Wednesday, September 23, 2009

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 2. கடவுள் - வித்து

2. கடவுள் - வித்து

கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை.

உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று.

உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது.

அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது.

தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதை சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித் (அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணரற்பாலது.

மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தாயிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும்.

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ்வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக.

தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய்யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு:

ஊழிதோ றூழி... ... ...
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி......

- திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் - தானே......

வைப்பாம் ... ...
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்...

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்...

ஒக்கலை வைத்து ... ...
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்...

ஓவாத் துயர்ப்பிறவி ... ...
மூவாத் தனிமுதலாய் ...

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் ...

எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக.

***

திரு.வி. கலியாணசுந்தரனாரின் 'தமிழ்நாடும் நம்மாழ்வாரும்' என்னும் நூலில் இருந்து...

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது//

:)

//இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக//

எழுக எழுக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்!
பொலிக பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்!