Saturday, February 27, 2010

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 9 வழிபாடு

வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர்களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்.

வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறுவித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும்பாமலிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு இல்லையென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று.

வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை. வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிராயிப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக்குரியது.

ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு; மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள்.

புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு, கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ்விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும்.

வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்களைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவதில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும்.

ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம். இவ்வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழுகொம்பாகக் கொண்டார். அத்திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ்வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடுகிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும் கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தாகின்றன; அவ்வுருவில் அவர் திளைக்கிறார்; புலன்கள் ஒன்றுகின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத்தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக.

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ
டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே.

புண்ணியம் செய்து நல்ல
புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம்
அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்
னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா
யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்...

திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணி போல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப்பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம். இந்நிலை பெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே.

அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன்
அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே.

உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே.

உணர்வி லும்பர்...
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனதின்னருளே...

பிரான்பெரு... ...
... ... என்னுள்
இரான் எனில் பின்னையானொட்டு வேனோ.

சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை...

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழுலகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே.

புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்குமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய்யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற்பாலது அன்பு மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர்.

அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதன்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ளவற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவான். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும்.

எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர்பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையுங் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர்.

ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதனன் என்னம்மான்
தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே.

ஆராவமுதே யடியேனுடலம் நின்பாலன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே...

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா
நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே.

எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க.

அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது. ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப் போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ்வழி நிற்போமாக.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும்//

மன்பதை-ன்னா உலகம் தானே! அடடா...இதுக்காகவாச்சும் திரு.வி.க, ராபி சேதுப்பிள்ளை, உவேசா போன்றோரின் நூற்களை வாசிக்கணும்!

குமரன் (Kumaran) said...

மன்பதைன்னா மக்கள் கூட்டம் இரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வீட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும்.

மனைவி மக்களும் இறைவன் உடைமை;
வீடு வாசலும் இறைவன் உடைமை;
தானும் இறைவன் உடைமை;
எல்லாம் இறைவன் உடைமை.

எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது?//

அருமை! பந்தல் முகப்பில் இந்த வாசகத்தை ஒட்ட அனுமதி உண்டா? :)

என்னையும், என் உடைமையும் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு-ன்னு பெரியாழ்வார் பாடுவார்!
உடைமையெல்லாம் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு-ன்னா...
வீட்டு வாசப்படி முதற்கொண்து, பானை, பண்ட பாத்திரம் வரை அனைத்திலும் திருச்சின்னம், சக்கரப் பொறி! :)
அவன் மோட்சம் போகும் போது, கூடவே பாத்திரம் பண்டம் மோட்சம் போனாலும் வியப்பில்லை! :)

உண்மையில் இந்தத் திருவாழிச்சங்கு ஒற்றலை, வாழைப்பந்தல் கிராமத்தில், கறவை மாட்டுக்குக் கூட செஞ்சி வைப்பதைப் பார்த்துள்ளேன்!
அட, மாடுகளுக்குக் கூட பஞ்ச சம்ஸ்காரமா-ன்னு நினைத்துச் சிரிச்சதுண்டு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
மன்பதைன்னா மக்கள் கூட்டம் இரவி//

ஓ! திருத்தியமைக்கு நன்றி குமரன்!

அப்படின்னா Humanities = மன்பதை-ன்னு கூப்பிடலாம் போல இருக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆழிப்
பிரான் எனக்கே உளன்//

ஐ லைக் இட்! :)
அஹம் பிரம்மாஸ்மி
தத்-த்வம்-அஸி
அயம்-ஆத்மா-பிரம்மா
-ன்னு வேத வாக்கியம் போலவே இருக்கே!

//நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே//

நன்று நன்றே! :)

வீடு"ம்" தரும்-ன்னு ஒரு உம்மைத் தொகையில்...அறம், பொருள், இன்பம் தந்து வீடும் தரும்-ன்னு கொண்டாந்துடறாரே...இந்த மாறன் பையன் பாடும் போது 16-32 வயசு இருக்குமா? ஆகா!

திருவாய் மொழிக்கு உருகாதார்
ஒருவாய் மொழிக்கும் உருகார்
என்பது இப்படிப் பார்க்கும் போதெல்லாம், படிக்கும் போதெல்லாம் புலனாகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்க்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன்னிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வனே//

வாவ்!
நீலமே நின்று எனது ஆவியை ஈர்க்கின்ற - பந்தல்ல பேச கை பரபரக்குது! :)
மாறா, உன் தமிழ் என்றும் மாறா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உள்ளம் உரைசெயல் - உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே//

காயேன வாசா மனசேந்திரேயர்வா...
நாராயணயேதி சமர்ப்பயாமி-ங்கிறது போலவே இருக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எழுத்துகளை மட்டும் ஓதி, 'எல்லாம் கடவுள்' என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது//

:)
திரு.வி.க - இப்படிச் சொன்னதுக்கு உங்களை யாரும் திட்டலையே? :)
திருப்பித் திருப்பிச் சொல்லுங்க! - திட்டு விழும்! :)
அதனால் என்ன! வழிபடு அன்பால் திட்டும் தீஞ்சுவை ஆகி விடும்!

//அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. ஈனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும்.//

ஈனமொழி மெய்களால்
இடையறாது அன்புனக்கு-என்
ஊடகத்தே நின்று உருகத்
தந்தருள் எம் உடையானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே//

அது என்ன அறியாமை வஞ்சித்தல்? செய்யறது வஞ்சனை, அதுக்கு இப்படி ஒரு பேரா? :))

//அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து

அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்//

அது எப்படி குமரன்,
அன்பும் செய்வித்து, அறியாமை என்னும் மாயத்துள் வைக்க முடியும்? அன்பு அப்படி எல்லாம் செய்யாதே?

இது பற்றிய விளக்கமும், கதையும், இனிப்பான பாடங்களும் நீங்கள் கூடலில் எழுதினா கொறைஞ்சாப் போயிருவீங்க? :)
அச்சோ, எனக்கு இப்பவே படிச்சி ரசிக்கணும் போல இருக்கே! எலே மாறா! Come over! Letz hang out by the East River Boardwalk :)