரிதும் 'மாயம்' என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக.

குரவை ஆய்ச்சியர்... ...
அரவில் பள்ளிப் பிரான் தன் மாயவினைகளை...

கேயத் ... ...
மாயக் கோலப் பிரான் ....

இகல்கொள்...
அகல்கொள் வைய மளந்த மாயன் என்
அப்பன்றன் மாயங்களே ...

மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா பெரும்போர்
பண்ணி மாயங்கள் செய்து...

இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல. அக்கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, 'இயற்கை திருக்கோலக் காட்சி' என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க.

Wednesday, November 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 6 உருவம் - 1

'எங்கும் இறை' என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளியுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை இறை துணை செய்யாமற் போகாது.

இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறைய உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங்களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே 'படம்' என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களினின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ்வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி 'முருகன் அல்லது அழகு' என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க.

தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினைவூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப்படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற்பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொருளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது.

காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப்பாடல் வாயிலாக நோக்குவோம்.

தாம்பாலாப்... ...
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய் (அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல்லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் 'காண்டற்கரியன்' என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழிபாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும்.

கண்ணுஞ்செந் தாமரை கையும்
அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்
குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பி
ரான தெழில்நிறமே.

இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். 'கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால்வரை...'- இஃதோர் இயற்கைப்படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக் கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகியதன்றோ?

வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்குவோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது. படம் பாவலர்க்குப் பாட்டாகிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையினிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண்டடியில் திகழ்கிறது.

'விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்,
எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே'

என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது.

இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும்,

நிறமுயர் கோலமும் பேரு
முருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்
பிரான் பெருமையையே.

என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக.

Monday, November 9, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 2

இதுகாலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்காலமன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடுவோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை.

இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.

'இயற்கை உடல் இறை உயிர்' என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கியுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?

திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம்மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும், இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற் கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். 'இயற்கை உடல் - இறை அதன் உயிர்' என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.

நம்மாழ்வார், 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ்வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் ... ... ...
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை... ...

ஆரா அமுதே ... ... ...
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ... ...

மானேய் நோக்கு நல்லீர் ... ... ...
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை ... ....

என்றுகொல் தோழிமீர் ... ... ...
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் ... ...

நிச்சலும் ...
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று... ...
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்...

பாதங்கள் ... ... ...
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை ...

நாடொறும் ... ...
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் ...

கழல்வளை ... ...
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்...

உணர்த்த லூடல்... ...
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை...

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம்...

காலம் பெற ... ...
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப்பேரையிற்கே.

எளிதாயின ... ...
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான்...

உண்டுகளித் ... ...
வண்டுகளிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்...

ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.

இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண்ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றாயிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.

இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.

பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும். இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறையின்பால் பெண் ஆண் கூறு இருத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பத்திற்கு வழியுண்டாகும்' என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் 'பெண்ணின் பெருமை' முதலிய நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன்.

நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையையுணர்ந்தவர்; இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ ...

மாயோனிகளாய் ... ...
... ... எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ...

நீயும் நானும் ... ...
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் ...
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ...

போகின்ற ... ... தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்...

மேலாத்... ...
மேலாத் தாய் தந்தையும் அவரே...

வந்தருளி ...
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்...
சிந்தையாலும் ... தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்...

இறையின் பெண்மை நலந்துயிக்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ணமிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.

ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறு பெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப்பாக்களே சான்று கூறும். நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டுமென்பது அவரது உள்ளக்கிடக்கை.

இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உலகிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டிவ் விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.

திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங்கமலம் கருஞ்சுட
ராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே.

மாயோன் வடதிருவேங்கட
நாடவல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டையோ அறை
யோவிதறிவரிதே.

அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ
தெருளோம் அரவணை யீர் இவள்
மாமை சிதைக்கின்றதே.

பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவது கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தாமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.

வண்ணம் சிவந்துள வானோ
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன் தன்
னொடும் காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யெனொடிக்
கால மிருக்கின்றதே.

காலும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன்னாள் கண்களாய துணைமலரே.

கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.

உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின்
முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.

இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.

இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடையது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிச் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அளவில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக்குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!

Saturday, October 10, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 1

5. இயற்கை

மண் புனல் முதலியனன் இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம்.

இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.

உடல் புலனாவது, உயிர் புலனாகாதது. புலனாகாதா உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக்கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர்கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார்,

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க.

இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது.

இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற்கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குகிறது.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனெனவறி வரியஎம்பெருமான்...

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது...

என்றார் ஆழ்வாரும்.

மனவுணர்வுடையோர், இயற்கையக் கடந்துள்ள இறைநிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர்.

இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப்போற்றுதலும் இப்போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர். இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும், சிறப்பாகச் 'சன்மார்க்கப் போதமும் திறவும்' என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன்.

எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் - எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் - 'இறை வடிவம் இயற்கை' என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப்பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை.

ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம்; அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங் கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன; மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகிறார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்!

சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம்

நம்மாழ்வார் - பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங் கண்டு, அவைகளைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரிய வருகிறது. அக்காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் எனலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக் கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு:

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப்
பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச்
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று
நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி
நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார்
என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக்
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக்
கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில்
வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. இவை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்டவனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றிய பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படுகிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. 'கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே' என்றும், 'உரைப்பெல்லாம் - நின்னன்றி மற்றிலேன் கண்டாய்' என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படுகிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரியவில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர் எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி 'சீதரன்' என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி 'மணிவண்ணா' என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் 'கோபாலா' என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் 'கோவிந்தா' என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்!

நம்மாழ்வார் - பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

என்றும்,

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன்
றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோநும் வியலிடத்தே.

என்றும்,

அஞ்சிறைய மடநாராய் ... ... ... ...

என்றும்,

விதியினால் பெடைமணக்கும்
மென்னடைய அன்னங்காள் ... ... ...

என்றும்,

பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும்...

என்றும்,

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கெத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் ... ...

என்றும், ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க.

Saturday, October 3, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 4. அட்டமூர்த்தம்

4. அட்டமூர்த்தம்

'எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேர்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை?

வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும். 'எங்கும் கடவுள்' என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது.

எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணையுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு 'எங்கும் கடவுள்' என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழிபாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும்.

எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவதில்லை. 'எங்கும் கடவுள்' என்பதற்குப் பதிலாகக் 'கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது' என்னில், இது நெஞ்சில் படியுந்தகையதாகிறது. இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பின்னையது உள்ளத்திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது.

இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை 'அட்ட மூர்த்தி' என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு:

நாழாலமர் ... ...
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே... ...
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி...
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை...

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்...
என்றுகொல் சேர்வது... ...
... ... நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ...

பிறந்த மாயா ... ...
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே...

ஏகமூர்த்தி இருமூர்த்தி ... ...
... ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்...

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ
பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ
தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ
நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ
கண்ணனைக் கூவு மாறே.

'மண், புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள்' என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாக கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார்.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்...

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலியவற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மையும் ஈண்டு உன்னற்பாலது.

இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல்லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவைகளைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும்.

பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக் கலந்து நிற்றலை உணர்த்துவது. பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலியவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம்பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க.

நிழல்வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய்
அவையல் லனுமாய்...

விண்மீ திருப்பாய் மலைமேல்
நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள்
எங்கும் மறைந்துறைவாய்...

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்...

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக.

பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்துவிதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்குவரை, ஐயம் திரிபு மயக்கம் மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு.

நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்துவிதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவியனுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப்பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு ம்றையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு.

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.


***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Friday, September 25, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 3. எங்கும்

3. எங்கும்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணை நின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது. எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ?

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க.

நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார்; அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார்.

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி...

அமைவுடை அறநெறி ... ... ... ...
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.

என்னுள் கலந்தவன் ... ... ... ...
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே.

எப்பொருளுந் தானாய்...
வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

பூவைகள் போல்.................
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் ..........

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப்
பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை
நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும்
நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருளுநின் தாள்களை எனக்கே

என வரூஉம் ஆழ்வார் மொழிகளை உற்று நோக்குக.

சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார், இவ்வாறு இறையின் சர்வ வியாபகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம்.

'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும்.

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

'பரம்பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும்' என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம்.

வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும் அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியேயாகும்.

அமைதி வாழ்வுக்கு சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றால் சகோதர நேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே.

தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றையல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதர நேயம் பெருகிப் பரவாமையேயாகும்.

அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப்படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலைபெறுத்தவல்லது.

சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை - நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலாம் விளையினும் விளையும்.

பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்குமுள்ள இறையன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக் கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்டவரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும்.

பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஓருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக்கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினையான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்.

'சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும்' என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.

ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர்.

யானே என்னை ... ... ...
யானே நீஎன் னுடைமையும் நீயே...

என்னை முற்றும் உயிருண்டு என்மாய
ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான் ... ...

இன்றென்னைப் பொருளாக்கித்
தன்னைஎன் னுள்வைத்தான்... ...

மாயம் செய்யேல் ... ...
நேசம்செய்து உன்னோடு என்னை
உயிர்வே றின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் ... ...

ஊனில் வாழ் உயிரே... ...
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்... ...

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்... ... ...
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்...

உணர்வி லும்பர் ... ... ... யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே...
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு...
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை...

தாள்களை எனக்கே...
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ... ...

ஆறெனக்கு... ... ... எனதாவியும் உனதே...
ஏகமூர்த்தி... ... ... உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்... ... ...
காயமும் சீவனுந் தானே...

'எல்லாங் கடவுள்' என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார்.

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்
றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே
கண்கள்நீர் மல்கி

என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிர்க்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். 'உண்ணும்' 'பருகும்' என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள்.

எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங்கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருகு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் 'அகமே புறம்' என்னும் உண்மை விளங்கும்.

புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமிலை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை. அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார்.

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்
யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை
நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்
அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய்
நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
... ... ...

இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக.

அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? 'பரம்பொருள் எங்கும் உள்ளது' என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Wednesday, September 23, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 2. கடவுள் - வித்து

2. கடவுள் - வித்து

கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை.

உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று.

உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது.

அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது.

தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதை சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித் (அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணரற்பாலது.

மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தாயிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும்.

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ்வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக.

தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய்யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு:

ஊழிதோ றூழி... ... ...
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி......

- திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் - தானே......

வைப்பாம் ... ...
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்...

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்...

ஒக்கலை வைத்து ... ...
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்...

ஓவாத் துயர்ப்பிறவி ... ...
மூவாத் தனிமுதலாய் ...

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் ...

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Sunday, September 20, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1. தோற்றுவாய்

1. தோற்றுவாய்

தமிழ் நாடு எது? 'வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் 'தமிழ் கூறு நல்லுலகத்து' என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திரமன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப்படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக்கின்றன. அவைகளைகக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும்.

தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர். இவர்களால் கட்டப்பெற்ற தமிழ்நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். 'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள்.

ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன.

நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை. ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒரு தலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சிகளை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப்படுகிறது.

ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின எனலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்' என்று போற்றுவர். அச்சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறுஸ்துவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச்சமயத்தவரும், அவரை, 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை 'நம் பாவலர்' என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை 'நம் தத்துவ மூர்த்தி' என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை 'நம்மவர்' என்று வழிபடுவர். உலகத்துள்ள அனைவரும் 'நம்மவர்' என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் 'நம்மாழ்வார்' என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்.

எல்லாரும் 'நம் ஆழ்வார்' என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, 'என் ஆழ்வார்' என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு 'நம் ஆழ்வார்' என்று வணங்குகிறேன்.

நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ் நாடு அழிவுறாமலிருக்கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்துபடல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங் கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மனங்கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார்.

நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினர். இனி அம் முறைகள் மீது கருத்துச் செலுத்துவோம்.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

Saturday, September 19, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - முன்னுரை

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்


ஆக்கியோர்:
திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார்


பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108

***

முதற்பதிப்பு: 1923
நான்காம் பதிப்பு: 1949
ஐந்தாம் பதிப்பு: 1969
ஆறாம் பதிப்பு: 1993




விலை: ரூ. 12 - 00



அச்சிட்டோர்:
ச்ரி வெங்கடேஸ்வரா அச்சகம்
7/40, கிழக்குச் செட்டித் தெரு,
பரங்கிமலை, சென்னை - 16.


***

முன்னுரை

தமிழ்நாடென்பது ஒரு தனி நாடு. அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம் - மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று.

அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ்நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ் மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே.

அடியேன் அரசியல் தொண்டில் இறங்குவதற்கு முன்னர்த் தமிழ் வேதங்களில் ஏதாவதொன்றை நாடோறும் ஓதுவது வழக்கம்; ஓதும் வேளையில் ஆராய்ச்சிக்குரிய பாக்களின் பாங்கர் குறிப்புக்கள் இடுவதுண்டு. அக் குறிப்புக்களைத் திரட்டிப் பின்னர் ஆராய்ச்சி முறையாகச் சில நூல்கள் இயற்ற வேண்டுமென்பது எனது நோக்கம். அரசியல் தொண்டில் யான் இறங்காதிருப்பின், எனது நோக்கம் ஒருவாறு நிறைவேறியிருக்கும்.

1921-ம் வருடச் 'சுதேசமித்திரன்' அநுபந்தத்தில் 'நாயன்மார்' என்னும் சிறு கட்டுரை ஒன்று எழுதினேன்; அதன்கண் அடுத்த ஆண்டு - அதாவது 1922-ம் ஆண்டு - ஆழ்வாரைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். போதிய ஓய்வின்மையால் நம்மாழ்வார் ஒருவரைப் பற்றி மாத்திரம் எழுதலாமென்று பின்னர் எண்ணினேன். ஒருவரைப் பற்றிச் செவ்வனே எழுதவும் போதிய ஓய்வு நேராமையானும், ஒரு வருட அநுபந்தம் விரிவுக்கு இடந்தாராதாகலானும் நம்மாழ்வாரைப் பற்றி யான் எடுத்து வைத்த குறிப்புக்கள் சிறு கட்டுரையில் அடங்காவெனத் தோன்றினமையானும், கால நிலையை உற்று நோக்கித் 'தமிழ் நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரையை வரையலானேன்.

இதற்கு முன் 'தேசபக்தன்', 'சுதேசமித்திரன்' என்னும் பத்திரிகைகளின் வருட அநுபந்தங்களில், யான் எழுதிய 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'என் கடன் பணி செய்துகிடப்பதே', 'நாயன்மார்' என்னும் கட்டுரைகள், நூல் வடிவாக வெளிப்போந்து தமிழ் நாட்டில் உலவுவதைக் கண்ட 'சாதுரத்ந சத்குரு' புத்தக சாலையார், அவைகளைப் போல இக்கட்டுரையும் நூல் வடிவாய் உலவ வேண்டுதென்று விரும்பிக் கேட்டனர். அவர் விரும்பியவாறே 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரைய நூல் வடிவாக்கினேன்; முதற் பதிப்பு 'மித்திரன்' அநுபந்தத்தில் உள்ளவாறே வெளியிடப்பட்டது.

இரண்டாம் பதிப்பு 1934-ம் ஆண்டில் வெளி வந்தது. அப் பதிப்பில் சில புதுப் பொருள் சேர்க்கப்பட்டன; பொருள்கள் முறைப்படுத்தப்பட்டன; தமிழ் நாடு எது என்பதும், நம்மாழ்வார் அந் நாட்டை எவ்வாறு வளர்த்தார் என்பதும் சுருங்கச் சொல்லப்பட்டன; இறை வித்து என்பது இறைநிலை, அட்ட மூர்த்த விளக்கம், இயற்கை இறை, இயற்கை உருவம், அவதார நுட்பம், மும்மூர்த்திகளின் நிலை, வழிபாடு, சமரசம், பாட்டியல் முதலியன விளக்கப்பட்டன. இவை யாவும் ஆழ்வார் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டன.

இந் நான்காம் பதிப்பில் புதுப்பொருள் சில சேர்க்க எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் கண் படலத்தால் தகையப்பெற்றது. என் செய்வேன்! எல்லாம் ஆண்டவன் அருள்.

தமிழ் நலம் கருதுவோர்க்கு இந்நூல் தீஞ்சுவை பயக்குமென்பதில் ஐயமில்லை. தமிழர் இந் நூலை ஆதரிப்பாராக.

சென்னை
30 - 11- 1949 திருவாரூர் வி. கலியாணசுந்தரன்

***

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய்இமை யோர்தலைவா
மெய்ந்நின்று கேட்டரு ளாய்அடியேன் செய்யும் விண்ணப்பமே.

- நம்மாழ்வார்.

Sunday, September 13, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 14

16. அவள் இவள் உவள் என அறிதல் - இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் - உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே - துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ - று.

புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் 'வித்வத் ஸம்ரக்ஷணம்' என ஓர் பகுதியுண்டு - அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் - வாடுதல். துவளறு காட்சி - யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

'பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது' என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

'நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்'

என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை 'நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு' (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் 'உவளென அறிதல் கடன்' என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.

பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை 'அவளத்தனா மகனாந் தில்லையான்' எனத் திருக்கோவையினும் 'அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்' எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் 'பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்' எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,

'கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே' (10,5,1)

என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை 'ஆரியத் தமிழ்' என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை 'வேதத் தமிழ்' என்பதுபோல இதனையுங் கொள்க.

'ஈயா டுவதோ கருடற் கெதிரே
யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன்
நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன்
பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின்
ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே'

என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Friday, September 11, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 13

15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் - எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து - வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த - பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது 'தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி' என்னும் வாக்யத்தாலறிந்தது; 'பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க' என்பது இதன் பொருள்.

இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ச்ரிமத் பாகவதம் 3 - ஆம் ஸ்கந்தம் (12 - 22) 'மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்' என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ச்ரி பாகவதத்தில் (11 - 14 - 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். 'முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்' (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.

பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். 'திதியின் சிறுவர்' என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.

உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். 'மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்' எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. 'சிந்தாதேவி' (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது 'விதியின் மக்களும்' (பரிபாடல், ௩) என்புழி 'ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்' எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.

இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.

அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை 'த்ர்யக்ஷரீ' 'த்ரிவ்ருத்' என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய 'நமோ நாராயணாய' என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். 'இசைத்தலுமுரிய வேறிடத்தான' (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.

இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பதுபர்றி இவ்வாறு கூறப்பட்டது.

Saturday, August 29, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 12

13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ - று.

பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே 'அவன் மகள்' என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.

இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். 'ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்' என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. 'ஞானமுதல்வி' என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. 'கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ' என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். 'முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று' (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது 'காமாநுபோகத்தை' என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது 'ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்' என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.

'நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்' (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் 'யௌவன சூசகமான முலையானவை' என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 - 6 - 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.

இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி -

14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ - று.

ஈனாள்...படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ - று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; 'ஏதத் நிச்வஸிதம்' என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம் உள்ளவளாகியும் -

Friday, August 28, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 11

13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ - று.

நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) 'தேவிபோகி...சுடுகாடவள் சேர்ந்தவாறும்' என்புழி 'தேவியவள்' என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.

பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 - 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.

'கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்' (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. 'ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள' என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். 'கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்' (திருவாய்மொழி. 4 - 10 - 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் 'ஒருவன் தலைகெட்டு நின்றான்' என்று உரைத்ததனாலும் 'தலையிலி'யாதலுணர்க; 'வாணன் கையிழந்து நின்றான்' என்பதுபோல இதனையும் கொள்க.

இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் - 'அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:' எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.

'தேவுமெப் பொருளும் படைக்கப்
பூவினான்முகனைப் படைத்த தேவன்' (திருவாய், 2,2,4)

என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.

Thursday, August 27, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 10

12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ - று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். 'தேறுமா செய்யா அசுரர்களை' (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; 'ஆமாறொன்றறியேன்' (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ - று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; 'செய்த வேள்வியர்' (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.

நாடு விளைப்பவன் - உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் 'நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த' என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 - 3 - 7) 'ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்' என வருதலானும் உணர்க.

'உய்யவுலகு படைத்து' எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)

'படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந்
துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா'

எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் 'என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்' எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.

'நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே - மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்' (முதற்றிருவந்தாதி, 95)

என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் 'மாக்கதிக்கட் செல்லவகையுண்டே' என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.

'ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்'
(நான்முகன் றிருவந்தாதி, 93)

என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.

Monday, August 17, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 9

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது 'அறுமீனினைவனள்' என வரும் அகநானூற்றின் குறிப்பில் 'அறுமீன் - உரோகிணி' எனக் கூறியதனானறிக. கால் - உருளை. 'சகடக்கால்' (நாலடி) எனவும் 'கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்' (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்.

இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 - 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்.

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் 'குணமாலையை வைதுமாறி' என்பதனை 'மாறி வைது' என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் 'சாந்த்ரமஸம்' என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், 'நிறைமதி யுண்டி யமரர்க்கு' எனவும், 'அமரருண்டி மதி' எனவும், 'மதியுண் அரமகள்' எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 - 12. ஒன்று வித்து அறு கோட்டு - பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.

இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் - குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை 'நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்' எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். 'தானோருருவே தனிவித்தாய்' (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.

'பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் - மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்' (பெரிதிருவந். 80)

என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் - துன்பம் எனினுமமையும்.

'நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார்
கற்கின்ற தெல்லாங் கடை' (இரண்டாந்திரு. 54)

ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். 'அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்' (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.

இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு 'வித்தறு தோட்டு' எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். 'நாற்கூற்றே மருந்து' (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

Friday, August 7, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 8

8. ஒன்றுண்டு ஒண்சுவை தருவது - ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.

ஒண்மை - 'ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ' என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை - பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். 'தம்மையே யொக்க வருள்செய்வர்' எனவும் 'நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி' எனவும் 'போகமாத்ர ஸாம்யலிங்காச்ச' எனவும் 'பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய' எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.

8. மற்றது - இதனின் வேறாகியது.

9 - 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு - இதன்கண், அறுகாற்குறவன் - அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் - ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் - மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; 'இந்திரியாணி ஷட்' (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் 'மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி' என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பெத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர்பெற்றான். இவ்வுண்மையை,

பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே (கீதை - ௧௫ - ௮)

என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் 'தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச' 'சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்' என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய 'கால்' என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை 'ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்' என்பதற்கு ச்ரி பாஷ்யகாரர் உரைத்தருளியவாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.

கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ - று.

இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையறவுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை

'பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து
நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா' (மூன்றாந்திருவந்தாதி - ௭௬)

என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் - இராது நிற்றலாதலானும், கல் - பொருப்பாதலானும் 'பொருப்பிடையே நின்றும்' என்பதனையே 'கல்லின் எழுந்து' என்பதனாற் கூறினார். 'கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்' (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. 'வடபெருங்கல்' எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே 'கடலினழுந்தி' என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். 'நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்' (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் - மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. 'நீரற' என்பது பசையறவுணக்குதலைக் குறிப்பதாதல் 'முழூஉவள்ளுர முணக்குமள்ள' (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம்வாட்டுதலை

'படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்'

என வருந் திருவாய்மொழியானுணர்க. (4, 1, 9)

விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு - (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச்சோலை என்பது தலைமையான வண்மைபற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,

'இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை'

என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். 'குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை' என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், 'குப்பை தருகட்பு' என்றார். கட்பு - களவு, வஞ்சம் எ - று. 'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்' என்ப. (பாரதம்)

'வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்' (திருவாய்மொழி 8 - 10 - 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.

Saturday, June 27, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 7

7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி - ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் - இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி - நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் 'பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்' என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, 'பக்தியோகஸ்ததர்த்தீசேத்' என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ச்ரி கீதாபாஷ்யத்திலும் ச்ரி பாஷ்யகாரர் 'தேஷாம் ஜ்ஞாநீ' என்கின்ற ச்லோக விளக்கத்தில் 'ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி' என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.

மஹாபாரத்தத்திலும் 'சதுர்விதா மமஜநா பக்தா:' என்று, ச்ரிகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. 'நோற்ற நோன்பிலேன்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் 'ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது' என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,
'மற்றுமோர் தெய்வம் வழிபடா வேகாந்தம்
சொற்றவதி காரிகட்குச் சூழ்பொதுவாம்' (மொழிபெயர்ப்பு)
என்று திருவுளம் பற்றினார்.

முப்பழம் - ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை 'ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்' என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா'
என்பது கீதைப்பாடல். முறைமுறை - அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
'மறைமுறையால் வானாடர் கூடி - முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே' (பெரியதிருவந்தாதி - 61)
என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க 1. சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும்.

தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது 'தருதலின்' என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. 'வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே' (திருவாய்மொழி ௩ - ௧0 - ௧௧) என வரும் ஆழ்வார் திவ்யஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.

--

1. 'வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ' என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் 'தாமரைப்பூ படைப்பிற்கு முதலாகவந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்' எனவுரைத்தது காண்க.

Thursday, June 25, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 6

6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பரப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. 'ப்ருஹத் ரூப:' என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. 'இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை' என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் 'இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை' என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.

மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். 'அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). 'வாஸுதேவதரு' என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ச்ரி பராசரபட்டர் 'உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்' என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் 'பூர்புவஸ்வஸ்தரு:' என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் 'வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:' என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்யலோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் 'நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்' (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். 'ப்ரஹ்மதரு' என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் 'முக்தி பல ப்ரபாத:' என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.

இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் 'மரம்' என்றாரென்க. 'என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்' என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.

அன்றியும் ஈண்டு ச்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை 'மரம்' என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் 'பைங்கண் மாஅல்' என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் 'பசிய உடம்பினையுடைய அநிருத்தனே' 1 என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி 'அத்தியின் மத்தியிலே ... நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்' (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரதமஹருஷி ச்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் 'வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெருமரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.

'மனிசரு மற்று முற்றுமாய்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் 'தடங்கடற் சேர்ந்த பிரானை' என்புழி நம்பிள்ளை ஆசிரியர் - 'திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார 2 கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே' என்று அருளிச்செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் 'ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன' என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ச்ரிதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. 'பெருமரம்' என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்மசப்தத்திற்கு ச்ரி பராசர பகவான் 'பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது' என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.

--

1. ஈண்டே 'பொன்கட்பச்சை' என்புழிச் 'சிவந்த உடம்பினையுடைய காமனே' எனவுரைத்துப் 'பச்சையென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு' என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.

2. கந்தம் - கிழங்கு. அவதார கந்தம் - அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.

Saturday, June 13, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 5

5 - 6 தானே தன்னிலையறியா - ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவமகிமை அறியலாகாத எ-று.

தன்நிலை - தன் தெய்வநிலை: 'தன் தெய்வநிலை' என்பது திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப்படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பெத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். 'தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை' எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே 'ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ச்வேத த்வீபவாசிகள் ஆச்ரயிக்கைக்கு .... திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை' என வ்யாக்யானமிட்டது காண்க.

இனி யஜுர்வேத காடகத்தில் 'த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ச்ரிகீதையில் (10 - 15) 'நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை' எனவும், பரிபாடலில் (3) 'நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ' - நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) - எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.