Tuesday, May 19, 2009

எம்பெருமானாருடைய திவ்விய சரிதம் – 5

கூரத்தாழ்வான் குமாரராகிய பட்டர் உடையவரிடத்திலும் மற்ற ஆசாரியர்களிடத்திலும் பேரன்பு கொண்டிருந்தார். பட்டருக்கும் மற்றுமுள்ள முதலிகளுக்கும் உடையவர் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதித்துக்கொண்டு வந்தார். அக்காலத்தில் சோழ தேசத்தரசன் சிவனுக்குப் பரத்வம் ஸ்தாபிக்கவேண்டுமென்று நினைந்து அதற்கு இராமானுசர் கையொப்பம் இட்டால் போதுமென்று தீர்மானித்தான். உடனே தன் சிப்பந்திகளை அனுப்பி இராமானுசரை வரவழைக்க ஏற்பாடு செய்தான். சேவகர்கள் வந்த விஷயத்தை அறிந்த கூரத்தாழ்வான் உடையவருக்குக் கெடுதி விளையும் என்று நினைத்து உடையவரைக் காப்பாற்ற விரும்பி அவருடைய காஷாயத்தைத் தாம் உடுத்திக் கொண்டு உடையவருக்குச் சொல்லாமல் சேவகருடன் சென்றார். உடையவருக்கு இது பின்பு தெரிந்தது. உடையவரும் வெள்ளை சாத்திக் கொண்டு சில முதலிகளுடன் (1096 கி.பி.யில்) மைசூர் பிராந்தியம் சென்றார்.

பின்னர், தொண்டனூருக்குச் சென்று அத்தேசத்தரசன் பெண்ணுக்குப் பிடித்திருந்த பிசாசத்தை நிவர்த்தி செய்தார். அவ்வரசனும் (1098 கி.பி.யில்) இவருக்குச் சிஷ்யனானான். சமணர்களை வாதத்தில் ஜெயித்து அவர்களுள் அநேகரைச் சிஷ்யர்களாக்கி அவர்களுக்கும் காலக்ஷேபம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவ்வாறிருக்க, திருநாராயணப்பெருமாள் யதுகிரியில் உடையவர் வரவை எதிர்பார்ப்பதாக விஷ்ணுவர்த்தனன் ஒரு கனவினைக் கண்டான். கண்ட அரசன் காட்டினை வெட்டுவித்துத் திருத்துழாய்ச் செடியின் கீழ் புற்றிலிருந்த திருநாராயணப் பெருமாளை, யதுகிரியில் கோயில் கட்டுவித்து அங்கு எழுந்தருளப்பண்ணி ஸம்ப்ரோக்ஷணம் முதலானவைகளை (1100 கி.பி.) உடையவரைக் கொண்டு செய்வித்தான். அங்கிருந்த உத்ஸவர் டில்லி ராஜன் மகள் படுக்கையறையில் இருப்பதாக ஒரு நாள் உடையவர் கனாக் கண்டார். கண்டவர் உடனே டில்லி சென்று அரசனைக் கண்டு நடந்தவற்றைக் கூறிக் கேட்க, அவன் 'உங்கள் பெருமாளாயிருந்தால் கூப்பிடுங்கள், வந்தால் கொண்டு செல்லுங்கள்' என்றான். அதைக் கேட்ட உடையவர் அவ்வாறே அழைக்க உத்ஸவரும் கிண்கிணி சதங்கை ஒலிக்க யாவரும் காண நடந்துவந்து உடையவர் மடியிலேற, உடையவரும் ஆனந்தத்துடன் 'எனது செல்லப் பிள்ளையே' என்று அணைத்துக் கொண்டார். அன்று முதலாக அப்பெருமாளுக்கு எதிராஜஸம்பத்குமாரன் என்றே திருநாமம் வழங்குவதாயிற்று.

திருநாராயணபுரத்திலிருந்த போது முற்கூறிய சோழ அரசனிடம் சென்ற கூரத்தாழ்வான் சிவபரத்வத்திற்கு ஒப்புக்கொள்ளாமையால் அவருடைய இரு கண்களையும் பிடுங்கும்படி அரசன் ஆக்ஞாபித்தான். பாபிகள் நெருங்கி வந்து தோண்டுவதற்கு முன்னர் தாமே தம் திருக்கை நகங்களால் பிடுங்கியெறிந்தார்.

பிறகு, பல வருஷங்கள் கழிந்தபின் அந்தச் சோழனும் இறந்தான். இவற்றையெல்லாம் கேள்விப்பட்டுத் திருவரங்கம் எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.

திருநாராயணபுரத்தில் ஒரு மடம் கட்டுவித்தார். அத்தேசத்தாருடைய பிரார்த்தனையின் பேரில் தம்மைப் போல் ஓர் அர்ச்சா விக்ரஹத்தை எழுந்தருளப் பண்ணி வைத்தார். தேவரீர் எங்களை விட்டுப் பிரிந்து போவதால் இவ்வர்ச்சாவிக்ரஹத்தில் தேவரீரிருப்பதாக நாங்கள் எப்படி தேறியிருப்போமென்று கூறி வருந்தினார்கள். அதனைக் கண்ட உடையவர் நீங்கள் என் பெயரினைச் சொல்லி அழையுங்கள் என்றார். அவ்வாறு அழைக்க, விக்ரஹம் 'நான் இங்கே எப்போதும் இருக்கிறேன்' என்று வாக்களிக்க, மனம் தேறுதலடைந்தார்கள்.

