Saturday, March 5, 2011

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: III கம்பனின் சமயம்

25. திரு. ம. பொ. சியின் கட்டுரையின் முக்கிய நோக்கம் "கம்பன் சமரச சைவனே" என நிரூபிப்பதேயாகும். இனி ம.பொ.சி. இவ்விஷயத்தை நிலைநிறுத்தக் கூறும் வாதங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

26. கம்பராமாயணத்தைப் பரப்பிவந்தவர்களும், அதற்கு நாத்திகர்களால் எதிர்ப்பு வந்தபோது அதை எதிர்த்துக் காத்தவர்களும் சைவர்களேயாகையால், கம்பன் சைவனாகவே இருக்கவேண்டும் என்பது ம.பொ.சியின் வாதங்களில் ஒன்று. "விஷ்ணு கோயில்களில் வழிபடுபவர்கள் சைவர்களே மிகுதியாயிருப்பதால், அவ்வாலயங்களிலிருப்பவன் சிவனே" என்னும் வாதம் போன்றது இது. உலகக் காப்பியங்களில் இராமனையொத்த கதாநாயகன் எவரும் எங்குமில்லையாகையால், எல்லா மதத்தவர்களும் இராமனிடம் ஈடுபடுகிறார்கள். "யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாரதி பாடியதுபோல் கம்பன் மஹாகவிகளில் தலைசிறந்தவனாகையால் அவனிடமும், அவனது பெருங்காவியத்திலும் எல்லா மதத்தவர்களும் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் சைவர்கள் மிகுதியாகையால், கம்பனிடம் ஈடுபட்டுக் கம்பராமாயணத்தில் போதுபோக்குகிறவர்களிலும் சைவர்கள் மிகுதியாகவுள்ளனர். ச்ரி. உ.வே. வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர் கம்பராமாயணத்திற்கு எழுதிய உரையே அனைவராலும் உச்சிமேல்வைத்து மெச்சப்படுகின்றது என்பதையும், வைணவர்களிலும் பல புலவர்பெருமக்கள் கம்பராமாயணத்தில் ஈடுபட்டனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ம.பொ.சி. தம் வாதத்தை வள்ளுவர் இளங்கோ விஷயத்திலும் செய்யலாம். சிலம்புச்செல்வரெனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானகிராமணியாரைப் போன்ற (சமரச) சைவர்களே சிலப்பதிகாரத்தில் ஈடுபடுவதால், இளங்கோவடிகள் சைவரே என ம.பொ.சி. கூறுவாரோ? "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று அகாரத்தால் சொல்லப்படும் பகவானே ஜகத்காரணன் என்று திருக்குறள் கடவுள்வாழ்த்தின் முதற்பாடலிலும், "ஈரடியால் உலகளந்தவன்" என்று பொருட்பாலிலும், "தாமரைக்கண்ணானின் உலகே வீட்டுலகம்" எனக் காமத்துப்பாலிலும் திருமால் ஒருவனே பரம்பொருள் என உணர்த்தியிருப்பவரும், திருமாலின் தேவியான திருமகளைச் சிறப்பித்துப் பாடியிருப்பவரும், சிவனையோ, முருகனையோ, காளியையோ எங்கும் தொடாதவருமான வள்ளுவரைச் சைவர்களே மிகுதியாக ஆதரித்து நாயனாராக்கிவிட்டதால் திருவள்ளுவர் சைவரே என ம.பொ.சி. கூறமுற்படுவாரா? முற்பட்டாலும் நடுநிலைநிற்கும் நல்லோர்கள் இவற்றை ஏற்பரோ?

27. "நாடவிட்ட படலத்தில் திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் பாடிய கம்பன் அவற்றில் திருமால் கோயில் இருப்பதாகப் பாடாமையால் கம்பன் வைணவனல்லன்" என்று வாதம் செய்கிறார் ம.பொ.சி.; ராமாயணத்தை ஆழ்ந்து படிக்காததால் விளைந்தது இவ்வாதம். ச்ரிராமபட்டாபிஷேகத்திற்குப் பின்பே, ச்ரிராமபிரானிடமிருந்து விபீஷணனால் பெறப்பெற்ற ச்ரிரங்கநாதன் இரண்டாற்றுகிடையிலான திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பெற்றான் என்பது வரலாறு. "அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்" என்னும் பாடலில் இவ்வரலாற்றைக் கம்பனும் உணர்த்தியிருக்கிறான். அக்காலத்தில் ச்ரிரங்கநாதன் இங்கு எழுந்தருளாமலிருக்க, அவனைப்பற்றி பட்டாபிஷேகத்திற்குமுன் கம்பன் பாடுவானா? பாடியிருந்தால் (திரு. ம.பொ.சியைப்போல்) அசட்டுப்பட்டம் கட்டிக்கொண்டிருப்பானே! திருவேங்கடத்திலும் ச்ரிராமாவதாரகாலத்திற்குப் பிறகு பிருகு மஹரிஷியின் காலத்தில் எம்பெருமான் எழுந்தருளினான் என்பது ச்ரிவேங்கடாசல வரலாறு. ஆகையால், திருவேங்கடத்திலும் நாடவிட்ட படலத்தில் திருமால் எழுந்தருளியிருந்ததாகக் கம்பன் பாடவில்லை. இவ்வரலாற்று உண்மைகளை உணராமல், இவ்வாதங்களைக் கொண்டு திரு. ம.பொ.சி. கம்பனை சைவனாக்கமுயல்வது விதண்டாவாதமல்லாது வேறில்லை. ம.பொ.சியின் மற்ற வாதங்களும் நிலைநிற்க மாட்டாதவையே என நிரூபிப்போம் இனி.

28. சிலம்புச்செல்வரான ம.பொ.சி. சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து கற்றவர். தம் வாழ்நாள் முழுவதும் அதிலேயே செலவழித்தவர். அதனாலேயே அவர் கம்பராமாயணம் முதலான மற்ற தமிழ் நூல்களில் ஆழ்ந்த புலமை இல்லாதவரானாரென்பது, அவருடைய கட்டுரையிலிருந்தே விளங்குகிறது. சங்கநூல்களில் அவரது புலமை மேம்போக்கானதே என்பதை இந்நூலின் தொடக்கத்திலே விரிவாக நிரூபித்தோம். கம்பனின் சமயத்தைப்பற்றிய இக்கட்டுரைத் தொடரில் கம்பன் மும்மூர்த்திகளுக்குள்ளே திருமாலையே முதல்வனாகக் காட்டும் - நூற்றுக்கணக்கான பாடல்களைத் தொடாமலே விட்டுள்ளார். கம்பராமாயணத்தின் தொடக்கத்தில் உள்ள "உலகம் யாவையும்" என்னும் கடவுள் வாழ்த்துப்பாடலை எடுத்துக்கொண்டு 'இதில் திருமாலுக்கே உரிய அடையாளங்கள் எதையும் கம்பன் காட்டவில்லை" என்று கூறும் ம.பொ.சி. அதை ஒட்டியுள்ள இரண்டு பாடல்களில், உலகனைத்தையும் ஆக்கி அளித்து அழிப்பவனாக முதற்பாடலில் தம்மால் கூறப்பெற்ற முழுமுதல்வன் திருமாலே என்பதைத் தெளிவாகக் காட்டியிருப்பதைத் தொடாமலே சென்று விடுகிறார். இப்பாடல்களின் பொருளையே இவர் அறியவில்லையோ என்று நாம் ஐயுறுமாறு, 'முதல்பாடல் சிவனைப்பற்றியதே' என்று ம.பொ.சி. ஆதாரமில்லாமல் சாதிக்கிறார். இவ்விருபாடல்களை அடுத்த பாராவில் விரிவாக விளக்குவோம். 'இரணியன் வதைப்படலம் கம்பன் செய்ததல்ல' 'திருவேங்கடமலையில் உள்ள திருமாலைப் பாடாததேன்' முதலான தலைப்புக்களில் பல பக்கங்களை வீணாக்கியிருக்கும் ம.பொ.சி. திருமாலை மும்மூர்த்திகளுக்குள் முதல்வன் என்று கம்பன் கூறும் நூற்றுக்கணக்கான பாடல்களைக் கண்டு கொள்ளாமலே செல்கின்றார். இரணியன் வதைப்படலத்தில் "சாணிலும் உளன்" என்னும் பாடலை மேற்கோளாகக் காட்டும் போது அதிலுள்ள உயிரான தொடரான 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் பகுதியை 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று எடுக்கிறார். இப்பாடலில், " 'இறைவனான திருமால் இல்லை' என்று நீ சொன்ன சொல்லிலும் அத்திருமால் இருக்கிறான்" என்னும் பொருள் உடைய 'நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்னும் தொடரிலேயே பெருஞ்சுவை உள்ளது. 'நான் சொன்ன சொல்லிலும் உளன்' என்று ம.பொ.சி. இதை மாற்றுவது சுவைக்கேடாகவே உள்ளது. இவற்றிலிருந்து கம்பராமாயணத்தை ம.பொ.சி. ஆழ்ந்து கற்காமல் இக்கட்டுரைத் தொடரை எழுத முற்பட்டுவிட்டார் என விளங்குகிறது. காமகோடிப் பெரியபீடாதிபதியை 'நடமாடும் தெய்வம்' என்று புகழ்ந்து எழுதி, அவரது ஆராய்ச்சி இல்லாத கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டுவதிலிருந்தும் - அவரிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு வைணவத்தை இழுவுபடுத்துவதற்காகவே அக்னிஹோத்ரம் ராமானுஜதாத்தாசாரியர் எழுதிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டுவதிலிருந்தும், ஆத்திகவேடம் பூண்ட நாத்திகரான அவரை 'பரம பாகவதர்' 'பரம வைஷ்ணவர்' என்று புகழ்வதிலிருந்தும் - திரு. ம.பொ.சி. வைணவத்திற்குத் தீங்கு இழைப்பதையே தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்ட காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினாலேயே அவசரக்கோலமாக இக்கட்டுரைத் தொடரை எழுதியிருக்கிறார் என்று தெளிவாக விளங்குகிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே - 'விஷ்ணுவுக்குத் தமோகுணமுண்டு' என்று பேசி, அதைப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளியிடச் செய்து, தமது விஷ்ணுத்வேஷத்தைப் பறைசாற்றிக்கொண்டவர் காமகோடிப் பெரியவர். அவரது அக்கூற்றை 'ஸாத்விக விஜய ஸர்வஸ்வம்' என்னும் எமது நூலில் விரிவாக மறுத்திருக்கிறோம். அதை ம.பொ.சிக்கும் அனுப்பியிருக்கிறோம். அதை இன்றளவும் பீடாதிபதியாலும், அவரது சீடர்களாலும் மறுக்க இயலவில்லை. அதனால் கடுங்கோபங்கொண்ட பீடாதிபதி தமது கட்டுரைகளிலும், காமரசக் கதைகளை வெளியிட்டு மக்களைக்கெடுக்கும் 'கல்கி' 'விகடன்' 'இதயம்' முதலான பத்திரிகைகளில் தமது சீடர்களைக்கொண்டு எழுதுவிக்கும் தலபுராணக் கட்டுரைகளிலும், இலக்கியக் கட்டுரைகளிலும் ஏராளமான இடங்களில் விஷ்ணுவை இழித்துரைத்தும், உரைப்பித்தும், வைஷ்ணவத்தைத் திரித்துரைத்தும், உரைப்பித்தும், பொய்களைப் பரவச்செய்துவருகிறார். இப்பொய்கள் அனைத்தையும் இதுகாறும் ஏழு சதகங்கள் (700 கேள்வி பதில்கள்) வெளிவந்துள்ள நமது ஸுதர்சனர் பதில்களில் நடுநிலையாளர்கள் தலைகுலுக்கி வரவேற்கும்படி மறுத்து, உண்மையை நிலைநாட்டியிருக்கிறோம். 'காமகோடிப் பெரியவர் மிகக்கொடிய விஷ்ணு த்வேஷி' என்பதை ஜீரணித்துக்கொள்வதற்கு ம.பொ.சியின் மனம் இடம் கொடுக்குமானால், இந்த ஸுதர்சனர் பதில்களையும் அவருக்கு அனுப்பச் சித்தமாயிருக்கிறோம். காமகோடிப் பெரியவரின் கைக்கூலியான தாத்தாசாரியர் இயற்றிய 'வரலாற்றில் பிறந்த வைணவம்' என்னும் நூலிலுள்ள வாதங்களை வைணவ உலகத்திலுள்ள சான்றோர்கள் அனைவரும் கண்டித்துச் சிதறவடித்திருக்கும் கட்டுரைகளைத் தாங்கிய 'அக்னிஹோத்ரியும் வைணவமும்' எனும் நம் வெளியீட்டையும் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். இந்நூல்களைக் கொண்டு காமகோடிப் பெரியவருடையவும், அவரது கைக்கூலியுடையவும் கட்டுரைகள் நிலைநிற்கமாட்டாத புன்சொற்களே என்பதை ம.பொ.சி. எளிதில் உணரலாம். இதை உணரும் நடுநிலைமை அவருக்கு ஏற்படவேண்டும் என்று நாம் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறோம். இப்படிக் கம்பராமாயணத்தில் ஆராய்ச்சியில்லாமல், காமகோடிப் பெரியவரின் தூண்டுதலினால் கட்டுரைத் தொடரை எழுத முற்பட்ட ம.பொ.சி. காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஒளவையார் இயற்றிய ஆத்தி சூடியில் 'அரனைமறவேல்' என்றுள்ளதாக எழுதியதின் மூலம் தாம் ஆத்தி சூடியைக்கூட ஆழ்ந்து கற்கவில்லை என்று புலப்படுத்திக் கொள்கிறார் அந்தோ! இப்போதாவது ஆத்திசூடியை எடுத்துப் பார்த்தாரானால், இடையின 'ர'கரத்திற்கும், 'ல'கரத்திற்கும், 'வ'கரத்திற்கும், 'ழ'கரத்திற்கும், 'ள'கரத்திற்கும் உரிய நீதி மொழிகளுக்குப் பிறகு வரும் 'அறனை மறவேல்' என்னும் நீதி மொழியை 'அரனை மறவேல்' என்று காமகோடி பீடாதிபதி மாற்றியது தமிழறிவின்மையால் ஆயது என்பதை உணர்ந்து, காமகோடிப் பீடாதிபதியைப் போல் இன்னமும் பிடிவாதம் பிடிக்காமல் நேர்மையுடன் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த நேர்மை அவருக்கு ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஆத்திசூடியைக் கூட ம.பொ.சி. ஆழ்ந்து கற்கவில்லை என்னும் உண்மை வெள்ளிடைமலையாக விளங்கும். காமகோடிப் பெரியவரைப் பின்சென்று ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அவப்பொருளுரைக்குமிடங்களும் இத்தகையவையே என்பது நமது நூல்களைப் படித்தவர்களுக்கு நன்கு விளங்கும். "சிறியார் சிவப்பட்டார்" [நான் - திருவ 6] என்னும் பாசுரத்தை "செத்தார் சிவப்பட்டார்" என ம.பொ.சி. மேற்கோள் காட்டுகிறார். இது திவ்யப்ரபந்தத்திலும் இவர் நுனிப்புல் மேய்ந்தவரே எனக் காட்டித் தருகிறது. ஆக, சிலம்புச் செல்வரான ம.பொ.சிக்கு மற்ற தமிழ் நூல்களில், குறிப்பாகக் கம்பராமாயணத்தில், ஆழ்ந்த புலமை இல்லாமையாலேயே இக்கட்டுரைத் தொடர் எழுந்துள்ளது என்று நடுநிலையாளர்க்கு நன்கு விளங்கும். இந்நூலின் எஞ்சிய பகுதிகளில் நடுநிலையாளர் அனைவரும் ஏற்கும்படி இதை நிலைநாட்டுவோம்.

29. "உலகம் யாவையும்" என்னும் முதல்பாடலில் "யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி" [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
"சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ"
[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் காமகோடிப் பீடாதிபதி "திருமாலுக்கும் தமோகுணம் உண்டு" என்று ஆதாரமில்லாமல் கூறியபோது, ஸாத்விக விஜய ஸர்வஸ்வத்தில் பீடாதிபதி வாய்திறக்கமுடியாதபடி நூற்றுக்கணக்கான வேத சாத்திர ஆதாரங்களைக்காட்டி "திருமால் ஒருவரே சுத்த சத்துவகுணமுடையவர்" என நிலைநாட்டியிருக்கிறோம். இன்றளவும் பீடாதிபதியால் இதை மறுக்க இயலவில்லை. ம.பொ.சி. இவ்விஷயம் ஏதுமறியாமல் "கம்பன் சைவனே" என எழுதுவது நடுநிலையாளர்களால் விலவறச் சிரிக்கத்தக்கது. கம்பன் இத்துடன் நில்லாமல், அடுத்த பாடலில் "ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்" [முதலிலும் முடிவிலும் "ஹரி: ஓம்" என்று ஓதும் அளவற்ற வேதங்களை ஓதிய பற்றற்றவர்கள் உண்மை நெறியாகவும், அடையத்தக்கவனாகவுமுள்ள அந்த ஹரியின் பாதங்களைத் தவிர வேறு எதையும் பற்றமாட்டார்கள்] என்று இந்த முழுமுதல்வன் ஹரியே என நிலைநாட்டினார். வேதங்களைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் வைதிகர்கள் "ஹரி: ஓம்" என்று ஓதுகிறார்களேயொழிய "ஹர: ஓம்" என்று ஓதுவதில்லை. முதற்பாடலில் 'அன்னவர்க்கே' என்னும் ஏகாரத்தாலும், இரண்டாம் பாடலில் 'முற்குணத்தவரே முதலோர்' என்னும் ஏகாரத்தாலும், மூன்றாம் பாடலில் 'பாதமல்லது பற்றிலர்' என்னும் எதிர்மறையாலும் திருமால் ஒருவனைத் தவிர மற்றை இரு மூர்த்திகளையும் ஞானிகள் பற்றமாட்டார்கள். தானும் பற்றவில்லை எனக் கம்பன் தெளிவாகக் காட்டுகிறான். அவன் குறிப்பிடும் பரம்பொருள் திருமாலே எனத் தெளிவாக எடுத்துக்காட்டும் இரு பாடல்களைத் தொடாமலே, 'முதற்பாடலில் கம்பன் சிவனையே கருதுகிறான்' என ம.பொ.சி. எழுதுவது அவருக்கு மனச்சாட்சி உண்டா என நம்மை ஐயமுறவைக்கிறது. நேர்மையிருந்தால் செங்கோலில் நமது இந்த பதில்களைச் சுருக்கமாகவாவது எடுத்து ம.பொ.சி. பதிலுரைக்கட்டும்.

30. பல வருடங்களுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் G. சுப்பிரமணியப்பிள்ளை என்பவர் திருவவதாரப்படலத்தில் பல பாடல்களை மாற்றிக் கம்பன் வைணவனல்லன் எனக் காட்ட முற்பட்டபோது, நாம் உடனே "கம்பனின் சமயம்" எனும் தலைப்பில் மறுப்பு வெளியிட்டோம். பல்கலைக் கழகத்தார் அதில் பல பிரதிகளை வாங்கிக் கம்பராமாயணப் புலவர்களிடம் அளித்தனர். எவராலும் இன்றளவும் அந்நூலுக்கு மறுப்பு எழுத இயலவில்லை. அந்நூலின் இரண்டாம் பாகமாக ம.பொ.சிக்கு மறுப்பான இந்நூலை எழுதுகிறோம். இதற்கு ம.பொ.சி. ஏதேனும் பதில் எழுதுகிறாரா என்று பார்த்துக்கொண்டு, எழுதினால் அதை மூன்றாம் பாகத்தில் விமர்சிப்போம். எழுதினாலும், எழுதாவிட்டாலும், "கம்பன் வைணவனே" என்பதைக் கம்பராமாயணத்திலிருந்து நூற்றுக்கணக்கான பாடல்களைக் காட்டி இனி எவரும் வாய்திறக்கமுடியாதபடி நிரூபிப்போம்.

31. கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையில்லாமல் ஒரு சில பாடல்களையே மேற்கோளாகக் காட்டி, கம்பன் சைவனே என அடம்பிடிக்கும் ம.பொ.சியைப் போலல்லாமல், கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவரும், பிறப்பால் சைவரும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த்துறைத் தலைவருமான டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் தமது "அறிவியல் தமிழ்" என்னும் நூலில் "கம்பன் கண்ட மெய்ப்பொருள்" என்னும் தலைப்பில் கம்பராமாயணப் பாடல்களில் பலவற்றை மேற்கோளாகக் காட்டி 'கம்பன் வைணவனே' என நிறுவியிருப்பதை இனி விரிவாகக் காட்டுகிறோம். இதைப் பார்த்தபின்பாவது ம.பொ.சியின் கண் திறக்கும் என நம்புகிறோம்.

No comments: