Friday, July 2, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்தில் சமயநிலை - 3

8. தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது பின்வருமாறு:-

"மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

இப்பாடலுக்கு ம.பொ.சி. கூறும் பொருள் தவறானது. ஏனெனில்: (சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.

9. கல்லாடனார் என்னும் புலவர் இயற்றிய அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில், வேங்கடமலையைக் கடந்துசென்று பொருளீட்டி வினைமுடித்து மீண்டதலைமகன், தேர்ப்பாகனுக்குக் கூறியதாக உள்ள பாடலில்,

"அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி"

என்றவிடத்தில் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப் போகி' என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் 'விழவுமலி வேங்கடம்' என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் 'நெடுமால் வரைய - குன்று ஒழியப்போகி' என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

10. அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்

"வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே"

என்னும் பாடற்பகுதியில், 'தலைமகன் பிரியப்போகிறான்' என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, "திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது" என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், "நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்' (67 - 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

11. பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,

"வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு"

[திருஞெமர் அகலம் - ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி - சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் - துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு - திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]

என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

12. பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,

"நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி ... ...
அருந்திறற் கடவுள் வாழ்த்தி"

என்னும் பகுதியில் மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

No comments: