2. பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.
ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க. பூத்தமரம் என்பது பூத்தற்குக் காரணமான மரம் என்றவாறு; 'தாழ்ந்த இயல்பின்மை' (திருக்குறள் - 903) 'நிற்புகழ்ந்த யாக்கை' (பதிற்றுப்பத்து, 44, 8) என்புழிப்போல. பிண்டம் - சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார் பரதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக உருவகப்படுத்துகின்றாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்த என்று ஏகதேசரூபகமுகத்தாற் பிராணி ஸமுதாயத்தை மலர்களாக்கினார். ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார். இதனாற் பூத்தது பிரபஞ்சரூபமென்று துணியலாகும். பெருமை - பரமாணுவை அண்டபிண்ட ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற் றன்மை. இதனாற் பரதெய்வத்தின் ஸங்கல்ப விசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல் காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும்; 'எழிலளந்தங் கெண்ணற் கரியானை' (மூன்றாம்திரு. 3) என்று பணிப்பர். ('பூ நலம்' (பரிபாடல் - 16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப் பொருள் கூறலானுமுணர்க). இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை - அவ்வண்ட பிண்ட ரூபமான பிரபஞ்சத்தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இங்ஙனம் திரிவித காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமையால் விசேடித்தார். பூத்த மரம் என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவயவமாகிய கொம்பு, இலை, பூ, காய், கனி முதலிய எவையும் மரத்தின் வேறாகாத் தன்மையால் ஒருமை நன்கறியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடர்
'அம்போ ருகனா ரரனா ரறியார்
எம்போ லியரெண் ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெனினும்
வம்போ மரமொன் றெனும்வா சகமே'
என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கும் இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு நோக்கென்பதும் பொருந்தும். 'சங்கக் குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானை' எனச் சடகோபரந்தாதியில், ஆழ்வார் சங்கம் வென்றருளிய செய்தியை வெளியிடுதலான் இஃது உணரலாம். ச்ரி பாகவதம் 'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான், மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க. இந்தப் பாகவதத்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுளம் பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனாலும், அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம். இவ்வொருமை ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூப ஐக்யமாகாமை உய்த்துணர்ந்துகொள்க. 'பாரிடமாவானுந் தான்' (௪௨) என்னும் பெரியதிருவந்தாதித் தொடர்க்கு பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் 'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று' என்றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிறைவேற்றவே எங்குங்கலந்துறைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
6 comments:
//ச்ரி ஸஹஸ்ர நாமத்தில் 'புஷ்பஹாஸ:' என்னும் திருநாமத்திற்கு ச்ரிசங்கர பகவத்பாதர் 'பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்' என்று பொருள் கூறினார்//
தத்துவ விளக்கம் செய்யும் சான்றோர்களை நினைத்தால் பெருமையாகத் தான் இருக்கு குமரன். பாருங்க விசிட்டாத்வைதமாய் (விதப்பொருமையாய்) விளக்கம் தரப் போந்தாலும், எந்த ஒளித்தல் மறைத்தல், காய்தல் உவத்தல் இன்றி ஆதி சங்கரரையும் மேற்கோள் காட்டுகிறார்கள்! எதற்கு அதையெல்லாம் மிக்ஸ் பண்ணுற? இதை மட்டும் தனித்துவமாய் எழுதேன் என்ற போலியான கருத்துக்கள் எல்லாம் சான்றோர் முன் நில்லா என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!
//ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯) என்று கூறுதலான்//
(அத்-௫-௪௯) என்றால் என்ன?
//அம்மலர்களை யுண்டாக்கிப் பரிபாலிக்குநிலையில் மலரின்வேறாகாத மரமாகப் பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துணியலாம்//
விதப்பொருமைக்கு மிக அழகான காட்டு! சான்று!
//'ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தத்தால் ஐக்யம்; ஸ்வரூபத: அன்று//
படிக்கவே சுவையா இருக்கு!
வெல்லக்கட்டி (மணிப்பிரவாள நடை) கடிக்கக் கொஞ்சம் கடினம் தான், சர்க்கரையை விட!
இருந்தாலும் வெல்லக்கட்டியைக் கடிக்கும் போது ஒரு "கிக்" இருக்கத் தான் செய்கிறது! :)
//(அத்-௫-௪௯) என்றால் என்ன?//
தமிழ் எண் பற்றி தெரிந்திருக்குமே இரவி. இதுவும் அறிவினா தானா?
அத்தியாயம் 5 - 49 தான் தமிழ் எண்ணில் அப்படி எழுதியிருக்காங்க இந்த பொத்தகத்துல.
'தருவினடியில் நீர்விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம் எல்லாப் பிராணிகட்கும் பயன்படுவது' (அத்-௫-௪௯)
யதா ஹி ஸ்கந்த சாகாநாம்
தரோர்மூலாவஸேசநம் !
ஏவமாராதநம் விஷ்ணோ:
ஸர்வேஷாம் ஆத்மநஸ்ச ஹி !!
எட்டாம் ஸ்கந்தம்;5ம் அத்யாயம்;49ம் ச்லோகம் - ஸ்ரீமத் பாகவதம்
தேவ்
சுலோகத்தை எடுத்துத் தந்ததற்கு மிக்க நன்றி தேவ் ஐயா.
Post a Comment