Sunday, September 13, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 14

16. அவள் இவள் உவள் என அறிதல் - இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் - உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.

17. துவளறு காட்சிப் புலவரது கடனே - துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ - று.

புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் 'வித்வத் ஸம்ரக்ஷணம்' என ஓர் பகுதியுண்டு - அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் - வாடுதல். துவளறு காட்சி - யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.

'பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது' என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.

'நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து - வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்'

என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.

இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை 'நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு' (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் 'உவளென அறிதல் கடன்' என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.

இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.

பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை 'அவளத்தனா மகனாந் தில்லையான்' எனத் திருக்கோவையினும் 'அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்' எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் 'பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்' எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,

'கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே' (10,5,1)

என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.

பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை 'ஆரியத் தமிழ்' என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை 'வேதத் தமிழ்' என்பதுபோல இதனையுங் கொள்க.

'ஈயா டுவதோ கருடற் கெதிரே
யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன்
நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன்
பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின்
ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே'

என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

8 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரையும் "நிறைந்ததா" குமரன்? :))

இந்தக் ஒருங்குறியாக்க-மின் புத்தகக் கைங்கர்யத்துக்கு அடியோங்கள் நன்றி!

பதிவுகளை ஒவ்வொன்னா அச்செடுத்தும் வைத்துக் கொண்டேன், பேருந்தில் படிக்க! :)

Radha said...

குமரன்,
பிழை கண்டுபிடிக்கச் சொல்லி நீங்கள் கூடலில் என்னிடம் சொன்னது முதலில் புரியவில்லை.
இப்பொழுது நீங்கள் செய்து கொண்டு இருக்கும் பணியைப் பார்த்தப் பிறகு புரிகிறது.

எனக்கு இது தலை மேல் செல்கிறது. சற்று நிதானமாக படிக்க வேண்டும்.

தங்களுக்கு சம்மதம் எனில் மூலப் புத்தகத்தை(pdf version) எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா?

//ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே //
ஒரு சொற் "பெறுமோ" உலகில் கவியே
என்று வேறு எங்கோ படித்ததாக நினைவு.
தவறாக இருக்கலாம்.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் !

~
ராதா

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர்.

குமரன் (Kumaran) said...

இராதா. இந்தப் பதிவில் வரும் நூல்கள் எல்லாவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் முன்னூல் வரிசையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். வலைப்பக்க முகவரி: http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

பொருமோ என்று தான் நூலில் இருக்கிறது - அதனால் அப்படியே அடித்துவிட்டேன். பிழை என்று எனக்கும் தோன்றுகிறது.

Radha said...

தகவலுக்கு மிக்க நன்றி குமரன்.

Radha said...

பொருதல் - போர் புரிதல்; எதிர்த்து நிற்றல்.
இந்தப் பொருளில் பார்த்தால் சரியாகத் தான் வரும் என நினைக்கிறேன் குமரன்.

//ஓரா யிரமா மறையின் றமிழின்
ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே //

"திருவாய்மொழிப் பாசுரங்களின் ஒரே ஒரு சொல்லை எதிர்த்து நிற்க முடியுமா?" என்று தொனிக்கிறது.

நன்றாகக் குழப்புவதற்கு மன்னிக்கவும். :-))

Radha said...

என்னுடைய "பொருமோ", "பெறுமா" குழப்பத்திற்கு காரணம் இங்கே தான் உள்ளது. :-)
http://koodal1.blogspot.com/2009/02/2.html
ரவியின் இது போன்ற பின்னூட்டங்களை படித்து தான் மலைத்து போனேன்.

குமரன் (Kumaran) said...

பொருமோ என்பதற்கு நீ சொன்ன விளக்கம் நல்லா இருக்கு இராதா.