Friday, October 1, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்திற்குப்பின் சமயநிலை - 1

23. சங்ககாலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சிலப்பதிகார காலத்தில் சிவனை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று பெருமைபேசும் சைவர்கள் தோன்றிவிட்டனர். சங்ககாலத்தில் தலையெடுத்திராத சமண பௌத்த மதங்களும் தலையெடுக்கத் துவங்கிவிட்டன. சிலப்பதிகார காலத்தையொட்டி அவதரித்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகளிலும், திருமழிசையாழ்வாரின் இருநூல்களிலும் சைவம், சமணம், பௌத்தம் என்னும் இம்மதங்கள் வேதத்துக்குப் புறம்பானவை என்று கண்டிக்கப்படுகின்றன. திருமாலுக்குத் தாழ்வையும், சிவனுக்குப் பெருமையையும் கூறி, சைவர்கள் சிவபரத்துவவாதம் செய்ததால், ஆழ்வார்கள் சிவனுடைய தாழ்வைக் காட்டி, வேதத்தில் நிலைநிறுத்தப்பட்ட திருமாலின் பரத்துவத்தை நிலைநாட்டவேண்டியதாயிற்று. சங்கத் தமிழர் சமயமும், பரமவைதிக சமயமுமான வைணவத்திற்குப் போட்டியாக சைவம் எழுந்ததாலேயே சைவத்தை ஆழ்வார்கள் கண்டித்தனர். வேதசாத்திரங்களில் காணப்படும் சிவனுடைய தாழ்வுகளை எடுத்துக் கூறினர். இதனால் கடுங்கோபம் கொண்ட பிற்கால நாயன்மார்கள் திருமாலைத் தாழ்த்தும் முற்கூறிய கட்டுக்கதைகளையெல்லாம் தங்கள் நூல்களில் பெய்து, அதனால் சிவனுக்குப் பரத்துவம் தேறிவிடுமென்று மனப்பால் குடித்தனர். ஆயினும் இந்த நாயன்மார்களுக்கும் முற்பட்ட ஆதிசங்கரரும், பிற்பட்ட வைதிக மதாசார்யர்களும் திருமாலையே வேதங்கண்ட முழு முதல்வனாகத் தங்கள் பாஷ்யங்களிலும், க்ரந்தங்களிலும் பொறித்து வைத்தனர். மத்வருடைய காலமான 12ஆம் நூற்றாண்டுவரை இந்நிலையே நீடித்து வந்தது. அதற்குப் பிறகே சைவர்களின் சித்தாந்த சாத்திரங்களும், ச்ரிகண்ட பாஷ்யமும் எழுதப்பட்டு, சிவனுக்குப் பரத்துவம் கூறுகின்றவர்கள் பெருகத் தொடங்கினர். இக்காலத்திலும் சக்திக்குப் பரத்துவம் கூறும் சாக்தம், முருகனுக்குப் பரத்துவம் கூறும் கௌமாரம், சங்ககாலத்தில் எங்குமே காணப்படாத கணபதிக்குப் பரத்துவம் கூறும் காணாபத்யம், 'பீ4ஷோதே3தி ஸூர்ய:' [பரம்பொருளிடம் பயத்தாலே சூரியன் உதிக்கிறான்] என்று உபநிஷத்துக்களில் கூறப்பட்ட சூரியனுக்குப் பர்த்துவம்கூறும் ஸௌரம் என்னும் மதங்கள் எழும்பவேயில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் நூல் எதுவும் 13ஆம் நூற்றாண்டுவரை காணப்படவில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் சில துதிநூல்களை 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே ஆதிசங்கரர் பெயரில் எழுந்த மடங்களில் உள்ள சங்கராசாரியர்கள் எழுதி, அதை ஆதிசங்கரர் எழுதியதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தினர். இத்துதிநூல்களிலிருந்து ஒரு துணுக்கைக்கூட 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட எவரும் எடுக்கவில்லையென்பது இவ்வுண்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

24. இப்படி 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட 'ஆதிசங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தார்' என்னும் கற்பனையைப் பற்றிக் கொண்டு ம.பொ.சி. தமது கட்டுரைகளில் எழுதுவது - அவர் சங்கரபாஷ்யங்களையும், மற்றுமுள்ள வடமொழி நூல்களையும் அறிவதற்குறுப்பான வடமொழி அறிவு இல்லாதவர் என்பதையும், அதனால் இவ்விஷயத்தை ஆராய்ச்சி செய்யத் தகுதியற்றவர் என்பதையும், சமீபகாலத்தில் சில பொய்யர்கள்கூறும் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைபோல் கூறுகின்றவர் என்பதையும் காட்டித்தருகின்றது. 'ஆதிசங்கரர் ஷண்மதஸ்தாபகர்' என்பது முழுப்பொய் என்னும் விஷயத்தை எதிரிகளும் மறுக்கவொண்ணாதபடி நாம் நிலைநாட்டியிருக்கும் 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலை நாம் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். முடியுமானால் வடமொழி வல்லுநர்களைத் துணைகொண்டு நாம் அந்நூலில் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ம.பொ.சி. முற்படுவாராக.

Saturday, July 10, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 5

17. மேலும் சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]

என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும் 'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கும்போது, சங்ககாலத்தமிழர்களை சைவர்கள் என்று ம.பொ.சி. எழுதியது அடியோடு பொருந்தாது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும்.

18. இதற்குமேல் ம. பொ. சி. கேட்கக்கூடும். சங்ககாலத்தில் முருகபக்தர்களும், சிவபக்தர்களும் இருந்திருக்கிறார்களே; முருகனுக்கே திருமாலைக்காட்டிலும் பரிபாடலில் அதிகமான பாடல்கள் உள்ளனவே; ஆகையால் சங்ககாலத்தில் சைவர்கள் மிகுதியானவர்கள் என்று கூறித்தானே ஆகவேண்டும் என்பது அக்கேள்வி. இதற்கு பதில் பின்வருமாறு: -

19. முருகன் முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது. மோட்சம் ஒன்றையே விரும்பியவர்களாகையாலே திருமாலைத் தவிர வேறு எவரையும் தொழாத முக்கோற்பகவர்களும், அவர்களது சீடர்களும் அக்காலத்தில் இருந்தார்கள் என்பதையும் மறுக்க இயலாது. இவர்கள் வைஷ்ணவர்களில் தலைசிறந்தவர்கள். சங்ககாலத்தில் இருந்த மற்றவர்கள் மற்ற பலன்களுக்காக மற்ற தெய்வங்களை அடைந்தாலும், அவர்களைப் பரம்பொருளாக நினையாமல் திருமால் ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டிருந்தார்களாகையாலே அவர்களும் வைஷ்ணவர்களே. இக்காலத்திலும் வைஷ்ணவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவ்வுலகப்பயன்களுக்காக மற்ற தெய்வங்களையும் வணங்குகின்றனர் என்பதும், மோட்சம் ஒன்றையே விரும்பும் ஒரு சில தலைசிறந்த வைஷ்ணவர்களே திருமாலைத்தவிர வேறு எந்த தெய்வங்களையும் நினையாத, மறந்தும் புறந்தொழாமாந்தர்களாக உள்ளனர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது. கீதாசார்யனும் கீதையில் "வாஸுதே3வஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப4:" [கீ3தை 7 - 19] [கண்ணனே எல்லாம் என்று கூறும் மஹாத்மா எனக்கே மிகவும் கிடைத்தற்கு அரியவனாகவே உள்ளான்] என்று வருத்தப்பட்டானன்றோ.

20. சங்கநூல்களில் பரம்பொருளுக்குரிய எல்லாப்பெருமைகளும் திருமால் ஒருவனுக்கே கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் கூறப்படவில்லை. திருமாலுக்குத் தாழ்வைக் கூறும் பிற்காலக் கட்டுக்கதைகளான (1) அடிமுடிதேடிய கதை, (2) கண்ணைப்பிடுங்கி அர்ச்சனை செய்தகதை, (3) சிவன் மத்ஸ்யாவதாரத்தை அழித்த கதை, (4) சிவன் கூர்மாவதாரத்தின் ஓட்டைப்பிரித்துத் தனக்கு ஆபரணமாகக்கொண்ட கதை, (5) சிவன் வராஹாவதாரத்தின் கொம்பை ஒடித்த கதை, (6) நரஸிம்மாவதாரத்தை, சிவன் சரபமாய் வந்து கிழித்த கதை, (7) திரிவிக்ரமனின் தோலை சிவன் உரித்து, சட்டையாகப் போர்த்துக்கொண்ட கதை, (8) ராமன் சிவலிங்க பூஜைசெய்த கதை முதலான சிவபுராணக் கதைகளில் ஒன்றுகூட சங்கநூல்களில் எடுக்கப்படவில்லை; முருகன், பிரமனைச்சிறையில் அடைத்து, படைப்புத் தொழிலை மேற்கொண்ட கதை, முருகனுடைய மயில் வைகுண்டத்தை அழித்த கதை, தகப்பனாகிய சிவனுக்கே பிரணவத்தின் பொருளை உபதேசித்த கதை முதலான கந்தபுராணக் கதைகள் எதுவும் முருகனைப்பற்றிய சங்கநூற் பாடல்களில் காணப்படவில்லை. இக்கதைகள் நாயன்மார்களுக்கு முற்பட்ட எந்தத்தென்மொழி வடமொழிக்கவிஞர்களாலும் பாடப்படவில்லை என்பதும், குறிப்பாக சிவபக்தனான காளிதாசனாலும் கூடத் தனது குமாரசம்பவத்தில் பாடப்படவில்லை என்பதும் குறிக்கொள்ளத்தக்கது.

21. பிற்காலத்தில் சைவர்கள் சிவனுக்கு "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று பெருமை சொல்லிக்கொள்ளத் தலைப்பட்டனர். சங்கநூலான பரிபாடலிலோ திருமாலே சிவனையுள்ளிட்ட எல்லா ஜீவர்களையும் படைத்தவன் என்று முழங்கப்படுகிறது. பிற்காலச் சைவர்கள் திருமால் அவதாரங்களை எடுக்கையாலே பரம்பொருளாக முடியாது என்று வாதம் செய்தனர். சங்கநூலான பரிபாடலோ "முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று. பிற்காலத்தில் சிவபக்தரான நாயன்மார்கள் சிவனே பிறவாமையாகிற வீட்டைத்தரவல்லவன் என்று பாடினார்கள். சங்கநூல்கள் எதிலும் சிவன் அப்படிப் பாடப்பெறவில்லை. திருமாலைப்பற்றிய பாடல்களிலேயே,

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே
" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயத்தில் நாம் காட்டிய நூற்றுக்கணக்கான பிற சங்கநூல் மேற்கோள்களிலிருந்தும் சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது.

22. மூன்று, நான்காவது பரிபாடல்களில் பரம்பொருளுக்கேயுரிய எல்லாப் பெருமைகளையும் அடுக்கடுக்காகத் திருமாலுக்குப் பாடிய கடுவன் இளவெயினனாரே, முருகனைப் பற்றிய ஐந்தாம் பாடலில் சிவனும், பார்வதியும் புணர்ந்ததனால் வீரியம் வெளிப்பட்டு, அதிலிருந்து பிறந்த குழந்தை முருகன் என்று மிகத்தெளிவாகப் பாடினார். இதிலிருந்து சிவனும், பார்வதியும் ஆண், பெண் சேர்க்கையினால் வீரியம் வெளிப்படும் ஜீவர்களே என்றும், அந்த வீரியத்திலிருந்து பிறந்த முருகனும் ஜீவனே என்றும் சங்ககாலச் சான்றோர்கள் கருதினார்கள் என்று விளங்குகிறது. ஆக, சங்ககாலத்தில் சிவனையோ, சக்தியையோ, முருகனையோ பரம்பொருளாகக்கொண்ட சைவம், சாக்தம், கௌமாரம் என்னும் மதங்கள் வழக்கில் இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து "சங்ககாலத்தில் சிவனையும், திருமாலையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்று ம. பொ. சி. எழுதியது அப்பட்டமான பொய் என விளங்குகிறது.

Friday, July 9, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 4

13. இவ்வண்ணமாக, சங்ககாலத்திலேயே குறிஞ்சிநிலத்திலும், மருதநிலத்திலும் பல திருமால் கோயில்கள் இருந்ததாகச் சங்ககாலச் சான்றோர்கள் கூறுகையால் ம.பொ.சி.யின் வாதம் தவறானது என விளங்குகிறது. மேலும் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி மருதநிலத்தில் இந்திரனுக்கு கோயில் இருந்ததாக சங்கநூல்களில் எங்கும் காணப்படவில்லை. 'வருணன் மேய பெருமணல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி வருணனுக்கு நெய்தல் நிலத்தில் கோயில் இருந்ததாக எங்கும் சங்கநூல்களில் காணப்பட்டவில்லை. 'சீரலைவாய்' என்னும் திருச்செந்தூராகிற நெய்தல் நிலத்தில் முருகனுக்கே கோவிலிருந்ததாகச் சங்கநூலில் காணப்படுகிறது. ஆகையால் 'மாயோன் மேய காடு உறை உலகமும்' என்று தொடங்கும் தொல்காப்பியப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும்பொருள் அடியோடு பொருந்தாது எனத் தெரிகிறது. இதன் சரியான பொருளை இனிக் காண்போம்.

14. இங்கு 'மாயோன்' என்றது திருமாலின் அவதாரமான கண்ணனை. 'மேய' என்றதற்கு 'ரட்சகனாகப் பொருந்திய' என்று பொருள். கண்ணன் காடுவாழ் சாதியாகப் பிறந்து, ஆயர்களைத் தன் உயிருக்கும் மேலாக ரட்சித்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லைநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். முருகன் மலைப்பாங்கான நிலத்தில் வாழ்ந்த வேடர்களின் செல்வியான வள்ளியை மணந்து அந்நிலத்திலே பல வீரவிளையாட்டுக்களைப் புரிந்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனை மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இந்திரன் மழை பொழிவிக்கும் தெய்வம். வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் மழையின்றேல் அழிந்துவிடும். அதனால் தமிழகச் சான்றோர்கள் அவனை மருதநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். வருணன் கடலுக்கு அதிதேவதை. அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் கடலும் கடல்சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இப்பொருளில் எவராலும் எக்குற்றமும் கூற முடியாது.

15. இதில் பாடியிருக்கும் முறையிலும் ஒரு பொருத்தம் காண்கிறது. சங்ககாலத்தில் பரம்பொருளாகவும், ஸர்வரட்சகனாகவும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயோனை முதலில் வைத்தார் தொல்காப்பியர். வீரம் முதலான நற்குணங்களில் மாயோன் ஒருவனுக்கே அடுத்தபடி உள்ளவனாய், சிறு குழந்தையாயிருக்கும் போதே இந்திரனையும் வெற்றிகொண்டவனான முருகனை இரண்டாம் படியில் வைத்தார். அடுத்து இந்திரனை மூன்றாம்படியில் வைத்தார். இந்திரனுக்கு அடங்கியவனான வருணனை நான்காம்படியில் வைத்தார். ரட்சகர்களல்லாத உருத்திரன், யமன் முதலானோர்க்கு நிலமே ஒதுக்கப்படவில்லை. ஆக, இப்பொருளே மிகப்பொருத்தமான பொருள் என விளங்குகிறது.

16. இப்படிக் கொள்ளாமல் திருமால் சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் மட்டும் கோயில் அமைத்து வழிபடப்பெற்றான் என்று ம.பொ.சி. கூறும் பொருளைக் கொண்டால் முற்கூறிய பல குற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், "மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] "நின் சேவடி தொழாரும் உளரோ" [பரிபாடல் 3 - 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

Friday, July 2, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 3

8. தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது பின்வருமாறு:-

"மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

இப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும் பொருள் தவறானது. ஏனெனில்: (சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.

9. கல்லாடனார் என்னும் புலவர் இயற்றிய அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில், வேங்கடமலையைக் கடந்துசென்று பொருளீட்டி வினைமுடித்து மீண்டதலைமகன், தேர்ப்பாகனுக்குக் கூறியதாக உள்ள பாடலில்,

"அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி"

என்றவிடத்தில் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப் போகி' என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் 'விழவுமலி வேங்கடம்' என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப்போகி' என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

10. அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்

"வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே"

என்னும் பாடற்பகுதியில், 'தலைமகன் பிரியப்போகிறான்' என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, "திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது" என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், "நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்' (67 - 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

11. பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,

"வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு"

[திருஞெமர் அகலம் - ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி - சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் - துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு - திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]

என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

12. பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,

"நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி ... ...
அருந்திறற் கடவுள் வாழ்த்தி"

என்னும் பகுதியில் மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

Wednesday, June 30, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 2

3. "சிவனை வழிபடுகிறவர்கள் சைவர்கள். விஷ்ணுவை வழிபடுவோர் வைணவர். சக்தியை வழிபடுவோர் சாக்தர். இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர். குமரனை வழிபடுவோர் கௌமாரமதத்தவர்" என்று இப்பகுதியிலேயே பிறிதோர் இடத்தில் எழுதுகிறார் ம.பொ.சி. இக்கூற்றுகளில் உள்ள பெரியதொரு குழப்பத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இக்கூற்றின்படி பார்த்தால் திருமாலையும், முருகனையும் பாடியிருக்கும் கடுவன் இளவெயினனார் என்னும் சங்ககாலப் புலவர் வைஷ்ணவ மதத்தையும், கௌமார மதத்தையும் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டிவரும். மிகப் பிற்காலத்தில் (600 - வருடங்களுக்குள்) கற்பிக்கப்பட்டதாக நமது 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலில் நிலைநாட்டப்பெற்ற ஷண்மதங்களின் கடவுளர் அறுவரையும் வழிபடுகிறவர்கள் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், ஸௌரம் எனும் ஆறுமதங்களையும் சேர்ந்தவர்கள் என்னும் விசித்திரநிலை ஏற்படும். சங்ககாலத்தில் இந்திரன் வழிபாட்டையும், வருணன் வழிபாட்டையும், முருகன் வழிபாட்டையும், 'காடுகாள்' எனப்படும் கொற்றவை (சக்தி) வழிபாட்டையும், சிவன் வழிபாட்டையும், திருமால் வழிபாட்டையும் செய்துவந்தவர்கள் ஐந்திரேயம், வாருணம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம் என்னும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் என்று சொல்லவேண்டிய அதிவிசித்திரநிலை ஏற்படும். இன்றுள்ள இந்துக்கள் பலர் தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக நாகூர் முதலான இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி முதலான கிறித்துவத் தலங்களுக்கும் சென்று வழிபடுகிறார்கள். அந்த இந்துக்களை அவர்கள் தழுவிநிற்கும் சைவம் அல்லது வைஷ்ணவ மதத்தோடு, இஸ்லாமிய மதத்தையும், கிறித்துவமதத்தையும் தழுவி நிற்பவர்கள் என்று சொல்லவேண்டிய வேடிக்கையான நிலை ஏற்படும்.

4. இந்த அவத்தத்தைத் தவிர்க்கவேண்டுமானால் 'மதம்' என்னும் சொல்லுக்குச் சரியான பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும். சைவம், வைணவம் முதலான மதங்கள் வேதசாத்திரங்களில் காணப்படும் கடவுளர்களில் ஒருவரைப் பரம்பொருளாகவும், மற்ற கடவுளரை அவருக்கு அடங்கியவர்களாகவும் கொள்ளும் மதங்களேயாம். இம்முறையில் காணும்போது சிவனைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சைவம் என்றும், விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் வைஷ்ணவம் என்றும், சக்தியைப் பரம்பொருளாகக் கொண்ட மதம் சாக்தம் என்றும் கொள்வதே தக்கது. மதம் என்பதற்கு 'கொள்கை' என்று பொருளேயொழிய வழிபாடு என்று பொருளல்ல. இந்த சரியானப் பொருளைக்கொண்டால் முற்கூறிய விசித்திரமான (வேடிக்கையான) நிலைகள் ஏற்படமாட்டா. இந்த சரியான பொருளைக் கொண்டு பார்க்கும்போது விஷ்ணு ஒருவனையே பரம்பொருளாகக் கொண்டவர்களாகவே சங்ககாலத்தில் புலவர்கள் அனைவரும் இருந்தனர் என்று வெளிப்படையாகச் சங்கநூல்களில் காணக்கிடக்கிறது. அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது. இவ்விஷயத்தை நமது சங்ககாலத் தமிழர் சம்யத்தில் 27 - பக்கங்களில் விரிவாக நிலைநாட்டியுள்ளோம்.

5. (1) உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லையென்றும் முற்கூறிய நூலில் பற்பல ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறோம். ஓராதாரமும் காட்டாமல் "சங்ககாலத்தில் இந்த இருவேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது" என்றும், "பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்தும் பக்திப்பாடல்களே" என்றும் திரு. ம. பொ. சில். எழுதுவது நேர்மையாகுமா என நடுநிலைநிற்போர் சிந்திக்கட்டும்.

6. திருமாலைப் பற்றிய பரிபாடல்கள் வெறும் பக்திப்பாடல்கள் அல்ல. "அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை" என்பதை நிலைநாட்டித்தரும் 'கொள்கை விளக்கப் பாடல்'களும் ஆகும் அவை என்பதை நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டி நமது நூலில் நிர்ணயித்து இவர் கையிலும் கொடுத்திருக்க, அதைக் காணாததுபோல் இப்படி எழுதுவது எந்த நியாயத்தில் சேர்ந்தது என்பதை நடுநிலையாளர்கள் நிர்ணயிப்பார்களாக. அந்நூலை இவர் தவறவிட்டிருக்கலாமாகையால் இவருக்கு மறுபடியும் அந்நூலில் ஒரு பிரதி அனுப்புகிறோம். நேர்மையிருந்தால் அந்நூலை இசைவதோ அல்லது ஆதாரங்காட்டி மறுப்பதோ செய்ய வேண்டும்.

7. தமது கட்டுரைத் தொடரின் முதல்பகுதியில் தொல்காப்பியத்தில் திருமாலானவர் முல்லைநிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார் என்றும், அவ்வண்ணமே முருகன் முதலான தெய்வங்கள் குறிஞ்சி முதலான நிலத்து மக்களின் தெய்வங்களாக வருணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுவதன்மூலம் திருமாலை ஒரு நிலத்துக்குரியவரேயொழிய, எல்லா நிலத்துக்குமுரிய பரம்பொருளாகச் சங்ககாலத்தில் கொள்ளப்படவில்லை என்று படிப்பவர்களின் மனத்தில் குழப்பத்தை விளைக்க முயலுகின்றார் ம. பொ. சி. இக்குழப்பத்தை ஆதாரத்தோடு நீக்குகின்றோம் இனி.

Tuesday, June 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 1

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

[6 - 2 - 83 இதழ் முதல் வாரந்தோறும் 'செங்கோல்' என்னும் தமது பத்திரிகையில் திரு. ம.பொ.சி. என்று புகழ்பெற்ற தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பநாடர் சைவரா? வைணவரா?" என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு ஸுதர்சனம் ஆசிரியர் (ஸுதர்சனர்) (ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், வழக்கறிஞர், 3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17) எழுதிய மறுப்புரை]

I. சங்ககாலத்தில் சமயநிலை

1. சில வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் தொல்காப்பியர் அரங்கில் நமது "சங்ககாலத் தமிழர் சமயம்" என்னும் நூலை அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இலவசமாக வழங்கினோம். அந்நூலைப் பெற்றுக் கொண்டவர்களில் திரு. ம. பொ. சியும் ஒருவர். அதைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அறிஞர்கள் "எவராலும் மறுக்கவொண்ணாதபடி 'சங்ககாலத்தில் வைணவமதம் ஒன்றே வேதமதமாகக் கொள்ளப்பட்டுவந்தது' என்னும் உண்மையை நிலைநாட்டுவது இந்நூல்" என்று பாராட்டிவருகின்றனர். மாற்றுக்கருத்துடையவர் எவரும் இன்றுவரை அந்நூலை மறுக்கத் துணியவில்லை.

2. திரு. ம.பொ.சி. அவர்கள் தாம் அந்நூலைப் படித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் அந்நூலில் நாம் நிலைநாட்டியிருக்கும் முக்கியமான உண்மைக்கு முரணாக இக்கட்டுரைத் தொடரின் 1, 6, 9 - வது பகுதிகளில் பின்வருமாறு எழுதுகிறார்:-

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். 'மாயோன் மேய காடுறை உலகம்' என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் 'காடும் காடு சேர்ந்த நிலமும்' என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் 'ஆய்ச்சியர் குரவையிலே' காட்சிபடுத்துகின்றார். (ம. பொ. சி. கட்டுரை முதல் பகுதி)

இத்துடனின்றி, முல்லை நிலத்திலிருந்து வேறுபட்ட மலையும் மலை சேர்ந்த நிலமும் எனப்படும் குறிஞ்சி நிலத்திலே வாழும் மக்களும் திருமாலை வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆம்; தமிழகத்தின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலையிலே திருமால் கோயில் கொண்டிருப்பதை வைணவப் பெரியவனான மாங்காட்டு மறையவனையே கொண்டு நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இளங்கோவடிகள். 'கடலும் கடல் சேர்ந்த நிலமும்' எனப்படும் நெய்தல் பிரதேசத்திலும் திருமால் கோயில் கொண்டிருப்பதை வஞ்சிக் காண்டத்திலே இளங்கோ கூறுகின்றார். "வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக்கிடந்த நெறியாகில்லை" என்று வயல் வளம் படைத்த நன்செய் மண்டலமான சோழமண்டலத்தை இளங்கோ வருணிக்கிறார். 'வயலும் வயல் சார்ந்த நிலமும்' எனப்படும் சோழ மண்டலத்திலுள்ள திருவரங்கத்திலேயும் திருமால் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறார் என்று வைணவ அந்தணரான மாங்காட்டு மறையவனைக் கொண்டு இளங்கோவடிகள் நமக்கு அறிவிக்கின்றார். இதனால் சங்க காலத்திலே காடும் காடு சேர்ந்த இடமுமான நெய்தல் (முல்லை) நிலத்திலே வாழும் மக்களுக்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் மக்களால் வழிபடும் பொதுத்தெய்வம் ஆகியிருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றி, திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு முன்பிருந்த நிலை இது. (ம.பொ.சி. கட்டுரை முதல் பகுதி)

சமஸ்கிருத மொழிப் புலவர்கள் வேத காலம் என்கிறார்களே, அதை சங்ககாலம் என்கிறார்கள், தமிழ்ப் புலவர்கள். கிருத்துவுக்கு முற்பட்ட காலம் அது. அந்தக் காலத்திலே, சிவனை வழிபட்டு வந்தனர் தமிழர். ஆனால் 'சிவமதம்' என்னும் பொருளிலே "சைவம்" என்பதாக ஒரு மதம் நடைமுறையில் இருக்கவில்லை. அதுபோல விஷ்ணு என்று வடமொழிப் புலவர்கள் சொல்லும் தெய்வத்தையும் "திருமால்" "மாயோன்" என்னும் பெயர்களிலே சங்ககாலத் தமிழர் வழிபட்டு வந்தனர். இந்த இருவேறு தெய்வங்களையும் மன வேறுபாடின்றி தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. சங்க நூல்களான தொல்காப்பியம் என்னும் இலக்கணத்திலேயும், "பத்துப்பாட்டு" "எட்டுத்தொகை" எனப்படும் இலக்கியங்களிலேயும் திருமாலின் அவதாரங்கள் சொல்லப்படுகின்றன. ஆம்; அங்கு மிங்கும் குறிப்புகளாக. திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ் நூல் எதுவும் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. (ம.பொ.சி. கட்டுரை 6-வது பகுதி)

பரிபாடலில் வரும் திருமாலைப் பற்றிய பாடல்கள் அனைத்துமே பக்திப் பாடல்களே என்பதையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். (ம.பொ.சி. கட்டுரை 9-வது பகுதி)

இனி, இவற்றுக்கு பதிலுரைப்போம்.

Saturday, June 26, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் இரண்டாம்பாக முன்னுரை

நமது கம்பனின் சமயம் முதல்பாகத்தைப் பல பிரதிகள் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் கழகப்புலவர்கள் அனைவருக்கும் வழங்கினர். எவரும் அதை மறுக்க முயலவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு பிள்ளை அவர்கள் சிவகதி அடைந்துவிட்டார்.

சென்ற வருடம் திரு. ம. பொ. சிவஞானகிராமணி அவர்கள் "கம்பர் சைவரே" என்று நிலைநிறுத்துவதற்காகத் தமது 'செங்கோல்' பத்திரிகையில் சில கட்டுரைகள் எழுதினார். கட்டுரைத் தொடர் முடிந்ததும் அதை நூல் வடிவிலும் வெளியிட்டார். அந்நூலை மறுக்கும் நமது "சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்" என்னும் நூல் நமது ஸுதர்சனத்தில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு நமது மணிவிழாவின் போது கம்பனின் சமயம் இரண்டாம் பாகமாக வெளியிடப் பெறுகிறது. இதை அவ்வப்போது பெற்றுவந்த திரு. ம.பொ.சி. தமது செங்கோலில் "ஆடத்தெரியாத நாட்டியக்காரி வீதி கோணல் என்றாளாம்" என்கிறகணக்கிலே, நமது நூலுக்கு மறுப்பெழுத முற்பட்டால் தாம் வைதிகச் சைவராக மாறவேண்டியிருக்குமாகையால் தாம் மறுப்பெழுதப் போவதில்லை என்று எழுதி முடித்துவிட்டார். இந்நூலுக்கு ஆணித்தரமான அணிந்துரை அளிந்த வி.பூதூர் வித்வான் கி. வேங்கடசாமி ரெட்டியார் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது. இனியாவது மனச்சாட்சியுள்ள தமிழறிஞர் எவரும் கம்பன் பரம வைணவனே என்னும் பேருண்மையை மறுக்கத் துணியமாட்டார்கள் என நம்புகிறேன்.

உண்மையை உயிரினும் ஓம்பும்,
ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
18 - 11 - 84.

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் முதல்பாக முகவுரை

தமிழ்ப்புலவர்களில் சிலர் பல வருடங்களாகக் கம்பனின் சமயம் வைணவமே என்னும் பேருண்மையை மறைக்க முயன்று வருகின்றனர். வெள்ளிடை மலைபோல் விளங்கும் இவ்வுண்மையை நிலை நாட்டும் நூல் ஒன்று எழுதவேண்டும் என்னும் அவா நீண்டகாலமாக எந்தையார்க்கும் அடியேனுக்கும் உண்டு. அதற்குச் சந்தர்ப்பம் ஒன்று சில வருடங்களுக்கு முன் வாய்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டுவரும் கம்பராமாயணப்பதிப்பினுடைய பதிப்பாசிரியர் குழுவின் தலைவராய் விளங்கும் திரு. G. சுப்பிரமணியப் பிள்ளை, M.A.B.L, அவர்கள் கழகப்பதிப்பின் திருவவதாரப்படலத்தில் பல திருத்தங்களைச் செய்து, 7 - 7 - 61 வானொலி இதழில் "கம்பராமாயணத்தில் பாடபேதங்கள்" என்னும் கட்டுரையிலும், தருமை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்டுவரும் "ஞானசம்பந்தம்" என்னும் பத்திரிகையின் பிலவ ஆவணி (10 - 9 - 61) இதழில் வெளிவந்த கட்டுரையிலும் கம்பனின் உண்மைச் சமயத்தைத் திரித்துக் கூறியிருந்தார்.

பிள்ளையவர்களின் கட்டுரைகளிலுள்ள கருத்துக்கள் தவறு என்று நிரூபித்து, கம்பனின் உண்மைச் சமயத்தைக் காட்டித்தரும் "கம்பனின் சமயம்" என்னும் நூல் பிலவ பங்குனி உத்தரத்தன்று (21 - 3 - 62) நம்மால் தொடங்கப்பெற்றது. நம்முடைய பத்திரிகையான "ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்" மாத இதழில் மாதந்தோறும் சிறிதுசிறிதாக வெளியிடப்பட்டுவந்தது. தொடங்கிச் சில மாதங்கள் வரை வெளிவந்தபகுதி பிள்ளையவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களிடமிருந்து யாதொரு பதிலுமில்லை. கழகப்பதிப்பின் ஆரணிய காண்டம் முற்பகுதி வரையிலுமே இப்போது தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறபடியால் அது வரையிலுள்ள பகுதியின் ஆராய்ச்சி இன்று (குரோதி பங்குனி உத்தரத்தன்று) முதல் பாகமாக வெளியிடப்படுகிறது. கழகப்பதிப்பின் எஞ்சிய பகுதிகள் முழுவதும் வெளிவந்த பின் இந்நூலின் பிற்பகுதிகள் வெளியிடப்படும்.

மற்ற துறைகளிற்போலே, இலக்கியத் துறையிலும், மதத்துறையிலும் இப்போது நேர்மை மிகவும் குறைந்துவிட்டது. தங்கள் கருத்தைப் பழங்காவியங்களின் மீது தமிழ்ப்புலவர்கள் ஏறிடுகிறார்கள். இதை எடுத்துக்காட்டினாலும் தவறை ஒப்புக்கொள்ள மனமிருப்பதில்லை. பத்திரிகைகளும் உண்மையை வெளிப்படுத்தும் இத்தகைய நூல்களுக்கு மதிப்புரையெழுதத் தயங்குகின்றன. இது நாட்டுக்கு நல்லதல்ல. பிள்ளையவர்கள் நம் கருத்துக்கு மாறுபடுவாரானால், தம் கருத்தை நிலைநாட்டி எழுதவேண்டும். இல்லாவிடில் முன்னம் தாம் எழுதியது தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவே நேர்மையும் பெருந்தன்மையுமாகும். மௌனமாயிருப்பது புலவர்களுக்கு அழகல்ல. பத்திரிகைகளும், மற்ற தமிழ்ப்புலவர்களும் இத்தகைய நூல்களை நடுநிலைநின்று ஆராய்ந்து மதிப்புரைகளை எழுதவேண்டும். இதனால் நாடு நலம் பெறும். தங்களுக்குக் கசப்பாயிருக்கின்ற காரணத்தால் உண்மைகளை மறைக்கப்புகுவது நாட்டுக்குத் தீங்கையே விளைக்கும். தமிழ் நாட்டில் தீங்குகள் ஒடுங்கி நலங்கள் ஓங்க ஆதி பரம்பொருள் அருளுவானாக.

ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
குரோதி பங்குனி உத்தரம்.

Friday, June 18, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 4

'செங்கோல்' தொடர் 15

"அரி என்னும் திருமாலே காப்பிய நாயகனாக அவருக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அது போல சிவனுக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை; ஆராய்ந்து தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது" என்கிறது செங்கோல். ஆராய்ந்துதானே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது செங்கோல்; இன்னம் எதற்கு ஆராயவேண்டும்?

'செங்கோல்' தொடர் 16

"வைணவ ஆசாரியர்கள்கூட தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்துவிட்டனர். இந்த வைணவர்களிடமிருந்து கம்பர் பெரிதும் வேறுபடுகிறார் என்பதோடு தமிழைப் பொறுத்தவரையில் சைவநாயன்மார்களான நால்வரைப் பின்பற்றித் தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் எனலாம்" என்கிறது செங்கோல். ஆசாரியர்கள்தானே மணிப்பிரவாளநடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்தவர்கள்! செங்கோலின் கருத்துப்படி ஆழ்வார்கள் யாரும் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்திலரே! அப்படியிருக்க ஆழ்வார்களை விடுத்து நால்வரைப் பின்பற்றி தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் என்பது செங்கோலின் மனக்கோட்டை தானே!

இதே தொடரில் 'திருவேங்கட மலையைப் பெற்றதின் காரணமாகத் தொண்டைமண்டலத்திற்கு ஏற்பட்ட சிறப்பை 13 செய்யுள்களால் வருணிக்கிறார். வேங்கடமலையையும் அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனையும் 5 செய்யுள்களால் புகழ்ந்தேத்துகிறார்' என்கிறது நம் செங்கோல். இப்படிச் சொன்ன செங்கோலே தொடர் 10ல் 'நாடவிட்ட படலத்திலே கம்பநாடர் வேங்கடமலையை நான்கு செய்யுள்களால் வருணிக்கப் புகுந்தவர், அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக்காட்டத் தவறிவிட்டார்' என்கிறது. 'அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனைப் புகழ்ந்தேத்துகின்றார்' என்று இத்தொடரில் காட்டுகிறது. இதில் எது உண்மை என்பதை வாசகர்களே முடிவு செய்வார்களாக.

'செங்கோல்' தொடர் 17

தலைப்பு:- கம்பர் சைவரே.

"ஒளவைப் பிராட்டியும் ... ...சைவர் என்று தெரிகின்றது. ஆனால் அவரே 'அரனை மறவேல்' 'திருமாலுக்கடிமை செய்' என்றும் பாடித் திருமாலையும் சிவனையும் சமநிலையிற் காட்டுகிறார்" என்று தொடர்கின்றது செங்கோல். 'அரனை மறவேல்' என்பது ஆத்திசூடியில் உள்ளதா? 'அறனை மறவேல்' என அண்மையில் தவறாகச் சொல்லினர்; மேலும் கொன்றைவேந்தனில் திருநெல்வேலிப் பிரதிகளில் 'சினத்தைப் பேணில் தனத்திற்கழிவு' என்றுள்ளதை 'சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு' என்று மாற்றிவிட்டனர். இவ்விவரஙக்ளை எனது 'வில்லிபாரதத்தில் வினோதத்திருத்தங்கள்' என்ற கட்டுரையில் காணலாம்.

'சங்ககாலக் கவிஞர்களில் ஒருவரான கடுவன் இளவெயினனார் திருமாலையும் முருகனையும் தனித்தனிப் பாடல்களால் வழிபட்டதனைப் பார்க்கிறோம்' என்கிறது செங்கோல். திருமாலுக்குரிய மேன்மையும் முருகனுக்குரிய தன்மையும் விளங்குமாறு அவரவர்கட்குரிய தனித்தன்மையை விளக்குவதை அப்பாடல்களில் காணலாம்.

"இடைக்கால உரையாசிரியர்களிலேயும் பலர் தாங்கள் சிவபக்தராயிருந்தும் சமணபௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதினர்" என்கிறது செங்கோல். பரிமேலழகரும் சிவபக்தர்தானா? என்பதைச் செங்கோலே சொல்லட்டும். மேலும் "அவர் வேத மதத்தவராதலால் அவரை வைணவராகக் கொள்ளவும் வாய்ப்புண்டு; ஆனால் அவரது நெற்றியில் நாமந்தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்க சந்தர்ப்பமே இல்லை" என்கிறது செங்கோல்.

இங்கு இதை மறுப்பதற்கு முன் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாமம், திருமண் என்பன ஒரு பொருட்சொற்கள், ஆழ்வார்கள் பாடல்களுள் நாமம்பற்றி இல்லை. ஆதலின் நாமம் பிற்காலத்தில் தோன்றியதுதான் என்ற கருத்தினராகி நாமம் பற்றிக் கம்பர் சொன்ன பாடல்களை இடைச்செருகல் என்று கொண்டனர் சிலர்.

பெரியாழ்வார் திருமொழி 3 - 4 - 8.

1) "சிந்துரப்பொடிக்கொண்டு சென்னியப்பித்
திருநாமம் இட்டங்கொ ரிலையம்தன்னால்
அந்தர மின்றித்தன் நெறிபங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல்வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்றங் கினவளைஇழவே லென்னச்
சந்தியில் நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே".


'திருநாமம் இட்டங்கோ ரிலையம்தன்னால்" - நேரியதாய் நீண்டு ஒட்டின இடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையாலே திருநெற்றியிலே திருநாமமாக இட்டு ஊர்த்வபுண்ட்ராகாரமாக அழுத்திவைக்குமாய்த்து - மாமுனிகள்.

'சாதிலிங்கப் பொடியைக்கொண்டு திருக்குழலிலே அலங்காரமாகச் சாத்தி (நாமமிடவேண்டிய) அந்த நெற்றியிலே (ஒட்டினாற் பிடித்துக் கொள்வதான) ஒரு தளிரான இலையால் ஊர்த்வபுண்ட்ரம் சாத்தி' வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர்.

2) திருவிருத்தம் 49ல் 'மண்நேரன்ன ஒண்ணுதலே' என்பதற்கு 'திருமண்காப்பைத் தகுதியாகத் தரித்த திருநெற்றியை உடையவள்' என்பர் வை.மு. சடகோப ராமாநுஜாசார்யர்.

இதனை அடியொற்றிக் கம்பநாடர் பால-கடிமணப்படலத்தில் (49) 'என்றும் நான்முகன்முதல் யாரும் யாவையும் - நின்ற பேரிருளினை நீக்கி நீள்நெறி சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடும். தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' எனக் கூறியுள்ளதை மிகைப்பாடல் ஆக்கிவிட்டனர்.

கம்பரை அடியொற்றி திரு-அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகத்திலே இவ்விடத்து,

பல்லவி

ராமசாமி கொண்டகோலம் என்னாலே சொல்லப்போமோ

அநுபல்லவி

மோமிதிலை ராசன்முன் அனேக-கோடி மன்மதனே நிகராக

சரணம்

பாதகடகம்சேர்த்தி மருங்கினிற் பசும்பொன் ஆடைபோர்த்தி மார்பின்
மீதுபொன்னூல் ஏற்றித் தன்நாமமும் விளங்கவே சாத்தி

என்று கூறுவதால் கவிராயர் 'என்றும் நான்முகன்முதல்' என்ற பாடலைக் கம்பருடைய பாடல்தான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். கவிராயரும் சைவர்தான். அவர் உடன்பட்ட பாடலை இந்த சைவ ஞானிகள் உடன்பட மறுப்பது வியப்புக்குரியதே.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா மலராக வெளியிட்ட கம்பராமாயணம் சுந்தரகாண்டம் சம்புமாலி வதைப்படலம் (832)

"ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய்சுடர் விளக்கிற் றோன்றும் நெற்றியே நெற்றியாக"
என்றுளது.

பழைய பாடமும் இதுவே. மேற்படி பதிப்பில் இதற்கு விளக்கமாக, "திருமாலின் துவாதச நாமங்களைக் கூறியபடியே பன்னிரண்டு உறுப்புக்களில் இட்டுக்கொள்வது மரபாதலின், திருமண்காப்புக்கு நாமம் என்பது பெயராயிற்று. 'தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' என்பர் முன்னும் (கடிமணப் 49). 'ஈராறு நாமம் உரைசெய்து மண்கொடிடுவார்கள் காணும் இமையோர்' என்றார் வில்லிபுத்தூரரும். நெய்யிட்டுப் பிரகாசிக்கும் தீபம்போன்றிருந்தது அனுமனது நெற்றி நாமம் என்றும் அது நெற்றிப்படையாகத் தோன்றும்படி என்றும் கூறியபடி. நெற்றி-முன்னணிப்படை" என்றுள்ளது காண்க. இதுகாறும் கூறியவாற்றால் நாமம் என்பது முன்னமேயுள்ளதுதான்; புதிதல்ல என்று உணர்க.

இதை மறுத்துச் செங்கோல் 'அவரது (கம்பரது) நெற்றியில் நாமம் தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்கச் சந்தர்ப்பமே இல்லை' என்கிறது.

ஆயின் ரசிகமணி T.K.C. அவர்களைப்போலவும் செங்கோல் அரசரைப்போலவும் கம்பநாடரை மீசையுள ஆண்பிள்ளைச் சிங்கமாக ஆக்கி வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கு மட்டும் சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது போலும்! இவர்கள் தாடியும் உடையவர்களாயிருந்தால் திருவள்ளுவரைக் காட்டியிருப்பது போன்று கம்பரையும் தாடியும் மீசையும் உடையவர்களாகக் காட்டியிருக்கக்கூடும். 'கம்பராமனைக் கடவுளாகத்தான் ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லவில்லை' என்கிறது செங்கோல். ஆயின், கம்பர் தம் ராமனை எப்படிக் காட்டியுள்ளார்? தெய்வமாகவும் தெய்வத்துக்கு மேலாகவும் தானே காட்டியுள்ளார்! இஃது எல்லோரும் அறிந்ததுதானே! மேலும் 'கம்பராமனை மானிட சமுதாயத்தின் வழிகாட்டியாக ஏற்றால்போதும்' என்கிறது செங்கோல். இஃது செங்கோலின் இராமபக்தி போலும்! மேலும் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என்று முடிக்கிறது செங்கோல். செங்கோல் மற்றொரு புலவரை(க் கம்பர்போன்று) நமக்கு நினைவூட்டினால் நாம் செங்கோலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்படுவோம்.

"சங்ககாலத்தில் மதப்பூசல் இல்லை; வேறுபாடின்றித் திருமால், சிவன், முருகன், கொற்றவை ஆகிய எல்லாத் தெய்வங்களையும் மக்கள் வணங்கிவந்தனர்; அதேபோல சைவராகிய கம்பரும் பொதுவாகத் தெய்வங்களைப் போற்றினார்; எடுத்துக்கொண்ட காப்பியத் தன்மைக்கேற்ப இராமபிரானை அதிகமாகப் பேசியிருக்கின்றார்; ஆகவே கம்பர் சமரசஞானி" என்று கற்பனை பண்ணிக்கொண்டது செங்கோல். இதனை நன்கு ஆராய்ந்து 'சங்ககாலச் சமயம் யாது' என்பதனைச் சங்கநூல்களாலே விளக்கி 'திருமாலே முத்திதரும் முதற்கடவுள்' என்பதைக்காட்டி, இச்சங்ககாலச் சமயமே தான் கம்பரின் சமயம் என்று உறுதிசெய்து, 'சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்' என்ற தலைப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலாசிரியர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அட்வகேட் அவர்களைத் தமிழுலகு நன்கறியும். 'ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்' மாத இதழ்வாயிலாக, வடமொழி தமிழ்மொழி இரண்டிலுமுள்ள பிரமாண நூல்களை உரையுடன் வெளியிட்டு வருகின்றார். வியாக்கியானங்களையும் விளக்கங்களுடன் வெளியிடுகின்றார். அன்பர்களின் உண்மையான ஐயங்களை 'கேள்விபதில்' என்ற தலைப்பில் தீர்த்துவைக்கின்றார்.

முன்னோர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை உடனே கண்டிக்கவும் உண்மைகலை விளக்கவும் தகுந்த வன்மையாளர். அறிஞர்கட்கும் பக்தர்கட்கும் அடங்கியிருப்பவர். சுயநலமின்றிச் சமயத்துக்குத் தொண்டாற்றும் தூய வேதியர். 'வித்யா விசாரத' 'திவ்யார்த்த ரத்னநிதி' என்று சிறப்புப் பெயர்களும் உடையவர். இப்பெரியாரை எவ்வளவு பாராட்டினும் தகும். இந்நூலைப் படிக்கும்போது இவரது பரந்த அறிவும் சிறந்த தொண்டும் நம்மால் அறியமுடிகிறது. இப்பெரியார் இதுபோன்று பல நூல்கள் எழுதிச் சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற நம்பெருமாள் திருவருள் பாலிப்பாராக.

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வாழ்க!
வைணவக் கம்பன் வாழ்க!


இங்ஙன்,
அன்புள்ள,
கி. வேங்கடசாமி.

வி.பூதூர், S.A. Dt.
1 - 7 - 1984

Saturday, May 29, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 3

'செங்கோல்' தொடர் 10

"நாடவிட்ட படலத்தில் திருவேங்கடத்தைப் பற்றியுள்ள 4 செய்யுள்களில் ஒன்றில் கூடத் திருமாலின் வடிவத்தைக் காட்டவில்லை; "... ... வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும் நான்மறைகளுக்கு அது உறைவிடம் ஆகலாம் தானே! வேங்கடத்தை அடைவோர் முத்திபெறுவதற்கு வைணவத்தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே! வேங்கடமலையை 4 செய்யுள்களால வருணிக்கப் புகுந்தவர் அந்த மலையில் நின்ற வண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்; இதெல்லாம் எதைக் காட்டுகின்றன? கம்பநாட்டார் மறந்தும் புறந்தொழாக் கொள்கையை வலியுறுத்தும் வைதிக வைணவர் அல்லர் என்பதைத் தானே!" இது செங்கோல்.

'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' என்ற வரியால் வேலவன் குன்றம் எனச் சுட்டிப் பின் 'அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக் காட்டத் தவறிவிட்டார்' என்பதனால் அது திருமால் திருமலைதான் என்பதைக் குறிப்பது காண்க.

'முத்தி பெறுவதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டுமென்பதில்லையே' என்கிறது செங்கோல். பரிபாடலில் 'நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை - ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்' என்று முத்தியளித்தற்குப் பிறதெய்வங்கட்கு உரிமையில்லை என்பதால் முத்தி பெறுதற்கு அது வைணவத் தலமாக இருக்கவேண்டும் என்பதை உணர்க. "பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்' என்று கம்பனும் திருவவதாரப்படலத்தில் இதை ஏற்றுக்கொண்டிருப்பது காண்க.

"நாடவிட்ட படலத்திலே வேங்கடமலையை வருணிக்குமிடத்திலே அந்த மாமலையில் நின்றவண்ணம் காட்சி அளிக்கும் நெடுமாலின் உருவம் காட்டப்படாததற்கு வைதிகப் புலவர்கள் என்ன சமாதானம் சொல்லமுடியும்?" இது செங்கோல். ஆறு செல்படலத்தில் (36) 'வலங்கொள்நேமி மழைநிற வானவன் - அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை - விலங்கும் வீடுறுகின்றன மெய்ந்நெறி புலங்கொள்வார்கட்கனையது பொய்க்குமோ?" என்று திருமாலையும் அங்குள்ள விலங்கும் வீடுறுதலையும் பாடிய கம்பநாடர் திருவுள்ளம் நன்கு விளங்குகின்றதே! இதற்குச் செங்கோல் என்ன செப்பும்?

"'கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரேல் உம் நெடிய கொடுமைநீங்கி வீடுறுதிர் ஆதலினால் விலங்குறுதிர்' என்னும் வரிகளிலே வேங்கட மலையை நெருங்காதீர் என்று கதையின் தேவைக்காகக் கூட பரமவைணவர் ஒருவர் சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியுமா?" என்கிறது செங்கோல். 'இராமகாதைக்கு இது பொருந்துமென்றாலும்' என்பதன் கருத்துயாதோ? 'விலங்கும் வீடுறுகின்றன' என்று ஆறு செல்படலத்துள் கூறுவதை நோக்க, விலங்குகளாகிய நீங்கள் சென்றால் எடுத்த காரியத்துக்கு இடையூறாகும் என்று உண்மையாகவே நம்பித்தான் சொல்கின்றனர். திருவிருத்தத்தில் (6) 'உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே' எனவும் திருவாய்மொழி 10 - 7 - 1 'செஞ்சொற்கவிகாள்! உயிர்காத் தாட்செய்ம்மின்' எனவும் வருவனவற்றை நோக்குக.

தொடர் 10ல் 'வேங்கடம் வேலவன் குன்றமாக இருப்பினும்' எனக் காட்டிய செங்கோல் 'இனி, வேங்கடமலையில் ஆறுமுகன் கோயில் கொண்டிருந்தார் எனச் சைவப் புலவர்களிலே சிலர் கூறுகின்றார்களே! அதையும் பார்ப்போம்' என்கிறது. இக்கருத்து இதற்கு உடன்பாடில்லை போலும், ஆயின் அதனை ஏன் இங்குக் கூறுதல் வேண்டும்? நாமும் அதைப் பார்ப்போம்.

"தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் அவர்; அவர்களிலே எவரும் வடவேங்கடத்திற் கோயில்கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை; ஆனால் பிற்காலத்தில் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை எழுதிய திரு. மாதவச்சிவஞானயோகிகள், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்னும் சொல்லுக்குக் கீழ்வருமாறு விருத்தியுரை கூறுகிறார் - 'தமிழ்நாட்டிற்கு வடக்கண் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபு பற்றி' என்பது" எனக் காட்டுகிறது செங்கோல்.

'தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்கள் பலர் ஆவர். அவர்களிலே எவரும் வடவேங்கடத்திலே கோயில் கொண்டுள்ள தெய்வத்தைப் பற்றிய ஆராய்ச்சியிற் புகவே இல்லை' என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்கொப்பாகும். என்னை? எனின்: 'தூயஞானம் நிறைந்த சிவச்சுடர் தானேயாகிய தன்மையாளன்' என்று பாராட்டப்பெற்ற பேராசிரியர் நச்சினார்க்கினியர் - திரு. மாதவச்சிவஞானயோகிகட்கு முந்தியவர் என்பதில் யார்க்கும் ஐயம் இல்லை. அப்பெரியவர், பனம்பாரனார் கூறிய 'வடவேங்கடம்' என்ற சொற்கு 'நிலங்கடந்த நெடுமுடியண்ணலை உலகம் தவம்செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரினும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்' என்று உரையிட்டுள்ளதை இல்லை என்று செங்கோல் செப்புமா?

'சமன்கொள் வீடுதரும் தடம்குன்றம்' என்று (திருவாய்மொழி 3 - 3 - 7) நம்மாழ்வார் அருள்வர். வேங்கடத்தை வீடுதரும் மலை என்று நம்மாழ்வாரும் கம்பரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் வற்புறுத்தலைக் காணும்போது பண்டைநாளிலிருந்தே இக்கருத்து பரவி வருகின்றதை உணரலாம். இங்கு ஹரிசமயதிவாகரம் தொகுதி 3 பகுதி 3ல் ஆராய்ச்சிவல்லுநர் திரு. மு. இராகவையங்கார் அவர்கள் கூறுவது நோக்கத்தகும்: -

'அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் 'ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: - யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா' என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே 'இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் - குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்' 'குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் - அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் - சென்று சேர் திருவேங்கடமாமலை' என்றருளிச்செய்தார். 'வேதவெற்பு' என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டு போலும் என்க.

"ஒருகால் மேற்படி பண்டிதர் 'சென்னை ராஜதானிக் கலாசாலைப் புரொபஸராய் இருந்த சேஷகிரி சாஸ்திரியார் எழுதியவாறு இராமாநுஜர்க்கும் பின்பிருந்தவர்களே ஆழ்வார்கள் என்று கருதியிருத்தலும் கூடும். அவ்வாறாயின் பொதுநோக்கினரும் சங்கத்துச் சான்றோரும் ஆகிய ஐயனாரிதனார்:-

'வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்
கிருளீயும் ஞாலத் திடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்'


எனல் காண்க. இதுவும் இடைச்செருகல் ஆயின் சிலப்பதிகாரத்துள் வரும் 'பகையணங்காழியும்' என்பதும் இடைச்செருகலாயிருக்கலாம்". இவை நினைவிற்கொள்ளத்தகும்.

மேலும், திரு. மாதவச்சிவஞான யோகிகள் கூற்றை மறுத்துப் பேராசான் அரசஞ்சண்முகனார் தம் சண்முகவிருத்தியில் கூறுவதும் இங்கு நோக்கத்தகும்:-

"இனி, அவர் 'தமிழ்நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் - அகத்தியனார்க்குச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள் வரைப்பு என்னும் இயைபுபற்றி' என்றார். அது கருத்தாயின் அவர்தாமே 'இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்' எனக் காஞ்சிப் புராணத்துட் கூறலான், அறுமுகக் கடவுளுக்குத் தந்தையாகலானும் அகத்தியனார்க்குக் குரவனாகலானும் அக்கண்ணுதல் வரைப்பினுள் ஒன்றைக்கூறல் வேண்டும்; அற்றன்று; இருவரும் அபேதமாதல் கருதி அங்ஙனம் கூறினார் எனின்: தெற்கின் கண்ணும் அறுமுகக் கடவுள் வரைப்பினுள் ஒன்றே கூறல்வேண்டும் அங்ஙனமின்மையானும், எல்லை கூறுதல் யாவர்க்கும் ஒப்பமுடிந்ததாதல் வேண்டுமாகலின், 'வீங்கு நீரருவி ... ... நின்றவண்ணமும்' (சிலப் - காடுகாண் 41 - 57) என இளங்கோ அடிகள் கூறினமையும், திருமுருகாற்றுப்படையுள் முருகோன்மலை எனப் பரங்குன்ற முதலாய பிறகூறலன்றி வேங்கடத்தை அவன்மலை என நக்கீரனார் கூறாமையும் புராணங்களுட்பல நெடியோன் குன்றம் எனவே கூறலுமாராயின் வேங்கடம் அறுமுகக் கடவுள்மலையும் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடியாமையாலும், முருகன் குறிஞ்சிநிலத் தெய்வமாகலின் அமையுமெனின், கயிலாயத்தையும் மேருவையும் கண்ணுதல் மலையெனவும், பொதியினை அகத்தியன்மலை எனவும் கூறலன்றி அவன்மலை எனக் கூறலினையான் அவ்வாறே வேங்கடமும் நெடியோன்மலையாகலன்றி அறுமுகக்கடவுள் வரைப்பெனல் கூடாமையானும் அது பொருந்தாது என்பது". இந்த எடுத்துக்காட்டு செங்கோலுக்குப் போதுமென நினைக்கிறேன்.

Wednesday, April 21, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 2

'செங்கோல்' தொடர் 3

"பிணக்கு இல்லாத சங்ககால நிலையை ஒட்டி இறைவனைப் பெயர் குறிப்பிடாது 'உலகம் யாவையும்' என்ற பாட்டில் கம்பர் 'தலைவர்' என்ற சொல்லால் கூறினார்" என்கிறார். சிவபெருமான் ஐந்தொழில் செய்பவன் என்பது சைவர் கொள்கை; அதற்கு மாறாக 'முத்தொழில் செய்யும் அலகிலாவிளையாட்டுடையான் திருமால்' என்பது வைணவர் கொள்கை. இத்திருமாலைத் 'தலைவர்' என்பது பொருத்தம் தானே. முதற்பாட்டில் 'தலைவர்' என்றும், அடுத்தபாட்டில் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' எனச் சத்துவகுணமாகிய முற்குணத்தையுடைய திருமாலே முதல் என்றும், அதற்கும் அடுத்தபாட்டில் அத்திருமாலாகிய அரியையே 'ஆதியந்தம் அரி எனயாவையும் - ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன' என்று வேதத்தின் முதலிலும் முடிவிலும் 'அரி ஓம்' என ஓதினர் என்றும், அடுத்துவரும் அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்தில் வெளிப்படையாக அந்த முதலே இராமன் என்பதனை,

"வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே"


என்றும் காட்டுகின்றார். இந்தமுறை - திருவாய்மொழியில் முதற்பத்து முதல் திருவாய்மொழியில் திருமால் பெயரைக் குறிப்பிடாது, 2ம் திருவாய்மொழி 10ம் பாசுரத்தில் 'வண்புகழ் நாரணன்' என்று காட்டுவதை அடியொற்றியுள்ளது.

'செங்கோல்' தொடர் 4

'அவர் சமய வைதிகர் அல்லர் என்பது தேற்றம்' என்கிறது. ஆனால் சைவர் என்றுமட்டும் சொல்வது பொருந்துமா?

'செங்கோல்' தொடர் 5

'கம்பரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதனை வலியுறுத்துமிடங்களிலே தூய வைணவராகவே மாறிவிடுகிறார் என்பதில் சிறிதும் ஐயமில்லை' என்கிறது. (சிறிது பெருமூச்சுவிடலாம்). ஆனால் மற்ற இடங்களிலே இயல்பான சைவராகவே இருக்கிறார்போலும்!

'செங்கோல்' தொடர் 6

'இந்த இரு வேறு தெய்வங்களையும் மனவேறுபாடின்றித் தங்கள் தெய்வங்களாகவே தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்று தெரிகிறது' என்கிறார். 'ஆயின், தமிழர் ஏற்றுக்கொண்டிருந்தனர் என்றால் கம்பரைத் தமிழர் என்று சொல்லாது சைவர் என்பது பொருந்தாதல்லவா?' அங்கும் இங்கும் குறிப்புகளாகத் திருமாலின் அவதாரக் கதைகளை முழு அளவில் கூறும் தமிழ்நூல் எதுவும் சங்க காலத்தில் இல்லை' என்கிறார். சிவபெருமான் வரலாறுகளை முழுதும் கூறும் தமிழ்நூல்களேனும் சங்ககாலத்தில் உளதோ? என்பதனை ஐயா அவர்களே சொல்லுதல் வேண்டும்.

'தமிழர் எல்லோருமே வழிபட்டுவந்த சிவன், திருமால், கொற்றவை, முருகன் ஆகிய தெய்வங்களோடு பல்லவர் காலத்திலே ஆறாவது தெய்வமாகிய கணபதியும் தமிழகத்துக்கு வந்தார்' என்பதில் ஐந்தாவது தெய்வம் யாதோ? அறியோம். 'இந்திரனை வழிபடுவோர் ஐந்திரேயர் என்றும் உறுதியாகிவிட்ட ஷண்மதம் தோன்றுகிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த சூழ்நிலை இது' என்கிறது. ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதம் இதுதானா? என்பதனை ஐயாவே தான் விளக்கவேண்டும்.

'செங்கோல்' தொடர் 7

'சடகோபரந்தாதி படைக்குமளவுக்கு அந்த ஆசார்யரிடம் பக்தி இருந்திருக்குமானால் தமது காப்பியத்திலே அவரைப் புகுத்தியிருக்கக் கம்பரால் முடிந்திருக்கும்; தமக்கு உணவளித்துக் காத்த சடையப்ப வள்ளலைப் புகுத்தவில்லையா?' என்கிறது செங்கோல். சேக்கிழார் - தமது தொண்டர்புராணத்திலே மணிவாசகரைக் குறிப்பிடாமையால், மணிவாசகர்க்கு முன்பு சேக்கிழார் இருந்தாரா? மணிவாசகரிடத்தில் சேக்கிழார்க்குப் பத்திமை இல்லையா? என்பதற்குச் சமாதானம் கண்டால் இதற்கும் சமாதானம் காணலாம். 'திருத்தொண்டத் தொகையிற்கூறிய அடியார்களை மட்டும் பெரியபுராணத்திலே சேக்கிழார் கூறினார்; அதனால் அதில் இல்லாத மணிவாசகப் பெருமானை அவர் கூறவில்லை' என்னலாம். ஆயின் கீழேயுள்ளதனை நோக்கத்தகும்:- அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலராக வெளிவந்த கம்பராமாயணம் சுந்தரகாண்டத்து முன்னுரையில் 'பழம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிற்காணப்படும் பதிகம் (நுவல்பொருட்சுருக்கம்) இராமாவதார நூலிற்காணப்படவில்லை; எனினும் இராமாவதார நூலாசிரியராகிய கம்பர், ஆழ்வார்களுள் இராமபிரான்பால் பெரிதும் ஈடுபாடுடையவரான குலசேகரர் அருளிய பெருமாள்திருமொழியுள் 'அங்கண் நெடு மதிள்புடைசூழ்' என்று தொடங்கும் பத்தாந்திருமொழியைக் கொண்டு அதன் விரியாகத் தம் இராமாவதார நூலை இயற்றியருளினார் என்று கருதலாகும். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையின் விரியாய் இயற்றியருளியதும் இங்கு நோக்கத்தகும். இம்முறையில் இராமபக்தராகவே மாறிய கம்பர் எந்த ஆழ்வாரையும் சொல்வதற்கில்லை; இராமவதாரம் அரங்கேற்றும்போதுதான் 'நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள் - விஞ்சிய ஆதரத்தாற்கேட்பக் கம்பன் விரித்துரைத்த - செஞ்சொல் அந்தாதி' என்றதனால் இராமாவதார நூலிற்சொல்லாத குறைதீரச் சடகோபரை நூறுபாடல்களால் போற்றியுள்ளார் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இராமாவதாரத்தில் சடகோபரைப் பற்றியோ பிற ஆழ்வார்களைப் பற்றியோ சொல்லாமை குறையாகாது. பாயிரத்துள் 'தருகை நீண்ட தயரதன்' என்று தொடங்கும் பாடலைச் சேர்த்துள்ளமை உணர்க. இஃது இடைச்செருகல் எனின் சிவனைப்பற்றிக் கூறுபவையும் இடைச்செருகலாக இருக்கலாமே!

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெள்ளிவிழா மலரில் மேற்படி சுந்தரகாண்ட முன்னுரையில், இவர் இயற்றிய பிறநூல்களுள் சடகோபரந்தாதியும் ஏரெழுபதும் சிறப்புடையவை என்பதும் காண்க.

'செங்கோல்' தொடர் 8

செங்கோலார் "இரணியன் நாத்திகன்; இராவணன் சிவபக்தன்; மைந்தனுடைய வெட்டுண்ட கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்துக்கொண்டு பிள்ளைப்பருவத்தில் அவன் தன்னைத் தழுவியதை நினைத்து, ஆற்றாமை கொள்கிறான்; அப்படிப்பட்டவனையா தன் பிள்ளையையே கொலைபுரிய முயன்ற இரணியனோடு ஒப்பிடுவது" என்கிறார்.

இரணியன் நாத்திகன் என்பது எப்படிப் பொருந்தும்? தவம் செய்து இறைவனிடத்தில் வரம்பெற்றவனை நாத்திகன் என்னலாமா? வரம்பெற்றபின் இறைவனைக் காட்டிலும் யானே பெரியவன் என்று ஆணவம் கொள்கிறான்; அக்கருத்துக்கு மாறுபட்டவன் பிள்ளையாயினும் விரோதிதானே? சீதையை விட்டுவிடு என்ற இந்திரசித்தை இராவணன் வெறுக்கவில்லையா? பக்தியில் மிக்கவர்களாயிருந்தும் ஆணவத்தில் இரணியனும் இராவணனும் ஒரு தன்மையரே. தாயுமானாரும், ஆணவத்தினுமிக்க ஆங்காரத்தை வருணிக்கும்போது, 'ஆங்காரமான குலவேட' என்ற பாட்டில் 'ஈங்கார் எனக்குநிகர் என்ன ப்ரதாபித்திராவணாகாரமாகி' என்று குறித்தல் நோக்கத்தகும். முருகன் அவதாரத்தை வான்மீகி குறிப்பிட்டிருக்கவும் கம்பர் அதை நீக்கியது சரசத்துக்குப் போலும்!

'செங்கோல்' தொடர் 9

"இரணியன் வதைப்படலத்திலே பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன; சொல்லுக்குச் சொல் சுவையூட்டுவனவாக இருக்கின்றன; தூணைப் பிளந்துகொண்டு திருமால் நரசிம்மாவதாரம் எடுக்கும் இடத்திலே அண்டமே கிடுகிடுப்பது போன்ற ஒரு அச்சம் நமக்கு ஏற்படத்தான் செய்கிறது" என்கிறார் செங்கோலார். பல செய்யுள்கள் கம்பநாடரின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன என்றால் சில செய்யுள்கள் தானே இடைச்செருகல் என்று தோன்றுகிறது? எனவே ஐயா அவர்கள் கருத்துப்படி 'இரணியன் வதைப்படலம்' கம்பர் செய்ததுதான் எனத் தோன்றுகிறது. அங்ஙனம் இருக்க 'இரணியன் வதைப்படலம் முழுவதும் கம்பர் இயற்றியது தான் என்று ஏற்றுக்கொள்வோமானால் 'உலகமகாகவிஞர்கள் மண்டலத்திலிருந்து கம்பரைக் கொஞ்சம் தாழ்த்திவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று கூறுவது பொருந்துமா? ஆய்ந்து பார்க்க.

Friday, April 16, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 1

[வித்வான் திரு. கி. வேங்கடசாமி ரெட்டியார், வி.பூதூர், S.A.Dt]

மதிப்பிற்குரிய உயர்திரு (சைவத்திரு) ம.பொ.சி. அவர்கள் தமது 'செங்கோல்' இதழில் (மலர்.33 இதழ் - 10 முதல்) 17 தொடரில் 'கம்பநாடர் சைவரா, வைணவரா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். (பிறகு 'கம்பரின் சமயக்கொள்கை' எனும் நூலாகவும் இதனை வெளியிட்டுள்ளார்.) அதனுள், முதல் தொடரில் 'ஆகவே கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும், வைணவர்களின் தனித்தெய்வமாகக் கருதப்படும் திருமாலின் அவதாரமான இராமனை நாயகனாகக் கொண்ட காப்பியத்தைப் படைப்பதற்கு அவருக்குத் தடை எதுவும் இருக்கவில்லை' என்று சொல்லி, 17-வது தொடர் முடிவில் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என முடிக்கின்றார். இதனால் ஐயா அவர்கள், முன்னமேயே கம்பர் சைவர் தான் என்று உறுதிகொண்டுவிட்டார் என விளங்குகிறது. இதன் காரணம் யாதோ உரைத்திலர். சைவர்கள் சமரசவாதிகள் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். இதைப்பற்றி விளக்குவதற்குமுன் இன்றியமையாத இரு நிகழ்ச்சிகளை ஈண்டுக் குறித்தல் தகும்.

(1) திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். 'நம்மாழ்வாரும் தமிழ்நாடும்' என்ற ஒரு சிறு நூலும், 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்' என்ற ஒரு பெருநூலும், வேறு பல நூல்களும் வெளியிட்டவர். அந்நூல்கள் என்னைக் கவர்ந்தன. சுமார் 50யாண்டுகட்குமுன் யான் எழுதிய /'காந்தியடிகள் நெஞ்சு விடு தூது' என்னும் நூற்கு அணிந்துரைபெற அவரை அண்டினேன். அவ்வமயம் உடன் இருந்தவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் இருந்த திரு. S. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், சைவசமாஜச் செயலாளர் திரு. ம. சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஆவர். /'காந்தியடிகள் நெஞ்சுவிடுதூது' என்றதுமே, திரு.வி.க. அவர்கள் சினந்துரையாடினர். "அவர் மகாத்மா அல்லர்; தெரியாமையால் அவரைப் பற்றி நூல் ஒன்று எழுதிவிட்டேன்; அதற்கு இப்போது வருந்துகிறேன். தாழ்த்தப்பட்ட மக்கட்கு 'ஹரிஜன்' என்ற பெயரைப் புதிதாகச் சூட்டினாரே! அதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தானே பொருள். திருடர்கள் என்றும் பொருள்படுமே!" என மேலும் ஒருமை வசனத்தில் பேசினர். பின்னர், பத்திமைவடிவாய நண்பர் ஆரியூர் வ. பதுமநாபபிள்ளையவர்கள்பால் அணிந்துரைபெற்று அப்போது அந்நூலை வெளியிட்டேன். அண்மையில் அருங்கலைக்கோன் திரு ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரையுடன் வெளியிட்டுள்ளார். 'ஹரிஜன்' என்ற சொல் வைணவமக்களையே குறிக்குமெனக் கருதித் திரு.வி.க. அவர்கள் அடிகளாரை வெறுத்தார் எனத் தெரிகிறது. இது சமரச உணர்வு போலும்!

(2) சிவம் பெருக்கும் சீலர், சிவக்கவிமணி, தமிழ்க்கடல் இராய. சொ. அவர்களையும் தமிழுலகம் நன்கறியும். நல்ல பேச்சாளர். கவிஞர். காந்தியத்தில் திளைத்தவர். கம்பரிடத்து மிக்க ஈடுபாடு உடையவர். இவர்பால் எனக்கு மதிப்புண்டு. அவர்க்கும் என்பால் அன்புண்டு. இரு சமயநூல்களிலும் பயிற்சி உள்ளவர்; எனினும் கம்பர் சைவரே என்றே கருத்துடையவர். இதனால் - 'கம்பனும் சிவனும்' என்ற தலைப்பில் சிவனைப் பற்றிக் கம்பர் காட்டிய பாடல்களைத் தொகுத்துப் பொழிப்புரையும் எழுதியுள்ளார். 395 இடங்களில் சிவனைப் பற்றி உள்ளது. கவிமொழியாக உள்ளன 168 இடங்கள் என்று காட்டியுள்ளார். அதனுள் 'மழுவாளி' என்ற சொல் இரண்டிடத்துள்ளது என்றெழுதியுள்ளார். அந்நூலை ஊன்றிப் படித்தேன். 'மழுவாளி' என்ற சொல் உள்ள ஒருபாடல் விடுபட்டிருந்தது. அப்பாடல் ஆரணியகாண்டம் - விராதன் வதைப் படலத்துள்ளதாகும்.

"மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கென்ன குறைவுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த
ஐயத்தாற் சிறிதையம் தவிர்ந்தாரும் உளர் ஐயா!" என்பதாகும்.

தமிழ்க்கடல் ஐயா அவர்களை நேரில் சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'எப்படியோ விடுபட்டது' என்றார். இப்பாடல் சிவனுக்கு ஏற்றம் தரவில்லையாதலால் விடுத்தனரோ அல்லது உண்மையிலேயே விடுபட்டதோ அவனே அறிவான். இவ்விரு நிகழ்ச்சிகளும் சமரசத்தின் தன்மையை ஓரளவு காட்டுவன அல்லவா?

நம் செங்கோல் 'பிற்காலத்து சமய ஸ்தாபனங்கள் வரையறுத்த நியதிப்படி திருமாலானவர் வைணவ சமயத்தவரின் தெய்வமாகிறார். அதனால் இராமகாதை வைணவர்களின் சொத்தாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்குத் தமிழ்நாடுமட்டும் விலக்கு என்று சொல்லலாம்' என்கிறது.

இவர் கருத்துப்படி திருமாலானவர் சைவர்கட்கும் சொத்தாகப் பாவிக்கப்பட்டுவந்தார் போலும்! "நெய்தல் நிலத்தில் வாழும் மக்கட்கு மட்டும் உரிய தனித்தெய்வமான திருமாலானவர் தமிழகத்தில் நால்வகை நிலங்களிலேயும் வாழும் பொதுமக்களால் வழிபடும் பொதுத் தெய்வமாக இருந்தது புலப்படுகின்றது. ஆழ்வாராதியர்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை ஒருசமயத்தாருக்குரிய கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதற்கு முன்பிருந்த நிலையிது' என்கிறது செங்கோல். 'முல்லை' என்பது 'நெய்தல்' என்றிருப்பது அச்சுப்பிழை போலும். நால்வகை நிலத்து வாழும் மக்கள் திருமாலை ஒரு சமயத்தவர்க்கே விட்டுக்கொடுத்தனர் போலும்!

'இதிலிருந்து கம்பர் காலத்திற்கு முன்பு தமிழினத்தவரிடையே சைவ-வைணவ சமயங்களைப் பொறுத்தவரையில் சமரச உணர்வு கடைப்பிடிக்கப்பட்டதென்ற உண்மையை அறியமுடிகிறது. ஆகவே, கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவ சமயத்தைச் சார்ந்தவராகவே இருப்பினும்...' எனத் தொடர்கின்றது.

"தமிழினத்தவரிடையே ... ... கடைப்பிடிக்கப்பட்டது" என்பதில் சைவத்தையோ வைணவத்தையோ சாராது தமிழினத்தவர்கள், தமிழினத்தவர்களாக இருந்தார்கள் என்று கொள்ளாது, 'ஆகவே கவிச்சக்ரவர்த்தி கம்பர் சைவராகவே இருப்பினும்' என்று கொண்டது எதுபற்றியோ? தமிழினத்தவர் சமரச உணர்வோடு இருந்திருக்கலாம்; ஆயின் சைவராகத்தான் இருந்தனர் என்பதற்கு மூலம் யாதோ? அறியோம்.

'செங்கோல்' தொடர் 2

'செங்கோல்' தன் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் தொடர் 2ல் ஆதிசங்கரர், இராமலிங்கர், தியாகையர் இவர்களைக் காட்டுகின்றது. இவற்றைப் பார்ப்போம் :-

(1) ஆதிசங்கரர் - 'சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு அரும் பாடுபட்ட ஆதிசங்கரர் சைவர் என்பது மறுக்கமுடியாத பேருண்மையாகும்' என்கிறது.

ஆதிசங்கரர் சைவப்பெருமக்களால் கொலைநூல் என்று ஒதுக்கப்பட்ட ஸ்ரீபகவத்கீதைக்கு முதல்முதல் உரை எழுதியுள்ளார்; அவ்வுரையில் 'வாசுதேவனே உயர்ந்த தெய்வம்' என்று பலவிடங்களில் உறுதிப்படுத்துகின்றார்; மேலும் ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமத்திற்கும் உரை எழுதியுள்ளார்; சிவ சகஸ்ரநாமத்திற்கு உரை எழுதவில்லை; சங்கர நாராயண ஸ்ம்ருதி என்று சேர்த்துக் கையெழுத்திடாமல் தனியாக நாராயண ஸ்ம்ருதி என்றே கையெழுத்திடுகின்றார். ஆதலால் ஆதிசங்கரர் வைணவர் என்னலாமே தவிர சைவர் என்பது பொருந்தாது. பின்னால் வந்த சிலர் பலவகை நூல்களை எழுதி சங்கரர் பெயரால் பரப்பிவிட்டனர் என்பது உலகறிந்த செய்தி. இவற்றைக் கொண்டு ஆதிசங்கரர் சைவர் என்பது அடாது.

(2) இராமலிங்க சுவாமிகள்:-

'19ம் நூற்றாண்டில் தோன்றி 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டுக் குரலை எழுப்பி இந்து சமயத்தில் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் காணமுயன்ற இராமலிங்க சுவாமிகளும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான்மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்கிறது செங்கோல். எம்மதமும் சம்மதம் என்னும் ஒருமைப்பாட்டுக்குரலை இராமலிங்க சுவாமிகள் எப்பொழுது எழுப்பினார் என்று குறிப்பிடவில்லை.

திருவருட்பா அண்மைப்பதிப்பு. 907 '... ... வைண(வ)நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்கு நடுங்குவ மனமே' என்று வைண(வ)ரைக் கண்டால் மனம் நடுங்குகிறது என்பதனாலும், 1960 திருவடிப்புகழ்ச்சியில்:-

'மால்விடை இவர்ந்திடு மலர்ப்பதம் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபதம் மிக்கதிரு மால்விழி இலங்கும்பதம்
மால்தேட நின்றபதம் ஓரனந்தம்கோடி மால்தலை யலங்கற்பதம்
மால்முடிப் பதம்நெடிய மாலுளப்பதம் அந்த மாலும் அறிவரிதாம்பதம்
மால்கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட அளிக்கும்பதம்' என

எத்தனை மாலை அடுக்கலாமோ அத்தனையும் அடுக்கிய அருமைப்பாட்டாலும், 824ல் திருமாலைக் 'கடல்தூங்கும் ஒரு மாடு' என வழங்கலானும் அடிக்கடி ஆங்காங்கே திருமாலைத் தாழ்த்திப் பேசுவதாலும் சுவாமிகளின் 'எம்மதமும் சம்மதம்' என்னும் ஒருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்! 'மேலும் வைணவர்களின் தனித்தெய்வமான இராமபிரான் மீது பல செய்யுள்களைப் படைத்துள்ளார்' என்பதும் அப்படித்தான். சுவாமிகள் பாடிய பல்லாயிரம் செய்யுள்களில் இராமபிரான்மீது பத்து செய்யுள்கள் (1939 - 1948) பாடியுள்ளார். அதுவும் அண்மைப்பதிப்பில் 'இது கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது' என்றுள்ளதால் - இச்செய்யுள்களும் பத்தியினால் பாடப்பட்டதல்ல என்று தெரிகிறது. இவற்றுக்குச் சமாதானம் உளதேல் பிறவற்றுக்கும் சமாதானம் உண்டு எனக்கொள்க.

(3) தியாகையர்:-

'தூய சைவரான அவர் கம்பநாடரையே பின்பற்றி ராமபக்தராக வாழமுடிந்திருக்கிறது' எனச் செங்கோல் செப்புகின்றது. இதையும் பார்ப்போம் :- ஸ்ரீதியாகராஜஸ்வாமி கீர்த்தனலு. (தெலுங்குப்பதிப்பு) இது வித்வான் கே.வி. ஸ்ரீநிவாச ஐயங்காரால் பரிசோதிக்கப்பட்டு எம். ஆதி அண்ட் கம்பெனியரால் சந்த்ரா முத்ராக்ஷர சாலையில் 1930ல் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாளரின் முன்னுரை (மொழிப்பெயர்ப்பு) '...... ஐயர் அவர்களின் முத்திரையோடு இப்போது வெளியிடப்பட்டுள்ள சுமார் 700 கீர்த்தனங்களுள் ஒரு நூறு கீர்த்தனைகள் அய்யர் அவர்கள் எழுதியதல்ல என்று தெரிகிறது. ' தாரகமந்த்ரோபதேசம் பெற்று 96 கோடி ராமநாம ஜபித்து ச்ரிராமனுடைய கருணைக்கிலக்காகியிருந்து அனேக கீர்த்தனங்கள் பாடி இராமனுக்கு அர்ப்பணம்செய்த ஐயரவர்கள் சிவபக்தரா? அல்லது விஷ்ணு பக்தரா? 'ஏல நீ தயராது' எனும் கீர்த்தனையிலும் மேலும் அனேக கீர்த்தனங்களிலும் 'ராஜதரநுத' 'சசிகளாதரநுத' என்று பலமுறை சொல்லியிருப்பதனால் இவர் விசிஷ்டாத்வைத மதப்ரகாரமே சிவனைப் பரமபாகவத கோஷ்டியில் சேர்த்திருக்கிறார் அன்றிச் சிவனுக்குப் பரத்வம் சொன்னாரில்லை. இப்படி அனேக காரணங்களாலே இப்போது பழக்கத்தில் இருக்கின்ற சிவகீர்த்தனங்கள் ஐயர் அவர்கள் எழுதியதல்ல; சிலர் சில கீர்த்தனங்களை ஐயர் அவர்கள் பேரால் பெய்து பாடிப் பிழைக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

இதனால் தியாகையர் பற்றியும் ஓரளவேனும் புரிகிறதல்லவா?

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - முதல் பக்கம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்

('கம்பனின் சமயம்' இரண்டாம் பாகம்)
["கம்பரின் சமயக்கொள்கை" என்னும் தலைப்பில் திரு. ம.பொ.சி. அவர்கள் எழுதிய நூலுக்கு ஸுதர்சனரின் மறுப்புரை]


ஆசிரியர்:-

ஸ்ரீ S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
(ஸுதர்சனர்)

'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 620 017.

------------------------
ஸுதர்சனர் மணிவிழா வெளியீடாக
பாரதீய பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ சபையின்
11-வது மகாநாட்டில் வெளியிடப் பெற்றது.
18 - 11 - 1984
-----------------------

ஸ்ரீ. ரா. ஸ்ரீ. கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் குடும்ப
தர்ம சொத்துக்களின் ஆதரவில் வெளியிடப்படுகிறது.
டிரஸ்டிகள்:-
S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,M.A.B.L., அட்வகேட்.
S. ராம அய்யங்கார், B.Sc.B.L., அட்வகேட்.
---------------------------------
விலை ரூ. 8-00 தபால் 1-00
ஸ்ரீநிவாஸம் பிரஸ், 8, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 12. இறுவாய்

நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார்; அவர், எல்லாவற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார்; எங்குமுள்ள அவ்விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப்படமாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதையும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்ற பேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணை செய்கிறது. இப்பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந்நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது?

தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத்துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளையெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.

தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வாரும், அவர் போன்ற மற்றப் பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்வி பெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்; அத்திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.

***

இத்துடன் இந்நூல் நிறைவு பெற்றது!

Friday, April 9, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 11. பாட்டு

இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ்நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது.

பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம்மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும்.

பண்டை மூதறிஞர் தங்கருத்துகளைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க. இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ்வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு.

இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமாயிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங்கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவதில்லை. இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமல யோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமல யோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறிக்கிடுவதில்லை.

இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ்விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக்கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும், பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர்களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட்டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பாட்டாகப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; 'எல்லாம் இறை மயம்' என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்சமன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத் தெய்வம் நடம் புரியும்!

இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை.

ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை,

மெல்லிய லாக்கை ... ...
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன்...

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே ... ...

தாமரைக் கண்ணனை... ...
.... ... நாவலர்
பாமருவி நிற்கத் தந்த பான்மையேய்... ...

செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும்
கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று...

சூழ்கண்டாய்... ... ...
யாழின் இசையே அமுதே

விண்ணுளாய்... ... ...
பண்ணுளாய் கவிதன்னுளாய் ... ...

இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை
வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே.

செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின்
திருமா லிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து...

நண்ணா வசுரர்...
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி
தென்னா வென்னும் என்னம் மான்...

கண்ணுள் நின்றகாலன் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே...

என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க.

ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை,

மதுசூதனனை யன்றி மற்றிலேனென்
றெத்தாலும் கருமமின்றி
துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட
நின்றூழி யூழிதொறும்
விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான்
திரிவிக்கிரமனையே.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்...

என வரூஉம் திருவாக்குகளால் உணர்க.

நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்:

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்தா
லொப்பச் சேயரிக்கண்
அழுநீர் துளும்ப வலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்
ணாட்டவர் மூதுவாரம்
தொழுநீ ரிணையடிக்கே அன்பு
சூட்டிய சூழ்குழற்கே.

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே.

பொன்னுல காளீரோ புவன
முழு தாளீரோ
நன்னிலப் புள்ளினங்காள் வினை
யாட்டியேன் நானிரந்தேன்
முன்னுல கங்களெல்லாம் படைத்த
முகில்வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கென்
னிலைமை யுரைத்தே.

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளா லிறைக்கும்
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும்
எங்ஙனே தரிக்கேனுன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத் தென்செய்கின்றாயே.

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோநீ இன்னேயானால்
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னைதோள் மணந்தபேராயா!

வந்து தோன்றாய் அன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தமில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்ததொக்கும் அம்மானே.

மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ
வண்குறிஞ்சி இசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிட மறிகிலம் தமிய மாலோ.

உகக்குநல் லவரொடு முழுதந் துன்றன்
திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள்
வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம்
எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல்
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு நின்
றுழிதரு வர்கஞ்சனேவ
அகப்படி லவரொடும் நின்னோ டாங்கே
அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ.

ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக.

Tuesday, March 30, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 10 சமரசம்

ஆழ்வார் எங்குமுள்ள இறையை உணர்ந்து, அதனை வழிபட்டவர். அதனால் அவர் சமரசத்தை அறிவுறுத்தலானார். அவருக்கு எல்லாம் இறையாக - அன்பாக - சகோதரமாகத் தோன்றின. சமரச ஞானத்துக்கு இறையின் சர்வ வியாபக உணர்வு இன்றியமையாதது. இஃது ஆழ்வார் திருவாக்குகளால் நன்கு விளங்குகிறது. இறையின் சர்வ வியாபக உணர்வை அடிப்படையாக் கொண்ட சமரசமே உண்மையானது.

இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப்புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும்.

சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும்.

இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன.

குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப்பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந்திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப்போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்திக்கலாகாது. 'நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன' என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனைகட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும்.

ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம். அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழிகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம்.

குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்திவிட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்கவொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்து மூடப்பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக் கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக.

ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு:

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்...

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி...

எங்குவந் துறுகோ என்னையாள் வானே
ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்...

இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள. அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குருமாரையும் போற்றுவதாகும். அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்பதாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனை கூடாது.

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது.

நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ்நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோப மதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின.

சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினுமாக, வைணவராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைணவருட் சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, 'எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார்' - 'எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார்' என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக்கிறார். சமரசப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவதில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன்
அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னுமிவரை
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.

ஒளிமணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர்மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ ...

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே...

யானும் தானாயொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை...

முனியே நான்முகனே முக்கண்ணப்பா...

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி...

இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ்வேலையிலாவது, இத்திருவாக்குகளின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து,

இலிங்கத்திட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றுநுந்
தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசுந்
திருக்குருகூரதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய்யில்லை போற்றுமின்னே

என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், 'எல்லா சமயக் கடவுள்' என்று வலியுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார். இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? 'ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது' என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது.

நம்மாழ்வார் சமரச ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ்நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை. இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவனருளால் மதச் சண்டை ஒழிக.

சமரச நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ்வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம். சாதிபேதம் என்னும் பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப்பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப்பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம்மடிகள் என்று ஆழ்வார் பாடியிருக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே.

இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க.

சமரச ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்தியமுள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்க்டியமானது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது?

பகைமை இல்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதியாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங்களெல்லாம் செறிய,

உன்னைச் சிந்தை செய்து செய்து உன்
நெடுமாமொழி இசைபாடி யாடிஎன்
முன்னைத் தீவினைகள் முழுவேர்
அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த
இரணியன் அகல்வார்வங் கீண்ட என்
முன்னைக் கோளரியே
முடியாத தென்னெனக்கே

என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. 'உன்னைச் சிந்தை செய்து' என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொருளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். 'உன்னைச் சிந்தனையினால் இகழ்ந்த இரணியன்' என்னுங்குறிப்பால், ஆண்டவனை இகழலாகாதென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் 'என் முன்னைக் கோளரியே' என்று விளித்து, 'முடியாததென்னெனக்கே' என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம்மிடுக்கும், இவ்வீறும், இவ்வஞ்சாமையும் தமிழ்நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது.

Saturday, February 27, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 9 வழிபாடு

வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர்களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்.

வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறுவித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும்பாமலிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு இல்லையென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.

வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிராயிப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக்குரியது.

ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.

புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு, கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ்விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.

வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்களைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவதில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.

ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம். இவ்வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழுகொம்பாகக் கொண்டார். அத்திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ்வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடுகிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும் கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தாகின்றன; அவ்வுருவில் அவர் திளைக்கிறார்; புலன்கள் ஒன்றுகின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத்தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.

புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்...

திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணி போல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப்பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம். இந்நிலை பெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.

அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன்
அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே.

உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே.

உணர்வி லும்பர்...
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனதின்னருளே...

பிரான்பெரு... ...
... ... என்னுள்
இரான் எனில் பின்னையானொட்டு வேனோ.

சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை...

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழுலகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.

புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்குமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய்யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற்பாலது அன்பு மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.

அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதன்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ளவற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவான். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.

எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர்பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையுங் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.

ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதனன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.

ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே...

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா
நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.

எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.

அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது. ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப் போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ்வழி நிற்போமாக.

Friday, January 22, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 8 மூவர் முதல்

தொழில் மூன்று. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்பன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தியுண்டு. இவர் மும்மூர்த்தி எனப்படுவர். மும்மூர்த்திகட்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மும்மூர்த்திகளைப் பிர்மா - விஷ்ணு - ருத்ரன் - என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் - ஐஸிஸ் - ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் - பிரீயா - தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு - இயா - பேல் (அஸ்ரியர்); தௌலாக் - பான் - மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் - அவலோகீதீசுரர் - மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் - பினா - சொக்மா (யூதர்); அஹுரமஜதர் - மித்திரர் - அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது. மும்மூர்த்தி வழக்கு உலகுக்குப் போது என்பது உணரத்தக்கது.

மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இது பற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்திகட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறுகிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இதுபற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழிகளைப் பார்ப்போம்.

குறிப்பில்... ...
... ... மூவரில்
முதல்வனாக ... .... - திருவாசிரியம் - 3

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்...

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்...

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை...

தஞ்சமாகிய... ...
... ... மூவர் தம்முள்ளும் ஆதியை...

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி...

தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும்.

நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன?

'யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே'

என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப்பொருளுகுச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.

நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது, சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழுமுதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது. பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ்வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது.

சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும் விஷ்ணு அறியாச் சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழுமுதலுக்குரியது.

முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது; மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க.

செக்கர் மாமுகி... ...
சிவனியனிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
... .... ...
... ... ...
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட ... (திருவாசிரியம்)

என்றும்,

வரிவளையால்... ...
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்... ...

என்றும்,

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே... ...

என்றும்,

தளர்ந்தும்... ...
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

என்றும்,

நோலா தாற்றேன்... .... ...
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவநாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன.

சுரரறி ... ...
... ... பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

எனவும்,

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ... ...

எனவும்,

கள்ள வேடத்தை ... ....
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை
வேறலாமை விளங்க நின்றதும் ...

எனவும்,

வேறுகொண்டு ... ...
ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே

எனவும்,

என் திருமார்பன் தன்னை
என் மலைமகள் கூறன் தன்னை...

எனவும்,

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்... ...

எனவும் வரூஉந் திருவாய்மொழ்களிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன.

நம்மாழ்வார், மும்மூர்த்துகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே; அதற்குப் பெயர்கள் பல.

Saturday, January 2, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 7 அவதாரம்

'உருவங்கள் தத்துவ நுட்பங்களாயின், அவதாரங்களின் கருத்து என்னை?' என்று சிலர் கேட்கலாம். கேட்பதற்கு இடனும் உண்டு. அவதாரங்களைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலகில் உலவி வருகின்றன. அவைகளைப் பற்றி எழுந்த வாதப் போர்களும் பல. 'இறைவன் மனிதனாக அவதரிப்பன்' என்று சிலர் கூறுவர். 'எங்குமுள்ள இறைவன் எங்ஙனம் மனிதனாக அவதரித்தல் கூடும்' என்றும், ஆகவே, 'இறைவன் மனிதனாக அவதரியான்' என்றும், 'இறை ஆணைப்படி அவதரிக்கும் குருவை உபசாரமாக அன்பால் இறைவன் என்று சொல்வது உலக வழக்கு' என்றும் வேறு சிலர் கூறுவர். 'வீரரையும் குருமாரையும் நாளேற நாளேற இறைவன் அவதாரமென்பது உலகியல்' என்று மற்றுஞ் சிலர் கூறுவர். இன்னும் பலப்பலவாறு கூறுவோருமுளர். ஆழ்வார் அவதாரங்களைத் தள்ளவில்லை. அவர் அவைகள ஏற்றுப் போற்றியே இருக்கிறார்.

ஆனானாளுடையான் என்றஃ
தேகொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்தென்னை
முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நரசிங்க
முமாய்க் குறளாய்
கானார் ஏனமுமாய்க் கற்கியா
மின்னம் கார்வண்ணனே.

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதியஞ்சோதி உருவை
அங்குவைத் திங்குப்பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்மனிசரே.

காண்டுங்கொலோ நெஞ்சமே
கடியவினையே முயலும்
ஆண்டிறல் மீளிமொய்ம்பின்
அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே
விரிநீர் இலங்கையருளி
ஆண்டுதன் சோதிபுக்க
அமரர் அரியேற்றினையே.

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று
ஐவர்க்காய் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதி புக்கவரியே.

என வரூஉந் திருவாக்குக்களை நோக்குக.

அவதாரங்களைப் பற்றி யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில் உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமையாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியார் கண்ட அநுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண்செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பௌராணிக மதமாகும். ஞான நூல் ஆராய்ச்சியுடையவர், புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கைகளைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு.

உலகை நோக்குவோம். தாவர முதல் மக்கள் ஈறாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவர முதல் மக்கள் ஈறாக உள்ளன யாவும் உயிர்களே. அவைகள் உடலமைப்பில் வேற்றுமையுறுகின்றன. அவ்வவ்வுடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்துக் காட்டினர் போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக்கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ்வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்திலிருந்தே உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும். (கூர்தல் - உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர்.

நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்குகின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில் நகர்தலுஞ் செய்யாது. கூர்மம் (ஆமை) சிறு கால் கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்க வல்லது. நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனாயினும், அவன் முதலில் தோன்றினவனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால் சாந்தமில்லாதவன். ச்ரிராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன்.

இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந் நிலையை நம்மவர் கற்பம் என்பர். உயிர் வர்க்கம் மீனா யிருந்தது ஒரு கற்பம்; ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும்.

அவதாரங்களை இறைவன் மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத் தக்கது. உயிர்கட்கு அறியாமைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக்கத்துக்கென அவைகள், மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அவ்வுடலால் அறிவு விளங்கப்பெறுகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றியமையாததாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாததாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்ய வல்லதாகும்.
அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னுஞ் செம்பொருள். அச் சித், எங்கும் நிறைந்தது; எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது. அஃது உயிர்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகள் மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத் துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந்நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித மரபு. அம் மரபு பற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன் பாற்படுத்தின போலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக் கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்கலை நோக்குகிறேன். யான் மனிதன்; குறையுடையவன்; எனக்கு இப்பொழுது விளங்கியுள்ளதை விளம்பினேன்.

திருமால் அடியவர் மண்மீது பிறத்தலை ஆழ்வார் பலபடப் பாடியுள்ளார். அங்ஙனம் அவர் பாடியது சிந்திக்கற்பாலது.

கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீ ரெல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.

திரியும் கலியுகம் நீங்கித்
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருக,
கரியமுகில் வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே.

இடங்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே.

கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிராந்தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்
சிந்தையைச் செந் நிறுத்தியே.

இப் பாடல்களை உன்னுக.

அவதாரங்களால் உயிர்கட்கு நலன் உண்டு என்பது ஆழ்வார் கருத்து. அக் கருத்தை ஆழ்வார் பாடல்களிற் காண்க.

நாட்டில் பிறந்தவர் நாரணற்
காளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன
பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை
நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்துய்யச் செய்து
நடந்தமை கேட்டுமே.

மாய மறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ
தாயம் செறுமொரு நூற்றுவர்
மயங்கஓ ரைவர்க்காய்
தேசம் அறியவோர் சாரதி
யாய்ச்சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்தநல்
வார்த்தை அறிந்துமே.

கண்ணனல்லா லில்லை கண்டீர்
சரண் அதுநிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்துய்ம் மினோ
எண்ணவேண்டா நும்ம தாது
மவனன்றி மற்றில்லையே.

இத் திருப்பாடல்களில் கண்ணனெம் பெருமான், சாது சனங்களைக் காத்தற் பொருட்டும் - கொடியவரை ஒறுத்து மண்ணின் சுமை நீக்குதற்பொருட்டும் - வந்தான் என்பது திறம்பட வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை உன்னுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈண்டு நாம் அறியத்தக்க உண்மை ஒன்றுளது. அது, கண்ணன்பால் அன்பு செலுத்துவோர் அனைவரும் - அவனடி சேர முயல்வோர் எல்லோரும் - சாது தர்மத்தை நாட்டவும் அதர்மத்தை வீழ்த்தவும், கண்ணனைப் போல, ஒல்லும் வகை முயலுதல் வேண்டும் என்பது. கண்ணன் அவதாரத்தால் அறியக் கிடக்கும் உண்மைகளுள் தலையாயது இதுவே என்றுங் கூறலாம். இத்தகைய தொண்டு செய்யாது, கண்ணபிரான் ஆலயத்தை மட்டும் வலம் வருவதாலும், சந்நியாசங் கொண்டு காடு நோக்கி ஓடுவதாலும், வேறு பல தன்னல உழைப்பாலும் பிறவி நோக்கம் நிறைவேறாது. கண்ணன் காட்டிய வழியை நாமும் கடைப்பிடிப்போமாக. ஆழ்வாரும் அந் நெறியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்பொழுது உலகம் உரிமையிழந்து வாடுகிறது. இவ் வேளையில் உரிமைக்கு உழைப்பது கண்ணன் திருவடிக்குச் செய்யும் திருத்தொண்டாகும்.