Friday, June 18, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம் - அணிந்துரை 4

'செங்கோல்' தொடர் 15

"அரி என்னும் திருமாலே காப்பிய நாயகனாக அவருக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அது போல சிவனுக்குத் தலைமை தருகின்ற இடங்கள் வெளிப்படையாகத் தெரியவில்லை; ஆராய்ந்து தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது" என்கிறது செங்கோல். ஆராய்ந்துதானே இந்த முடிவுக்கு வந்திருக்கிறது செங்கோல்; இன்னம் எதற்கு ஆராயவேண்டும்?

'செங்கோல்' தொடர் 16

"வைணவ ஆசாரியர்கள்கூட தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்துவிட்டனர். இந்த வைணவர்களிடமிருந்து கம்பர் பெரிதும் வேறுபடுகிறார் என்பதோடு தமிழைப் பொறுத்தவரையில் சைவநாயன்மார்களான நால்வரைப் பின்பற்றித் தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் எனலாம்" என்கிறது செங்கோல். ஆசாரியர்கள்தானே மணிப்பிரவாளநடையையே பின்பற்றித் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்தவர்கள்! செங்கோலின் கருத்துப்படி ஆழ்வார்கள் யாரும் தமிழின் தனித்தன்மைக்குக் கேடு செய்திலரே! அப்படியிருக்க ஆழ்வார்களை விடுத்து நால்வரைப் பின்பற்றி தமிழின் தனித்தன்மையைக் காத்திருக்கிறார் என்பது செங்கோலின் மனக்கோட்டை தானே!

இதே தொடரில் 'திருவேங்கட மலையைப் பெற்றதின் காரணமாகத் தொண்டைமண்டலத்திற்கு ஏற்பட்ட சிறப்பை 13 செய்யுள்களால் வருணிக்கிறார். வேங்கடமலையையும் அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனையும் 5 செய்யுள்களால் புகழ்ந்தேத்துகிறார்' என்கிறது நம் செங்கோல். இப்படிச் சொன்ன செங்கோலே தொடர் 10ல் 'நாடவிட்ட படலத்திலே கம்பநாடர் வேங்கடமலையை நான்கு செய்யுள்களால் வருணிக்கப் புகுந்தவர், அந்த மலையில் நின்றவண்ணம் காட்சியளிக்கும் திருமாலைக்காட்டத் தவறிவிட்டார்' என்கிறது. 'அங்குக் கோயில்கொண்டுள்ள நாதனைப் புகழ்ந்தேத்துகின்றார்' என்று இத்தொடரில் காட்டுகிறது. இதில் எது உண்மை என்பதை வாசகர்களே முடிவு செய்வார்களாக.

'செங்கோல்' தொடர் 17

தலைப்பு:- கம்பர் சைவரே.

"ஒளவைப் பிராட்டியும் ... ...சைவர் என்று தெரிகின்றது. ஆனால் அவரே 'அரனை மறவேல்' 'திருமாலுக்கடிமை செய்' என்றும் பாடித் திருமாலையும் சிவனையும் சமநிலையிற் காட்டுகிறார்" என்று தொடர்கின்றது செங்கோல். 'அரனை மறவேல்' என்பது ஆத்திசூடியில் உள்ளதா? 'அறனை மறவேல்' என அண்மையில் தவறாகச் சொல்லினர்; மேலும் கொன்றைவேந்தனில் திருநெல்வேலிப் பிரதிகளில் 'சினத்தைப் பேணில் தனத்திற்கழிவு' என்றுள்ளதை 'சிவத்தைப் பேணில் தவத்திற்கழகு' என்று மாற்றிவிட்டனர். இவ்விவரஙக்ளை எனது 'வில்லிபாரதத்தில் வினோதத்திருத்தங்கள்' என்ற கட்டுரையில் காணலாம்.

'சங்ககாலக் கவிஞர்களில் ஒருவரான கடுவன் இளவெயினனார் திருமாலையும் முருகனையும் தனித்தனிப் பாடல்களால் வழிபட்டதனைப் பார்க்கிறோம்' என்கிறது செங்கோல். திருமாலுக்குரிய மேன்மையும் முருகனுக்குரிய தன்மையும் விளங்குமாறு அவரவர்கட்குரிய தனித்தன்மையை விளக்குவதை அப்பாடல்களில் காணலாம்.

"இடைக்கால உரையாசிரியர்களிலேயும் பலர் தாங்கள் சிவபக்தராயிருந்தும் சமணபௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதினர்" என்கிறது செங்கோல். பரிமேலழகரும் சிவபக்தர்தானா? என்பதைச் செங்கோலே சொல்லட்டும். மேலும் "அவர் வேத மதத்தவராதலால் அவரை வைணவராகக் கொள்ளவும் வாய்ப்புண்டு; ஆனால் அவரது நெற்றியில் நாமந்தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்க சந்தர்ப்பமே இல்லை" என்கிறது செங்கோல்.

இங்கு இதை மறுப்பதற்கு முன் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாமம், திருமண் என்பன ஒரு பொருட்சொற்கள், ஆழ்வார்கள் பாடல்களுள் நாமம்பற்றி இல்லை. ஆதலின் நாமம் பிற்காலத்தில் தோன்றியதுதான் என்ற கருத்தினராகி நாமம் பற்றிக் கம்பர் சொன்ன பாடல்களை இடைச்செருகல் என்று கொண்டனர் சிலர்.

பெரியாழ்வார் திருமொழி 3 - 4 - 8.

1) "சிந்துரப்பொடிக்கொண்டு சென்னியப்பித்
திருநாமம் இட்டங்கொ ரிலையம்தன்னால்
அந்தர மின்றித்தன் நெறிபங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல்வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்றங் கினவளைஇழவே லென்னச்
சந்தியில் நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே".


'திருநாமம் இட்டங்கோ ரிலையம்தன்னால்" - நேரியதாய் நீண்டு ஒட்டின இடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையாலே திருநெற்றியிலே திருநாமமாக இட்டு ஊர்த்வபுண்ட்ராகாரமாக அழுத்திவைக்குமாய்த்து - மாமுனிகள்.

'சாதிலிங்கப் பொடியைக்கொண்டு திருக்குழலிலே அலங்காரமாகச் சாத்தி (நாமமிடவேண்டிய) அந்த நெற்றியிலே (ஒட்டினாற் பிடித்துக் கொள்வதான) ஒரு தளிரான இலையால் ஊர்த்வபுண்ட்ரம் சாத்தி' வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர்.

2) திருவிருத்தம் 49ல் 'மண்நேரன்ன ஒண்ணுதலே' என்பதற்கு 'திருமண்காப்பைத் தகுதியாகத் தரித்த திருநெற்றியை உடையவள்' என்பர் வை.மு. சடகோப ராமாநுஜாசார்யர்.

இதனை அடியொற்றிக் கம்பநாடர் பால-கடிமணப்படலத்தில் (49) 'என்றும் நான்முகன்முதல் யாரும் யாவையும் - நின்ற பேரிருளினை நீக்கி நீள்நெறி சென்று மீளாக்குறி சேரச் சேர்த்திடும். தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' எனக் கூறியுள்ளதை மிகைப்பாடல் ஆக்கிவிட்டனர்.

கம்பரை அடியொற்றி திரு-அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகத்திலே இவ்விடத்து,

பல்லவி

ராமசாமி கொண்டகோலம் என்னாலே சொல்லப்போமோ

அநுபல்லவி

மோமிதிலை ராசன்முன் அனேக-கோடி மன்மதனே நிகராக

சரணம்

பாதகடகம்சேர்த்தி மருங்கினிற் பசும்பொன் ஆடைபோர்த்தி மார்பின்
மீதுபொன்னூல் ஏற்றித் தன்நாமமும் விளங்கவே சாத்தி

என்று கூறுவதால் கவிராயர் 'என்றும் நான்முகன்முதல்' என்ற பாடலைக் கம்பருடைய பாடல்தான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார். கவிராயரும் சைவர்தான். அவர் உடன்பட்ட பாடலை இந்த சைவ ஞானிகள் உடன்பட மறுப்பது வியப்புக்குரியதே.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா மலராக வெளியிட்ட கம்பராமாயணம் சுந்தரகாண்டம் சம்புமாலி வதைப்படலம் (832)

"ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய்சுடர் விளக்கிற் றோன்றும் நெற்றியே நெற்றியாக"
என்றுளது.

பழைய பாடமும் இதுவே. மேற்படி பதிப்பில் இதற்கு விளக்கமாக, "திருமாலின் துவாதச நாமங்களைக் கூறியபடியே பன்னிரண்டு உறுப்புக்களில் இட்டுக்கொள்வது மரபாதலின், திருமண்காப்புக்கு நாமம் என்பது பெயராயிற்று. 'தன் திருநாமத்தைத் தானும் சாத்தியே' என்பர் முன்னும் (கடிமணப் 49). 'ஈராறு நாமம் உரைசெய்து மண்கொடிடுவார்கள் காணும் இமையோர்' என்றார் வில்லிபுத்தூரரும். நெய்யிட்டுப் பிரகாசிக்கும் தீபம்போன்றிருந்தது அனுமனது நெற்றி நாமம் என்றும் அது நெற்றிப்படையாகத் தோன்றும்படி என்றும் கூறியபடி. நெற்றி-முன்னணிப்படை" என்றுள்ளது காண்க. இதுகாறும் கூறியவாற்றால் நாமம் என்பது முன்னமேயுள்ளதுதான்; புதிதல்ல என்று உணர்க.

இதை மறுத்துச் செங்கோல் 'அவரது (கம்பரது) நெற்றியில் நாமம் தீட்டி ஆழ்வார் பட்டியலிலே சேர்க்கச் சந்தர்ப்பமே இல்லை' என்கிறது.

ஆயின் ரசிகமணி T.K.C. அவர்களைப்போலவும் செங்கோல் அரசரைப்போலவும் கம்பநாடரை மீசையுள ஆண்பிள்ளைச் சிங்கமாக ஆக்கி வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கு மட்டும் சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது போலும்! இவர்கள் தாடியும் உடையவர்களாயிருந்தால் திருவள்ளுவரைக் காட்டியிருப்பது போன்று கம்பரையும் தாடியும் மீசையும் உடையவர்களாகக் காட்டியிருக்கக்கூடும். 'கம்பராமனைக் கடவுளாகத்தான் ஏற்கவேண்டுமென்று எவரும் சொல்லவில்லை' என்கிறது செங்கோல். ஆயின், கம்பர் தம் ராமனை எப்படிக் காட்டியுள்ளார்? தெய்வமாகவும் தெய்வத்துக்கு மேலாகவும் தானே காட்டியுள்ளார்! இஃது எல்லோரும் அறிந்ததுதானே! மேலும் 'கம்பராமனை மானிட சமுதாயத்தின் வழிகாட்டியாக ஏற்றால்போதும்' என்கிறது செங்கோல். இஃது செங்கோலின் இராமபக்தி போலும்! மேலும் 'அதுவே சைவரான கம்பரின் குறிக்கோள்' என்று முடிக்கிறது செங்கோல். செங்கோல் மற்றொரு புலவரை(க் கம்பர்போன்று) நமக்கு நினைவூட்டினால் நாம் செங்கோலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்படுவோம்.

"சங்ககாலத்தில் மதப்பூசல் இல்லை; வேறுபாடின்றித் திருமால், சிவன், முருகன், கொற்றவை ஆகிய எல்லாத் தெய்வங்களையும் மக்கள் வணங்கிவந்தனர்; அதேபோல சைவராகிய கம்பரும் பொதுவாகத் தெய்வங்களைப் போற்றினார்; எடுத்துக்கொண்ட காப்பியத் தன்மைக்கேற்ப இராமபிரானை அதிகமாகப் பேசியிருக்கின்றார்; ஆகவே கம்பர் சமரசஞானி" என்று கற்பனை பண்ணிக்கொண்டது செங்கோல். இதனை நன்கு ஆராய்ந்து 'சங்ககாலச் சமயம் யாது' என்பதனைச் சங்கநூல்களாலே விளக்கி 'திருமாலே முத்திதரும் முதற்கடவுள்' என்பதைக்காட்டி, இச்சங்ககாலச் சமயமே தான் கம்பரின் சமயம் என்று உறுதிசெய்து, 'சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்' என்ற தலைப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலாசிரியர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அட்வகேட் அவர்களைத் தமிழுலகு நன்கறியும். 'ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்' மாத இதழ்வாயிலாக, வடமொழி தமிழ்மொழி இரண்டிலுமுள்ள பிரமாண நூல்களை உரையுடன் வெளியிட்டு வருகின்றார். வியாக்கியானங்களையும் விளக்கங்களுடன் வெளியிடுகின்றார். அன்பர்களின் உண்மையான ஐயங்களை 'கேள்விபதில்' என்ற தலைப்பில் தீர்த்துவைக்கின்றார்.

முன்னோர்கள் கருத்துக்கு மாறாகச் சொல்பவர்கள் யாராயினும் அவர்களை உடனே கண்டிக்கவும் உண்மைகலை விளக்கவும் தகுந்த வன்மையாளர். அறிஞர்கட்கும் பக்தர்கட்கும் அடங்கியிருப்பவர். சுயநலமின்றிச் சமயத்துக்குத் தொண்டாற்றும் தூய வேதியர். 'வித்யா விசாரத' 'திவ்யார்த்த ரத்னநிதி' என்று சிறப்புப் பெயர்களும் உடையவர். இப்பெரியாரை எவ்வளவு பாராட்டினும் தகும். இந்நூலைப் படிக்கும்போது இவரது பரந்த அறிவும் சிறந்த தொண்டும் நம்மால் அறியமுடிகிறது. இப்பெரியார் இதுபோன்று பல நூல்கள் எழுதிச் சமயத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்ற நம்பெருமாள் திருவருள் பாலிப்பாராக.

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் வாழ்க!
வைணவக் கம்பன் வாழ்க!


இங்ஙன்,
அன்புள்ள,
கி. வேங்கடசாமி.

வி.பூதூர், S.A. Dt.
1 - 7 - 1984

No comments: