Friday, October 1, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்திற்குப்பின் சமயநிலை - 1

23. சங்ககாலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சிலப்பதிகார காலத்தில் சிவனை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று பெருமைபேசும் சைவர்கள் தோன்றிவிட்டனர். சங்ககாலத்தில் தலையெடுத்திராத சமண பௌத்த மதங்களும் தலையெடுக்கத் துவங்கிவிட்டன. சிலப்பதிகார காலத்தையொட்டி அவதரித்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகளிலும், திருமழிசையாழ்வாரின் இருநூல்களிலும் சைவம், சமணம், பௌத்தம் என்னும் இம்மதங்கள் வேதத்துக்குப் புறம்பானவை என்று கண்டிக்கப்படுகின்றன. திருமாலுக்குத் தாழ்வையும், சிவனுக்குப் பெருமையையும் கூறி, சைவர்கள் சிவபரத்துவவாதம் செய்ததால், ஆழ்வார்கள் சிவனுடைய தாழ்வைக் காட்டி, வேதத்தில் நிலைநிறுத்தப்பட்ட திருமாலின் பரத்துவத்தை நிலைநாட்டவேண்டியதாயிற்று. சங்கத் தமிழர் சமயமும், பரமவைதிக சமயமுமான வைணவத்திற்குப் போட்டியாக சைவம் எழுந்ததாலேயே சைவத்தை ஆழ்வார்கள் கண்டித்தனர். வேதசாத்திரங்களில் காணப்படும் சிவனுடைய தாழ்வுகளை எடுத்துக் கூறினர். இதனால் கடுங்கோபம் கொண்ட பிற்கால நாயன்மார்கள் திருமாலைத் தாழ்த்தும் முற்கூறிய கட்டுக்கதைகளையெல்லாம் தங்கள் நூல்களில் பெய்து, அதனால் சிவனுக்குப் பரத்துவம் தேறிவிடுமென்று மனப்பால் குடித்தனர். ஆயினும் இந்த நாயன்மார்களுக்கும் முற்பட்ட ஆதிசங்கரரும், பிற்பட்ட வைதிக மதாசார்யர்களும் திருமாலையே வேதங்கண்ட முழு முதல்வனாகத் தங்கள் பாஷ்யங்களிலும், க்ரந்தங்களிலும் பொறித்து வைத்தனர். மத்வருடைய காலமான 12ஆம் நூற்றாண்டுவரை இந்நிலையே நீடித்து வந்தது. அதற்குப் பிறகே சைவர்களின் சித்தாந்த சாத்திரங்களும், ச்ரிகண்ட பாஷ்யமும் எழுதப்பட்டு, சிவனுக்குப் பரத்துவம் கூறுகின்றவர்கள் பெருகத் தொடங்கினர். இக்காலத்திலும் சக்திக்குப் பரத்துவம் கூறும் சாக்தம், முருகனுக்குப் பரத்துவம் கூறும் கௌமாரம், சங்ககாலத்தில் எங்குமே காணப்படாத கணபதிக்குப் பரத்துவம் கூறும் காணாபத்யம், 'பீ4ஷோதே3தி ஸூர்ய:' [பரம்பொருளிடம் பயத்தாலே சூரியன் உதிக்கிறான்] என்று உபநிஷத்துக்களில் கூறப்பட்ட சூரியனுக்குப் பர்த்துவம்கூறும் ஸௌரம் என்னும் மதங்கள் எழும்பவேயில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் நூல் எதுவும் 13ஆம் நூற்றாண்டுவரை காணப்படவில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் சில துதிநூல்களை 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே ஆதிசங்கரர் பெயரில் எழுந்த மடங்களில் உள்ள சங்கராசாரியர்கள் எழுதி, அதை ஆதிசங்கரர் எழுதியதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தினர். இத்துதிநூல்களிலிருந்து ஒரு துணுக்கைக்கூட 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட எவரும் எடுக்கவில்லையென்பது இவ்வுண்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

24. இப்படி 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட 'ஆதிசங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தார்' என்னும் கற்பனையைப் பற்றிக் கொண்டு ம.பொ.சி. தமது கட்டுரைகளில் எழுதுவது - அவர் சங்கரபாஷ்யங்களையும், மற்றுமுள்ள வடமொழி நூல்களையும் அறிவதற்குறுப்பான வடமொழி அறிவு இல்லாதவர் என்பதையும், அதனால் இவ்விஷயத்தை ஆராய்ச்சி செய்யத் தகுதியற்றவர் என்பதையும், சமீபகாலத்தில் சில பொய்யர்கள்கூறும் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைபோல் கூறுகின்றவர் என்பதையும் காட்டித்தருகின்றது. 'ஆதிசங்கரர் ஷண்மதஸ்தாபகர்' என்பது முழுப்பொய் என்னும் விஷயத்தை எதிரிகளும் மறுக்கவொண்ணாதபடி நாம் நிலைநாட்டியிருக்கும் 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலை நாம் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். முடியுமானால் வடமொழி வல்லுநர்களைத் துணைகொண்டு நாம் அந்நூலில் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ம.பொ.சி. முற்படுவாராக.