Sunday, September 20, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1. தோற்றுவாய்

1. தோற்றுவாய்

தமிழ் நாடு எது? 'வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து' என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் 'தமிழ் கூறு நல்லுலகத்து' என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே 'தமிழ்கூறு நல்லுலகத்து' என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திரமன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப்படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக்கின்றன. அவைகளைகக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும்.

தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர். இவர்களால் கட்டப்பெற்ற தமிழ்நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். 'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள்.

ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன.

நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை. ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒரு தலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சிகளை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப்படுகிறது.

ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின எனலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்' என்று போற்றுவர். அச்சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறுஸ்துவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச்சமயத்தவரும், அவரை, 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை 'நம் பாவலர்' என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை 'நம் தத்துவ மூர்த்தி' என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை 'நம்மவர்' என்று வழிபடுவர். உலகத்துள்ள அனைவரும் 'நம்மவர்' என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் 'நம்மாழ்வார்' என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்.

எல்லாரும் 'நம் ஆழ்வார்' என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, 'என் ஆழ்வார்' என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு 'நம் ஆழ்வார்' என்று வணங்குகிறேன்.

நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ் நாடு அழிவுறாமலிருக்கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்துபடல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங் கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மனங்கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார்.

நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினர். இனி அம் முறைகள் மீது கருத்துச் செலுத்துவோம்.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத்தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர்//

பழுத்த சிவநெறிச் செல்வர், திரு.வி.க அவர்கள்!
அவர்கள் திருவாயால் இப்படி அமிழ்தினும் இனிதாகச் சொல்வது மிகவும் பொருத்தம்!

நம்மாழ்வாரின் பாசுரத்தைத் தமிழ் வேதம் என்று போற்றியவரும் ஒரு சித்தர் பெருமான் தான்! - இடைக்காடர்!

திருவாய்மொழியில் முதல் பத்தில் குறிப்பிட்ட இறைவனின் பெயரையே சொல்லமாட்டார்! அப்படிப் பொதுவாகவே துவங்கித் திருவாய்மொழியை நிலைநிறுத்துவார் மாறன்!

திருவாய்மொழிக்கு உருகாதார்
ஒருவாய்மொழிக்கும் உருகார்!

Arima Ilangkannan said...

வேதம் தமிழ்செய்த மாறன் என்று போற்றப்படுபவர் நம்மாழ்வார் ஆவார்.
-அரிமா இளங்கண்ணன்

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஐயா. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.