Friday, June 5, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 4

4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற்பிரதேசத்தில் எ-று.

வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்தஸ்தலவிசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) 'பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்', என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்தமூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. இதனை வைகுண்டமாகவும் உபசரித்து வழங்குவர். ச்வேத த்வீபம் = வைகுண்டம் என்று ச்ரிபாகவதத்தில் ச்ரிதர ஸ்வாமிகள் வ்யாக்யானமிட்டார்.

இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் 'க்ஷீரோதந்வத்ப்ரதேசே' என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் - அத்தகைய வெண்மணல்.

***

5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானேயன்றி வேறில்லாமல் எ-று.

வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ச்ரிகீதை; விஷ்ணு புராணம் ௭ - ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்மவ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,

'வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார்முகில் போல்வண்ணன்' (திருவாய்மொழி, 2,8,10)

என்று பணித்தலானறிக. ச்ரி கீதையிலும் 'பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்' (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். 'எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்' 'தானோருருவே தனிவித்தாய்' (திருவாய்மொழி, 1 - 5 - 2, 4) என்று பணித்தல் காண்க. ச்ரி விஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ச்ரி ஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பகுதி கொஞ்சம் ஈசியாப் புரிஞ்சுது! :)

R.DEVARAJAN said...

//இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) 'பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும்,நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்', என வருவனவற்றா லறிக.//

’மறந்தும் புறந்தொழா மாந்தர் ச்வேத த்வீப வாஸிகளைப் போன்றவர்’ என்று வைணவம் பகரும்; பரம ஏகாந்திகள் என்னும் பெயரும் இவர்களுக்கு உண்டு.

தேவ்

குமரன் (Kumaran) said...

உண்மையா இரவி? :-)

குமரன் (Kumaran) said...

உண்மை தான் தேவ் ஐயா. அடியேனும் கொஞ்சமே கொஞ்சம் வெண்தீவினர்களைப் பற்றி படித்திருக்கிறேன்.

R.DEVARAJAN said...

*வெண்தீவினர்*

நாரத பகவான் ச்வேத த்வீபத்திற்குச் சென்றபோது அவர்கள் அவரைக் கணிசியாது எம்பெருமானைச் சூழ்ந்து நின்று ஏத்துவதிலேயே கண்ணாக இருந்தனர் என்று பாரதம் பகரும்

குமரன் (Kumaran) said...

எனக்கும் அந்த நிகழ்ச்சியைப் படித்த நினைவு இருக்கிறது தேவ் ஐயா. நாரத கர்வ பங்கம் என்ற தலைப்பில் வருமோ?