Saturday, June 26, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - ஆசிரியரின் முதல்பாக முகவுரை

தமிழ்ப்புலவர்களில் சிலர் பல வருடங்களாகக் கம்பனின் சமயம் வைணவமே என்னும் பேருண்மையை மறைக்க முயன்று வருகின்றனர். வெள்ளிடை மலைபோல் விளங்கும் இவ்வுண்மையை நிலை நாட்டும் நூல் ஒன்று எழுதவேண்டும் என்னும் அவா நீண்டகாலமாக எந்தையார்க்கும் அடியேனுக்கும் உண்டு. அதற்குச் சந்தர்ப்பம் ஒன்று சில வருடங்களுக்கு முன் வாய்த்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டுவரும் கம்பராமாயணப்பதிப்பினுடைய பதிப்பாசிரியர் குழுவின் தலைவராய் விளங்கும் திரு. G. சுப்பிரமணியப் பிள்ளை, M.A.B.L, அவர்கள் கழகப்பதிப்பின் திருவவதாரப்படலத்தில் பல திருத்தங்களைச் செய்து, 7 - 7 - 61 வானொலி இதழில் "கம்பராமாயணத்தில் பாடபேதங்கள்" என்னும் கட்டுரையிலும், தருமை ஆதீனத்தாரால் வெளியிடப்பட்டுவரும் "ஞானசம்பந்தம்" என்னும் பத்திரிகையின் பிலவ ஆவணி (10 - 9 - 61) இதழில் வெளிவந்த கட்டுரையிலும் கம்பனின் உண்மைச் சமயத்தைத் திரித்துக் கூறியிருந்தார்.

பிள்ளையவர்களின் கட்டுரைகளிலுள்ள கருத்துக்கள் தவறு என்று நிரூபித்து, கம்பனின் உண்மைச் சமயத்தைக் காட்டித்தரும் "கம்பனின் சமயம்" என்னும் நூல் பிலவ பங்குனி உத்தரத்தன்று (21 - 3 - 62) நம்மால் தொடங்கப்பெற்றது. நம்முடைய பத்திரிகையான "ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்" மாத இதழில் மாதந்தோறும் சிறிதுசிறிதாக வெளியிடப்பட்டுவந்தது. தொடங்கிச் சில மாதங்கள் வரை வெளிவந்தபகுதி பிள்ளையவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அவர்களிடமிருந்து யாதொரு பதிலுமில்லை. கழகப்பதிப்பின் ஆரணிய காண்டம் முற்பகுதி வரையிலுமே இப்போது தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறபடியால் அது வரையிலுள்ள பகுதியின் ஆராய்ச்சி இன்று (குரோதி பங்குனி உத்தரத்தன்று) முதல் பாகமாக வெளியிடப்படுகிறது. கழகப்பதிப்பின் எஞ்சிய பகுதிகள் முழுவதும் வெளிவந்த பின் இந்நூலின் பிற்பகுதிகள் வெளியிடப்படும்.

மற்ற துறைகளிற்போலே, இலக்கியத் துறையிலும், மதத்துறையிலும் இப்போது நேர்மை மிகவும் குறைந்துவிட்டது. தங்கள் கருத்தைப் பழங்காவியங்களின் மீது தமிழ்ப்புலவர்கள் ஏறிடுகிறார்கள். இதை எடுத்துக்காட்டினாலும் தவறை ஒப்புக்கொள்ள மனமிருப்பதில்லை. பத்திரிகைகளும் உண்மையை வெளிப்படுத்தும் இத்தகைய நூல்களுக்கு மதிப்புரையெழுதத் தயங்குகின்றன. இது நாட்டுக்கு நல்லதல்ல. பிள்ளையவர்கள் நம் கருத்துக்கு மாறுபடுவாரானால், தம் கருத்தை நிலைநாட்டி எழுதவேண்டும். இல்லாவிடில் முன்னம் தாம் எழுதியது தவறு என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதுவே நேர்மையும் பெருந்தன்மையுமாகும். மௌனமாயிருப்பது புலவர்களுக்கு அழகல்ல. பத்திரிகைகளும், மற்ற தமிழ்ப்புலவர்களும் இத்தகைய நூல்களை நடுநிலைநின்று ஆராய்ந்து மதிப்புரைகளை எழுதவேண்டும். இதனால் நாடு நலம் பெறும். தங்களுக்குக் கசப்பாயிருக்கின்ற காரணத்தால் உண்மைகளை மறைக்கப்புகுவது நாட்டுக்குத் தீங்கையே விளைக்கும். தமிழ் நாட்டில் தீங்குகள் ஒடுங்கி நலங்கள் ஓங்க ஆதி பரம்பொருள் அருளுவானாக.

ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், M.A.B.L.,
'ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்' ஆசிரியர்,
3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி - 17.
குரோதி பங்குனி உத்தரம்.

No comments: