5 - 6 தானே தன்னிலையறியா - ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவமகிமை அறியலாகாத எ-று.
தன்நிலை - தன் தெய்வநிலை: 'தன் தெய்வநிலை' என்பது திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப்படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பெத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். 'தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை' எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே 'ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ச்வேத த்வீபவாசிகள் ஆச்ரயிக்கைக்கு .... திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை' என வ்யாக்யானமிட்டது காண்க.
இனி யஜுர்வேத காடகத்தில் 'த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ச்ரிகீதையில் (10 - 15) 'நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை' எனவும், பரிபாடலில் (3) 'நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ' - நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) - எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.
2 comments:
*பெத்தர் முக்தர் நித்யர்*
பெத்தர் ஸம்ஸாரத்தில் கட்டுண்ட
பத்த (Badhdha)ஜீவர்களைக் குறிக்கும் சொல்.
ஜயம் என்பது ஜெயம் என்றாவது போல் பத்தர் பெத்தர் ஆகிறது.
தேவ்
ஆமாம் தேவ் ஐயா. பத்தர் என்னும் பிரிவையே பெத்தர் என்று இந்த நூல் குறித்தது. நன்றி.
Post a Comment