Friday, January 22, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 8 மூவர் முதல்

தொழில் மூன்று. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்பன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தியுண்டு. இவர் மும்மூர்த்தி எனப்படுவர். மும்மூர்த்திகட்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மும்மூர்த்திகளைப் பிர்மா - விஷ்ணு - ருத்ரன் - என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் - ஐஸிஸ் - ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் - பிரீயா - தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு - இயா - பேல் (அஸ்ரியர்); தௌலாக் - பான் - மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் - அவலோகீதீசுரர் - மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் - பினா - சொக்மா (யூதர்); அஹுரமஜதர் - மித்திரர் - அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது. மும்மூர்த்தி வழக்கு உலகுக்குப் போது என்பது உணரத்தக்கது.

மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இது பற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்திகட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறுகிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இதுபற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழிகளைப் பார்ப்போம்.

குறிப்பில்... ...
... ... மூவரில்
முதல்வனாக ... .... - திருவாசிரியம் - 3

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்...

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்...

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை...

தஞ்சமாகிய... ...
... ... மூவர் தம்முள்ளும் ஆதியை...

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி...

தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும்.

நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன?

'யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே'

என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப்பொருளுகுச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன.

நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது, சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழுமுதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது. பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ்வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது.

சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும் விஷ்ணு அறியாச் சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழுமுதலுக்குரியது.

முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது; மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க.

செக்கர் மாமுகி... ...
சிவனியனிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
... .... ...
... ... ...
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட ... (திருவாசிரியம்)

என்றும்,

வரிவளையால்... ...
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்... ...

என்றும்,

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே... ...

என்றும்,

தளர்ந்தும்... ...
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

என்றும்,

நோலா தாற்றேன்... .... ...
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவநாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன.

சுரரறி ... ...
... ... பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

எனவும்,

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ... ...

எனவும்,

கள்ள வேடத்தை ... ....
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை
வேறலாமை விளங்க நின்றதும் ...

எனவும்,

வேறுகொண்டு ... ...
ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே

எனவும்,

என் திருமார்பன் தன்னை
என் மலைமகள் கூறன் தன்னை...

எனவும்,

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்... ...

எனவும் வரூஉந் திருவாய்மொழ்களிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன.

நம்மாழ்வார், மும்மூர்த்துகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே; அதற்குப் பெயர்கள் பல.

Saturday, January 2, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 7 அவதாரம்

'உருவங்கள் தத்துவ நுட்பங்களாயின், அவதாரங்களின் கருத்து என்னை?' என்று சிலர் கேட்கலாம். கேட்பதற்கு இடனும் உண்டு. அவதாரங்களைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலகில் உலவி வருகின்றன. அவைகளைப் பற்றி எழுந்த வாதப் போர்களும் பல. 'இறைவன் மனிதனாக அவதரிப்பன்' என்று சிலர் கூறுவர். 'எங்குமுள்ள இறைவன் எங்ஙனம் மனிதனாக அவதரித்தல் கூடும்' என்றும், ஆகவே, 'இறைவன் மனிதனாக அவதரியான்' என்றும், 'இறை ஆணைப்படி அவதரிக்கும் குருவை உபசாரமாக அன்பால் இறைவன் என்று சொல்வது உலக வழக்கு' என்றும் வேறு சிலர் கூறுவர். 'வீரரையும் குருமாரையும் நாளேற நாளேற இறைவன் அவதாரமென்பது உலகியல்' என்று மற்றுஞ் சிலர் கூறுவர். இன்னும் பலப்பலவாறு கூறுவோருமுளர். ஆழ்வார் அவதாரங்களைத் தள்ளவில்லை. அவர் அவைகள ஏற்றுப் போற்றியே இருக்கிறார்.

ஆனானாளுடையான் என்றஃ
தேகொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்தென்னை
முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நரசிங்க
முமாய்க் குறளாய்
கானார் ஏனமுமாய்க் கற்கியா
மின்னம் கார்வண்ணனே.

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதியஞ்சோதி உருவை
அங்குவைத் திங்குப்பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்மனிசரே.

காண்டுங்கொலோ நெஞ்சமே
கடியவினையே முயலும்
ஆண்டிறல் மீளிமொய்ம்பின்
அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே
விரிநீர் இலங்கையருளி
ஆண்டுதன் சோதிபுக்க
அமரர் அரியேற்றினையே.

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும்
நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு
மாயங்களே இயற்றி
கூற்றியல் கஞ்சனைக் கொன்று
ஐவர்க்காய் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல்மிக் கான்பெரிய
பரஞ்சோதி புக்கவரியே.

என வரூஉந் திருவாக்குக்களை நோக்குக.

அவதாரங்களைப் பற்றி யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில் உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமையாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியார் கண்ட அநுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண்செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பௌராணிக மதமாகும். ஞான நூல் ஆராய்ச்சியுடையவர், புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கைகளைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு.

உலகை நோக்குவோம். தாவர முதல் மக்கள் ஈறாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவர முதல் மக்கள் ஈறாக உள்ளன யாவும் உயிர்களே. அவைகள் உடலமைப்பில் வேற்றுமையுறுகின்றன. அவ்வவ்வுடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்துக் காட்டினர் போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக்கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ்வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்திலிருந்தே உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும். (கூர்தல் - உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர்.

நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்குகின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில் நகர்தலுஞ் செய்யாது. கூர்மம் (ஆமை) சிறு கால் கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்க வல்லது. நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனாயினும், அவன் முதலில் தோன்றினவனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால் சாந்தமில்லாதவன். ச்ரிராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன்.

இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந் நிலையை நம்மவர் கற்பம் என்பர். உயிர் வர்க்கம் மீனா யிருந்தது ஒரு கற்பம்; ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும்.

அவதாரங்களை இறைவன் மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத் தக்கது. உயிர்கட்கு அறியாமைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக்கத்துக்கென அவைகள், மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அவ்வுடலால் அறிவு விளங்கப்பெறுகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றியமையாததாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாததாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்ய வல்லதாகும்.
அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னுஞ் செம்பொருள். அச் சித், எங்கும் நிறைந்தது; எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது. அஃது உயிர்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகள் மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத் துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந்நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித மரபு. அம் மரபு பற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன் பாற்படுத்தின போலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக் கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்கலை நோக்குகிறேன். யான் மனிதன்; குறையுடையவன்; எனக்கு இப்பொழுது விளங்கியுள்ளதை விளம்பினேன்.

திருமால் அடியவர் மண்மீது பிறத்தலை ஆழ்வார் பலபடப் பாடியுள்ளார். அங்ஙனம் அவர் பாடியது சிந்திக்கற்பாலது.

கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீ ரெல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.

திரியும் கலியுகம் நீங்கித்
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருக,
கரியமுகில் வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே.

இடங்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே.

கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப் பிராந்தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்
சிந்தையைச் செந் நிறுத்தியே.

இப் பாடல்களை உன்னுக.

அவதாரங்களால் உயிர்கட்கு நலன் உண்டு என்பது ஆழ்வார் கருத்து. அக் கருத்தை ஆழ்வார் பாடல்களிற் காண்க.

நாட்டில் பிறந்தவர் நாரணற்
காளன்றி யாவரோ
நாட்டில் பிறந்து படாதன
பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை
நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்துய்யச் செய்து
நடந்தமை கேட்டுமே.

மாய மறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ
தாயம் செறுமொரு நூற்றுவர்
மயங்கஓ ரைவர்க்காய்
தேசம் அறியவோர் சாரதி
யாய்ச்சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்தநல்
வார்த்தை அறிந்துமே.

கண்ணனல்லா லில்லை கண்டீர்
சரண் அதுநிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும்முடைமை யுண்டேல்
அவனடி சேர்ந்துய்ம் மினோ
எண்ணவேண்டா நும்ம தாது
மவனன்றி மற்றில்லையே.

இத் திருப்பாடல்களில் கண்ணனெம் பெருமான், சாது சனங்களைக் காத்தற் பொருட்டும் - கொடியவரை ஒறுத்து மண்ணின் சுமை நீக்குதற்பொருட்டும் - வந்தான் என்பது திறம்பட வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை உன்னுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈண்டு நாம் அறியத்தக்க உண்மை ஒன்றுளது. அது, கண்ணன்பால் அன்பு செலுத்துவோர் அனைவரும் - அவனடி சேர முயல்வோர் எல்லோரும் - சாது தர்மத்தை நாட்டவும் அதர்மத்தை வீழ்த்தவும், கண்ணனைப் போல, ஒல்லும் வகை முயலுதல் வேண்டும் என்பது. கண்ணன் அவதாரத்தால் அறியக் கிடக்கும் உண்மைகளுள் தலையாயது இதுவே என்றுங் கூறலாம். இத்தகைய தொண்டு செய்யாது, கண்ணபிரான் ஆலயத்தை மட்டும் வலம் வருவதாலும், சந்நியாசங் கொண்டு காடு நோக்கி ஓடுவதாலும், வேறு பல தன்னல உழைப்பாலும் பிறவி நோக்கம் நிறைவேறாது. கண்ணன் காட்டிய வழியை நாமும் கடைப்பிடிப்போமாக. ஆழ்வாரும் அந் நெறியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்பொழுது உலகம் உரிமையிழந்து வாடுகிறது. இவ் வேளையில் உரிமைக்கு உழைப்பது கண்ணன் திருவடிக்குச் செய்யும் திருத்தொண்டாகும்.