இராமானுசர் திருக்கச்சிநம்பியை ஆசாரியராய் வகிக்க வேண்டுமென்ற உள்ளத்தராய்ப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்துவந்தார். திருக்கச்சிநம்பி தாம் வைசியராகையால் இவர் சிஷ்யராவதற்கு அவர் உடன்படவில்லை. பின் அவர் போனகம் செய்த சேடத்தையாயினும் பெற்றுத் தாம் புனிதத்தையடைய வேண்டுமென்று நினைந்து, அதற்காக அவருக்கு ஒரு விருந்து செய்ய ஏற்பாடு செய்து அவரை பிரார்த்தித்தார். அவரும் அதற்கு உடன்பட்டார். பின்னர் விருந்திற்குத் திருக்கச்சி நம்பியை அழைத்துக்கொண்டு வருவதற்குத் தாம் புறப்பட்டுச் சென்றார். அதே சமயத்தில் நம்பியும் வேறொரு வழியாக இராமானுசருடைய திருமாளிகையினையடைந்து இராமானுசருடைய தேவியாரைச் சீக்கிரம் பரிமாறும்படி பிரார்த்தித்தார். சென்ற இராமானுசர் திரும்பி வருவதற்குள் நம்பி அமுது செய்து சென்றுவிட, அவர் தேவியாரும் அமுது செய்த இலையையும் அப்புறப்படுத்தியமையால் தாம் நினைந்த சேஷமும் பெற்றிலர்.
ஸ்ரீ ஆளவந்தாருக்குப் பிறகு கோயிலில் தரிசனம் நிர்வகிக்க வல்லாரிலரேயென்று, பெரிய நம்பிகள் இவரை அழைத்துவர, ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டார். இராமானுசரும் பெரிய நம்பியை சேவிக்கவேண்டுமென்று திருக்கச்சியிலிருந்து புறப்பட்டார். இருவரும் மதுராந்தக ஏரிக்கரையில் சந்தித்தார்கள். அவ்விடத்திலேயே பெரியநம்பிகளும் இராமானுசருக்குப் பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளினார்.
பிறகு இராமானுசர் பெரியநம்பிகளைக் கச்சிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று ஆறுமாத காலம் அவரிடம் காலக்ஷேபம் கேட்டுவந்தார். பின்பு பெரியநம்பிகள் கோவிலுக்குச் செல்லவேண்டியதாயிற்று.
உடையவர் தம்முடைய தேவிகள் இல்லற வாழ்க்கைக்கு அனுகூலமாயில்லாமையால் பேரருளாளன் அங்கீகரிக்க, தாம் சந்நியாஸ ஆசிரமத்தை 1049 கி.பி.யில் ஏற்றுக்கொண்டார். அப்போது இவருக்கு பகவான் வரதராசன் 'எதிராசர்' என்ற பெயரினை இட்டார்.
3 comments:
//அவ்விடத்திலேயே பெரியநம்பிகளும் இராமானுசருக்குப் பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளினார்.//
மதுராந்தகம் இராமபிரான் ஆலயத்தின்
மகிழ மரத்தடியில் பஞ்ச ஸம்ஸ்காரம்
நடைபெற்றது என்பர்.
பெரிய நம்பிகள் உபயோகித்த அதே திரு இலச்சினைகளை அந்த ஆலயத்தில் தர்சிக்கலாம்.
மதுராந்தகத்திற்கே ‘த்வயம் விளைந்த திருப்பதி’ என்னும் பெயரும் இக்காரணத்தால் ஏற்பட்டது.
தேவ்
தேவ் ஐயா சொல்வது மிகவும் சரி!
மதுராந்தகம் ஏரியில் காலைக் கடன்கள் மற்ற ஸ்நான சம்ஸ்காரங்கள் எல்லாம் ஆனாலும், ஆலயத்து மகிழ மர மண்டபத்தில் தான் பஞ்ச சம்ஸ்காரம் ஆனது!
//மதுராந்தக ஏரிக்கரையில் சந்தித்தார்கள். அவ்விடத்திலேயே//
இங்கு "அவ்விடத்திலேயே" என்பதை "மதுராந்தகத்திலேயே" என்று பொருள் கொள்ளுதல் பொருத்தமானது!
நன்றி தேவ் ஐயா & இரவி.
Post a Comment