Saturday, September 19, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - முன்னுரை

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்


ஆக்கியோர்:
திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார்


பாரி நிலையம்
184.பிராட்வே.சென்னை.600108

***

முதற்பதிப்பு: 1923
நான்காம் பதிப்பு: 1949
ஐந்தாம் பதிப்பு: 1969
ஆறாம் பதிப்பு: 1993
விலை: ரூ. 12 - 00அச்சிட்டோர்:
ச்ரி வெங்கடேஸ்வரா அச்சகம்
7/40, கிழக்குச் செட்டித் தெரு,
பரங்கிமலை, சென்னை - 16.


***

முன்னுரை

தமிழ்நாடென்பது ஒரு தனி நாடு. அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம் - மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று.

அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ்நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ் மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே.

அடியேன் அரசியல் தொண்டில் இறங்குவதற்கு முன்னர்த் தமிழ் வேதங்களில் ஏதாவதொன்றை நாடோறும் ஓதுவது வழக்கம்; ஓதும் வேளையில் ஆராய்ச்சிக்குரிய பாக்களின் பாங்கர் குறிப்புக்கள் இடுவதுண்டு. அக் குறிப்புக்களைத் திரட்டிப் பின்னர் ஆராய்ச்சி முறையாகச் சில நூல்கள் இயற்ற வேண்டுமென்பது எனது நோக்கம். அரசியல் தொண்டில் யான் இறங்காதிருப்பின், எனது நோக்கம் ஒருவாறு நிறைவேறியிருக்கும்.

1921-ம் வருடச் 'சுதேசமித்திரன்' அநுபந்தத்தில் 'நாயன்மார்' என்னும் சிறு கட்டுரை ஒன்று எழுதினேன்; அதன்கண் அடுத்த ஆண்டு - அதாவது 1922-ம் ஆண்டு - ஆழ்வாரைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். போதிய ஓய்வின்மையால் நம்மாழ்வார் ஒருவரைப் பற்றி மாத்திரம் எழுதலாமென்று பின்னர் எண்ணினேன். ஒருவரைப் பற்றிச் செவ்வனே எழுதவும் போதிய ஓய்வு நேராமையானும், ஒரு வருட அநுபந்தம் விரிவுக்கு இடந்தாராதாகலானும் நம்மாழ்வாரைப் பற்றி யான் எடுத்து வைத்த குறிப்புக்கள் சிறு கட்டுரையில் அடங்காவெனத் தோன்றினமையானும், கால நிலையை உற்று நோக்கித் 'தமிழ் நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரையை வரையலானேன்.

இதற்கு முன் 'தேசபக்தன்', 'சுதேசமித்திரன்' என்னும் பத்திரிகைகளின் வருட அநுபந்தங்களில், யான் எழுதிய 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'என் கடன் பணி செய்துகிடப்பதே', 'நாயன்மார்' என்னும் கட்டுரைகள், நூல் வடிவாக வெளிப்போந்து தமிழ் நாட்டில் உலவுவதைக் கண்ட 'சாதுரத்ந சத்குரு' புத்தக சாலையார், அவைகளைப் போல இக்கட்டுரையும் நூல் வடிவாய் உலவ வேண்டுதென்று விரும்பிக் கேட்டனர். அவர் விரும்பியவாறே 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் இக் கட்டுரைய நூல் வடிவாக்கினேன்; முதற் பதிப்பு 'மித்திரன்' அநுபந்தத்தில் உள்ளவாறே வெளியிடப்பட்டது.

இரண்டாம் பதிப்பு 1934-ம் ஆண்டில் வெளி வந்தது. அப் பதிப்பில் சில புதுப் பொருள் சேர்க்கப்பட்டன; பொருள்கள் முறைப்படுத்தப்பட்டன; தமிழ் நாடு எது என்பதும், நம்மாழ்வார் அந் நாட்டை எவ்வாறு வளர்த்தார் என்பதும் சுருங்கச் சொல்லப்பட்டன; இறை வித்து என்பது இறைநிலை, அட்ட மூர்த்த விளக்கம், இயற்கை இறை, இயற்கை உருவம், அவதார நுட்பம், மும்மூர்த்திகளின் நிலை, வழிபாடு, சமரசம், பாட்டியல் முதலியன விளக்கப்பட்டன. இவை யாவும் ஆழ்வார் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டன.

இந் நான்காம் பதிப்பில் புதுப்பொருள் சில சேர்க்க எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் கண் படலத்தால் தகையப்பெற்றது. என் செய்வேன்! எல்லாம் ஆண்டவன் அருள்.

தமிழ் நலம் கருதுவோர்க்கு இந்நூல் தீஞ்சுவை பயக்குமென்பதில் ஐயமில்லை. தமிழர் இந் நூலை ஆதரிப்பாராக.

சென்னை
30 - 11- 1949 திருவாரூர் வி. கலியாணசுந்தரன்

***

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய்இமை யோர்தலைவா
மெய்ந்நின்று கேட்டரு ளாய்அடியேன் செய்யும் விண்ணப்பமே.

- நம்மாழ்வார்.

1 comment:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா! திரு.வி.க அவர்கள் ஆழ்வாரையும் தமிழ்ப் பண்பாட்டினையும் ஒட்டி எழுதிய நூலா? அருமை! தொடருங்கள்! தொடருங்கள்!