Monday, November 9, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 5. இயற்கை - 2

இதுகாலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்காலமன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடுவோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை.

இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டை வளர்த்தது கருதற்பாலது.

'இயற்கை உடல் இறை உயிர்' என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கியுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை?

திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம்மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும், இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற் கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்கப் பார்க்க, 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். 'இயற்கை உடல் - இறை அதன் உயிர்' என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன.

நம்மாழ்வார், 'இயற்கை உடல் இறை உயிர்' என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ்வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் ... ... ...
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை... ...

ஆரா அமுதே ... ... ...
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ... ...

மானேய் நோக்கு நல்லீர் ... ... ...
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை ... ....

என்றுகொல் தோழிமீர் ... ... ...
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான் ... ...

நிச்சலும் ...
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று... ...
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்...

பாதங்கள் ... ... ...
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை ...

நாடொறும் ... ...
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் ...

கழல்வளை ... ...
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்...

உணர்த்த லூடல்... ...
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை...

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு
செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வண்துலை வில்லி மங்கலம்...

காலம் பெற ... ...
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல்
திருப்பேரையிற்கே.

எளிதாயின ... ...
கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான்...

உண்டுகளித் ... ...
வண்டுகளிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்...

ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க.

இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண்ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றாயிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும்.

இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை.

பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும். இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறையின்பால் பெண் ஆண் கூறு இருத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பத்திற்கு வழியுண்டாகும்' என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் 'பெண்ணின் பெருமை' முதலிய நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன்.

நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையையுணர்ந்தவர்; இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ ...

மாயோனிகளாய் ... ...
... ... எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ...

நீயும் நானும் ... ...
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் ...
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ...

போகின்ற ... ... தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்...

மேலாத்... ...
மேலாத் தாய் தந்தையும் அவரே...

வந்தருளி ...
முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்...
சிந்தையாலும் ... தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்...

இறையின் பெண்மை நலந்துயிக்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ணமிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும்.

ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறு பெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப்பாக்களே சான்று கூறும். நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டுமென்பது அவரது உள்ளக்கிடக்கை.

இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உலகிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டிவ் விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது.

திண் பூஞ்சுடர் நுதி நேமியஞ்
செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம் இவையோ
கண்பூங்கமலம் கருஞ்சுட
ராடிவெண்முத்தரும்பி
வண்பூங்குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே.

மாயோன் வடதிருவேங்கட
நாடவல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்
றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடுந்தொண்டையோ அறை
யோவிதறிவரிதே.

அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ வெனுமிகழ் வோஇவற்
றின்புறத் தாளென் றெண்ணோ
தெருளோம் அரவணை யீர் இவள்
மாமை சிதைக்கின்றதே.

பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும் இப்பாயிருள்போல்
கண்டு மறிவது கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப் பெருமான்மது
சூதனன் தாமோதரன்
உண்டு முமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே.

வண்ணம் சிவந்துள வானோ
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகன் தன்
னொடும் காதல் செய்தேற்
கெண்ணம் புகுந்தடி யெனொடிக்
கால மிருக்கின்றதே.

காலும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரரைச் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன்னாள் கண்களாய துணைமலரே.

கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே.

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில்
பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ.

உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன்
தாமரைத் தடங்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான்
அழித்தாயுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்
யாமடுசிறு சோறுங் கண்டுநின்
முகவொளி திகழ முறுவல்
செய்து நின்றிலையே.

இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக.

இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடையது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிச் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அளவில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக்குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக!

3 comments:

வவ்வால் said...

குமரன்,

வணக்கம் அன்று போல் இன்றும் கலக்கிட்டு இருக்கிங்க!
இப்போதைக்கு படிக்க பயமாக இருக்கு(அழகான தமிழில் இருக்கே), அப்புறம் முழுசா படிச்சுப்பார்க்கிறேன்.

//பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்கலன்றோ? //

அப்போ டான்ஸ் என்பது மகிழ்ச்சியின் தீபாவளியா? :-))

குமரன் (Kumaran) said...

எனக்கு இன்னைக்கே தீபாவளி மாதிரி தான் இருக்கு வவ்வால் உங்களைப் பாத்தவுடனே! :-) எங்கே போயிருந்தீங்க இம்புட்டு நாளும்? முந்தி மாதிரி இப்ப எல்லாம் தொடர்ந்து எழுதுறதில்லீங்க. ரொம்ப நாளைக்கப்புறம் இன்னைக்கு இதை எழுதிப் போட்டேன். உங்க கண்ணுல பட்டிருச்சு. :-)

இந்தப் பதிவுல இருக்கிறது நான் எழுதுறது இல்லை; மத்தவங்க எழுதுன நூல்களை தட்டச்சிப் போடறேன். அம்புட்டுத் தான். அதனால தான் அழகான தமிழ்ல இருக்குன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான். :-)

Radha said...

குமரன்,
அமைதியா ஏதோ வேலை பண்ணிட்டே இருக்கீங்க போல. :-)

// இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டுமென்றும், அத்துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழையலாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை. //

Very interesting words from Thiru.Vi.Ka.

திரு.வி.க. ஆண்டாள், மீரா போன்ற பக்தைகளை அறிந்து இருந்தாரா என்று தெரியவில்லை. இதே நம்மாழ்வார் "உள் நிலாவிய ஐவரால்..." என்று ஐம்புலன்களும் தன்னை வருத்துவதை பகவானிடம் முறை இடுகிறார். போலி சாமியார்களை கொண்டு உண்மை துறவை புரிந்து கொள்ள முடியுமா?
Bharathi was not convinced of talks along the lines of "renounce all pleasures for God"...he was against the "brahmacharya" principle of Gandhi and against the monastic way of life suggested by Vivekananda. He changed his opinion after meeting Vivekananda's disciple - Sister Nivedita - and went to the extent of dedicating poems for her. Looks like one has to meet real renunciates in person to believe in the concept of renunciation.