Friday, January 22, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 8 மூவர் முதல்

தொழில் மூன்று. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்பன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தியுண்டு. இவர் மும்மூர்த்தி எனப்படுவர். மும்மூர்த்திகட்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மும்மூர்த்திகளைப் பிர்மா - விஷ்ணு - ருத்ரன் - என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் - ஐஸிஸ் - ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் - பிரீயா - தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு - இயா - பேல் (அஸ்ரியர்); தௌலாக் - பான் - மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் - அவலோகீதீசுரர் - மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் - பினா - சொக்மா (யூதர்); அஹுரமஜதர் - மித்திரர் - அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது. மும்மூர்த்தி வழக்கு உலகுக்குப் போது என்பது உணரத்தக்கது.

மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இது பற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்திகட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறுகிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இதுபற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழிகளைப் பார்ப்போம்.

குறிப்பில்... ...
... ... மூவரில்
முதல்வனாக ... .... - திருவாசிரியம் - 3

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்...

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்...

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை...

தஞ்சமாகிய... ...
... ... மூவர் தம்முள்ளும் ஆதியை...

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி...

தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும்.

நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன?

'யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே'

என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப்பொருளுகுச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.

நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது, சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழுமுதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது. பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ்வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது.

சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும் விஷ்ணு அறியாச் சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழுமுதலுக்குரியது.

முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது; மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க.

செக்கர் மாமுகி... ...
சிவனியனிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
... .... ...
... ... ...
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட ... (திருவாசிரியம்)

என்றும்,

வரிவளையால்... ...
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்... ...

என்றும்,

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே... ...

என்றும்,

தளர்ந்தும்... ...
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

என்றும்,

நோலா தாற்றேன்... .... ...
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவநாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன.

சுரரறி ... ...
... ... பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

எனவும்,

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ... ...

எனவும்,

கள்ள வேடத்தை ... ....
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை
வேறலாமை விளங்க நின்றதும் ...

எனவும்,

வேறுகொண்டு ... ...
ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே

எனவும்,

என் திருமார்பன் தன்னை
என் மலைமகள் கூறன் தன்னை...

எனவும்,

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்... ...

எனவும் வரூஉந் திருவாய்மொழ்களிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன.

நம்மாழ்வார், மும்மூர்த்துகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே; அதற்குப் பெயர்கள் பல.

No comments: