Monday, May 18, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் – 4

அதன் பிறகு இராமானுசர் தம் ஆசிரமத்தை விமரிசையாய் நடத்திவரும்போது தம் சிறிய திருத்தாயார் குமாரரான கோவிந்தபட்டரைத் தமக்கு சஹாயத்திற்காக வரவழைத்துக் கொண்டார். கந்தாடை முதலியாண்டானும், கூரத்துக்கதிபதியான கூரத்தாழ்வானும் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தார்கள்.

யாதவப்பிரகாசர் தம்முடைய தாயாருடைய வார்த்தைக்கிணங்கி, தாம் செய்த அபராதத்திற்கெல்லாம் ப்ராயச்சித்தமாக இராமானுசரையே ப்ரதக்ஷிணம் செய்து திரிதண்ட சந்நியாசியானார். இவருக்கு கோவிந்த ஜீயர் என்ற பெயர் வைக்கப்பட்டது. இவர் எழுதிய 'எதிதர்மம்' என்னும் கிரந்தத்தை இராமானுசர் அங்கீகரித்தார்.

பின்பு ஸ்ரீரங்கநாதருடைய அனுமதியின் பேரில் திருவரங்கப்பெருமாளரையர் கச்சி சென்று இராமானுசரைத் தந்தருள வேண்டுமென்று பேரருளாளனுக்கு விண்ணப்பித்தார். அப்படியே தந்தருள, இராமானுசர் கோயிலுக்குச் சென்று அழகியமணவாளனைச் சேவித்து நிற்க, அழகியமணவாளன் உவந்து 'உடையவர்' என்ற திருநாமம் சாத்தினார். அன்று தொட்டு எம்பெருமான் திருவுள்ளப்படி கோயில் காரியங்களைச் சிறப்பாக நடத்திவந்தார்.

கோயில் காரியங்களில் தலைமை வகித்துவந்த திருவரங்கத்தமுதனாரைத் திருத்தி, ஆழ்வான் திருவடிகளிலே சேர்ப்பித்தார். அமுதனாருடைய ஆதீனத்திலிருந்த ஸன்னிதி திறவுகோலையும் ஆழ்வானிடம் ஸமர்ப்பிக்கும்படி செய்வித்தார்.

அக்காலத்தில் கோவிந்தபட்டர், பெரியதிருமலை நம்பியினால் திருத்தப்பட்டவராய் விசிஷ்டாத்வைதமே மேலான மார்க்கமென்று சிந்தை தெளிந்து உடையவரை உள்ளன்புடன் ஆச்ரயித்தார்.

பெரியநம்பிகளின் திருவுள்ளப்படி மற்ற ரஹஸ்யங்களைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெறுவதற்குத் திருக்கோட்டியூர் சென்றார். திருக்கோட்டியூர் நம்பி இவருக்கு முகம் கொடாமையால் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினார். பின்பு திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீரங்கம் உத்ஸவ ஸேவார்த்தமாக வந்தபோது நம்பெருமாள் திருக்கோட்டியூர் நம்பிக்கு நியமித்தும், உடையவர் மறுபடியும் திருக்கோட்டியூர் சென்றபோது இது தருணமல்லவென்று அனுப்பிவிட்டார். இவ்விதம் பதினேழுமுறை சென்ற பின்பு சரமசுலோகார்த்தம் உபதேசிப்பதாகச் சொல்லினார்.

உடையவரை பதினெட்டாவது முறை உபதேசத்திற்கு வரும்படி நியமித்தபோது தண்டும் பவித்ரமுமாக வர நியமித்திருந்தார். அதனையே வியாஜமாகக் கொண்டு கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும் தம்முடன் அழைத்துச்சென்றார். இவர்களைக் கண்ட நம்பிகள் ஏன் அழைத்து வந்தீரென்ன, தண்டும் பவித்ரமுமான இவர்களை அழைத்துவந்ததாகச் சமாதானம் கூறினார். திருக்கோட்டியூர் நம்பி, இவர்களைத்தவிர மற்றெவருக்கும் சொல்லவேண்டாமென்று திட்டம்செய்து சரமசுலோகத்தை உபதேசித்தருளினார். உடையவர் ஆசாரியன் வார்த்தையை உல்லங்கனம் செய்தாவது பிறர் படும் அனர்த்தத்தைத் தவிர்க்க வேண்டுமென்று நினைந்து திருக்கோட்டியூரில் திருவோலகத்திலிருக்கும் எல்லா வைஷ்ணவர்களுக்கும் இந்த ரஹஸ்யத்தைச் சாதித்தருளினார். இதைக் கேள்விப்பட்ட ஆசாரியன் வினவ 'அடியேன் தங்களிடம் அபசாரப்பட்டதற்குக் கிடைப்பது நரகமேயாயினும் தேவரீர் திருவடி சம்பந்தத்தால் இத்தனை பேரும் உஜ்ஜீவிப்பார்களே!' என்று சமாதானம் சொன்னார். இவருடைய விசாலமான நோக்கத்தைப் பாராட்டி இவருக்கு 'எம்பெருமானார்' என்று திருநாமம் சாத்தி இவரை அணைத்துக் கொண்டார்.

பின்பு திருக்கோட்டியூர் நம்பியின் அனுமதிப்படி உடையவர் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேட்டுவர, உடையவர் இடையிடையே சில பாசுரங்களுக்கு நுட்பமாகிய அர்த்தங்களைச் சொல்லிவந்ததால் அவர் வேறாக நினைத்துத் திருவாய்மொழிப் பொருள் சொல்லுவது தவிர்ந்தார். பிறகு திருக்கோட்டியூர் நம்பி, ஆண்டானைச் சமாதானப்படுத்தி, உடையவர் கூறிய அர்த்தத்தைத் தாம் ஆளவந்தாரிடம் கேட்டிருந்ததாகத் திருமாலையாண்டானுக்குத் தெரிவித்தார். மறுபடியும் திருவாய்மொழி காலக்ஷேபம் நடக்கும் போது, உடையவர், ஆளவந்தார் இப்படி அர்த்தம் சொல்லியிருக்கமாட்டார் என்று விண்ணப்பிக்க, நீர் ஆளவந்தாரைக் காணாதிருக்க இவ்வாறு சொல்லுவதற்குக் காரணமென்னவென்று கேட்க, 'எப்படி துரோணாசாரியருக்கு ஏகலவ்யனோ அவ்வாறே அடியேனும் ஆளவந்தார் அநுக்கிரகத்தால் அவருக்கு ஏகலவ்யன்' என்று சொல்ல, இவர் சாமான்ய சிஷ்யரல்லரென்று அதிசயித்தார்.

திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின்னர் பெரியநம்பியின் நியமனப்படி திருவரங்கப்பெருமாளரையரிடம் சரமார்த்தங்களைக் கேட்டார்.

மாதுகரம் பண்ணுகிறபோது கைங்கரியபரர்களில் ஒருவன், எம்பெருமானாருடைய கோயில் நிர்வாஹத்தைச் சகியாது மாதுகரத்திலே விஷம் கலந்து கொடுத்தான். அவ்வுண்மையறிந்து உபவாஸமிருந்தார். திருக்கோட்டியூர் நம்பி, உடையவர் திருமேனியில் பரிவுள்ளவரான கிடாம்பியாச்சானைத் தளிகை பண்ணி ஏக மாதுகரமாகப் பிரசாதிக்கும்படி நியமித்தார்.

பின்பு யக்ஞமூர்த்தியென்கிற மஹாவித்வான் ஒருவர் மாயாவாதி சந்நியாஸியாய் உடையவருடைய வைபவத்தைக் கேட்டுக் கோயிலுக்கு வந்து உடையவருடன் தர்க்கிக்க வேண்டுமென்றார். யக்ஞமூர்த்தி தோற்றால் வைஷ்ணவ சித்தாந்தத்தில் புகுவதாயும் உடையவர் தோற்றால் கிரந்த ஸந்யாஸம் செய்வதாகவும் ஒரு நியமம் ஏற்படுத்திக்கொண்டனர். பதினேழு நாள்வரை மூர்த்தியின் வாதம் பிரபலமாயிருக்க, உடையவர் அன்றிரவு அமுது செய்யாது வெறுப்புடனே கண்வளர்ந்தருளினார். பேரருளாளன் அவர் கனவில் தோன்றி ஆளவந்தார் செய்தருளிய மாயாவாத கண்டனத்தைக் கொண்டு ஜெயமடையும்படி ஆக்ஞாபித்தார். அதனைத் தன் ஞானத்தால் அறிந்த யக்ஞமூர்த்தி தமது தோல்விக்கு இசைந்தார். பின் உடையவர் அவர்க்குத் திரிதண்டத்தையும் பூணூலையும் தரிப்பித்துப் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்தருளி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற பெயரையும் வைத்தனர்.

அக்காலத்தில் திருமலைக்குச் சென்று கைங்கரியம் செய்வார் யாருமில்லாமையால் சிஷ்யகோடியிலுள்ளாரைக் கேட்க, யாரும் சம்மதித்திலர். அனந்தாழ்வான் மட்டும் தாம் போவதாக ஒப்புக்கொண்டார். அவரைப் பார்த்து 'நீர் தாம் ஆண்பிள்ளைகாணும்' என்றார்.

திருமலைத்தாழ்வரையில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் பதின்மரையும் ஜீர்ணோத்தாரணம் செய்து திருப்பதி எழுந்தருளி, விட்டலதேவனை சிஷ்யனாக்கிக் கொண்டார்.

பெரியதிருமலைநம்பி சந்நிதியில் ஒரு வருடகாலம் ஸ்ரீமத்ராமாயண காலக்ஷேபம் கேட்டார். கோவிந்த பட்டருடைய விரக்தியைக் கண்டு அவரைத் தாம் தனமாகப் பெற்று அவருக்கு சந்நியாஸ ஸ்வீகாரம் செய்வித்து எம்பாரென்று திருநாமத்தையும் சாத்தினார்.

பின்பு உடையவர் திக்விஜயம் செய்யத் திருவுள்ளம் பற்றிக் கூரத்தாழ்வானையும் அருளாளப்பெருமாள் எம்பெருமானாரையும் உடனழைத்துக் கொண்டு சென்று ஆங்காங்குள்ள பாஹ்ய மதங்களை ஜெயித்து வருகிற காலத்தில் காஷ்மீர் தேசத்திலுள்ள ஒரு தலைநகரில் 'போதாயன விருத்தி' என்னும் கிரந்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டு ஆங்கு சென்று அரசனைக்கண்டு அவனிடம் அனுமதி பெற்று, உடையவரும் கூரத்தாழ்வானும் அப்போதாயன விருத்தியினை ஒருமுறை பார்த்து வந்தார்கள். அவ்வாறு பார்த்துவரும் காலத்து அச்சமஸ்தான வித்வான்கள் பொறாமையினால் அதைத் திருப்பி வாங்கிக்கொண்டனர். உடையவர் நன்றாகப் பார்க்க முடியவில்லை என்று வியாகுலப்பட்டார். அப்போது ஏகசந்தைக்கிராகியாகிய நம் ஆழ்வான், 'தேவரீர் கிலேசப்படவேண்டாம்; நியமித்தால் அப்புத்தகத்தில் உள்ள யாவற்றையும் அடியேன் இப்போதே ஒப்பிக்கிறேன் அல்லது இரண்டாற்றங்கரை நடுவே சொல்லச் சொன்னாலும் சொல்லுகிறேன்' என்றார்.

காஷ்மீரத்தில் ஸரஸ்வதிதேவியாரின் பீடமிருப்பதால் உடையவர் அவ்விடம் எழுந்தருளியபோது அப்பீடத்து வீற்றிருக்கும் ஸரஸ்வதி தேவி, உடையவரை வரவேற்று ஒரு சுருதிக்குப் பொருள் கேட்க, கேட்ட சுருதிக்குச் சொல்லிய பொருளைக் கேட்ட சரஸ்வதி சந்தோஷப்பட்டு இவர் செய்த ஸ்ரீபாஷ்யத்தைத் தன் திருமுடியில் வைத்துக் கொண்டாள். ஸரஸ்வதிதேவி இவருக்கு 'ஸ்ரீபாஷ்யகாரர்' என்ற ஒரு திருநாமத்தையும் சாத்தி ஆராதனம் செய்துகொண்டுவரும்படி ஸ்ரீஹயக்கிரீவரையும் கொடுத்தாள். பின்னர், அத்தேசத்தரசன் உடையவருக்குச் சிஷ்யனானான்.

அந்த அரசன் ஸ்ரீபாஷ்யத்தைப் பார்த்து வியந்து எந்த ஆதாரத்தைக் கொண்டு செய்தீரென்று கேட்க 'பழமையான போதாயன விருத்தியையும் அதற்கு டங்கர், குஹதேவர், கபர்தி, பாருசி முதலியோர் செய்த வியாக்கியானங்களையும் ஆதாரமாகக் கொண்டு இதனை எழுதி முடித்தேன்' என்று தெரிவிக்க, கேட்ட அரசன் சமஸ்தான புத்தகசாலையில் உள்ள அவற்றோடு ஒத்திட்டுப் பார்த்து ஸ்ரீபாஷ்யத்தில் சொல்லப்பட்டவைகள் சரியென்று தேறினான்.

திருவனந்தபுரத்திலும் ஜகந்நாதத்திலும் மடங்களை ஸ்தாபித்தார். மீண்டும் திருமலைக்குச் சென்றபோது சைவர்கள் திருவேங்கடமுடையானுக்குச் சங்கு சக்கரங்களாகிய அசாதாரணமான ஆயுதங்களில்லாமையால் அவ்வுருவத்தைச் சிவனுடைய உருவமாக உரிமை பாராட்டினர். இராமானுசர் திருமால் திருவுருவம் என்று தர்க்கித்தார். இரு கக்ஷியாரும் பேசிப் பேசி முடித்து ஒருவித முடிவுடன் இரு தெய்வங்கட்குரிய சின்னங்கள் கீழே வைக்கப்பட்டுக் கதவுகள் மிக பந்தோபஸ்துடன் மூடப்பட்டன. மறுநாள் காலையில் இரு கக்ஷியார் முன்பும் கதவு திறக்கப்பட்டபோது, பகவான் திருக்கைகளில் சங்கும் சக்கரமும் பிரகாசித்தன. சிவசின்னங்களான திரிசூலமும், டமருகமும் கீழே தள்ளப்பட்டு இருக்கக் கண்டார்கள். இக்காரணம் பற்றி எம்பெருமானாருக்கு 'அப்பனுக்குச் சங்காழியளித்த பெருமான்' என்னும் திருநாமம் உண்டாயிற்று.

No comments: