Monday, August 17, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 9

இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது 'அறுமீனினைவனள்' என வரும் அகநானூற்றின் குறிப்பில் 'அறுமீன் - உரோகிணி' எனக் கூறியதனானறிக. கால் - உருளை. 'சகடக்கால்' (நாலடி) எனவும் 'கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்' (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்.

இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 - 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்.

இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் 'குணமாலையை வைதுமாறி' என்பதனை 'மாறி வைது' என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் 'சாந்த்ரமஸம்' என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், 'நிறைமதி யுண்டி யமரர்க்கு' எனவும், 'அமரருண்டி மதி' எனவும், 'மதியுண் அரமகள்' எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.

11 - 12. ஒன்று வித்து அறு கோட்டு - பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.

இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் - குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை 'நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்' எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். 'தானோருருவே தனிவித்தாய்' (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.

'பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் - மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்' (பெரிதிருவந். 80)

என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் - துன்பம் எனினுமமையும்.

'நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார்
கற்கின்ற தெல்லாங் கடை' (இரண்டாந்திரு. 54)

ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். 'அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்' (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.

இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு 'வித்தறு தோட்டு' எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். 'நாற்கூற்றே மருந்து' (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.

No comments: