7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி - ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் - இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி - நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் ச்ரிகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் 'பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்' என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, 'பக்தியோகஸ்ததர்த்தீசேத்' என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ச்ரி கீதாபாஷ்யத்திலும் ச்ரி பாஷ்யகாரர் 'தேஷாம் ஜ்ஞாநீ' என்கின்ற ச்லோக விளக்கத்தில் 'ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி' என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.
மஹாபாரத்தத்திலும் 'சதுர்விதா மமஜநா பக்தா:' என்று, ச்ரிகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. 'நோற்ற நோன்பிலேன்' என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் 'ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது' என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,
'மற்றுமோர் தெய்வம் வழிபடா வேகாந்தம்
சொற்றவதி காரிகட்குச் சூழ்பொதுவாம்' (மொழிபெயர்ப்பு)
என்று திருவுளம் பற்றினார்.
முப்பழம் - ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை 'ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்' என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா'
என்பது கீதைப்பாடல். முறைமுறை - அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
'மறைமுறையால் வானாடர் கூடி - முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே' (பெரியதிருவந்தாதி - 61)
என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க 1. சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும்.
தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது 'தருதலின்' என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. 'வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே' (திருவாய்மொழி ௩ - ௧0 - ௧௧) என வரும் ஆழ்வார் திவ்யஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.
--
1. 'வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ' என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் 'தாமரைப்பூ படைப்பிற்கு முதலாகவந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்' எனவுரைத்தது காண்க.
6 comments:
'இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா'
இப்பாடலின் பொருள் தெளிவாகத் தெரியவில்லையே குமரன்.பதம் பிரித்துப் பொருள் கூறினால் நல்லது.
தேவ்
எனக்கும் பதம் பிரிக்கத் தெரியவில்லை ஐயா. அதனால் அந்த நூலில் இருப்பது போல் ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்து எழுதியிருக்கிறேன்.
@தேவ் சார், குமரன்
இறவாது விகாரம் இலையாகும், பிர மத்திற்கு
எவ் ஏது-இன் யான்று அங்கு, இடன் அவ் ஏது-இன் அழியா
அறனால் விளைதற்கும் ஒரு முடிபே துணிபுடை யார்
இடை இன்பம் அதற்கும் நிலை இடன் ஆகுவல் அம்மா
//இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும்.//
//அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க//
//சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும்//
மிகவும் ரசித்தேன்! மிகவும் உண்மை!
சொன்னால் விரோதம் இது! ஆயினும் சொல்லுவேன்!
K R S ஐயா,
தாங்களே பொருள் கூறி விடலாமே .
சிறிய பதங்கள்தாம். இயைக்கத் தெரியவில்லை.
தேவ்
//மிகவும் ரசித்தேன்! மிகவும் உண்மை!
சொன்னால் விரோதம் இது! ஆயினும் சொல்லுவேன்!//
சொல்லுங்க சொல்லுங்க இரவி. :-)
Post a Comment