பின்னர், கோயிலுக்கு (1118 கி.பி.) எழுந்தருளிக் காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருந்தார். குருபரம்பரை இடையறாமல் தரிசனம் வளர்ந்தேறும் பொருட்டு எழுபத்துநான்கு ஆசாரியர்களை பகவத் பாகவத கைங்கரியங்களுக்கு நியமித்தார். அக்காலத்தில் ஸ்வாமியால் எழுநூறு யதிகளும் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களும் உஜ்ஜீவிக்கப்பெற்றார்கள்.

ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம், நித்யம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். நாச்சியார் சொல்லியிருந்தபடி திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறுதடாவில் அக்காரவடிசில் அமுது செய்வித்தார். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளி கோதையாரால் 'நங்கோயிலண்ணர்' என்று திருநாமம் பெற்றுக் கோயிலுக்கு எழுந்தருளி பட்டருடைய உபந்யாஸ வைபவத்தைக் கேட்டருளி பட்டருக்கு வேதாந்தாசாரியர் என்ற திருநாமம் சாத்தினார்.

பின்பு எம்பெருமானார், நம்பெருமாள் சந்நிதிக்குப் பட்டரை உடன்கொண்டு சென்று பெருமாளைச் சேவித்து 'முன்னுக்கு தர்சனப்ரவர்த்தகராவர் இவர்' என்று பட்டரைக் காட்டியருளினார். இப்பிரார்த்தனையை நம்பெருமாள் அங்கீகரித்தார். பிறகு கந்தாடையாண்டான் உடையவரை அடைந்து வந்தனை வழிபாடுகள் செய்து தேவரீருடைய விக்ரஹத்தைப் பூதபுரியில் அதாவது ஸ்ரீபெரும்பூதூரில் எழுந்தருளப்பண்ணவேண்டும்; அதற்குத் தேவரீர் திருவுள்ளம் பற்றவேண்டுமென்று பிரார்த்தித்தார். பின்னர், உடையவருடைய அனுமதியைப் பெற்று விக்ரஹம் செய்வித்து அதனைக் கடாக்ஷிக்கும்படி பிரார்த்தித்தார்கள். உடையவரும் தம்முடைய திருமேனிக்கு அது பொருத்தமாக இருப்பதைக் கண்டு பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும்படி தம்முடைய சக்தியையும் கடாக்ஷத்தையும் அவ்விக்ரஹத்தில் பிரகாசிக்கும்படி விக்ரஹத்தைத் தழுவி, அதனைப் புஷ்யமாதத்தில் குருபுஷ்யத்தில் பூதபுரியில் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்டார். அவ்வாறே புஷ்ய மாதத்தில் குருபுஷ்யத்தில் பிரதிஷ்டை செய்விக்கிற அந்நாளில் உடையவர் திருமேனியில் பலஹானி உண்டாயிற்று. அதனைக்கண்ட உடையவர் முதலிகளில் ஒரு சிலரை உடன் வைத்துக் கொண்டு நம்பெருமாள் திருமலரடிக்கீழ் நிரதிசய சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்று பேரவாக் கொண்டவராய் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு சரணாகதி கத்யத்தையும் ஸ்ரீரங்ககத்யத்தையும், ஸ்ரீவைகுண்ட கத்யத்தையும் விண்ணப்பம் செய்தார். பெருமாளும் 'உமக்கு செய்யவேண்டுவது என்' என்ன, 'தேவரீர் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என்று பிரார்த்திக்க, 'அப்படியே செய்யக்கடவோம்' என்றார். பின்னர், முதலிகளுக்கு இதனை இனி ஒளிக்க ஒண்ணாதென்று திருவுள்ளம்பற்றி முதலிகளைப் பார்த்து 'நாம் இன்றைக்கு நாலாம் நாள் பெரிய பெருமாள் திருவடிகளை அடையப் போகிறோம்' என்று தெரிவித்தார். உடையவர் தாம் குறிப்பிட்ட அக்காலத்திலேயே எம்பார் திருமடியிலே திருமுடியும் வடுகநம்பி திருமடியிலே திருவடிகளையும் வைத்துக் கொண்டு தம் ஆசாரியரை நினைந்த நினைவோடு (1137 கி.பி.) கண்வளர்ந்து திருநாட்டை அலங்கரித்தார்.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

எம்பெருமானார் இராமானுசரின் முடிவினைப் படிக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகி விடுகிறது :((

குமரன் (Kumaran) said...

எனக்கும் அப்படித் தான் இருந்தது இரவி. அதனால் தான் அடுத்த பகுதியையும் உடனே எழுதினேன்.