Saturday, May 16, 2009

எம்பெருமானாருடைய அவதார காரணம்

இத்தகைய பரமகாருணிகரான எம்பெருமானார் அவதார காரணத்தைச் சிறிது தெரிந்து கொள்வோமாக.

பகவான், சேதனர்கள் தன்னை அறிந்து அடைவதற்காக, சிருஷ்டி காலத்திலேயே வேதத்தை வெளியிட்டான். வேதம் கர்ம காண்டமென்றும், பிரஹ்மகாண்டம் என்றும் இரண்டாக உளது. கர்மகாண்டத்தில் சொல்லியிருக்கிறவாறு ஒருவன் அதில் சொல்லப்பட்ட உத்தம் கைங்கர்யங்களையும் யக்ஞயாகாதிகளையும் செய்து அதனால் பகவத் ஞானம் பெற்றவனாய் முக்திக்குப் பாத்திரமாவான். இந்திரியங்களை அடக்கி பகவத் பிரயோஜனத்தைத் தவிர, வேறு விஷயங்களில் பற்றில்லாதவனாய் பகவத்பக்தியில் ஈடுபடுகிறவன் வேதத்தில் பிரஹ்மகாண்டத்தில் சொல்லியவாறு செய்தவனாய் அதனால் ஞானம் பெற்று முக்திக்குப் பாத்திரமாவான்.

இப்படி பகவானால் இவ்விரண்டு மார்க்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவும், பொதுவாக ஜனங்களுக்குக் கர்மம் செய்வதே இயற்கையாதலாலும், ஞான மார்க்கத்தில் கண்டபடி அனுஷ்டானங்களைப் பற்றற்றுச் செய்வது அரிதாதலாலும், கர்ம மார்க்கமே எளிதாதலாலும், பலர் கர்மம் செய்வதில் ருசி உள்ளவர்களாய் யாகயக்ஞாதிகளைச் செய்துவந்தார்கள். மேலும், கர்மகாண்டத்தில் பலவகையான கர்மங்கள் அவரவர் சக்திக்குத் தக்கவாறு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அக்கர்மத்தில் ஊற்றமுடையவர்கள் பற்பலர் ஆனார்கள். ஆனால், ஞானமார்க்கத்தில் வேற்றுமையில்லை. நூற்றெட்டு உபநிஷத்துக்களில் சொல்லியிருப்பவை அன்றுதொட்டு இன்றுகாறும் ஒருவிதவேற்றுமையுமின்றி விளங்குகின்றன. மேலும் தியாகமே, ஞானமார்க்கத்திற்கு முக்கியமாதலால் அதில் பற்றுடையவர்கள் சிலரேயானார்கள்.

மேற்கூறிய கர்மகாண்டத்தில் சொல்லியவாறு தொடங்கி, நாட்கள் செல்லச்செல்ல, யக்ஞயாகாதிகளைச் செய்யும் ரித்விக்குகளும், பிரயோஜனார்த்தமாகச் செய்விக்கும் யஜமானர்களும் ஜீவஹிம்சையைச் செய்து, தங்கள் நாவுக்கு ருசி தேடுபவர்களானார்கள். ஆதலால் ஞானத்தை உண்டாக்கக்கூடிய கர்மத்தைச் செய்யாமல், தங்கள் இந்திரியங்களுக்கு அடிமைப்பட்டவர்களானார்கள்.

இப்படி, சுருதி பிரமாணங்களுக்குத் தப்பான அர்த்தங்கள் செய்து, விபரீதமாகக் கொண்ட ஜீவஹிம்சையை நீக்க வேண்டி, பகவான் புத்தராக அவதரித்தார். வேதத்திற்கும் கடவுளுக்கும் ஏற்பட்ட பிராதான்யத்தை அழித்து, அக்காலத்திற்கேற்ப ஜீவஹிம்சை கூடாதென்றும், நல்லொழுக்கத்தால்தான் ஒருவன் நலம் பெறுவான் என்றும், தீமை செய்தால் தீமை விளையும் என்றும், நல்லது செய்தால் நன்மை விளையும் என்றும் உபதேசம் செய்துவந்தார் புத்தர். ஆனால், பிற்காலத்தில் அவருடைய சிஷ்யகோடிகளோ அவர் எந்த நோக்கத்தோடு பகவானைப் பற்றியோ, வேதத்தைப் பற்றியோ பேசவில்லை என்பதை அறியாதவர்களாய் உலகம் நிரீச்வரம் என்று கொண்டு, அடாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டார்கள். இது காரணமாக உலகத்தில் நல்லவாழ்வும் சமாதானமும் இல்லாதொழிந்தமையால், அவர்கள் பௌத்தப் பேய்களாய்த் துக்கத்தையே அனுபவித்து வந்தார்கள்.

இந்த துக்கநிலையை மாற்றுவான் பொருட்டு பகவான் ஸ்ரீ சங்கராசாரியரை அவதரிப்பித்தார். சூரியன் உதயமானால் இருள் இருந்தவிடம் தெரியாது மறைவது போன்று இந்த ஞானசூரியன் அவதரிக்கவே அதனைக்கண்டு புத்தப் பேய்கள் மறைந்தன. சங்கர பகவான் மறைவுபட்டிருந்த வேதத்தை விளக்கிக் காட்டி, சநாதந தர்மத்தை நிலைநாட்டினார். நான்கு வேதத்திலும் ஸாரமாயுள்ள நான்கு மஹாவாக்கியங்களை உபதேசித்து, அவ்வாக்கியங்களின் பொருளைக் கொண்டு மக்கள் பிரம்மத்தை அடையும் விதத்தையும் தெளிவுபட விளக்கிப் போந்தார். ஆனால், துர்மானிகளான பின்புள்ளவர்கள், அவ்வாக்கியங்களின் உண்மைப்பொருளையறியாதவராய் மயங்கலானார்கள். அதனால் தன் முழத்தால் மூன்றரை உயரமுள்ள ஆபாஸ தேகத்தை உடைய ஒவ்வொருவரும் 'நான் பிரஹ்மம்' என்கிற மஹாவாக்கியத்தின் பொருளை அறியாதவராய் அஹங்கரிக்கக் காரணமாயிற்று. தண்ணீரானது தாமரையிலிருந்தும் அதில் ஒட்டாததைப் போன்று இந்த ஆபாஸ மானிட ப்ரஹ்மா நன்மை செய்யினும் தீமை செய்யினும் தம்மை ஒன்றும் தீண்டாது என்ற கொள்கையுடையவரானார்கள். ஆகவே, உத்தம மார்க்கத்தையடைய உபதேசிக்கப்பட்ட சங்கர பகவானின் கொள்கையானது மாறுதலையடைய, உலகத்தில் சத்தியம் தலைமடிந்து அதர்மமானது தலையெடுக்க ஏதுவாயிற்று. இத்தகைய சீர் கேட்டைத் திருத்துவதற்காக எம்பெருமான் தனது சேஷாம்சமாகிய ஸ்ரீராமானுஜரை அவதரிக்கச் செய்தார். அன்னாருடைய சரிதத்தைச் சுருக்கமாய்த் தெரிந்துகொள்வோம்.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேற்கூறிய கர்மகாண்டத்தில் சொல்லியவாறு தொடங்கி, நாட்கள் செல்லச்செல்ல, யக்ஞயாகாதிகளைச் செய்யும் ரித்விக்குகளும், பிரயோஜனார்த்தமாகச் செய்விக்கும் யஜமானர்களும் ஜீவஹிம்சையைச் செய்து, தங்கள் நாவுக்கு ருசி தேடுபவர்களானார்கள்.//

//ஒவ்வொருவரும் 'நான் பிரஹ்மம்' என்கிற மஹாவாக்கியத்தின் பொருளை அறியாதவராய் அஹங்கரிக்கக் காரணமாயிற்று//

:)
இதை அடியேன் பந்தலில் எழுதி இருந்தா இந்நேரம் விஷயமே வேற! எப்படி இப்படி எழுதலாம் என்று ஏதோ தனி மனிதரைத் தாக்கிட்டாப் போல கோவம் பறந்திருக்கும்! :))