Friday, October 1, 2010

சங்ககாலத் தமிழர் சமயமே கம்பனின் சமயம்: சங்ககாலத்திற்குப்பின் சமயநிலை - 1

23. சங்ககாலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சிலப்பதிகார காலத்தில் சிவனை 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்று பெருமைபேசும் சைவர்கள் தோன்றிவிட்டனர். சங்ககாலத்தில் தலையெடுத்திராத சமண பௌத்த மதங்களும் தலையெடுக்கத் துவங்கிவிட்டன. சிலப்பதிகார காலத்தையொட்டி அவதரித்த முதலாழ்வார்களின் திருவந்தாதிகளிலும், திருமழிசையாழ்வாரின் இருநூல்களிலும் சைவம், சமணம், பௌத்தம் என்னும் இம்மதங்கள் வேதத்துக்குப் புறம்பானவை என்று கண்டிக்கப்படுகின்றன. திருமாலுக்குத் தாழ்வையும், சிவனுக்குப் பெருமையையும் கூறி, சைவர்கள் சிவபரத்துவவாதம் செய்ததால், ஆழ்வார்கள் சிவனுடைய தாழ்வைக் காட்டி, வேதத்தில் நிலைநிறுத்தப்பட்ட திருமாலின் பரத்துவத்தை நிலைநாட்டவேண்டியதாயிற்று. சங்கத் தமிழர் சமயமும், பரமவைதிக சமயமுமான வைணவத்திற்குப் போட்டியாக சைவம் எழுந்ததாலேயே சைவத்தை ஆழ்வார்கள் கண்டித்தனர். வேதசாத்திரங்களில் காணப்படும் சிவனுடைய தாழ்வுகளை எடுத்துக் கூறினர். இதனால் கடுங்கோபம் கொண்ட பிற்கால நாயன்மார்கள் திருமாலைத் தாழ்த்தும் முற்கூறிய கட்டுக்கதைகளையெல்லாம் தங்கள் நூல்களில் பெய்து, அதனால் சிவனுக்குப் பரத்துவம் தேறிவிடுமென்று மனப்பால் குடித்தனர். ஆயினும் இந்த நாயன்மார்களுக்கும் முற்பட்ட ஆதிசங்கரரும், பிற்பட்ட வைதிக மதாசார்யர்களும் திருமாலையே வேதங்கண்ட முழு முதல்வனாகத் தங்கள் பாஷ்யங்களிலும், க்ரந்தங்களிலும் பொறித்து வைத்தனர். மத்வருடைய காலமான 12ஆம் நூற்றாண்டுவரை இந்நிலையே நீடித்து வந்தது. அதற்குப் பிறகே சைவர்களின் சித்தாந்த சாத்திரங்களும், ச்ரிகண்ட பாஷ்யமும் எழுதப்பட்டு, சிவனுக்குப் பரத்துவம் கூறுகின்றவர்கள் பெருகத் தொடங்கினர். இக்காலத்திலும் சக்திக்குப் பரத்துவம் கூறும் சாக்தம், முருகனுக்குப் பரத்துவம் கூறும் கௌமாரம், சங்ககாலத்தில் எங்குமே காணப்படாத கணபதிக்குப் பரத்துவம் கூறும் காணாபத்யம், 'பீ4ஷோதே3தி ஸூர்ய:' [பரம்பொருளிடம் பயத்தாலே சூரியன் உதிக்கிறான்] என்று உபநிஷத்துக்களில் கூறப்பட்ட சூரியனுக்குப் பர்த்துவம்கூறும் ஸௌரம் என்னும் மதங்கள் எழும்பவேயில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் நூல் எதுவும் 13ஆம் நூற்றாண்டுவரை காணப்படவில்லை. இந்த தெய்வங்களுக்குப் பரத்துவம்கூறும் சில துதிநூல்களை 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே ஆதிசங்கரர் பெயரில் எழுந்த மடங்களில் உள்ள சங்கராசாரியர்கள் எழுதி, அதை ஆதிசங்கரர் எழுதியதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தினர். இத்துதிநூல்களிலிருந்து ஒரு துணுக்கைக்கூட 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட எவரும் எடுக்கவில்லையென்பது இவ்வுண்மையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

24. இப்படி 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட 'ஆதிசங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தார்' என்னும் கற்பனையைப் பற்றிக் கொண்டு ம.பொ.சி. தமது கட்டுரைகளில் எழுதுவது - அவர் சங்கரபாஷ்யங்களையும், மற்றுமுள்ள வடமொழி நூல்களையும் அறிவதற்குறுப்பான வடமொழி அறிவு இல்லாதவர் என்பதையும், அதனால் இவ்விஷயத்தை ஆராய்ச்சி செய்யத் தகுதியற்றவர் என்பதையும், சமீபகாலத்தில் சில பொய்யர்கள்கூறும் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைபோல் கூறுகின்றவர் என்பதையும் காட்டித்தருகின்றது. 'ஆதிசங்கரர் ஷண்மதஸ்தாபகர்' என்பது முழுப்பொய் என்னும் விஷயத்தை எதிரிகளும் மறுக்கவொண்ணாதபடி நாம் நிலைநாட்டியிருக்கும் 'சங்கரரும் வைணவமும்' என்னும் நூலை நாம் ம.பொ.சிக்கு அனுப்பியிருக்கிறோம். முடியுமானால் வடமொழி வல்லுநர்களைத் துணைகொண்டு நாம் அந்நூலில் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ம.பொ.சி. முற்படுவாராக.

4 comments:

jaisankar jaganathan said...

சங்க காலம் பத்தி எழுதுங்களேன். அப்போது தமிழர் சமயம் என்ன

குமரன் (Kumaran) said...

இந்தப் புத்தகத்தில் அது தான் பேசுபொருள் ஜெய்சங்கர் ஜெகன்னாதன். அடுத்த பகுதிகளிலும் மேல்விவரங்கள் வரும்.

Krishnan Nallaperumal said...

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்" என்பது சிலப்பதிகாரம் கூறும் சான்று. ஏதோ பிற்காலச் சைவர்கள் கூற்றல்ல. "ஆக்கை" என்றால் உடல். "பிறவா ஆக்கை" என்றால் கருவாசம் செய்து பிறக்கும் உடல் பிறவி. பிறவா யாக்கைப் பெரியோன் என்பது அவ்வாறு, கருவாசம் செய்து அவதரிக்காத இறைவன் என்று சிலப்பதிகாரம் ஆசிரியர் கூறுகின்றார்.

இனி, சங்ககால ஔவையார், தமிழ் வாழ, நெல்லிக்கனி தனக்கீந்த மன்னன் அதியனை "நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே!" என்று வாழ்த்துகிறார். இவ்வாழ்த்தின் பொருள் "உயிர்பறிக்கும் ஆலால விடம் அஞ்சி, சரணடைந்த தேவர்களைக் காத்து, தேவர்கள் விரும்பிய அமுதம் வழங்கி, தாமே ஆலால விடத்தை உண்டார்; ஆலால விடமுண்ட சிவபெருமான் என்றும் சிரஞ்சீவியாய் இருக்க, தேவர்கள், அமுதுண்டும், தங்கள் காலம் முடிந்ததால் இறந்தனர். அச்சிவபெருமான் போல, அதிய மன்னனே! நீயும் நெல்லிக்கனி உண்ணாமலேயே நிலைபெற்று வாழ்வாயாக!" என்று வாழ்த்தினார் ஔவையார்.

“விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இச்செய்தியையே மீண்டும் வலியுறுத்துகின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் ஓதாது உணர்ந்த அருட்பிரகாச இராமலிங்க அடிகள் " நஞ்சை உண்டு அயன் மால் முதலிய தேவர்களின் மனைவிமாரின் மங்கல நாணைக் காத்த அருட்கடலே" என்னும் பொருளில்
“அந்நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் ஆதியர் மனையவர் தம் பொன் நாணைக் காத்த அருட் கடலே -திருவருட்பா:2258” என சிவபெருமானைப் புகழ்கின்றார்.

சங்ககாலம் தொட்டு, இன்றுவரை, தமிழ் மரபு கூறும் பெருமையையே சைவர்கள் கூறுகின்றனர் என்று அறிக.

குமரன் (Kumaran) said...

அடியேன்.

பேராசிரியர் ஐயா, இந்த கட்டுரை அடியேன் எழுதியது இல்லை. ஸுதர்சனர் ஸ்ரீ S. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் அவர்களின் நூலில் வரும் பகுதி.