Tuesday, May 19, 2009

எம்பெருமானார் சரிதம் - சில முக்கிய சம்பவக் குறிப்புகள்

இச்சிறுநூல் விரியுமென்று விடப்பட்ட சில முக்கிய சம்பவக் குறிப்புகள்

இவைகளால் இராமாநுசர் சமரச அன்பு உடையாரென்றறியலாகும்

1. அர்ச்சாசமாதியையும் கடந்து பகவான் வரதன் திருக்கச்சிநம்பியிடம் வார்த்தையாடுபவராகையால், இராமானுசர்க்கு ஏற்பட்ட ஆறு சந்தேகங்களுக்கு பதில் வரதனிடம் கேட்கும்படி இராமாநுசர் நம்பியைப் பிரார்த்தித்தார். அவ்வாறே கேட்க பகவானுடைய மறுமாற்றங்களை நம்பிகள் தெரிவிக்க, இராமாநுசர் நம்பிக்குத் தெண்டன் சமர்ப்பித்தார்.

2. நித்தியவிபூதியும் லீலாவிபூதியும் இராமாநுசருக்கு பகவானால் கொடுக்கப்பட்டதற்கு அத்தாட்சியாக இராமாநுசர் தும்பியூர் கொண்டியென்னும் இடைப்பெண்ணுக்குக் கொடுத்த சீட்டை ஸ்ரீனிவாஸன் அங்கீகரித்து அவளுக்கு மோக்ஷமளித்தான்.

3. பகவான் திருக்குறுங்குடிநம்பி வேண்ட, இராமானுசர் பகவானை சிஷ்யனாக்கிக் கொண்டு திருமந்திர உபதேசம் செய்தார்.

4. இராமானுசர் நீராடி வரும்போது காயசுத்திக்காக பிள்ளையுறங்காவில்லிதாசர் கைவாகு கொடுத்துவந்தார்.

5. கோயிலில் ரங்கநாதனுடைய உடைகளை வெகுநன்றாக வெளுத்துவந்த வண்ணானை இராமானுசர் கைப்பிடித்து அழைத்துச்சென்று ஸ்ரீரங்கநாதனுடைய அருளுக்கு இலக்காக்கினார்.

6. பஞ்சம வர்ணத்தரான மாறனேர்நம்பிக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பெரிய நம்பிகள் செய்தபோது இராமானுசர் தம்மை இக்காரியத்தில் நியமிக்கலாகாதா என்றார்.

7. மேல்கோட்டையில் பஞ்சமர்கள் செய்த உபகாரத்திற்காக, அவர்களை சந்நிதிக்குள் பிரவேசிக்க (வருடத்தில் மூன்று நாட்கள்) ஏற்பாடு செய்தார். பஞ்சமர்கள் என்னும் பெயரை மாற்றி திருக்குலத்தடியார் என்று அழைக்கச் செய்தார்.

8. நாராயணா என்பதும் ராமானுசா என்பதும் நான்கு எழுத்துக்கள் கொண்ட நாமமேயானாலும், பகவானாகிய நாராயணன் நம்மை இரட்சிக்கவும் செய்வான் நிக்ரஹிக்கவும் செய்வான். ஆனால், லோகோபகாரியாகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பாரென்று அடிக்கடி கூரத்தாழ்வான் சொல்லுவார்.

9. மாறனேர்நம்பிக்குப் பெரியநம்பி நீராட்டி அமுது செய்விக்க, பின்னிருந்து நோக்கி அரங்கரிடம் பிரபத்தி பண்ணி மாறனேர்நம்பி நோயை நீக்கினார்.

2 comments:

R.DEVARAJAN said...

//மாறனேர்நம்பிக்குப் பெரியநம்பி நீராட்டி அமுது செய்விக்க, பின்னிருந்து நோக்கி அரங்கரிடம் பிரபத்தி பண்ணி மாறனேர்நம்பி நோயை நீக்கினார்.//

’ஆசார்ய ப்ரஸாதத்தை ஏன் விலக்கினீர் ?’ என்று பெரிய நம்பிகளிடம் மாறனேர் நம்பி
மனம் வருந்திக் கூறியதாகவும் தெரிகிறது.

தேவ்

குமரன் (Kumaran) said...

என்ன ஒரு அற்புதமான நிலை அது தேவ் ஐயா. ப்ரஸாத புத்தி என்று கீதை சொன்ன இலக்கணத்திற்கு மாறனேர்நம்பிகளைப் போன்றவர்கள் இலக்கியமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். குலசேகராழ்வாரின் முகுந்தமாலாவில் ஒரு சுலோகம் வருமே அதுவும் நினைவிற்கு வருகிறது.