Friday, July 9, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 4

13. இவ்வண்ணமாக, சங்ககாலத்திலேயே குறிஞ்சிநிலத்திலும், மருதநிலத்திலும் பல திருமால் கோயில்கள் இருந்ததாகச் சங்ககாலச் சான்றோர்கள் கூறுகையால் ம.பொ.சி.யின் வாதம் தவறானது என விளங்குகிறது. மேலும் 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி மருதநிலத்தில் இந்திரனுக்கு கோயில் இருந்ததாக சங்கநூல்களில் எங்கும் காணப்படவில்லை. 'வருணன் மேய பெருமணல் உலகமும்' என்னும் தொல்காப்பிய அடியின்படி வருணனுக்கு நெய்தல் நிலத்தில் கோயில் இருந்ததாக எங்கும் சங்கநூல்களில் காணப்பட்டவில்லை. 'சீரலைவாய்' என்னும் திருச்செந்தூராகிற நெய்தல் நிலத்தில் முருகனுக்கே கோவிலிருந்ததாகச் சங்கநூலில் காணப்படுகிறது. ஆகையால் 'மாயோன் மேய காடு உறை உலகமும்' என்று தொடங்கும் தொல்காப்பியப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும்பொருள் அடியோடு பொருந்தாது எனத் தெரிகிறது. இதன் சரியான பொருளை இனிக் காண்போம்.

14. இங்கு 'மாயோன்' என்றது திருமாலின் அவதாரமான கண்ணனை. 'மேய' என்றதற்கு 'ரட்சகனாகப் பொருந்திய' என்று பொருள். கண்ணன் காடுவாழ் சாதியாகப் பிறந்து, ஆயர்களைத் தன் உயிருக்கும் மேலாக ரட்சித்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லைநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். முருகன் மலைப்பாங்கான நிலத்தில் வாழ்ந்த வேடர்களின் செல்வியான வள்ளியை மணந்து அந்நிலத்திலே பல வீரவிளையாட்டுக்களைப் புரிந்தவன். அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனை மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இந்திரன் மழை பொழிவிக்கும் தெய்வம். வயலும் வயல் சார்ந்த இடமுமான மருதநிலம் மழையின்றேல் அழிந்துவிடும். அதனால் தமிழகச் சான்றோர்கள் அவனை மருதநிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். வருணன் கடலுக்கு அதிதேவதை. அதனால் தமிழகச்சான்றோர்கள் அவனைக் கடலும் கடல்சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்துக்கு ரட்சகனாகக் கொண்டார்கள். இப்பொருளில் எவராலும் எக்குற்றமும் கூற முடியாது.

15. இதில் பாடியிருக்கும் முறையிலும் ஒரு பொருத்தம் காண்கிறது. சங்ககாலத்தில் பரம்பொருளாகவும், ஸர்வரட்சகனாகவும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மாயோனை முதலில் வைத்தார் தொல்காப்பியர். வீரம் முதலான நற்குணங்களில் மாயோன் ஒருவனுக்கே அடுத்தபடி உள்ளவனாய், சிறு குழந்தையாயிருக்கும் போதே இந்திரனையும் வெற்றிகொண்டவனான முருகனை இரண்டாம் படியில் வைத்தார். அடுத்து இந்திரனை மூன்றாம்படியில் வைத்தார். இந்திரனுக்கு அடங்கியவனான வருணனை நான்காம்படியில் வைத்தார். ரட்சகர்களல்லாத உருத்திரன், யமன் முதலானோர்க்கு நிலமே ஒதுக்கப்படவில்லை. ஆக, இப்பொருளே மிகப்பொருத்தமான பொருள் என விளங்குகிறது.

16. இப்படிக் கொள்ளாமல் திருமால் சங்ககாலத்தில் முல்லை நிலத்தில் மட்டும் கோயில் அமைத்து வழிபடப்பெற்றான் என்று ம.பொ.சி. கூறும் பொருளைக் கொண்டால் முற்கூறிய பல குற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், "மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] "நின் சேவடி தொழாரும் உளரோ" [பரிபாடல் 3 - 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

No comments: