Friday, May 22, 2009

அண்டகோள மெய்ப்பொருள் - பொருளுரை 1

1. அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.

ஆகல் - வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை 'ஆகலூழ்' (திருக்குறள் - 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு - அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதை ச்ரிபாகவதம் ௩-ஆம் ஸ்கந்தம் (௧௧ - ௧) 'பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது' என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி ௩-ஆம் ஸ்கந்தம் ௧௧-ஆம் அத்தியாய முடிவில் 'ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்' என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். 'ஆகி' என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை 'காமத்துக் காழில்கனி' (திருக்குறள் - 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூடலில் இந்தப் பொருளுரைக்கு ஒரு பொருள் எழுதுங்க குமரன்! :)

குமரன் (Kumaran) said...

கூடலில் இதனைத் தொடராக எழுதும் எண்ணம் இருக்கிறது இரவி. என்றைக்கு என்று இப்போது தெரியவில்லை.

R.DEVARAJAN said...

'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯)

யதா ஹி ஸ்கந்த சாகாநாம்
தரோர்மூலாவஸேசநம் !
ஏவமாராதநம் விஷ்ணோ:
ஸர்வேஷாம் ஆத்மநஸ்ச ஹி !!

எட்டாம் ஸ்கந்தம்;5ம் அத்யாயம்;49ம் ச்லோகம் - ஸ்ரீமத் பாகவதம்

தேவ்