Saturday, May 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 3

'செங்கோல்' தொடர் 10

"நாடவிட்ட படலத்தில் திருவேங்கடத்தைப் பற்றியுள்ள 4 செய்யுள்களில் ஒன்றில் கூடத் திருமாலின் வடிவத்தைக் காட்டவில்லை; "... ... வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும் நான்மறைகளுக்கு அது உறைவிடம் ஆகலாம் தானே! வேங்கடத்தை அடைவோர் முத்திபெறுவதற்கு வைணவத்தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே! வேங்கடமலையை 4 செய்யுள்களால வருணிக்கப் புகுந்தவர் அந்த மலையில் நின்ற வண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்; இதெல்லாம் எதைக் காட்டுகின்றன? கம்பநாட்டார் மறந்தும் புறந்தொழாக் கொள்கையை வலியுறுத்தும் வைதிக வைணவர் அல்லர் என்பதைத் தானே!" இது செங்கோல்.

'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' என்ற வரியால் வேலவன் குன்றம் எனச் சுட்டிப் பின் 'அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்' என்பதனால் அது திருமால் திருமலைதான் என்பதைக் குறிப்பது காண்க.

'முத்தி பெறுவதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே' என்கிறது செங்கோல். பரிபாடலில் 'நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை - ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்' என்று முத்தியளித்தற்குப் பிறதெய்வங்கட்கு உரிமையில்லை என்பதால் முத்தி பெறுதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டும் என்பதை உணர்க. "பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்' என்று கம்பனும் திருவவதாரப்படலத்தில் இதை ஏற்றுக்கொண்டிருப்பது காண்க.

"நாடவிட்ட படலத்திலே வேங்கடமலையை வருணிக்குமிடத்திலே அந்த மாமலையில் நின்றவண்ணம் காட்சி அளிக்கும் நெடுமாலின் உருவம் காட்டப்படாததற்கு வைதிகப் புலவர்கள் என்ன சமாதானம் சொல்லமுடியும்?" இது செங்கோல். ஆறு செல்படலத்தில் (36) 'வலங்கொள்நேமி மழைநிற வானவன் - அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை - விலங்கும் வீடுறுகின்றன மெய்ந்நெறி புலங்கொள்வார்கட்கனையது பொய்க்குமோ?" என்று திருமாலையும் அங்குள்ள விலங்கும் வீடுறுதலையும் பாடிய கம்பநாடர் திருவுள்ளம் நன்கு விளங்குகின்றதே! இதற்குச் செங்கோல் என்ன செப்பும்?

"'கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரேல் உம் நெடிய கொடுமைநீங்கி வீடுறுதிர் ஆதலினால் விலங்குறுதிர்' என்னும் வரிகளிலே வேங்கட மலையை நெருங்காதீர் என்று கதையின் தேவைக்காகக் கூட பரமவைணவர் ஒருவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா?" என்கிறது செங்கோல். 'இராமகாதைக்கு இது பொருந்துமென்றாலும்' என்பதன் கருத்துயாதோ? 'விலங்கும் வீடுறுகின்றன' என்று ஆறு செல்படலத்துள் கூறுவதை நோக்க, விலங்குகளாகிய நீங்கள் சென்றால் எடுத்த காரியத்துக்கு இடையூறாகும் என்று உண்மையாகவே நம்பித்தான் சொல்கின்றனர். திருவிருத்தத்தில் (6) 'உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே' எனவும் திருவாய்மொழி 10 - 7 - 1 'செஞ்சொற்கவிகாள்! உயிர்காத் தாட்செய்ம்மின்' எனவும் வருவனவற்றை நோக்குக.

தொடர் 10ல் 'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' எனக் காட்டிய செங்கோல் 'இனி, வேங்கடமலையில் ஆறுமுகன் கோயில் கொண்டிருந்தார் எனச் சைவப் புலவர்களிலே சிலர் கூறுகின்றார்களே! அதையும் பார்ப்போம்' என்கிறது. இக்கருத்து இதற்கு உடன்பாடில்லை போலும், ஆயின் அதனை ஏன் இங்குக் கூறுதல் வேண்டும்? நாமும் அதைப் பார்ப்போம்.

"தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் அவர்; அவர்களிலே எவரும் வடவேங்கடத்திற் கோயில்கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை; ஆனால் பிற்காலத்தில் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை எழுதிய திரு. மாதவச்சிவஞானயோகிகள், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்னும் சொல்லுக்குக் கீழ்வருமாறு விருத்தியுரை கூறுகிறார் - 'தமிழ்நாட்டிற்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபு பற்றி' என்பது" எனக் காட்டுகிறது செங்கோல்.

'தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் ஆவர். அவர்களிலே எவரும் வடவேங்கடத்திலே கோயில் கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை' என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கொப்பாகும். என்னை? எனின்: 'தூயஞானம் நிறைந்த சிவச்சுடர் தானேயாகிய தன்மையாளன்' என்று பாராட்டப்பெற்ற பேராசிரியர் நச்சினார்க்கினியர் - திரு. மாதவச்சிவஞானயோகிகட்கு முந்தியவர் என்பதில் யார்க்கும் ஐயம் இல்லை. அப்பெரியவர், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்ற சொற்கு 'நிலங்கடந்த நெடுமுடியண்ணலை உலகம் தவம்செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரினும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்' என்று உரையிட்டுள்ளதை இல்லை என்று செங்கோல் செப்புமா?

'சமன்கொள் வீடுதரும் தடம்குன்றம்' என்று (திருவாய்மொழி 3 - 3 - 7) நம்மாழ்வார் அருள்வர். வேங்கடத்தை வீடுதரும் மலை என்று நம்மாழ்வாரும் கம்பரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் வற்புறுத்தலைக் காணும்போது பண்டைநாளிலிருந்தே இக்கருத்து பரவி வருகின்றதை உணரலாம். இங்கு ஹரிசமயதிவாகரம் தொகுதி 3 பகுதி 3ல் ஆராய்ச்சிவல்லுநர் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் கூறுவது நோக்கத்தகும்: -

'அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் 'ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: - யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா' என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே 'இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் - குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்' 'குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் - அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - சென்று சேர் திருவேங்கடமாமலை' என்றருளிச்செய்தார். 'வேதவெற்பு' என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டு போலும் என்க.

"ஒருகால் மேற்படி பண்டிதர் 'சென்னை ராஜதானிக் கலாசாலைப் புரொபஸராய் இருந்த சேஷகிரி சாஸ்திரியார் எழுதியவாறு இராமாநுஜர்க்கும் பின்பிருந்தவர்களே ஆழ்வார்கள் என்று கருதியிருத்தலும் கூடும். அவ்வாறாயின் பொதுநோக்கினரும் சங்கத்துச் சான்றோரும் ஆகிய ஐயனாரிதனார்:-

'வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
கிருளீயும் ஞாலத் திடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்'


எனல் காண்க. இதுவும் இடைச்செருகல் ஆயின் சிலப்பதிகாரத்துள் வரும் 'பகையணங்காழியும்' என்பதும் இடைச்செருகலாயிருக்கலாம்". இவை நினைவிற்கொள்ளத்தகும்.

மேலும், திரு. மாதவச்சிவஞான யோகிகள் கூற்றை மறுத்துப் பேராசான் அரசஞ்சண்முகனார் தம் சண்முகவிருத்தியில் கூறுவதும் இங்கு நோக்கத்தகும்:-

"இனி, அவர் 'தமிழ்நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபுபற்றி' என்றார். அது கருத்தாயின் அவர்தாமே 'இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்' எனக் காஞ்சிப் புராணத்துட் கூறலான், அறுமுகக் கடவுளுக்குத் தந்தையாகலானும் அகத்தியனார்க்குக் குரவனாகலானும் அக்கண்ணுதல் வரைப்பினுள் ஒன்றைக்கூறல் வேண்டும்; அற்றன்று; இருவரும் அபேதமாதல் கருதி அங்ஙனம் கூறினார் எனின்: தெற்கின் கண்ணும் அறுமுகக் கடவுள் வரைப்பினுள் ஒன்றே கூறல்வேண்டும் அங்ஙனமின்மையானும், எல்லை கூறுதல் யாவர்க்கும் ஒப்பமுடிந்ததாதல் வேண்டுமாகலின், 'வீங்கு நீரருவி ... ... நின்றவண்ணமும்' (சிலப் - காடுகாண் 41 - 57) என இளங்கோ அடிகள் கூறினமையும், திருமுருகாற்றுப்படையுள் முருகோன்மலை எனப் பரங்குன்ற முதலாய பிறகூறலன்றி வேங்கடத்தை அவன்மலை என நக்கீரனார் கூறாமையும் புராணங்களுட்பல நெடியோன் குன்றம் எனவே கூறலுமாராயின் வேங்கடம் அறுமுகக் கடவுள்மலையும் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடியாமையாலும், முருகன் குறிஞ்சிநிலத் தெய்வமாகலின் அமையுமெனின், கயிலாயத்தையும் மேருவையும் கண்ணுதல் மலையெனவும், பொதியினை அகத்தியன்மலை எனவும் கூறலன்றி அவன்மலை எனக் கூறலினையான் அவ்வாறே வேங்கடமும் நெடியோன்மலையாகலன்றி அறுமுகக்கடவுள் வரைப்பெனல் கூடாமையானும் அது பொருந்தாது என்பது". இந்த எடுத்துக்காட்டு செங்கோலுக்குப் போதுமென நினைக்கிறேன்.